புதுவெள்ளம்

தேவிபாரதியின் ‘நொய்யல்’ முன்வெளியீடு

தேவிபாரதி – தமிழ் விக்கி

தேவிபாரதியின் நொய்யல் நாவலுக்கு எழுதிய முன்னுரை 

சில அடிப்படையான படிமங்கள் எழுத்தாளர்களின் உள்ளத்தில் எவ்வாறு எழுகின்றன என்பது எப்போதும் ஆர்வமூட்டும் ஒரு வினா. பெரும்பாலான படிமங்கள் அந்த எழுத்தாளனின் உளநிலையையும் கனவுகளையும் பொறுத்தவை. அவனுக்கே உரியவை. அவன் வெளிப்படும் அத்தருணத்துக்குரிய மொழியை அக்கணம் கண்டுகொண்டவை. ஊற்று மண்சுவை பெறுவத்போல. ஆயினும் அவற்றை அகழ்ந்து அகழ்ந்து செல்வோமென்றால் நீண்ட மரபு உருவாக்கி நனவிலியின் ஆழத்தில் எங்கோ புதைத்து வைத்திருக்கும் ஆழ்படிமங்களை சென்றடைய முடியும். அந்த எழுத்தாளன் தன்னை எழுத்தாளன் என்று உணர்வதற்கு முன்னரே மொழியினூடாக, தெய்வ உருவங்களினூடாக ,நூறுநூறு கதைகளினூடாக அவை அவனுக்குள் சென்று குடியேறியிருக்கும். அவை அவன் எலும்பின் மஜ்ஜை போல. அவன் குருதி முழுக்க அங்கிருந்தே ஊறி வருகிறது.

வளருந்தோறும்  அவன் தன் பிரக்ஞையை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். கற்றறிகிறான். கற்றவற்றை கலைத்தும்கோர்த்தும் சிந்திக்க  ஆரம்பிக்கிறான். தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்கிறான். அந்த அடையாளத்தை பேணும்பொருட்டு சிந்திக்கத் தொடங்குகிறான். நான் இத்தகையவன் என்று தன்னுடைய எல்லா எழுத்தினூடாகவும் அவன் அறைகூவிக்கொண்டே இருக்கிறான். ஆனால் பாறை இடுக்குகளினூடாக கசிந்துவரும் ஆழ்நிலத்து ஊ ற்று போல அவனுள்ளிருந்து அவனறியாத அந்த ஆழம் வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. எங்கோ ஓரிடத்தில் ஊற்றுபெருகி அப்பாறைகளை அது பெயர்த்து வெளியே தள்ளுமெனில் அங்கொரு அருவிப் பீறிடலை நாம் பார்ப்போம்.

தேவிபாரதியின் முந்தைய நாவல்களிலிருந்து நொய்யல் எனும் இந்த நாவல் முற்றிலும் வேறுபட்டிருப்பது அது இந்நாவல் வரை தேவிபாரதி தனக்கென உருவாக்கி வைத்திருந்த அறிவார்ந்ததும்எதிர்மனநிலை கொண்டதும்சற்றே தத்துவார்த்த சோர்வு கொண்டதுமன  நவீனக் கதைசொல்லி என்னும் தன்னடையாளத்தை இந்நாவலில் அவருக்கு உள்ளிருந்து எழும் ஓர் ஊற்று பெருகி எழுந்து உருட்டி அப்பால் தள்ளி வெளியாகியிருக்கிறது என்பதனால் தான். இந்நாவலில் தேவிபாரதி அவருடைய வழக்கமான செறிவான யதார்த்தவாதத்தை பெரும்பாலும் கைவிட்டிருக்கிறார். அவருடைய நாவல்களில் எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் இருத்தலியல் தத்துவமும் அதிலிருந்து எழும் விலகல் கொண்ட அங்கதமும் இந்நாவலில் இல்லை. இது இதுவரைக்கும் அவர் நாவல்களில் இல்லாத தொன்மங்களையும் தொன்மங்களையும் சார்ந்த தீவிர உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் படைப்பாக இது உள்ளது.

