பொன்னியின் செல்வன், சோழர்கள்

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டில் உங்கள் உரை கேட்டேன். சுருக்கமான, செறிவான உரை. சோழர் வரலாற்றை எழுதியவர்களில் எல்லா முன்னோடிகளையும் குறிப்பிட்டு ஆற்றிய அந்த உரை படத்திற்கு ஒரு சிறந்த முன்னோட்டம். என் வாழ்த்துக்கள் (கே.கே.பிள்ளை பெயரை விட்டுவிட்டீர்கள்) குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களைச் சொன்னதை மிகவும் பெருமையாக உணர்ந்தேன்.

பொன்னியின் செல்வன் உண்மையான வரலாறா, சோழர்களின் காலம் ஒடுக்குமுறை காலமா என்றெல்லாம் இன்று விவாதங்கள் நிகழ்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இவற்றை பற்றி நீங்கள் முன்பு எழுதிய கட்டுரைகளை நினைவுகூர்கிறேன்

ராம்சந்தர்

அன்புள்ள ராம்,

பொன்னியின் செல்வன் உண்மையான வரலாறா? இல்லை, அது புனைவு. அதைப்பற்றியும் அந்த புனைவை உருவாக்கிய முன்னோடி வடிவங்கள் பற்றியும் தமிழ் விக்கியில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது (பார்க்க பொன்னியின் செல்வன் தமிழ் விக்கி)

ஆனால் அது முழுபுனைவு அல்ல. பெருமளவு வரலாறு. ராஜராஜசோழன் என்று பின்னாளில் புகழ்பெற்ற அருண்மொழி வர்மன் உத்தமசோழனுக்காக மணிமுடியை விட்டுக்கொடுத்தான் என்பது கல்வெட்டு ஆதாரமுள்ள செய்தி. ஆதித்த கரிகாலன் கொலை, அதைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டது, இரண்டாம் சேவூர் போர் (பொயு. 962) எல்லாமே வரலாற்று ஆதாரம் உள்ள செய்திகளே. புனைவு என்பது ஆழ்வார்க்கடியான், கந்தமாறன், மணிமேகலை போன்ற புதிய கதாபாத்திரங்களை உருவாக்கியதிலும்; வந்தியத்தேவன், பழுவேட்டரையர் போன்ற வரலாற்று மாந்தரை சற்று விரிவாக்கியதிலும் உள்ளது. அந்த அளவுக்கு புனைவு இல்லாமல் வரலாற்றுநாவலை எழுத முடியாது.

தமிழ்நாட்டு அரசியல் களமே விசித்திரமானது. எந்த ஒரு கல்வெட்டு ஆதாரமும், நூல் ஆதாரமும் இல்லாமல் உருவாக்கப்படும் போலி வரலாறுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு பெருமிதம் அடைவார்கள், தெளிவான ஆதாரம்கொண்ட வரலாறுகளில் உள்ள சிறு இடைவெளிகளை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்தமாக மறுப்பார்கள். காரணம், வெறும் தற்பெருமை. தங்களுக்கு சாதகமான வரலாற்றுச்சித்திரத்துக்கு ஆதாரமே தேவையில்லை. பிடிக்காத தரப்பு என்றால் வரலாற்று ஆதாரங்களையே கடுகைப் பிளந்து யோசிப்பார்கள்.

நான் சென்ற நாற்பதாண்டுகளாக வரலாற்றை கற்றுவருபவன், எழுதியும் வருகிறேன். அந்நிலையில் இப்போது புதிதாக வரலாற்று ஆர்வம் கொண்டு உள்ளே வருபவர்களுக்காகச் சில தெளிவுகளை அளிக்க விரும்புகிறேன்

