எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வாசகனாக, அவருடைய கட்டுரைகள் மற்றும் செய்திகளின் வழியாக அஜிதன் ஒரு பயணி, அவருடைய ஆர்வமும் தேடலும் திரைத்துறை என்று மட்டுமே அறிந்திருந்தேன். அஜிதன் முதன் முறையாக அவராகவே வெளிப்பட்ட “சியமந்தகம் – ஜெயமோகன்-60″ ல் எழுதிய கட்டுரையில் அவரது எழுத்தின் ஆழமும் அதிலேயே குறிப்பிட்டிருந்த “மைத்ரி” நாவல் அறிவிப்பும் மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்தது. நாவலை வாசிக்கும் தோறும் அந்த எதிர்பார்ப்பு, பிரமிப்பாக மாற்றம் அடைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .
மைத்ரி ஒரு இளைஞரின் பயணம். உலகியலில் காலடி எடுத்துவைக்கும் நடுத்தர வயதுடைய ஹரன் என்ற இளைஞன் அவனுடைய வாழ்க்கையின் ஒரு முடிச்சித் தருணத்தின் இறுக்கத்தில் அதிலிருந்து வெளியேறி இலக்கின்றி பயணம் செய்ய நேரிடுகிறது. இலக்கின்றி பயணம் செய்யும் ஒரு இந்தியர் இமயத்தை நோக்கித்தான் வரமுடியும் என்ற இயல்பில் உத்தரகாண்டின் ருத்திரப்ரயாக் செல்கிறார். அங்கிருந்து பேருந்தில் சோன் பிரயாக் பயணிக்கிறார்.
அந்த பயணம், அந்த பயணத்தில் அவனோடு இணையும் மைத்ரி என்ற பெண், அவளோடு செல்லும் ஒரு கிராமம், அவளுடன் கிடைக்கும் ஒரு அனுபவம், அதை அடுத்து அவன் அடையும் கண்டடைதல் என இருக்கும் அந்த “வாழ்க்கைத் துளி“யை நாவல் பிடித்து வைத்திருக்கிறது.
இதில் மிக குறிப்பிட்டு சொல்லும்படி இருப்பது நாவல் நிகழும் களம். இமையப்பனி மலை முகடுகளின் நடுவில் நாவல் நிகழ்கிறது. அந்த நிலத்தில் பயணிக்காத ஒருவர் கற்பனையில் இந்த நாவலின் ஒரு பக்கத்தை கூட எழுதியிருக்க முடியாது என்ற புரிதலில் நாவலாசிரியர் ஒரு பயணி என்பதை வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களில் தெரிந்துவிடுகிறது. அதில் அவர் புறக்காட்சிகளை இணைத்திருக்கும் விதத்திலும், அதன் செறிவிலும் நுண்மையிலும் அவர் எழுதிக்கொண்டே பயணித்திருப்பாரோ என்று தோன்றச் செய்கிறது.
நாவலில் வரும் ஊர் பெயர்களையும் இடங்களையும் இணையத்தில் தேடிப் பார்க்கும் போது இதுபோன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையை வாசகனின் மனதில் தூண்டிவிடுகிறது (மைத்ரி போன்ற பெண் அருகில் வந்து அமர வேண்டும் என்ற ஆர்வத்தையும்). இதைத்தாண்டி இந்த நாவலை தத்துவார்த்தமாகவும் வாசிக்க முடியும் என்று முன்னுரை எழுதியிருக்கும் எழுத்தாளர் சுசித்ரா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மைத்ரி, அதன் நாவல் களம் சார்ந்து, அதன் தரிசனம், விவரிப்பு சார்ந்து ஒரு புதிய முயற்சி, அது வெளிப்பட்டிருக்கும் வகையில் ஆசிரியரின் முதல் முயற்சி என்று நம்புவதற்கு சற்று சிரமமாகவே இருக்கிறது.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.
***
அன்புள்ள ஜெ
மைத்ரி படித்தேன். வெறும்காட்சிகளால் ஆன ஒரு சிறு பயணம். ஒன்றுமே நிகழாமல் நாவல் முடிகிறது. ஆனால் எல்லாமே உள்ளத்தில் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. பரபரப்பு நாடும் வாசகர்களுக்கு உரியது அல்ல. எடுத்தால் கீழே வைக்கமுடியாத படைப்பும் அல்ல. நான் இந்த இருநூறு பக்க நாவலை எட்டு நாள் எடுத்துக்கொண்டு வாசித்து முடித்தேன். நவீனக்கவிதையில் ஆர்வமும் பழக்கமும் உள்ளவர்களுக்கு இது இயல்பான வாசிப்பை அளிக்கும். காட்சிகள் எல்லாமே படிமங்களாக ஆகிக்கொண்டே இருக்கின்றன. ஏனென்றால் மனம் காட்சிகள் வழியாகவே வெளிப்படுகிறது.
ஒருவன் ஒரு பெண்ணை சந்திக்கிறான். பார்வைக்கு அவள் இன்று வாழும் ஒரு கட்வாலி பெண். அவளுடன் மலைப்பகுதியின் ஆழத்துக்குள் மூழ்கி மூழ்கி செல்கிறான். அங்கே எல்லாமே அசைவில்லாமல் காலமில்லாமல் இருக்கின்றன. அவன் அவள் வழியாக தன்னை உணர்கிறான். ஹரன் மைத்ரி. ஹரன் டைனமிக் ஆனவன். மைத்ரி அல்லது சக்தி ஸ்டேட்டிக் ஆனவள். ஒரு eternal dialectics அது அற்புதமான கவித்துவத்துடன் கிளைமாக்ஸில் சொல்லப்பட்டுள்ளது
ராஜ்குமார்