முன்பொருமுறை லா.சா.ராமிருதத்தின் ஒரு கதையை முன்வைத்து நண்பர்கள் நடுவே ஒரு விவாதம் நடந்தது. அக்கதையில் சீற்றமடைந்த ஒரு பிராமணகுடும்பத்துப் பெண் ஓடிச்சென்று தன் வீட்டுக் கொல்லைக்கிணற்றில் குதித்துவிடுகிறாள். கிணற்றிலிருந்து நீர்பொங்கி வெளிவருகிறது. பெருவெள்ளமாகி அந்தத் தெருவையே மூழ்கடிக்கிறது. ஊரை மூழ்கடித்துச் செல்கிறது. நண்பர் ‘இந்தக் கதை எப்போது எழுதப்பட்டது?” என்று கேட்டார். நான் ‘1950 வாக்கில் எழுதப்பட்ட கதைஎன்று சொன்னதும்அப்படியென்றால் மாய எதார்த்தவாதத்தை லாசரா முன்னரே எழுதிவிட்டாரல்லவா?” என்றார்.

மாய யதார்த்தவாதமென்பது லத்தீனமெரிக்கா தன்னுடைய தொல்மரபை நவீன சூழலில் வெளிப்படுத்துவதற்காக கண்டுபிடித்த ஒரு கதைசொல்லும் முறை. ஏதோ ஒருவகையில் எல்லா மரபுகளுக்கும் தங்களுக்கான மாயங்கள் உள்ளன தங்களுக்கான நவீனகதை சொல்லும் முறைகளையும் அவை உருவாக்கிக்கொள்ள முடியும்உள்ளன. மாயங்கள் ஏன் ?ஏனெனில் மானுட உள்ளம் செயல்படும் சில ஆழங்களை மாயத்தினூடாக மட்டுமே சொல்ல முடியும் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமுள்ள உறவின் சில பகுதிகள் மாயத்தினூடாக அன்றி தொடமுடியாதவை. மானுட உறவே மாயங்களின் விளையாட்டுதான் .

சொல்லப்போனால் மாயத்தை சொல்வதற்காக மட்டுமே மனிதன் கதை என்னும் வடிவத்தை உருவாக்கியிருக்கிறான்.அதீதங்களை சொல்வதற்காக கட்டின்மையை சொல்வதற்காக மட்டுமே உலகெங்கும் கதைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அன்றாடத்தை யதார்த்தத்தை, தர்க்கத்திற்குள் சிக்குவதைச் சொல்வதற்கு கதையை பயன்படுத்தலாம் என்பதே பதினெட்டாம் நூற்றாண்டு உலகத்திற்கு அளித்த ஒரு புதிய அறிதல்தான் .ஒரு மாறுதலுக்காக அதை சொல்லிப்பார்த்தார்கள். அதன் உச்சங்களை தொட்டார்கள். ஆனால் இப்போது எண்ணிப்பார்க்கையில் அந்த உச்சகட்ட யதார்த்த படைப்புகளில்கூட நரம்பென ஊடாடி அவற்றை ஒருங்கிணைத்து அவற்றின் சாராம்சத்தை வெளிக்காட்டுவதாக  இருந்தது அவற்றிலுள்ள மாயத்தன்மைதான். யதார்த்தவாத நாவல்களில் உள்ளது உள்ளார்ந்த மாயத்தன்மை. ஆசிரியனால் பூடகமாக்கி வைக்கப்பட்ட மாயத்தன்மை என்று அதை சொல்லலாம். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலில் ஒரு குன்றின்மேல் ஏறி நின்று பனிமூடிய ராணுவ அணிகளை பார்வையிடும் நெப்போலியனின் காட்சியும் சரி, போர்க்களத்தில் மல்லாந்து படுத்து மேகங்களை பார்த்து அங்கே எவ்வளவு அமைதி என்று வியக்கும் ஆண்ட்ரூவின் காட்சியும் சரி அந்த தருணங்களில் சென்றடைவது ஒரு மாயநிலையைத்தான். அந்தப்புள்ளிகளை மட்டும் கதையாக ஆக்குவதென்றால் மாயப்புனைவே தேவைப்படும்