பொதுவரலாறும், நுண்வரலாறும்
நான் இந்திய வரலாறு, தமிழக வரலாறு ஆகிய தளங்களில் பொதுவான வரலாற்று அறிதல் கொண்டவன். எனக்குரிய ஒரு சிறு நிலப்பரப்பில் ஆழமாகவே வரலாற்றை அறிந்தவன். இன்று வரலாற்றாய்வே இப்படித்தான் நிகழமுடியும். இந்திய வரலாற்றாய்வில் அல்லது தமிழக வரலாற்றாய்வில் எல்லா பக்கங்களையும் ஆழ்ந்து அறிந்த ஓர் ஆய்வாளர் இருக்க முடியாது. குடவாயில் பாலசுப்ரமணியம் சோழ வரலாற்றாசிரியர். அ.கா. பெருமாள் குமரிநிலத்தின் வரலாற்றாசிரியர். ஒரு வரலாற்றாசிரியர் எந்த வரலாற்றில் நிபுணர், அவர் எழுதிய நூல்கள் என்ன, அவற்றின் அறிவுலக மதிப்பு என்ன என்பது எப்போதுமே முக்கியமான வினா.

இந்திய வரலாற்றாய்வின் எல்லைகள்
பொதுவாசகர்கள், வரலாற்றாய்வு என்றால் என்ன என்று அறியாதவர்கள், நம்புவதுபோல இந்திய வரலாறோ, தமிழர் வரலாறோ முழுமையாகவும் தெளிவாகவும் சான்றாதாரங்களுடன் எழுதப்பட்டுவிடவில்லை. கேள்விக்கப்பாற்பட்ட வரலாற்றுச்சித்திரம் ஏதும் இந்திய வரலாற்றின் எந்த பகுதியைப் பற்றியும் இல்லை. (டி.டி.கோஸாம்பி ‘இந்திய வரலாற்றுக்கு ஒரு முகவுரை’ என்னும் நூலில் எழுதிய முன்னுரையை ஆர்வமுள்ள வாசகர்கள் வாசிக்கலாம்).

இந்திய வரலாற்றில் நமக்கு வரலாற்றுச் சான்றுகள் மிகமிகக் குறைவாகவே கிடைக்கின்றன. ஏனென்றால் ரோமாபுரியினர் போலவோ அல்லது துருக்கியர் போலவோ வரலாற்றை நாள்பதிவு (chronicle) செய்யும் வழக்கம் நமக்கில்லை. நமக்கு ஓரளவேனும் தெளிவான வரலாறு என கிடைப்பது முகலாய வரலாறு மட்டுமே. ஏனென்றால் அவர்களுக்கு முறையான அறிஞர்களை வைத்து அரசவை நிகழ்வுகளை பதிவுசெய்யும் வழக்கம் பாரசீகத்தில் இருந்து வந்தது.

மற்றபடி இந்திய வரலாற்றாய்வுக்கு நமக்குச் சான்றுகளாகக் கிடைப்பவை மறைமுகக் குறிப்புகள் மட்டுமே. ஆலயங்களுக்கு கொடைகள் அளித்ததைப் பற்றிய கல்வெட்டுகள், போர்வெற்றி பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவைதான் நாம் நம்பும் வரலாற்றுச் சான்றுகள். இவை தெளிவான பெயர்களோ, நாள்கணக்குகளோ கொண்டவை அல்ல. வரலாற்றாசிரியர்கள் இந்த உதிரிச் சான்றுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தும், பலவகையில் ஊகங்களைக் கொண்டு நிரப்பியும் எழுதி அளித்தவையே நமக்கிருக்கும் வரலாறுகள். ஆகவே எவராவது உறுதியான, அறுதியான வரலாற்றுச்சித்திரம் தன்னிடம் இருப்பதாகச் சொன்னால் அவருக்கு வரலாற்றாய்வின் அரிச்சுவடியே தெரியாது என்றே பொருள்.

தமிழக வரலாறு எழுதப்பட்டுள்ள விதம்
இந்திய வரலாற்றின் எந்தப் பகுதியும், தமிழக வரலாற்றின் எந்தப்பகுதியும் மிகத்தோராயமாகவே எழுதப்பட்டுள்ளது. உதாரணமாகச் சோழர் வரலாற்றைப் பொறுத்தவரை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் முதலிய முதல் தலைமுறை அறிஞர்கள் பெரும்பாலும் கிடைக்கும் சான்றுகளை திரட்டி எழுதிவிட்டனர். அவர்கள் தொடாத சில பகுதிகளை பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா உள்ளிட்டோர் எழுதினர். குடவாயில் பாலசுப்ரமணியம் போன்றோர் இன்று அந்த ஆய்வுகளை மேலும் விரிவாக்கம் செய்கிறார்கள். ஆனால் இந்த தலைமுறையில் வரலாற்றாய்வாளர் மிகக்குறைவு. இன்னும் கண்டெடுக்கப்படாத சான்றுகளும் மிகக்குறைவு. ஆகவே இன்று தமிழக வரலாற்றாய்வு ஓர் எல்லையை அடைந்து முட்டி நிற்கிறது என்பதே உண்மை.

