நிழலில்லாத மனிதன்

IMG_1514

 

பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவிடம் கேட்டார். குரு சொன்னார். ’காம,குரோத,மோகங்களால் ஆனது வெளியுலகம். அதிலிருந்து நாம் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அதற்காகவே இந்த மடாலயத்தில் வாழ்கிறோம்’.

சீடன் கேட்டான்.’அந்தத் தனிமை எதற்காக?’ குரு சொன்னார் , ’அந்தத் தனிமைதான் நம்முடைய காவல், நம்முடைய கவசம், நமது ஆயுதம்’.

 

சீடன் கேட்டான், ’அப்படியானால் எவன் மிக அதிகமாகத் தனிமையில் இருக்கிறானோ அவன்தானே அதிகமாக விடுதலை பெற்றவன், அதிகமான ஞானம் கொண்டவன்?’ குரு,’ஆம்’என்றார். ’அப்படிப்பட்ட ஒரு குருவைத்தேடிச் செல்ல என்னை அனுமதியுங்கள் ’என்றான் சீடன். குரு அனுமதி அளித்தார். சீடன் கிளம்பிச் சென்றான்.

பன்னிரண்டு வருடம் அச் சீடன் முழுமையான தனிமை கொண்ட ஒரு குருநாதரைத்தேடிச் சென்றான். நூற்றுக்கணக்கான மலைகளை அவன் ஏறினான். நூற்றுக்கணக்கான காடுகளுக்குள் அவன் அலைந்தான். பாலைவனங்களிலும் பனிவெளிகளிலும் ஆளில்லாத தீவுகளிலும் அவன் தன் குருவைத் தேடினான். மலையுச்சி மடாலயங்களில் மனிதர்கள் துணைவர்களுடன் இருந்தார்கள். தீவுகளில் பலர் வழிகாட்டி நூல்களுடன் இருந்தார்கள்.

பனிவெளியில் தனிமையில் இருந்த ஒருவரிடம் சீடன் கேட்டான். ‘குருவே உங்களுக்கு யார் துணை?’  ’எனக்கு என் ஞானம் துணை’ என்றார் அவர். அவரைவிட்டு சீடன் நீங்கிச்சென்றான். பாலைவெளியில் தனித்தலைந்த ஒருவரிடம் கேட்டான் ’குருவே உங்களுக்குத் துணை என எவரும் உண்டா?’ ’எனக்கு இறைவன் துணை’ என்றார் அவர். அவரை விட்டு நீங்கினான்.

கடைசியில் மூடிய அறைக்குள்ளில் முப்பதுவருடங்களாக வாழும் ஒரு குருவைக் கண்டான்.அவர் முற்றிலும் தனிமையில் இருந்தார். ‘குருவே, நீங்கள்தான் முற்றிலும் தனிமையில் இருக்கிறீர்கள்’ என்றான். ‘இல்லை, என்னுடன் என் நிழல் இருக்கிறது. தன்னுடன் நிழலும் இல்லாதவனே முழுமையான தனிமையில் இருப்பவன்’ என்றார் அவர்.

சீடன் மேலும் பலவருடங்கள் அலைந்தான். தன்னுடன் தன் நிழலும் இல்லாத ஒரு மனிதனைத் தேடி அவன் சென்றான். அப்படி ஒரு மனிதன் இருக்க முடியாதென்றே அவனுக்கு அறிஞர்கள் சொன்னார்கள். ஆனால்  மங்கோலியப்புல்வெளியில் அவன் ஒரு இடையனைக் கண்டான். புல்வெளியில் நின்று அவன் தன் புல்லாங்குழலை ஊதியபோது அவனுடைய உடல்,பனித்துளி சூரியனை உண்டு ஒளிர்வதுபோல ஒளிவிட்டது. அப்போது அவனுடன் அவன் நிழலும் இருக்கவில்லை.

‘குருவே நீங்களே பரிபூரணர்’ என்று அவன் அந்த இடையனின் தாள் பணிந்தான். ஆனால் இசைத்துக்கொண்டிருந்தபோது அங்கே இடையன் இருக்கவில்லை. இசை நின்றபோது அங்கே இடையன் மட்டுமே இருந்தான்.

