மு.கு.ஜகன்னாத ராஜா:அஞ்சலி

2002 ல் சிவகாசியில் நான் பேசிய ஒருகல்லூரி விழாவில் பார்வையாளராக வந்து கலந்துகொண்டார் பன்மொழிப்புலவர் மு.கு.ஜகன்னாத ராஜா. அவரே அவ்ந்து என்னிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர் மொழியாக்கம்செய்த ஆமுக்த மால்யதா [சூடிக்கொடுத்த மாலை. கிருஷ்ணதேவராயர் எழுதியது] என்ற நூலை நான் அப்போது வாசித்திருந்தேன். அதைப்பற்றிச் சொன்னேன். அவருக்கு மகிழ்ச்சி. ‘இதையெல்லாம் நவீன இலக்கியவாதிகள் படிக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி’ என்றார். ‘நாங்கள் படிக்காமல் பின்னே பேராசிரியர்களா படிக்கப்போகிறார்கள்?’ என்று கேட்டேன், சிரித்தார்.

1933ல்  ராஜபாளையத்தில் பிறந்த ஜகன்னாத ராஜா பிறந்த 2-12-2008 அன்று மரணமடைந்தார். அவரது மரணச்செய்தியை நான் கிட்டத்தட்ட ஒருமாதம் கழிந்தே அறிந்தேன். செய்தித்தாள்களில் செய்திகள் வரவில்லை. அவருக்கும் எனக்கும் பொதுவான நண்பராகிய வசந்தகுமார் போன்றவர்களும் சொல்லவில்லை. தமிழினி இதழ் என் கண்ணுக்கு இன்றுவரை வந்துசேரவும் இல்லை. துரதிருஷ்டவசமான விஷயம்தான்.

 

 

 

முறையான பெரிய கல்வி ஏதும் இல்லாதவரான ஜகன்னாத ராஜா ஏலக்காய் தோட்டம் வைத்திருந்தார். அதன் வருவாயில் வாழ்ந்தபடி மொழிகளைக் கற்றும் மொழியாக்கங்கள் செய்தும் வாழ்ந்தார். அவருக்கு தமிழ், பாலி, பிராகிருதம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் போன்ற பலமொழிகள் தெரிந்திருந்தன. உண்மையில் அவர் மறைவுடன் பாலியும் பிராகிருதமும் தெரிந்த கடைசி தமிழரும் இல்லாமலாகிவிட்டார் என்று சொல்லலாம்.

செம்மொழிக்கொடி பறக்கும் தமிழ் நாட்டில் பேராசிரியர்கள் தமிழே ஒழுங்காகத்தெரியாமல் இருப்பதுதான் வழக்கம். கல்லூரிப்பணிக்கு கையூட்டு கொடுத்தாகவேண்டிய கட்டாயம் இருக்கும்வரை தகுதியானவர்கள் அந்தப்பணிக்கு செல்லப்போவதும் இல்லை. ஜகன்னாத ராஜாவைப்போன்ற சிலர் தனிப்பட்ட ஆர்வத்தால் தமிழில் அனேகமாக இல்லாமலாகிவிட்ட அடிப்படை ஆய்வுகளையும் மொழியாக்கங்களையும் செய்வதனால்தான் தமிழில் அறிவியக்கம் சாம்பல் மூடிய கனல்போல கொஞ்சமாவது இருந்துகொண்டிருக்கிறது. அந்த தலைமுறையும் இல்லாமலாகிவருகிறது.

ஜகன்னாத ராஜா பிராகிருதத்தில் இருந்து கதாசப்தசதியை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழ் வாசகர்களின் கவனத்துக்கு வந்தாகவேண்டிய நூல் இது. இந்த புராதன நூலில் உள்ள பாடல்களின் அமைப்பும் சரி, கூறுமுறையும்சரி, அபப்டியே அகநாநூறையும் நற்றிணையையும் ஒத்திருக்கின்றன. திணை-துறை அமைப்புகூட பெரும்பாலும் உள்ளது. அதை தமிழுக்கே உரிய அழகியல் என நாம் சொல்வது எந்த அளவுக்கு சரி என்று சிந்திக்கச் செய்வது அந்நூல்.

இவரது வஜ்ஜாலக்கம் என்ற பிராகிருத நீதிநூல் தமிழினி வெளியீடாக வெளிவந்துள்ளது. குறள் உள்பட உள்ள தமிழ் நீதிநூல் மரபை ஆராய்பவர்கள் கருத்தில்கொண்டாகவேண்டிய நூல் இது.  தீகநிகாயம் உட்பட ஏராளமான பௌத்த நூல்களை பாலி மொழியில் இருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்.

ஜகன்னாதராஜாவிடம் நான் பேசியபோது பிராகிருதம் குறித்து என் ஐயங்களை விவாதித்தேன். சம்ஸ்கிருதத்துக்கு முந்தைய மொழிவடிவமா பிராகிருந்தம் என்று கேட்டேன். சம்ஸ்கிருதம் முழுமையான வளர்ச்சி அடைந்து பல கட்டங்களைத் தாண்டிய பின்னரும் பிராகிருதம் இருந்துகொண்டிருந்தது என்றார். பிராகிருதம் சம்ஸ்கிருதத்தின் பேச்சுவடிவம் என்பதே சரியாக இருக்கும் என்றும் பிராகிருதம் தொடர்ந்து சம்ஸ்கிருதத்துக்கு வேர்நிலமாக இருந்தது என்றும் சொன்னார். தெலுங்கு கன்னடம் இந்தி மைதிலி போஜ்புரி  போன்ற பல மொழிகள் உருவானபின்னரே பிராகிருதம் அழிந்தது. வடநாட்டில் ‘சம்ஸ்கிருத அபப்பிரம்ஹ்ஸா’ என்று சொல்லபப்டும் சம்ஸ்கிருதத்தின் கிளைமொழிகள் உண்மையில் பிராகிருத கிளைமொழிகளே என்றார் 

அசோகவனம் எழுதுவதற்காக ஜகன்னாதராஜாவின் சேமிப்பில் இருந்து பல நூல்களை வசந்தகுமார் படி எடுத்து அளித்தார். ராணி மங்கம்மாளைப்பற்றிய நூல்கள், விஜயரங்க சொக்கநாதன் எழுதிய நூல்கள். தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் இடையேயான பண்பாட்டுப் பரிமாற்றம் பற்றிய தகவல்களின் களஞ்சியமாக இருந்தார் ஜகன்னாத ராஜா. கௌரவிக்கப்படாத அறிஞராக அவர் மறைந்தது என்பது மொழியின் பேரால் வெற்றோசைகள் ஒலிக்கும் தமிழ்ச் சூழலில் இயல்பே

ஜகன்னாத ராஜா அவர்களுக்கு அஞ்சலி.

http://madhumithaa.blogspot.com/2008/12/blog-post_08.html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60108193&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20901153&format=print&edition_id=20090115

முந்தைய கட்டுரைசிற்பங்கள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைநான் கடவுள் :மேலும் இணைப்புகள்