இன்னும் தமிழக வரலாற்றாய்வில் பல பகுதிகள் எழுதப்படவே இல்லை. முற்காலச் சோழர் (அதாவது சங்ககாலச் சோழர்) வரலாற்றில் மிகச் சில பெயர்கள் மட்டுமே கிடைக்கின்றன. பிற்காலச் சோழர் வரலாற்றிலேயே விஜயாலய சோழனுக்கு முந்தைய காலம் இன்னும் சரிவர எழுதப்படவில்லை (ஆந்திரநிலத்தில் பல சோழர் குடிகளாக அவர்கள் சிதறி ஆட்சி செய்தனர். தெலுங்குச் சோழர்கள் என அழைக்கப்படுகிறார்கள்). சோழர்களின் சரிவுக்காலகட்டம், அவர்களின் இறுதி பற்றியும் இன்னமும் முழுமையாக எழுதப்படவில்லை. அவை இனி எந்த அளவுக்கு தெளிவாக எழுதப்பட இயலும் என்பதும் கேள்விக்குறிதான். ஏனென்றால் முடிந்தவரை தொல்லியல் சான்றுகள் ஏற்கனவே கண்டடையப்பட்டுவிட்டன. இனி புதிய சான்றுகள் கிடைக்க வழி இருப்பதாகத் தெரியவில்லை. கிடைத்தால் அது அற்புதம்தான்.

(சோழர் வரலாறு எழுதப்பட்ட அளவுகூட பாண்டியர் வரலாறு எழுதப்படவில்லை. சேரர் வரலாறு சொல்லவே வேண்டாம். பிற்காலச் சேரர்களை பற்றி கிடைக்கும் செய்திகள் எல்லாம் அவர்களை வென்றவர்கள் எழுதி வைத்த குறிப்புகள் மட்டும்தான். சேரர் ஆட்சி செய்த நிலம் எது என்பதே இன்னும் ஆய்வாளர் நடுவே விவாதப்பொருளாக உள்ளது).

ஆகவே தமிழக வரலாறு தங்கள் உள்ளங்கை என சொல்லி, உறுதியான கருத்துக்களுடன் பேச வரும் எவரையும் வரலாற்றை தொட்டுக்கூட பார்க்காதவர் என்றே முடிவுசெய்க.

வரலாற்றுச் சான்றுகளின் மூன்று அடுக்குகள்
வரலாற்றாய்வு என்றால் என்ன என்றே அறியாதவர்களுக்காக இன்னொரு விளக்கம். (இவர்களே தமிழகத்தில் வரலாறு பற்றி பொதுவெளியில் நிறைய பேசுகிறார்கள் என்பதனால்) வரலாற்றாய்வில் முதல்நிலைச் சான்றுகள் என்பவை தொல்லியல் சான்றுகளே. அதாவது, கல்வெட்டுகள், செப்பேடுகள், கட்டிடங்கள் மற்றும் அகழ்பொருட்கள் போன்றவை. இரண்டாம் நிலைச் சான்றுகளே பண்டைய இலக்கியங்களில் உள்ள குறிப்புகள். முதல்நிலை சான்றுகளுடன் ஒத்துப்போனால் மட்டுமே இரண்டாம்நிலைச் சான்றுகளுக்கு மதிப்பு. இரண்டாம் நிலை சான்றுகள் மட்டுமே இருந்தால் அவை வரலாற்றாய்வில் எதையுமே நிறுவுவன அல்ல.

