புரிதல்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெமோ

நான் ஆச்சரியப்படுவது ஒன்றுண்டு. கண்கூடான திரிப்புவேலைகள் நடக்கும்போது அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? உதாரணமாக, அருண்மொழி என்றுதான் எல்லா கல்வெட்டுகளிலும் உள்ளது. தமிழின் புணர்ச்சிவிதிப்படி அப்படித்தான் எழுத முடியும். பிற்காலத்து பொன்னியின் செல்வன் நாவல்களில் தமிழ் படிக்காத பேருக்கு புரியாது என்று அதை அருள்மொழி என மாற்றினார்கள். அதை நீங்கள் மாற்றியதாகச் சொல்கிறார்கள். போருக்குச் செல்லும் வீரன் நெற்றியில் வீரதிலகம் போட்டிருக்கிறான் (போருக்கு விபூதி போட்டுச் செல்லலாம் என்று சாஸ்திரம் அனுமதிக்கவும் இல்லை) ஆனால் அது வைணவ நாமம் என்று கிளப்பிவிடுகிறார்கள். சினிமா இப்படி என்றால் இலக்கியம் இன்னும் லட்சணமாக இருக்கிறது. மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றிய உங்கள் விமர்சனத்தில் அவர் தன் உடற்குறை மற்றும் இயலாமை பற்றி தொடக்க கால கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தார் என்றும், பின்னர் அந்த தன்னிரக்கத்தை ஏதேனும் ஒருவகையில் பாதிக்கப்பட்ட அத்தனைபேரின் இயலாமையையும் புரிந்துகொள்ளும் மனவிரிவாக ஆக்கிக்கொண்டு அரசியல் கவிதைகள் எழுதினார் என்றும் சொல்கிறீர்கள். அதை அவர் உடற்குறை உள்ளதனால்தான் அவர் எழுதுவது கவிதை அல்ல என்று நீங்கள் சொல்வதாக அவரே திரிக்கிறார். சலிப்பாக இருக்கிறது

சங்கர் கிருஷ்ணன்

***

அன்புள்ள சங்கர்,

நான் முன்பு இவையெல்லாம் திரிப்பு என நினைத்து சீற்றம் அடைந்தது உண்டு. அது நம் நிலையில் நிற்பவர்களுக்கு தோன்றுவது. உண்மையில் இங்கே புரிந்துகொள்ளும் சக்தி, புரிந்துகொள்ளும் பொறுமை, புரிந்துகொள்ளும் பின்னணி அறிவு மூன்றும் மிகமிகமிகக் குறைவு. உண்மையிலேயே அவ்வளவுதான் அவர்களுக்கு வரலாறும் மொழியும் தெரியும். அவ்வளவுதான் புரிந்துகொள்கிறார்கள். உண்மையிலேயே தங்களுக்கு புரிந்தவற்றை முன்வைத்தே வாதிடுகிறார்கள். இன்று ஓர் அனுதாபத்துடனேயே அணுகுகிறேன். ஆகவே முடிந்தவரை தெளிவாக மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

மனுஷ்யபுத்திரன் புதுத்திறனாய்வு

கடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு

 

முந்தைய கட்டுரைஉடன் தங்கல், அறிவிப்பு
அடுத்த கட்டுரைபேட்டி ஒரு கடிதம்