மாயக்கதைகள வாழ்வின் சாரமென திகழும் புரியாத சிவவற்றை ,அவை வெளிப்படும் தருணத்தை மட்டுமே கதையாக்க முயல்கின்றன என்று தோன்றுகிறது. நம்முடைய பண்பாட்டுக்கே உரிய மாயத்தன்மை லாசராவின் அக்கதையில் வெளிப்படுகிறது. ஆறு, கிணறு, பாம்பு,தீ என நாம் எப்போதும் சொல்லிச் சொல்லி வளர்த்துக்கொண்டே இருக்கும் சில தொல்படிமங்களைச் சார்ந்து லாசராவின் மனம் இயங்குகிறது. நவீன எழுத்தாளர்கள் பலருக்கு அது அவர்கள் இளமையில் கேட்ட குழந்தைக் கதைகளின் சாயலில் உள்ளதனாலேயே, தாங்கள் வளர்ந்துவிட்டோம் எந்று அவர்கள் எண்ணிக்கொள்வதனாலேயே அவற்றிலிருந்து விலக்கம் ஏற்படுகிறது எதிர் திசையில் சென்று, தூய யதார்த்ததை தொட்டு, அங்கே எஞ்சும் ஒன்றை தொட எம்பி மாயத்தை அடைகிறார்கள். வளைந்து மீண்டும் தங்கள் குழந்தைமைக்கு வந்து சேர்கிறார்கள் போலும் தந்தையிடமிருந்து விலக்கத்தை உருவாக்கிக்கொள்ள முயன்று, ஐம்பது வயதுக்கு மேல் தந்தையைப்போலவே தானுமாகும் வாழ்க்கையைத்தான் மைந்தர்கள் அனைவரும் கொண்டிருக்கிறோம் என்பது போல.

தேவிபாரதியின் நாவலில் அவர் சென்றடைந்திருக்கும் இடம் எனக்கு பலவகையான எண்ணங்களை உருவாக்குகிறது. தமிழின் மிக முதிர்ந்த, மிக சரியான யதார்த்தவாத படைப்பாளிகளில் ஒருவர் காரிச்சி போன்ற அதீதத்தின் விளிம்பிலேயே நடமாடும் ஒரு கதாபாத்திரத்தை ஏன் உருவாக்குகிறார்? இத்தனை ஆண்டுகளில் அவர் எழுதி எழுதி அடைய முடியாத எதை இந்நாவலில் அவர் அடைய எண்ணுகிறார்? எஞ்சியது என்னஇந்நாவல் முழுக்க அவருக்கு இயல்பே இல்லாத வியப்பின் மொழி உருவாகி வந்திருக்கிறது.நாவலின் தொடக்கத்தில் நொய்யலில் வெள்ளம் வரும் சித்தரிப்பின் மொழியில் நான் முதல் முறையாக தேவிபாரதியில் உறையும் சிறுவனை பார்த்தேன். ஏற்கனவே எனக்கு ஐந்து வயதான சுந்தர ராமசாமியை, மூன்று வயதான லா..ராவை, ஒரு வயதான பிரமிளை தெரியும்.

நொய்யலில் வெள்ளமா? ஆமாம், நொய்யலிலேதான். சாயக்கழிவும் உடைமுள்புதர்களும், குப்பைகளுமாக வரண்டு கிடக்கும் அந்த மணல் தடத்தில்தான் வெள்ளம். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் தேவிபாரதிக்கு அப்பெருவெள்ளம் தேவைப்பட்டிருக்கிறது. அதுவும் ஓர் அன்னை சொல்ல, அவள் சொல் பொய்யாமல் எழும் வெள்ளம். அன்னை தெய்வம். பிச்சியவள் காண் எங்கள் அன்னை, பெரும் பேயவள்காண் எங்கள் அன்னை என தேவிபாரதி கண்டுகொண்ட அன்னை. ‘மலையுருகிப் பெருக்கெடுத்த நதி மடியுமோ நிரந்தரமாய்? அத்தனை பெரிய ஆற்றலை வெளிப்படுத்த வல்லதோ ஒரு சிறு சொல்?’ என நாம் கண்டடையும் பெருநதி.