சொற்களுக்கு இடையேயான ஒற்றுமை, ஊர்ப்பெயர்கள், வாய்மொழிக் கதைகள் ஆகியவை வரலாற்றாய்வுக்கு நேரடிச் சான்றுகள் அல்ல. அவை மூன்றாம்நிலைச் சான்றுகள் என கொள்ளலாம். அவற்றுக்கு ஏதேனும் மதிப்பு உண்டு என்றால் முதல்நிலைச் சான்றும், இரண்டாம் நிலைச்சான்றும் சரியாக ஒத்துப்போகும் இடத்தில் மேலதிகமாக காட்டப்படும்போது மட்டுமே. முதல்நிலைச் சான்றையும் இரண்டாம்நிலைச் சான்றையும் இணைப்பதற்காகவோ, அல்லது அவற்றை விளக்குவதற்காகவோ மூன்றாம்நிலைச் சான்றை அளவோடு பயன்படுத்தலாம்.

உதாரணமாக, வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் கரிகால்சோழன் வேளிர்களையும் சேரபாண்டியர்களையும் வென்றான் என்று இலக்கியக் குறிப்புகள் உள்ளன. (பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார், பொருநராற்றுப்படை – முடத்தாமக் கண்ணியார்) தஞ்சாவூர் திருவாரூர் சாலையில் கோயில் வெண்ணி என்னும் சிற்றூர் உள்ளது. வெண்ணிப்பறந்தலை என்னும் இடம் இன்றைய கோயில் வெண்ணியாக இருக்கலாம் என்று கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி உள்ளிட்டோர் ஊகிக்கிறார்கள். ஆனால் கோயில் வெண்ணியில் கரிகாலன் பற்றிய எந்த தொல்லியல் சான்றும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இது ஒரு வரலாற்றுச் செய்தி அல்ல, ஒரு வரலாற்று ஊகம் மட்டுமே. வரலாற்றாசிரியர்கள் கோயில் வெண்ணியில் கரிகாலன் போரிட்டான் என்று உறுதியாகச் சொல்லவே மாட்டார்கள்.

ஆகவே வரலாற்றாய்வில் எதையாவது உறுதியாகச் சொல்வது மிகக்கடினம் என்பதையாவது தயவு செய்து பொதுவாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக உண்மையான வரலாற்றாய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் ஆராய்ந்துகொண்டிருக்கும்போது, வரலாறே தெரியாமல் பொதுமக்கள் பாய்ந்து முடிவுகள் சொல்லக்கூடாது. அது வரலாற்றாய்வை அவமதிப்பது, வரலாற்றாசிரியர்களை சிறுமைசெய்வது.

புனைவும், வரலாறும்
வரலாற்றுப்புனைவு என்பது என்ன? வரலாற்றுச் சித்திரத்தை வைத்துக் கொண்டு அதன் இடைவெளிகளை கற்பனையால் நிரப்பி எழுதப்படுவதே வரலாற்றுப் புனைவு. அறிவியல் தரவுகளை வைத்துக்கொண்டு, அதன் மீது கற்பனையைச் செலுத்தி எழுதப்படுவதே அறிவியல் புனைவு.

உதாரணமாக, சாண்டில்யனின் யவனராணி நாவல் கரிகாலனின் வெண்ணிப்பறந்தலை வெற்றி பற்றிய புனைவு. மு.கருணாநிதி எழுதிய ரோமாபுரிப் பாண்டியன் நாவலும் கரிகாலனைப் பற்றியதே. ஆனால் கரிகாலனைப் பற்றி நமக்கு சில சங்கப்பாடல்களில் சொல்லப்பட்டுள்ள சில வரிகளை தவிர வேறு சான்றுகளே இல்லை. அதாவது கரிகாலன் பற்றி நமக்கு கிடைக்கும் மொத்தச் சான்றுகளே பதினைந்து வரிகள்தான். அதைக்கொண்டு இத்தனை பெரிய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒப்புநோக்க கல்கி பெரும்பாலும் வரலாற்றுச் சான்றுகளை ஒட்டியே பொன்னியின் செல்வன் நாவலை எழுதியுள்ளார். ஏனென்றால் பிற்காலச் சோழர்கள், குறிப்பாக ராஜராஜ சோழன் பற்றிய செய்திகள் கூடுதலாகவே கிடைக்கின்றன.

