இலக்கியமும் சமூகமும்
அன்புள்ள ஜெ,
வணக்கம் உங்களுடைய இலக்கியமும் சமூகமும் என்ற கட்டுரை முக்கியமானதாகத் தெரிகிறது ஆனால் அதைத் தொடர்ந்து எனக்கு ஒரு கேள்வி, தத்துவம் இல்லாத இலக்கியம் உண்மையிலேயே பயன் உள்ள ஒன்றா? உலகக் காப்பியங்கள் எல்லாவற்றிலும் தத்துவம் இலக்கியத்தின் வழியாக பகிரப்பட்டது தானே? இலக்கியத்தைப் போலவே தத்துவம் சமயங்களின் வழியாகவும் பகிரப்பட்டுள்ளது. சமூகத்தைப் ஒன்றிணைத்த பெரும் பங்களிப்பு சமயத்திற்கும், தத்துவத்திற்கும் உண்டல்லவா? இலக்கியம் மனித உணர்ச்சிகள் வழியாக தத்துவத்தை பகிரத்தானே? ஆனால் சமயம், தத்துவத்தை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துகிறது அல்லவா? புத்த மதமும், ஜென் மதமும் கிழக்கு மற்றும் பல நாடுகளில் தத்துவங்கள் மற்றும் சமயங்கள் வழியாக இந்த கலாச்சாரங்களை ஒன்றிணைத்தது அல்லவா? இலக்கியத் படிக்கின்றவர்களின் பரிணாம வளர்ச்சி தத்துவம் மற்றும் சமயமாக இருக்குமா? அது ஒரு இயல்பான நகர்வா?
நன்றி,
ஹரிஹரன்
***
அன்புள்ள ஹரிஹரன்
இலக்கியத்திற்கும் தத்துவத்திற்குமான உறவென்பது எப்போதுமே தொடர் விவாதத்துக்குரியதாக இருக்கிறது. தத்துவம் இலக்கியத்திற்கு தர்க்கபூர்வத்தன்மையை முழுமை நோக்கை அளிக்கிறது. இலக்கியம் தத்துவத்திற்கு படிமங்களையும் உணர்ச்சிகரத்தையும் அளிக்கிறது. உலகில் நாம் கொண்டாடும் பெரும்பாலான உயர்ந்த தத்துவவாதிகள் மிகச்சிறந்த இலக்கியவாதிகளுக்கு நிகரான மொழிவளமும் அழகியலும் கொண்டவர்கள். உலகில் நாம் பெரும்படைப்பாளிகளாக நாம் எண்ணும் பலர் தத்துவவாதிகளாகவும் கருத்தில் கொள்ளத்தக்கவர்கள். முதல்வகைக்கு ஹெகலையோ ஷோப்பனோவரையோ சுட்டலாம். இரண்டாவது வகைக்கு டால்ஸ்டாயையோ தஸ்தாவெஸ்கியையோ சுட்டிக்காட்டலாம்.
இலக்கியம் அந்த ஆசிரியனின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவம் தனிப்பட்ட உணர்வுகள் ஆகியவற்றிலிருந்து எழுந்து, ஒருபொதுப்பார்வையை நோக்கி செல்கிறது. அந்தப் பொதுப்பார்வையை அது உருவாக்கிக் கொள்வதற்கான கருவியாக தத்துவம் திகழ முடியும். அந்த ஆசிரியனின் தனிப்பட்ட அனுபவம், உணர்வுகள் ஆகியவற்றை அது வடிவமைக்கவோ, மாற்றியமைக்கவோ இயலாது. இலக்கியத்தில் தத்துவத்தின் இடமும், எல்லையும் இதுவே.
இலக்கியத்திற்கு வரலாறும் தத்துவமும் இரண்டு சிறகுகள் போல. அது அவற்றைக் கொண்டே பறக்க முடியும். இலக்கியத்துக்கு வரலாற்று உணர்வு அமைகையில் இயல்பாகவே மறுபக்கம் தத்துவம் தேவைப்படுகிறது. வரலாற்றுணர்வு உள்ள, ஆனால் தத்துவ உணர்வு இல்லாத, ஓர் இலக்கியப்படைப்பு இருக்க இயலாது. வரலாற்றுச் சித்திரத்தை புரிந்துகொள்ளவும் வகுத்துக்கொள்ளவும், கையாளவும் எழுத்தாளனுக்கு தத்துவம் தேவைப்படுகிறது. தத்துவத்தை உரைப்பதற்கான தரவுகள் வரலாற்றிலிருந்தே பெறப்படுகின்றன.