நொய்யல் என்றாலே நொய்தல், தேய்தல் என்று பொருள். நொய்யல் ஆறு வெள்ளம் பெருகி ஊரை நிரப்பி தெய்வங்களையும் கோயில்களையும் சுருட்டிக்கொண்டு செல்கிறது. அந்த ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இன்னொரு தெய்வம் தேவனாத்தா. பூசாரியின் உள்ளிருந்து கிளம்பி உடலெங்கும் ஆவேசித்து அவன் சொல்லில் திகழ்ந்து அருளும் மருளும் என திகழ்ந்து வாழ்த்தி வரங்கொடுத்து நின்றிருக்கும் பேயுருகாரிச்சி எளிய பெண். அவளுடைய பிறப்பு எளிதிலும் எளிது ஆனால் நொய்யலிலிருந்து, தேவனாத்தா முதலான அதன் தெய்வங்களிலிருந்து ஒரு மர்மச்சரடு காரிச்சிக்குள் வந்து புகுந்து கொள்கிறது. அவள் சுட்டிக்காட்டி ஆணையிட்டால் நொய்யல் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. பெய்யெனப்பெய்யும் மழை என்பது போலகாரிச்சி, பாரு, தேவனாத்தா நொய்யல் எல்லாம் ஒன்றா?” என்னும் ஒரு திகைப்பு இந்நாவலில் உள்ளது. அதுவே இக்கதைப்பரப்பு முளைத்தெழுந்த முதல்விதை போலும்

இந்நாவல் முழுக்க ஆதிக்கம் சாதி இழிவுகள், தொல்நிலத்தின் ஒடுக்குமுறைகள், அவற்றினூடாக மீறி எழும் மானுடத்தருணங்கள் உள்ளன. தனித்தனி நிகழ்வுகளாக சொல்லப்படும் அவை அனைத்துமே இந்நாவலின் மையச்சரடான உருவாக்கும் இந்த மாயத்தால் ஒன்றெனக் கோக்கப்பட்டுள்ளன. “நீ என்ன தேவனாத்தாளா? நீ வான்னு சொன்னா வாரதுக்கு?” “ஆமாங்க சிரிக்கவுண்டரே, நான் தேவனாத்தா தே. தேவனாத்தா வேற காரிச்சி வேறயில்லஎனும் இடம் ஓர் உதாரணம். நொய்யல் பெருகி வருகிறது. ஏனென்றால் நொய்யலும் காரிச்சியேதான். இந்த மனிதர்கள் அனைவருக்குள்ள்ளும் ஓடும் ஒன்றையே தேவிபாரதி இந்நாவலில் நொய்யல் என கண்டடைகிறார்

ஒரு புனைவில் வரும் அதீத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களின் பெறுமதி என்ன என்று எப்படி மதிப்பிடுவது? அதீதத்தன்மை பெரும்பாலான யதார்த்தவாத நோக்குள்ள வாசகர்களுக்கு ஒருவித ஒவ்வாமையை உருவாக்குகிறது. அது ஆசிரியர் உரத்துப் பேச முற்படுவதாக அவனுக்குத்தோன்றுகிறது. அப்படித்தோன்றுவது ஒரு குறிப்பிட்ட வகையான உளப்பாங்கின் விளைவே ஒழிய அதற்கு பொதுமதிப்பு எதுவுமில்லை. ஏனெனில் நம் வாழ்க்கையில் தொடர்ந்து அதீதமான மனிதர்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு கணத்தில் ,ஏதோ ஒரு ஊரில் ,நாம் கண்டு மறந்த மனிதரை வாழ்நாள் முழுக்க நினைவு கூர்ந்துகொண்டிருக்கிறோம். அது அவர்களிலிருக்கும் ஓர் அதீதப்பண்பை நாம் அடையாளம் கண்டுகொண்டதனால்தான். நாம் நினைவில் சேமித்திருக்கும் எல்லா கணங்களும் அதீதங்கள் மட்டுமே. அவற்றால்தான் நாம் நம் வாழ்க்கையையே நினைவுச்சரடாக கோத்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதீதமென்பது ஒருவகை பொங்கிவழிதல் என்று கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் அவருடைய உடலால், சூழலால் அளிக்கப்பட்டிருக்கும் ஓர் அளவு உள்ளது. அந்த அளவைத்தாண்டி அவருள்ளிருந்து ஒன்று பீரிடுவதே அதீதத்தன்மை. அந்த அதீதத்தன்மைதான் உண்மையில் அவருடைய சாரம் .அது எந்த அளவிற்குள்ளும் நிற்காதது.எந்தக்கட்டுக்குள்ளும் அடங்காது. ஒருவரிடம் எப்படி ஒடுக்கினாலும் ஒடுக்க முடியாத ஒன்று இருக்குமெனில் அதுவே அவருடைய சாராம்சம் எனலாம். அந்த அதீதத்தன்மையை நோக்கி கலைஞர்கள் ஈர்க்கப்படுவது மிக இயல்பானது. ஏனெனில் அது  மாடனுடசாராம்சம் நோக்கிய பயணம்.அனைத்து வகையிலும் சாதாரணமான, ஒவ்வொரு தெருமுனையிலும் சந்திக்கத் தகுந்த ஒருவரை உண்மையில் புனைவாக்கத்தான் வேண்டுமா என்ற ஐயம் எனக்கு உண்டு. ஒரு புனைவில் அவர் எங்கோ ஓரிடத்தில் ஒரு வகைமாதிரியாக நிகழ்த்தப்படலாமே ஒழிய புனைவென்னும் கலை அவருக்காக உருவாக்கப்பட்டதல்ல. அது சாராம்சம் நோக்கி செல்வது. சாராம்சம் என்பது அதீதமாக வெளிப்படுவது. இன்று திரும்பிப்பார்க்கையில் உலகப்புனைவுலகில் அதீதங்களினூடாக தங்களை நிகழ்த்திக்கொண்ட பெருங்கதாபாத்திரங்களே நினைவில் நிற்கிறார்கள். அந்தந்த தருணங்களில் நான் பொருத்தி நான் மகிழ்ந்த சிறு சிறு கதாபாத்திரங்கள் எல்லாருமே வெறும் முகங்களாக மங்கின புகைப்படங்களாக மாறி பின்னகர்ந்துவிட்டிருக்கின்றனர்