ஏன் அப்படி வரலாற்றை புனைகதையாக எழுதவேண்டும்? நான் முன்னரே சொன்னேன், நமக்கு கிடைக்கும் வரலாறே உதிரிச்சான்றுகளை ஊகத்தால் இணைத்து எழுதப்பட்டதுதான். அந்த ஊகத்தை இன்னும் கொஞ்சம் நீட்டி புனைகதைகள் எழுதப்படுகின்றன, அவ்வளவுதான். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வரலாறு இன்னொரு பக்கம் புனைவாக ஆகிக்கொண்டேதான் இருக்கும். இங்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்கவே அப்படித்தான். ஒரு பக்கம் வரலாறு, இன்னொரு பக்கம் அவ்வரலாற்றை ஒட்டிய புனைவு இரண்டும் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஏனென்றால் சாமானியர்களாகிய நாம் வரலாற்றை அர்த்தப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். வெறும் வரலாற்றில் ‘அர்த்தம்’ என ஏதுமில்லை. அது வெறும் தகவல்களின் தொகுப்புதான். அதை நாம் அர்த்தமாக ஆக்கிக்கொள்கையில் அது புனைவாக ஆகிறது. நாம் வரலாற்றின்மேல் சில மதிப்பீடுகளை ஏற்ற விரும்புகிறோம். வரலாற்றில் சில ஆளுமைகளை நாம் முன்னிறுத்த விரும்புகிறோம். கரிகால சோழனும் ராஜராஜ சோழனும் அத்தகையவர்கள்.

ராஜராஜ சோழன் பற்றி நவீன இலக்கியம் தோன்றுவதற்கு முன்னரே ஏராளமான புனைவுகள் உருவாகி விட்டன. அவை தொன்மங்களின் வடிவில் இருந்தன. சிற்பிக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தது, தேவார நால்வரையும் தங்கச்சிலைகளாக எடுத்துக்கொண்டு சென்று சிதம்பரம் கோயிலில் இருந்து சைவத்திருமுறைகளை மீட்டது என பல கதைகள். இக்கதைகளை எல்லாம் உருவாக்கிக்கொண்டு ராஜராஜ சோழனை ஒரு வழிபாட்டு வடிவமாக புனைந்துகொள்ள வேண்டிய தேவை தமிழர்களுக்கு இருந்தது. ஆகவேதான் அக்கதைகள் உருவாயின.

ஏன்? ஏனென்றால் நாம் கண்முன் காணும் தமிழகத்தின் முதல்பேராலயம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாசனக் கட்டமைப்பே ராஜராஜ சோழனாலும் அவன் வாரிசுகளாலும் உருவாக்கப்பட்டது. சோழநாட்டில் மட்டும் அல்ல, ராஜராஜ சோழன் கைப்பற்றி ஆண்ட சேரநாட்டில்கூட ராஜராஜ சோழனே பாசனக் கட்டமைப்பை உருவாக்கினான். நான் வாழும் பார்வதிபுரமே சோழர்கள் உருவாக்கிய இரண்டு மாபெரும் ஏரிகளின் அருகே அமைந்தது (இரண்டு ஏரிகளையும் இன்றைய நவீன அரசு ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை போடுவதற்காக மண்ணையும் குப்பையையும் போட்டு மூடிக்கொண்டிருக்கிறது). இன்றும் நாம் உண்ணும் சோறு சோழர்கள் போட்டது. ஆகவே தமிழர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு ராஜராஜ சோழன் வழிபடுதெய்வம் போன்ற ஆளுமையே. (என் மனைவியின் பெயர் அருண்மொழி நங்கை).

ஆகவே வரலாற்றில் இருந்து மேலும் மேலும் ராஜராஜனை புனைந்துகொள்கிறார்கள். உலகமெங்கும் உள்ள அத்தனை வரலாற்று ஆளுமைகளும் அப்படி புனையப்பட்டவர்களே. அலக்ஸாண்டர் ஆயினும், நெப்போலியன் ஆயினும், சந்திரகுப்த மௌரியர் ஆயினும், சிவாஜி ஆயினும் அவ்வாறு புனையப்பட்ட ஆளுமைகளே. அது உலகம் முழுக்க இருக்கும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. மார்க்ஸியர்களால் ஆட்சி செய்யப்படும் ‘மக்கள் சீன’ அரசுதான் ஜெங்கிஸ்கானை ஒரு மாபெரும் வரலாற்று ஆளுமையாக புனைந்து திரைப்படம் எடுத்து உலகம் முழுக்க கொண்டுசெல்கிறது. ஜெங்கிஸ்கானின் ஆயிரமாண்டு நிறைவை தேசியக் கொண்டாட்டமாக முன்னெடுக்கிறது. இத்தனைக்கு உலகில் கால்வாசிப் பகுதியை சூறையாடியவனாகவே ஜெங்கிஸ்கான் வெளியே அறியப்படுகிறான்.

