வெண்முரசு நாள் நினைவில் தங்கும் ஒரு நாளாகக் கடந்து சென்றிருக்கும் என நம்புகிறேன். உங்களது நெடு நாள் கனவு. வாழ்நாள் கனவு என்று கூட சொல்லலாம். ஒத்த கருத்துடைய ஒரு நண்பர் குழாம் உருவாகச் சாத்தியமான ஒரு ஆரோக்கியமான உரையாடல் வெளி. அதை இணையத்தைப் பயன்படுத்தி சாதித்து விட்டீர்கள். ஆனால் அது என்றென்றும் நிலைத்து நிற்க ஒரு அடையாளம் தேவை. தத்துவம் சிற்பமாகும் போதே, தரிசனம் ஆலயமாகும் போதே தலைமுறைகள் தாண்டி நிற்க இயலும். நம் ஞானிகள் குருகுலங்களை, ஆரண்யகங்களை அமைத்து நிலை நிறுத்தியதால் தானே இன்றும் வேதாந்தம் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
வெண்முரசு துவங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையும் ஒரு நாள் கூட அதை எண்ணாமல் கடந்து போனதில்லை. ஒரு வரியையாவது வாசிக்காமல் இருந்ததில்லை. சில சமயங்களில் முழு அத்தியாயங்களையும் வாசித்து இருக்கிறேன். இன்றளவும் வெண்முரசில் இருந்து வெளிவரவில்லை. வெளிவர இயலவில்லை என்பதே உண்மை. வேறு எந்த ஒரு படைப்பையும் முழுமையாக மனமொன்றி வாசிக்க இயலவில்லை. (அஜிதனின் மைத்ரி விதிவிலக்கு. முழுமையாக வாசித்து முடித்தேன். அதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.)
கிடைக்கும் குறைவான சமயங்களையும் வெண்முரசே எடுத்துக் கொள்வதைப் பற்றி பெரும் விசனமே வந்தது ஒரு நாள். பெரும் குழப்பங்களை எப்போதும் வெண்முரசிடமும், உங்களிடமும் எடுத்து வருவதே என் வழக்கம். இத்தனை நாட்களிலும் உங்களுடனான என் மானசீக உரையாடல் ஒரு நாள் கூட அறுபட்டதில்லை. ஒவ்வொரு முறையும் எனக்கான தெளிவை நீங்களும் சரி, வெண்முரசும் சரி அளிக்கத் தவறியதும் இல்லை. அதே மனநிலையில் தான் இந்த விசனத்துக்கும் வெண்முரசிடமே வந்தேன்.
இம்முறை வாசிக்க தேர்ந்தெடுத்தது, இமைக்கணத்தில் இளைய யாதவரிடம் திரௌபதியின் கேள்விகளுக்கான பதில்கள் வெளிப்படும் பகுதி. அதில் வரும் இவ்வரிகளை வாசித்ததும் ஒரு கணம் உறைந்து விட்டேன்.
“எந்தப் பாதை ஒவ்வொரு அடியிலும் இது சரியே எனச் சொல்கிறதோ அதுவே சரியான பாதை. எதில் ஒவ்வொரு கணமும் கைவிடுகிறோமோ எதில் கைவிட்ட ஒவ்வொன்றுக்கும் நிகராக பெறுகிறோமோ அதுவே உரிய பாதை. அறிக, பாதையின் இறுதியில் அது இல்லை! பாதையென்பதும் அதுவே. எத்தனை இன்சுவைகளின் வழியாக அன்னையை அறிகிறது குழந்தை!”
ஆம். ஒரு முறை கூட வெண்முரசு எனக்கான பதிலைத் தரத் தவறியதில்லை. இதுவே என் நூல். இதைக் கடப்பதைப் பற்றிய எண்ணம் அதை வாசித்த அக்கணத்தில் இருந்து இல்லை. மனம் நிறைந்திருந்தது. எச்சலனமும் இன்றி கண் முன் உலகு ஒழுகிச் செல்வதைக் கண்டேன். நீர் வழிய மீண்டு வந்தேன். இப்பிறவியில் இமைக்கணத்தில் ஒவ்வொருவரும் கண்ட அந்த புடவி நிறை பூரண தரிசனம் சித்திக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதை நோக்கிய பிறவிப் பயணங்களில் முக்கியமான நகர்வை உலகியலில் இருந்து கொண்டே சாத்தியப்படுத்தியது வெண்முரசும், நீங்களும் தான். குருபூர்ணிமா வெண்முரசு நாள் என்பது எத்தனை பொருத்தம்!! என்றும் போல் உங்கள் ஆசி என்னுடன் இருக்கட்டும்.
அன்புடன், அருண்