தத்துவவாதிக்கு அவன் கொண்ட கொள்கையை முன்வைப்பதற்கான உருவகங்களும் ஆழ்படிமங்களும் இலக்கியத்திலிருந்து கிடைக்கின்றன. தஸ்தாவெஸ்கியிலிருந்து ஃப்ராய்டு பெற்றுக்கொண்டவை நாம் அறிந்ததே. மிகச் சரியாக தன் எண்ணத்தை வகுத்துரைக்கும் சொல்லாட்சியையும் இலக்கியத்திலிருந்தே தத்துவவாதி பெற்றுக்கொள்கிறான். பலதருணங்களில் மிகச்சிறந்த தத்துவ வரையறைகள் அவற்றின் அர்த்தத்தினால் அல்ல, அவற்றின் சொற்தேர்வினால்தான் நிலைகொள்கின்றன. அவை கூறும் கருத்தின் எல்லையைக்கடந்தும் அர்த்தங்களை ஏற்றிக்கொண்டு தலைமுறைகளைத்தாண்டி வாழ்கின்றன. உதாரணமாக, நரகம் என்பது மற்றவர்கள் தான் என்னும் வரி இன்று ஒரு தத்துவவாதியின் வரியாக அல்ல,ஒரு கவிதை வரியாகவே வாசிக்கப்படுகிறது. அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் அர்த்தங்களை சார்த்தர் அறிந்தால் திகைத்திருக்கக்கூடும்.
அப்படி என்றால் இலக்கியப்படைப்புக்கு தத்துவம் இன்றியமையாததா? அவ்வாறல்ல. தத்துவத்துக்கு எதிரான, தத்துவம் இல்லாத எழுத்துக்களே உண்மையில் இலக்கியத்தில் மிகுதி. ஆனால் அவை ஒருவகையான ‘சிறுஇலக்கியங்கள்’ என்று நான் நினைக்கிறேன். சிறு இலக்கியங்களுக்குள்ள அழகும் கூர்மையும் அவற்றுக்கு உண்டு. ஒருவனுடைய சிந்தனையை முழுமையாக ஆக்ரமித்து, அவனுடைய அனுபவ மண்டலத்தை முற்றாக மாற்றியமைத்து, அவனுக்கு புதிய ஒரு பார்வையை அளிக்கும் ஆற்றல் பெரும்பாலும் சிறு இலக்கியங்களுக்கு இருப்பதில்லை. ஆனால் அவனுடைய அனுபவமண்டலத்தை தொட்டு விரியச்செய்ய, அவனுடைய நினைவுகளைக் கிளற, அவனுடைய அழகுணர்வை நிறைவு செய்து அவனுடைய வாழ்க்கைப்பார்வையை விரிவாக்கம் செய்ய அவற்றால் இயலும்.
டால்ஸ்டாயை செக்காவுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். செக்காவ் உங்களுக்கு அளிப்பது தத்துவங்கள் அற்ற, அனுபவங்கள் மட்டுமேயான உலகை. அந்தத் தளத்தில் உச்சமும் அவரே. அந்த உலகம் நமது நம்பிக்கைகளை அசைப்பதில்லை. நாம் உருவாக்கி வைத்திருக்கும் உலகத்தின் அடித்தளத்தை நொறுக்குவதில்லை. நமது அனுபவ மண்டலத்தை தொடர்ந்து விரிவடையச் செய்கிறது. புன்னகைத்தும் நெகிழ்ந்தும் நாம் விரிவு கொள்கிறோம். டால்ஸ்டாய் அல்லது தஸ்தாவெஸ்கி அளிக்கும் அனுபவம் அவ்வாறல்ல. அவர்கள் நம்மை நொறுக்குகிறார்கள். அலைக்கழிக்கிறார்கள். நம்மை நாமே மீண்டும் கட்டி எழுப்பச்செய்கிறார்கள். அவர்களினூடாக கடந்து வந்தபிறகு நாம் முற்றிலும் பிறிதொருவராக இருக்கிறோம்.