சோழர்காலகட்டம் பொற்காலமா?
நவீன வரலாறாய்வை சற்றேனும் அறிந்த எவரும் சோழர்காலகட்டம் பொற்காலம் என்றும் ஓங்கிக்கூவ மாட்டார்கள், இருண்ட காலம் என்றும் கூச்சலிடமாட்டார்கள். வரலாற்றுக்கு பல கோணங்கள் உண்டு என்றும், ஒன்றுக்குமேற்பட்ட வரலாற்றுச்சித்திரங்கள் இருக்கமுடியும் என்றும் உணர்ந்தவர்களே இன்று வரலாற்றை ஆராய முடியும். அதிலும் கொஞ்சமேனும் மார்க்ஸிய வரலாற்றாய்வுப் பார்வை கொண்டவர்கள் வரலாற்றைப் பற்றி மிகப்புறவயமான சித்திரத்தையே கொண்டிருப்பார்கள்.

மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையின்படி வரலாற்றின் பரிணாமம் என்பது பழங்குடி அரசுகள், அவற்றில் இருந்து சிறிய வட்டார அரசுகள், அவற்றில் இருந்து பேரரசுகள் என்ற வகையில்தான் அமைந்துள்ளது. அப்படித்தான் அமைய முடியும். வரலாற்றில் வளர்ச்சியின் வழி அது. அவ்வாறு அமையாவிட்டால் வளர்ச்சி இல்லாமல் அப்படியே பழங்குடிநிலையில் அல்லது வட்டார அரசுக்கூட்டங்களாக தேங்கி நின்றிருக்கவேண்டியிருக்கும்.

சங்ககாலத்தில் நாம் பார்க்கும் சித்திரங்கள் இரண்டு. முதற்கட்டத்தில் பழங்குடி அரசுகளை அழித்து, மக்களை ஒன்று சேர்த்து உருவான சிறிய அரசர்கள் கோலோச்சுகிறார்கள். வேளிர் அரசர்கள் (வேள்பாரி, இருங்கோவேள் போன்றவர்கள்) இவ்வாறு உருவானவர்கள். அவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் குறவர்குடித் தலைவர்கள் சிறிய ஆட்சியாளர்களாக இருந்தமைக்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. (உதாரணம் நாஞ்சில் குறவன்) கடற்சேர்ப்பர்கள் என்னும் மீனவ அரசர்கள் இருந்திருக்கின்றனர்.

மார்க்சிய ஆய்வாளர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களின் கருத்துப்படி மருதநிலத்தைச் சேர்ந்த வேளிர் மன்னர்கள் பிற நிலத்தைச் சேர்ந்த பழங்குடி ஆட்சியாளர்களை அழித்து தாங்கள் மேலாதிக்கம் பெற்றனர். ஏனென்றால் மருதநிலம் வயல் சார்ந்தது, ஆகவே செல்வம் ஏராளமாக உருவாயிற்று, அச்செல்வம் படைபலமாக ஆகியது.