தன் கலையால் தன்னை நிறைத்துக்கொண்டவன் பிறிது எதற்கும் இடமில்லாதவன், சுயம்பிரகாசமானவன். அவனுக்குள் துயர் நுழைவதிலை. அவனுக்குக் குறையென இப்பூமியில் ஏதுமில்லை. அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் ந.பிச்சமூர்த்தியும் க.நா.சுவும் ,சி.சு.செல்லப்பாவும் இணைந்து நவீனக்கவிதை இயக்கத்தை உருவாக்கினார்கள். அதில் பிரமிளும் பசுவய்யாவும் அபியும் போன்ற கவிஞர்கள் உருவாகி வந்தார்கள். இன்று தமிழிலக்கியத்தின் ஒரு ஒளிமிக்க ஓட்டமாக நவீனக் கவிதை உள்ளது.

நம் நவீனக்கவிதை இன்று அரை நூற்றாண்டைத் தாண்டிவிட்டநிலையில் அதைத் திரும்பிப்பார்க்கையில் சில பொதுக்கூறுகள் கண்ணீல் படுகின்றன. ஒட்டுமொத்தமாக நவீனக்கவிதை இயக்கத்தையே ‘தனிமனிதத் துயரத்தின் பதிவு’ என்று சொல்லிவிடலாம்.

புதுக்கவிதை முன்னிறுத்திய முக்கியமான கருதுகோள் என்பது ’தனி மனிதன்’ என்பதே. நான் என்றே பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. அந்த’ நான்’என்ற உருவகத்தைக் காலவெளி முன்னால், வரலாற்றின் முன்னால், சமூகச்சூழலின் முன்னால் வைத்துப்பார்க்கின்றன. அந்த சுய அறிதலின் பல்வேறு கணங்களையே எல்லா நவீனக் கவிதைகளும் வெளிப்படுத்துகின்றன. அவற்றின் அரசியல்,தனிமனித அரசியல். அவற்றின் அறம், தனிமனித அறம். அவற்றின் அழகியல், தனி மனித அழகியல்.

நவீனக்கவிதை நிலையற்றவனாகிய, சின்னஞ்சிறியவனாகிய, தனிமனிதனை எல்லா பிரம்மாண்டங்களுக்கும் முன்னால் நிறுத்தியது. ஆகவே அது துயரத்தையே அடையாளம் கண்டது. Angst என்று தத்துவம் குறிப்பிடும் மனநிலையே நவீனக்கவிதையில் எப்போதும் வெளிப்படுகிறது. அதைப் ’பறதி’ என்ற கலைச்சொல்லால் குறிப்பிடலாம். இருத்தலியல் பதற்றம் அது.

தமிழில் கவிதை எழுதிய எல்லா நல்ல கவிஞர்களிலும் வெளிப்படுவது அந்தத் துயரமே. ‘எனக்கு யாருமில்லை, நான்கூட’ [நகுலன்] என்றோ ‘ இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ நான்![பிரமிள்] என்றோ ‘சிலையை உடை என் சிலையை உடை, கடலோரம் காலடிச்சுவடு’  [பசுவய்யா] என்றோதான் அது தன்னை உணர்கிறது.

அந்தச்சூழலில் ஒரு கவிஞன் தன் எளிய மூங்கில்குழலை வாசித்துக்கொண்டு மலையோரம் நிற்பதை நான் கண்டேன். ஒரு துளி துக்கமில்லை அவனிடம். அவன் வேண்டுவதும் விலக்குவதும் ஏதுமில்லை. தன்னில் தான் நிறைந்து,தன் நிழல்கூட இல்லாத தன்னொளியைப் பரப்பிக்கொண்டு அவன் நின்றுகொண்டிருந்தான். அது தேவதேவன். எனது கவிஞன் அவன்.

தேவதேவனின் கவிதையின் தனிச்சிறப்பே அதுதான். அது துயரமற்ற கவிதை. துயரமின்மையின் கவிதை என்று இன்னமும் நுட்பமாகச் சொல்லலாம். மனிதனைத் துயரமற்றவனாக ஆக்கும் சில கணங்கள், சில இடங்கள் உண்டு. அவற்றை நோக்கிச் சிறகடித்தெழும் கவிதைகள் தேவதேவனால் எழுதப்படுபவை.