ஏனென்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தத்துவ அடித்தளம் உள்ளது. அது மரபானதாக, மதநம்பிக்கையாக, அரசியலாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையின் சாரம், இயற்கையின் நோக்கம், பிரபஞ்ச நெறி பற்றி ஒரு கருத்துநிலை இல்லாதவர்களே இல்லை. சரி தவறுகள், ஒழுக்கங்கள், அறங்கள் பற்றிய நிலைபாடுகள் அனைவருக்கும் உண்டு. அவற்றை நொறுக்காமல் ஒருவனை புதுச்சிந்தனை நோக்கி கொண்டுசெல்ல இலக்கியங்களால் இயலாது. அவற்றை நொறுக்க ஒரு முழுமையான ‘சூழ்ந்துகொள்ளல்’ தேவை. முழுமையான ‘ஆக்ரமிப்பு’ தேவை. எல்லா கேள்விகளையும் எதிர்கொள்ளும் இலக்கியமே அதைச் செய்ய முடியும். அதற்கு தத்துவம் இன்றியமையாதது.
சிறு இலக்கியம் என்று நான் சொல்வது எழுத்தாளனுடைய தனிஅனுபவம், தனிரசனை, தனிஉணர்வுகள் ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது. அப்படைப்பில் அவன் மட்டுமே வெளிப்படுகிறான். அப்படைப்பிலிருந்து அவ்வெழுத்தாளனுக்கு செல்லும் பாதை மிகக்குறுகியது. நவீனத்துவம் ஓங்கியபோது இலக்கியத்தில் தத்துவத்தை நிராகரிக்கும் ஒரு பாவனை உருவாகியது. தத்துவம் என்பது அறிவார்ந்த தர்க்கம் சார்ந்தது என்றும், இலக்கியப் படைப்புக்குள் இருக்கவேண்டியது வடிவம் சார்ந்த தர்க்கம் மட்டுமே என்றும், நவீனத்துவ இலக்கிய அழகியல் முன்னோடிகள் கருதினார்கள். ஆகவே இலக்கியத்திலிருந்து தத்துவம் வெளியேறியது.
ஹெரால்டு ப்ளூம் ஒருமுறை சொன்னதுபோல இலக்கியத்திலிருந்து தத்துவம் வெளியேறியது என்பது நாவலின் தற்கொலையாக அமைந்தது. தத்துவப் பயிற்சி அற்ற எழுத்தாளன் எழுதும் அறிவார்ந்த விவாதம் மிகமேலோட்டமான அனுபவப்பகிர்வாகவும், எளிய கருத்துக்களாகவும் சிறுத்தது. கூடவே இலக்கியம் இல்லாத தத்துவ விவாதம் வெறும் அறிவுப்பயிற்சியாக ,கல்வித்துறை நோக்கிச் சென்று அங்கே ஒடுங்கியது.
எப்போது இலக்கியத்திலிருந்து தத்துவம் விலகிச் சென்றதோ அப்போதே தத்துவத்தை மக்கள் கவனிப்பது குறைந்தது. தத்துவவாதி என்பவன் மிகச்சிக்கலான சூத்திரம் போன்ற கருத்துக்களை இன்னொரு தத்துவவாதியிடம் பேசிக்கொண்டிருப்பவன் என்னும் எண்ணம் உருவாகியது. இலக்கியத்திற்கு மிக அண்மையானவராகிய பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்தான் ஒருவேளை உலகம் கண்ட மக்கள் அறிந்த புகழ்பெற்ற இறுதித் தத்துவவாதி என்று தோன்றுகிறது.
நவீனத்துவத்தை கடந்து பின்நவீனத்துவம் எழுந்தபோது அது மீண்டும் தத்துவத்தை கையில் எடுத்தது. நவீனத்துவத்தில் இல்லாத, நவீனத்துவம் அழகியல் சிதைவு என்று கருதிய சில இலக்கியககூறுகள் பின்நவீனத்துவத்தின் அடிப்படைகளாக அமைந்தன. அதிலொன்று என்சைக்ளோபீடிக் எனப்படும கலைக்களஞ்சியத்தன்மை. தரவுகளை கொட்டிக்குவிக்கும் தன்மை இயல்பு. பிரம்மாண்டமான தகவல் தொகுப்பு கொண்டவை பின்நவீனத்துவப் படைப்புகள். அவ்வளவு பெரிய தகவல் தொகுப்பை கையாளவேண்டுமெனில் அதற்குரிய தத்துவத்தளம் தேவை .