சங்க காலத்துச் சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் மூவரும் வேள்பாரி, இருங்கோவேள் போன்ற இந்த சிற்றரசர்களுடன் போரிட்டுக்கொண்டே இருந்தனர். சிலப்பதிகார காலகட்டத்தில் சேர, சோழ பாண்டியர்கள் என்னும் மூவேந்தர்கள் மட்டுமே எஞ்சினர். மற்றவர்கள் வெல்லப்பட்டனர். சேர, சோழ, பாண்டியர்களின் அரசுகள் பேரரசுகளாக உருவாகி வந்தன. (ஆனால் இந்த பேரரசுகளுக்குள் அதே சிற்றரசர்கள் துணையரசர்களாக நீடித்தனர் என்பதை நாம் ராஜராஜ சோழன் காலம் வரை காணமுடிகிறது)

ஒவ்வொரு அரசுமுறையும் இன்னும் பெரிய ஒன்றாக ஆகிறது என்பதே மார்க்ஸியம் காட்டும் வரலாற்றுப் பரிணாமம். அந்த வளர்ச்சிமாற்றத்தில் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு. பேரரசுகள் உருவாகும்போதுள்ள அழிவுகள் என்னென்ன?

ஒன்று, சிற்றரசுகள் மற்றும் சிறு சமூகங்களின் தன்னாட்சி முழுமையாகவே ஒடுக்கப்படுகிறது. அவர்கள் பேரரசுகளின் உறுப்புகளாக ஆகியே தீரவேண்டும். இல்லையேல் பேரரசுகளின் படை எழுந்து வந்து அவர்களை அழிக்கும்.

இரண்டு, சமூகம் ஓர் ஒற்றைப்படையான கட்டமைப்பாக ஆகிறது. அதன் கீழே சிலர் ஒடுக்கப்படுவார்கள், மேலே மேலே என சிலர் அதிகாரம் பெறுவார்கள். உறுதியான ஒரு கட்டமைப்பை உருவாக்காமல் பேரரசுகள் நிலைகொள்ளவே முடியாது. ஆகவே எந்தப்பேரரசும் அதிகார அமைப்பை உருவாக்கும். அதில் ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் இருந்தே தீர்வார்கள். உலகமெங்கும் எல்லா பேரரசுகளும் அப்படித்தான். வரலாற்றாசிரியர்கள் பேரரசுகளை அவை உருவான வரலாற்று சூழலில் வைத்தே மதிப்பிடுவார்கள்.

பேரரசுகளின் நன்மைகள் என்ன? முதல் நன்மை பேரரசுகள் உள்நாட்டு அமைதியை உருவாக்குகின்றன. சங்ககாலத்துடன் சோழர்காலத்தை ஒப்பிட்டால் இது புரியும். சங்க காலத்தில் சிற்றரசர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலும் போர். அந்நிலையில் வளர்ச்சி இல்லை, பண்பாட்டுச்செழுமை இல்லை. உயிர்வாழ்தலே போராட்டம். சோழர் ஆட்சிக்காலம் சோழநாட்டுக்குள் முழுமையான அமைதியை கொண்டுவந்தது. ஆகவே வாழ்க்கை செழித்தது. கலைகளும் இலக்கியமும் தத்துவமும் வளர்ந்தன.

(சோழர்களின் ஆட்சி கன்யாகுமரி மாவட்டத்தில் பொயு 13ஆம் நூற்றாண்டுடன் முடிந்தது. அதன்பின் மார்த்தாண்ட வர்மாவால் 1738ல் அடுத்த பேரரசு உருவாக்கப்பட்டது அந்த முந்நூறாண்டுகளும் கன்யாகுமரி மாவட்டம் ரத்தக்களரியாக இருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்சியாளர்கள். அவர்கள் நடுவே ஓயாத போர்கள், கொள்ளைகள், அழிவுகள், பஞ்சங்கள். மார்த்தாண்ட வர்மாவுக்கு பின்னரே மீண்டும் வளம் திரும்பியது. ஆனால் மார்த்தாண்ட வர்மா சிற்றரசர்களை மிகமிகக் கொடூரமாக ஒழித்து, வாரிசுகளே இல்லாமலாக்கித்தான் அந்த முற்றாதிக்கத்தை அடைந்தார். என்ன செய்வது, வரலாறு அப்படித்தான்.)

பேரரசுகள் வரிவசூலை ஒற்றைப்புள்ளியில் குவிக்கின்றன. அது மூலதனம் ஆகிறது. அந்த மூலதனமே மாபெரும் கட்டுமானங்களாக ஆக முடியும். சோழர்கள் பேரரசை உருவாக்கியமையால்தான் வீராணம் போன்ற மாபெரும் ஏரிகளை தமிழகம் முழுக்க, கேரளம் முழுக்க உருவாக்க முடிந்தது. அந்த ஏரிகளை நம்பியே இன்றும் நாம் வாழ்கிறோம்.

