சி.மணி
அன்புள்ள ஜெ,
தமிழ் விக்கி புதுக்கவிதையை Revival Poetry என்று மொழிபெயர்க்கிறது. (https://tamil.wiki/wiki/C._ Mani). இதுதான் சரியான மொழிபெயர்ப்பா? நான் Modern Poetry என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இதைப் பற்றி இணையத்தில் தேடியபோது Modernist Poetry என்ற பெயரும் தென்பட்டது (https://en.wikipedia.org/ wiki/Modernist_poetry).
Revival Poetry என்பதற்கு மதம் தொடர்பான ஒரு பொருளும் இருப்பது போல் தெரிகிறது.
நன்றி
டி.கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்,
புதுக்கவிதை என்னும் சொல்லாட்சி எஸ்ரா பவுண்ட் பயன்படுத்திய New Poetry என்பதன் நேரடி மொழியாக்கம். க.நா.சு. அதைச் செய்தார். அதன்பின் அச்சொல் ஒரு கலைச்சொல்லாக நிலைகொண்டது. ஆனால் ஆங்கிலத்துக்கு தமிழில் இருந்து புதுக்கவிதை என்னும் சொல்லை மொழியாக்கம் செய்யும்போது Modern Poetry என்பதே சரியான சொல். மறுமலர்ச்சிக்கால கவிதை என்னும் சொல்லாட்சிக்கே Revival Poetry என்பது பொருந்தும். இச்சொல்லாட்சிகள் பலசமயம் குழம்பிவிடுகின்றன. மாற்றிவிடுகிறோம். நன்றி
ஜெ