என்னுடைய அறம் சிறுகதைகளின் தொகுதி பிரியம்வதா மொழியாக்கத்தில் ஜக்கர்நாட் பதிப்பகம் சார்பில் வெளியாகியிருக்கிறது. அதன்பொருட்டு தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்காக நானும் கமல்ஹாசனும் உரையாடிக்கொண்டோம். அதன் பதிவு. அதன் காணொளியும் உள்ளது
கமல் உரையாடல்
கமல்ஹாசனின் அலுவலகத்தில் காமிராக்கள்முன் இயல்பாக நடந்த உரையாடல். முதலில் இருபது நிமிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோம், பின்னர் தமிழில். சில நிமிடங்களுக்குப்பின் காமிராவை மறந்துவிட்டோம். மொத்தம் நாற்பது நிமிடம் போதும். ஆனால் ஒருமணிநேரத்துக்குமேல் பேச்சு சுவாரசியமாகச் சென்றது.
இந்திய ஆங்கில புத்தகச் சந்தையில் ஒரு நூலுடன் செல்வதென்பது எளிதல்ல. அங்கே ஆசிரியர்களும் பேசுபொருட்களும் எல்லாம் வகுக்கப்பட்டிருக்கின்றன. இன்றும் அது வங்க, இந்தி எழுத்தாளர்கள் மற்றும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் களம்தான். வாசகர்கள் எவர் என்பதே கண்ணுக்கு தெரிவதில்லை. பெரும்பாலும் பெருநகர் சார்ந்த வாசகர்கள். ஆசிரியர்களை அவர்கள் செய்திகள், விவாதங்கள் வழியாகவே அறிந்துகொள்கிறார்கள். இயல்பான ஒரு கவனமும் வாசிப்பும் இதுவரை தமிழில் இலக்கியப்பெறுமானம் உடைய எந்நூலுக்கும் அமையவில்லை. அறம் அப்படி ஒரு கவனத்தைப் பெறுமென்றால் நன்று