நாளை குருபூர்ணிமை. வியாசனின் நாள். மலைக்குமேல் நண்பர்களுடன் ஒரு கூடுகை. ஆகவே ஒருவேளை இணையத்தில் தோன்ற முடியாமல் போகலாம். முயற்சி செய்கிறேன். இந்த நிலவை மீண்டும் வெண்முரசுடன் கொண்டாடுவோம்.
ஒரு படைப்பை இப்படி ஒரு நாளை அறிவித்து ஏன் கொண்டாடவேண்டும் என்னும் கேள்வி முன்னரும் எழுந்தது. வெண்முரசு வாசித்து முடிக்கத்தக்க, கடந்துசெல்லத்தக்க ஒரு படைப்பு அல்ல. அதை நோக்கி வாசகர் மீண்டும் மீண்டும் வந்தாகவேண்டியுள்ளது. வெவ்வேறு மனநிலைகளில், வெவ்வேறு வினாக்களுடன். அது இயல்பாகவும் நிகழலாம். ஆனால் அதற்கென ஒரு நாள் அமையும்போது அது ஒரு மாறாநெறியாக ஆகிறது. அதை நம் அகம் தவறவிடுவதில்லை. இந்நாளில் வெண்முரசை வாசிக்காதவர்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம். எங்காவது விட்டுவிட்டவர்கள் மீண்டும் தொடங்கலாம்.
முடித்தவர்கள் ஒன்று செய்யலாம், வெண்முரசின் ஏதேனும் ஒரு பக்கத்தை கைபோன போக்கில் எடுத்து புரட்டிப்பார்த்து படிக்க ஆரம்பிக்கலாம். செவ்வியல் படைப்புகளின் இயல்பு, அவை எந்தப் பக்கத்தில் தொடங்கினாலும் ஆழமானவையாகவும், தனித்து இலக்கியத்தன்மையுடன் நிலைகொள்வனவாகவும் இருக்கும் என்பது.
ஜெயமோகன்