ஒவ்வொரு அதீதத்துடனும் என் உள்ளம் சென்று தொடும் ஒரு புள்ளி உள்ளது. ஏனெனில் அந்த அதீதங்கள் அனைத்தும் ஒரு மானுடனாக என்னுடையவையேதான். என்னால் ஜோன் ஆஃப் ஆர்க்கை புரிந்துகொள்ள முடிகிறது. நெப்போலியனை புரிந்துகொள்ள முடிகிறது. பித்தனும் விவேகியுமான காந்தியையும் புரிந்துகொள்ள முடிகிறது. இவை அனைவருமாக ஆகும் ஒரு சாத்தியத்தை எனக்கு புனைவு திறந்து காட்ட வேண்டும். எனில் மட்டுமே புனைவை வாசிப்பதற்கான ஊதியத்தை நான் அடைகிறேன்.

தேவிபாரதியின் இந்நாவல் முக்கியமானதென்று எனக்குத் தோன்றுவது இதில் அந்த அதீதங்கள் வெளிப்படும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையும் அவர்களின் தீவிரமும் அதிகம் என்பதனால்தான் .காரிச்சிக்கு நிகராகவே முக்கியமானவர் குமரப்ப பண்டிதன். அவர் வாழ்க்கையின் ஒரு வரைகோட்டுச்சித்திரத்தை தேவிபாரதி அளிக்கிறார். அதனூடாக தன்னுடைய ஒவ்வொரு எல்லையையும் அவர் கடந்து போவதை காண முடிகிறது. எளிய குடிநாசுவனாக பிறந்து ,கல்வியினூடாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து, உள்ளுணர்வையும் கல்வியையும் இணைத்துக்கொள்ள முடிந்தமையால் ஜோதிடம் வழியாக காலங்களைக் கடந்து பார்க்கும் கண்கள் பெற்று, அதன்பின்னரும் தன்னை ஒரு எளிய நாசுவனாகவே பார்க்கும் சூழலின் காலூன்றி நின்றிருக்க வேண்டிய குமரப் பண்டிதன்ர ஒரு காலகட்டத்தின் முழுத்துயரத்தையும் வெளிப்படுத்துபவனாகவும், மானுடத்துயரங்கள் அனைத்தையும் கடந்து தன் ஞானத்தால் அனைத்தையும் கடந்து நின்றிருக்கும் உச்சத்தைக்காட்டுபவனாகவும் இந்நாவலில் வெளிப்படுகிறான்.