அந்த தத்துவம் ஏற்கனவே இருந்த தத்துவக்கொள்கைகளின் விரிவாக்கமாக இருக்கவேண்டியதில்லை. ஏற்கனவே இருந்த தத்துவங்கள் ஒருமையப்பார்வையை முன் நிறுத்துபவை. பின்நவீனத்துவம் இந்த மையங்களை மறுப்பது. ஆனால் மையங்களை மறுப்பதுவேகூட அந்த மாபெரும் தத்துவத் திட்டத்திற்கு எதிர்வினையாற்றுவது தான். தத்துவம் இன்றி தத்துவத்தை மறுப்பதே கூட இயல்வதல்ல. பின்நவீனத்துவத்துக்குபிறகு வந்த எழுத்துகள் அனைத்திலும் வரலாற்று தரிசனமும், அவற்றை முன் வைக்கும் தத்துவத் தரிசனமும் இருப்பதை பார்க்கலாம். அது மறுப்புத்தத்துவமாக இருக்கலாம். மறுப்புத் தரிசனமாக இருக்கலாம்.
இன்றையகாலம் மொத்த வரலாற்றையும் மாற்றி எழுதும் எழுத்துக்களாலானது . இன்று இலக்கியம் தானே தத்துவம், வரலாறு எல்லாவற்றையும் உருவாக்கிக்கொள்கிறது. அதற்குரிய தத்துவப்பார்வையும் ஆசிரியனுக்கு தேவை எனக்கோருவது இன்றைய எழுத்துமுறை. ஆகவே இப்போது தத்துவம் இலக்கியப்படைப்பின் அடிப்படையாக உள்ளது. ஆயினும் துளி அலகுகளை வாழ்க்கைச் சித்திரங்களை மட்டுமே முன்வைக்கும் இலக்கியப்படைப்புகள் எண்ணிக்கையில் மிகுதியாக உள்ளன. என்றும் அவை அப்படியேதான் இருக்கும். இவ்வாறு சொல்கிறேன். கபிலருக்கு தத்துவம் தேவையில்லை. கம்பனுக்கும் இளங்கோவுக்கும் தத்துவங்கள் இன்றி காப்பியங்கள் எழுத முடியாது.
நவீனத்துவ அழகியலில் பழகிய வாசகர்கள் இலக்கியப் படைப்பிலிருக்கும் தத்துவத்தை ஒவ்வாமையுடன் பார்ப்பார்கள். இலக்கியப்படைப்புக்கு அது தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். பொழுதுபோக்கு வணிக எழுத்துகளில் பழகியவர்களும் அதே எண்ணம் கொண்டிருப்பார்கள். அவர்கள் இருவரையுமே பின்தங்கிய, அல்லது பயிலாத வாசகர்கள் என்று தான் நான் இன்று வரையறுப்பேன்.
இலக்கியப்படைப்பு முன்வைக்கும் தத்துவம் என்பது நேரடியாகவே தத்துவம் அல்ல. அது உருவக மொழியில் கூறப்பட்டிருக்கிறது. அது ‘சமைக்கப்பட்ட’ தத்துவம். தன் கவித்துவத்தால் தொடர்புறுத்தும் தத்துவம். அந்த தத்துவம் ஒருவகையில் இலக்கியத்தின் ஒரு கருவிதான். இலக்கியத்தின் ஒரு உச்சகட்ட வெளிப்பாடுதான் அது.
தத்துவமின்றி இலக்கியம் அதன் உயர் நிலையை அடைய முடியாது. தத்துவத்தை தன் வயப்படுத்திக்கொண்டு எழுந்து நின்றிருக்கும் இலக்கியமே உச்சமென நிலைகொள்ள முடியும். இலக்கியத்தின் கொடி தத்துவம் எனும் கம்பத்தின்மீதே பறக்க முடியும்.
ஜெ
***