தமிழகம் மீது அன்னியப்படையெடுப்பு சங்ககாலம் முதலே தொடர்ச்சியாக நடந்து வந்தது. சொல்லப்போனால் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு படையெடுப்பு நிகழ்ந்தது. விஜயாலய சோழனுக்குப் பின் சோழர் ஆட்சி முடிவு வரை தமிழகம் மீது நடந்த அன்னியப்படையெடுப்புகள் தடுக்கப்பட்டன. மிகப்பெரிய படையெடுப்பு என்றால் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் விஷ்ணுவர்தனன் என்னும் ஹொய்ச்சாள அரசன் சோழநாட்டின் எல்லைகளைக் கைப்பற்றிச் சூறையாடியதை சொல்லவேண்டும். அவன் துரத்தி அடிக்கப்பட்டான்.

சோழர்கள் வீழ்ச்சி அடைந்தபின், அவர்களை வீழ்த்திய பாண்டியப்பேரரசும் பதினான்காம் நூற்றாண்டில் வீழ்ச்சி அடைந்தபின், அடுத்த முந்நூறாண்டுகளில் இறுதியாக வெள்ளையர் படையெடுப்பு வரை தமிழ்நாட்டின்மீதான அன்னியப் படையெடுப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல, பதினைந்துக்கும் மேல். அனைவருமே தமிழகத்தை கைப்பற்றினர், சூறையாடினர்.

ஆகவே இந்த வரலாற்றுச் சித்திரத்தில் எதைக் கொள்வது, எதை முன்னிறுத்துவது என்பது உங்கள் அரசியல் என்ன என்பதையும் உங்கள் நோக்கம் என்ன என்பதையும் பொறுத்தது. வரலாற்றாசிரியனுக்கு அவை இரண்டு வகை வரலாற்றுப் பார்வைகள் மட்டுமே.

நான் வரலாற்றில் வைத்தே சோழர்களை புரிந்துகொள்வேன். சோழர்கள் இன்றைய நவீன ஜனநாயக அரசுகளைப்போல ஏன் இல்லை என்று கேட்க மாட்டேன், அவர்கள் சென்ற யுகத்து மன்னராட்சிக் காலத்தினர் என தெளிவுடன் இருப்பேன். அவர்களால் ஒட்டுமொத்தமாக என்ன நன்மை விளைந்தது, தமிழக வரலாற்றின் முன்னகர்வுக்கு அவர்களின் பங்களிப்பு என்ன என்றுதான் பார்ப்பேன். என்னுடையது மார்க்சிய வரலாற்றுவாதம் சார்ந்த அணுகுமுறை. அவ்வகையில் சோழர்கள் அவர்கள் உருவாக்கிய மாபெரும் பாசனக் கட்டமைப்புகள், முந்நூறாண்டுகள் நிலவிய உள்நாட்டு அமைதி, சமணர் உள்ளிட்ட அனைவரையும் சமமாக நடத்திய சமயப்பொறை ஆகியவை வழியாக தமிழகத்துக்குப் பெரும் பங்களிப்பாற்றியவர்கள். சோழர்கள் காலகட்டத்தில் உலகில் இருந்த எந்த அரசை விடவும் மக்கள்நலம் நாடிய அரசை நடத்தியவர்கள்.

ஜெ

குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் விக்கி

பொன்னியின் செல்வன் நாவல் 

பொன்னியின் செல்வன் (நாவல்)
பொன்னியின் செல்வன் (நாவல்) – தமிழ் விக்கி

யவனராணி- சாண்டில்யன்

யவனராணி
யவனராணி – தமிழ் விக்கி

உடையார் -பாலகுமாரன்

உடையார்
உடையார் – தமிழ் விக்கி

பர்ட்டன் ஸ்டெயின்

பர்ட்டன் ஸ்டெயின்
பர்ட்டன் ஸ்டெயின்- தமிழ் விக்கி

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைபக்தி
அடுத்த கட்டுரைவெண்முரசு வாசிப்பு