விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

கோவை புத்தகக் கண்காட்சியில் கடை எண் 255 விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் புத்தகக் கண்காட்சிப் பங்கேற்பு இது.

இவ்வரங்கில் குமரித்துறைவி, கதாநாயகி, அந்த முகில் இந்த முகில் ஆகிய நாவல்கள் கிடைக்கும். புனைவுக் களியாட்டுச் சிறுகதைகள் தொகுப்புகளாகியுள்ளன. ஆலயம் எவருடையது, ஒருபாலுறவு, இந்து மெய்மை, வணிக இலக்கியம் என வெவ்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வெளியாகி கிடைக்காமல் இருந்த ஈராறு கால்கொண்டெழும் புரவி, அனல் காற்று போன்ற நூல்கள் மறுபதிப்பாகியுள்ளன.

கதாநாயகி நாவலை புத்தகவடிவில் பார்த்தபோதுதான் அது 380 பக்கம் கொண்ட பெரிய நாவல் என்னும் எண்ணம் எனக்கு வந்தது. ஐந்து அடுக்குகள் கொண்ட நாவல். ஐந்து காலகட்டங்கள். ஒன்று விர்ஜீனியாவின் கதை நிகழும் பண்டைக்காலகட்டம். இரண்டு ஃபேன்னி ஹில்லின் வாழ்க்கை நடக்கும் பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டன். இன்னொன்று ஃபேன்னி உருவாக்கிய புனைவுக்காலகட்டம். நான்காவது வாழ்ந்த பிரிட்டிஷ் இந்திய காலகட்டம். ஐந்து கதைசொல்லியின் காலகட்டம். ஐந்து காலகட்டங்களிலும் வெவ்வேறு கதைமாந்தர் வழியாக ஒரே கதைச்சரடு ஓடிச்செல்கிறது. ஒன்றையொன்று கதைகள் நிரப்புகின்றன. புனைவு நிஜவாழ்க்கையையும், நிஜவாழ்க்கை புனைவையும் பொருளேற்றம் செய்கிறது. ஒட்டுமொத்த வரலாற்றுச் சித்திரமாக பெண்களின் அகவுலகு ஒன்று விரிகிறது. ஆனால் இது ஒரு பேய்க்கதை. ஒரே மூச்சில் வாசித்து முடிக்கமுடியும்.

அந்த முகில் இந்த முகில் எளிமையான, உணர்ச்சிகரமான காதல்கதை. அந்தக் காதல்கதையை அழகுறசெய்வது அதிலுள்ள பல காதல்கள். கதையின் பின்புலமாக உள்ள சினிமாவுக்குள் நிகழும் காதல், அதை நடிக்கும் ராமராவுக்கும் பானுமதிக்குமான நுண்ணிய காதல். காதலின் திளைப்பும், இழப்பும், ஏக்கமும் கூடிய நாவல் அது.

 

குமரித்துறைவி இதற்குள் பல பதிப்புகள் கண்டுவிட்டது. இலக்கியமறியாத ஒருவருக்கு ஒரு பரிசளிக்கவேண்டும் என்றால் குமரித்துறைவியை அளிக்கலாம். தமிழிலக்கியத்தின் உச்சங்களை வாசித்த ஒருவர் அடுத்து என்ன என்று கேட்பாராயினும் குமரித்துறைவியே அதற்குரியது. நான் வைக்கம் முகமது பஷீரின் சிறப்பு என சொல்வது இதையே. பஷீரிலேயே வாசிப்பை தொடங்கமுடியும், முடிக்கவும் முடியும்.

பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்துள்ளது. ரஷ்யநாவல்களின் கட்டமைப்பும் அழகும் கொண்ட ஆக்கம். இன்று நாம் ஒரு காலகட்டத்தை கடந்து வந்து நின்றிருக்கிறோம். மிக எளிமையாக உருவாக்கப்படும் அரசியல் கொந்தளிப்புகளின் உள்ளடக்கம் உண்மையில் என்ன என்று உணரத் தலைப்பட்டிருக்கிறோம். அந்த தேடல் கொண்டவர்களின் நூல் அது. கருத்தியலின் மாபெரும் கவர்ச்சி, அதன் அழிவுத்தன்மை, அதற்கப்பால் இலட்சியவாதத்தின் ஒளிமிக்க உச்சம் ஆகியவை வெளிப்படும் படைப்பு.

ஜெ

விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைகோவையில் நான்…
அடுத்த கட்டுரைகே.ஏ.நீலகண்ட சாஸ்திரி