க.நா.சுப்ரமணியம்
அன்புமிகு வணக்கம்..
க.நா.சு எழுதிய அவதூதர் நாவல் வாசித்தேன்.. அவதூதர், மானசரோவர், விழுதுகள் குறு நாவல் இவைகளை பேசிய தங்கள் கட்டுரையே அவதூதர், விழுதுகளை அறிமுகம் செய்தன.. மானசரோவர் பற்றி முன்பே கேள்விப் பட்டுள்ளேன் என்றாலும் அதன் முக்கியத்துவ முகம் காட்டியது தங்கள் விளக்கமே..
அவதூதரை சில மாதங்களுக்கு முன்பே வாசித்து விட்டேன்.. சமீபத்தில் நாகப்பட்டினம் மாவட்ட நிருவாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்திய புத்தகக் காட்சியில் வாங்கிய நூல்களில் ஒன்று மானசரோவர்.. இந்நூலை வாசித்துக் கொண்டிருக்கும் இப்போதே அவதூதர் நினைவின் மேலெழுந்தார்..
அவதூதர் எனும் வார்த்தையே எனக்கு புத்தம் புதிதுதான்.. அவதூதர்களுக்கு நல்ல காட்டாக யோகி ராம் சுரத் குமாரை சொல்லியுள்ளீர்கள்.. வழக்கமான வேகத்தோடு கூடுதலாகவே அவதூதரை வாசித்தேன்.. நாவல் துவங்கும் முன் உள்ள கேள்வி பதில் பகுதி புதுமையானது.. அவதூதர் என்பதற்கு விளக்கம் தர முயற்சித்து வெற்றியும் பெறுகிறது இப்பகுதி.
நிர்வாணம் என்பது இந்த உடலின் இயற்கை.. அதற்குதான் எத்தனை செயற்கைத் தந்து விட்டோம்.. ஜெயகாந்தன் ஓரிடத்தில் நிர்வாணம் பற்றி பேசும் போது வீட்டில் இருக்கும் போது ஆடையின்றி வெறும் உடலோடு இருக்க பழக வேண்டும் என்பார்.. வீட்டிலுள்ள அனைவரும் இப்படி பழகல் சிறப்பென்பார்.. வீட்டில் தனிமையில் இருக்கும் போது இத்தகைய முயற்சிகளை நான் கை கொண்டது உண்டு.. அது தரும் சுதந்திரமும், மன உணர்வுகளும் தனியானது.. மற்றவர்களும் பெற வேண்டியது.
நிர்வாணம் எனும் சிந்தனையை அவதூதர் மேலும் வலுப்படுத்துகிறார். நாவலில் அவதூதர் வயதானவர், ஊர் மக்கள், இளம் பெண்கள் என பலரோடும் பேசி உலா வந்த வண்ணம் இருப்பார்.. இப்போதெல்லாம் அவர் ஆடையின்றிதான் உள்ளார் என்பதை மனம் சற்று தாமதமாக உணரும். சட்டென்று ஒரு நடுக்கம் தோன்றும்.. மனம் ஆடையோடே மனித உடலை சிந்தித்து பழகி விட்டது காரணமாக இருக்கலாம்.
பல ஆண்டுகள் தன்னை பற்றிய எந்த அடையாளமும் இல்லாத ஊரில் ஒரு அங்கமாக வாழ்ந்து பிறகு இல்லற வாழ்க்கையில் இணையும் அவதூதர்கள் உண்டு என நாவல் தரும் செய்தி அவதூதர்களை புரிந்து கொள்ள உதவுகிறது.
இப்படைப்பில் வரும் அவதூதரும் கடைசியில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர்கிறார்.. புதிய வாழ்க்கையைப் பேசும் படைப்பு.. கநாசு அவர்கள் அப்போதே எவ்வளவு தூரம் தன் எழுத்தில் பாய்ந்துள்ளார் என்பது சிலிர்ப்பான அனுபவம்.
இந்த நாவல் வாசிப்பு ஆன்மீக மரபு நோக்கி, அதன் தத்துவங்கள் நோக்கி, சித்தர் மரபு நோக்கி கைகாட்டியாக, நல்ல ஆன்மீக அனுபவமாக இருக்கும் என்பது உறுதி. நன்றி.
முத்தரசு
வேதாரண்யம்