இந்நாவல் தேவிபாரதியின் வேறெந்த நாவலிலும் இல்லாத அளவுக்கு அதீத தருணங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே வேறெந்த நாவலிலும் இல்லாத அளவுக்கு மானுட உச்சங்களும் அவை வெளிப்படும் அழகிய சொற்தருணங்களும் கொண்டுள்ளது. ஆனால் அந்தச் சொற்தருணங்கள் நாம் செவ்வியல்தன்மை மேலோங்கிய நாவல்களில் காணும் சொற்றொடர்களால் ஆனவை அல்ல. அவை ஒரு நாட்டார்ப்பாடலில் வருவன போலிருக்கின்றன. ஒரு பயணத்தில் நாடோடி ஒருவனின் வாயில் இருந்து வெளிப்படுவன போலிருக்கின்றன

தேவிபாரதியின் இந்நாவலில் உள்ள மாயத்தை லாசராவின் நாவலில் உள்ள மாயத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது அதை புரிந்துகொள்ளுவதற்கான வழி.காரிச்சியை நாம் அபிதாவுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம்லாசராவின் அபிதா அவளுடைய அதீதத்தை அடைவது தொடப்படாத தூய்மையினூடாக ,பேரழகினூடாக, நெருப்புக்கிணையான ஒன்றாக லாசரா அபிதாவை உருவாக்குகிறார். தொட முடியாதவள் என்னும் பொருளில் அவளுக்கு அபிதகுசலாம்பாள் என்று பெயர் வைக்கிறார். நேர்மாறாக காரிச்சி அவலட்சணமானவள், கன்னங்கரியவள், ஓங்கு தாங்கானவள், நம் மரபு அரக்க குணம் என்றுஅரக்க தோற்றம் என்று சொல்லக்கூடிய அனைத்து தன்மைகளையும் கொண்டவள். அவளில் வெளிப்படும் தெய்வீகத்தையே தேவிபாரதி இதில் எழுதுகிறர். லாசரா மாயம் காட்டிய  அந்த டாரட் கார்ட் அப்படியே புரண்டு மறுபக்கத்தை காட்டுகிறது. நேரெதிரான குணங்களுடன் அதே தெய்வத்தன்மையுடன் காரிச்சி அமர்ந்திருக்கிறாள். குமரப்ப பண்டிதனின் கதையும் அதுவே. அவன் ஏறிச்செல்லும் உயரங்கள் அகவயமானவை, ஆனால் புறவுலகில் அவன் கீழ்மையின் எல்லைகள் வரை செலுத்தப்பட்டு அவமதிக்கப்படுகிறான். நம் நாட்டார்த்தெய்வங்களில் பல கீழ்ச்சாதி என கருதப்பட்ட குலங்களைச் சேர்ந்தவை, அவமதிப்பை அடைந்து அதனூடாகவே தெய்வமானவை. இந்த விந்தையான முரண்நிகழ்வை இந்நவீனநாவலும் சுட்டிச்செல்கிறது.

இந்நாவல் முழுக்க திகழும் மீபொருண்மை அல்லது ஆன்மிகத் தன்மை என்பது முழுக்கமுழுக்க நம்முடைய நாட்டார் மரபு சார்ந்தது. நாட்டார் மரபுத்தெய்வங்கள் காரிச்சியையும் குமரப்பண்டிதனையும் போன்றவை.   நாவல் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் ஆக்ரோஷமான அந்த நாட்டார் தன்மையே இதை ஒரு தனித்த படைப்பாக மாற்றுகிறது. கிரிக்கவுண்டனுக்கு இருக்கும் நீரில்கண்டம் எனும் பிறவிச்சாபமும், மீள மீள அவன் நொய்யல் நோக்கியே ஈர்க்கப்படுவதும், அங்கே அவன் கண்டடையும் தருணங்களும் எதைக் காட்டுகின்றன? நொய்யல் என்னும் ஆற்றை முழுக்க விளக்கிவிட முடியாத ஒரு ஆழ்பெருக்காக இந்நாவல் ஆக்கிவிடுகிறது   அதுவே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது

எப்போதும் என்னை உத்வேகமூட்டும் அம்சமென்பது ஒரு எழுத்தாளன் தன்னுடைய சாத்தியங்களை தானே மீறுவது தான் அதுவரை எழுதியவற்றை ஆடைபோல் களைந்துவிட்டு பிறிதொருவனாக வெளிப்படுவது. இந்நாவலில் நான் வாசித்த எல்லா தேவிபாரதி நாவல்களிலிருந்தும் முற்றிலும் விடுபட்டு வேறொருவராக தேவிபாரதி நிகழ்ந்திருப்பது பெரும் உவகையை அளிக்கிறது அவருக்கு என் வணக்கம்

முந்தைய கட்டுரைபற்று,வரவு , இருப்பு
அடுத்த கட்டுரைகமல் உரையாடல்