தேவதேவனின் கவிதைகளில் பறவைகள் அந்த ஒளிமிக்க பெருநிலையின் தூதர்கள். அவை வானிலிருந்து பறந்திறங்கி அவருடைய சின்னஞ்சிறிய இல்லத்திற்குள் வந்து கொண்டே இருக்கின்றன. வானிலிருந்து இறங்கி அறைக்குள் சிறகடித்துச் சுழல்கிறது சின்னஞ்சிறிய குருவி.தன் வருகையைச் சொல்லிவிட்டுச் சாளரம் வழியாகப் பீறிட்டு வெளியே செல்கிறது.மரக்கிளையை நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து எம்பி வானில் பறந்தேறுகிறது.

அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.

மரணமற்ற ஒளிக்கடலில் நீந்தும் அந்தப்பறவையை மீண்டும் மீண்டும் தேவதேவன் தன்னுடைய கவிதைக்குள் இறங்கச்செய்கிறார். அதிகாரப்பேராசையும் பொருள்பித்தும் அகங்காரச்சதுரங்கமும் நிறைந்த இவ்வுலகின் பிரம்மாண்டமான இரும்புப் பற்சக்கரங்களின் மேல் வந்து எளிமையின் பேரழகுடன் சிறகுமடக்கி அமர்கிறது அந்தச் சின்னஞ்சிறிய பறவை.மகத்தான பறவை.  ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்’ என்று நம்மாழ்வாரைக் கசியச்செய்த பறவை. ஜென் குருக்களுக்குக் ககனமென்றால் என்னவென்று சொல்லித்தந்த பறவை. ககனவெளியை சிறகாக்கி இப்புவியை ஒரு சிறுமணியாகத் தன் கால்களில் கவ்விக்கொண்டு செல்லும் ஆற்றல் கொண்ட பறவை. நம் பார்வைக்கினியதாக சின்னஞ்சிறு மணிக்கண்களும் சிற்றிறகுகளுமாக நம் முற்றத்தில் வந்தமர்ந்த பறவை.

தேவதேவனின் கவிதையின் பணி அதுவே. தாந்தே எழுதியதைப்போல உக்கிரமான உறுமல்களும் அலறல்களும் நிறைந்த இந்த நரக பூமியைப்பற்றி அவர் எழுதியதில்லை. இங்குள்ள இருட்டையும் அழுக்கையும்பற்றி அவர் பாடியதில்லை. அவரது கவிதை அந்த விண்ணுலகின் ஒளித்துளியை இங்கே வந்து அமரச்செய்வதற்கான கனவு மட்டுமே.

ஆனால் அவை வெறும் ஆன்மீக எழுச்சி மட்டும்தானா? வெறும் கனவுப்புன்னகை மட்டும்தானா?

முன்னர் என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் அப்போது சாமவேதம் ஆக்னேய காண்டத்துக்கு உரையளித்துக்கொண்டிருந்தார். அக்னியின் அழகிய சித்திரங்கள் நிறைந்த கவிதைப்பகுதி அது. மலரிலும் இலைத்தளிரிலும் உறையும் அக்னியைப்பற்றி சொல்லப்பட்டபோது என் முகக்குறி கண்டு நித்யா சொன்னார். வேதம் சொல்லும் அக்னி,பருப்பொருளான அக்னி இல்லை. அக்னி என்ற பருப்பொருளில் இருப்பது அக்னி என்ற நிகழ்வு. அந்த நிகழ்வை நிகழ்த்துவது அக்னி என்ற கருத்து. கருத்து வடிவில் அக்னி இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது. விண்மீன்களில் அது எரிகிறது. பசியில் சுடுகிறது. ஒளியில் மின்னுகிறது.

’எரியும் ஒரு மரத்துண்டை அணைப்பதற்கு எவ்வளவு நீர் தேவையோ அதைவிட அதிக நீர் ஓர் இலைத்தளிருக்குத் தேவை அல்லவா? அதற்குள் எரியும் தீ அல்லவா அந்த நீரை உண்கிறது?’ என்றார் நித்யா. ஆம் மலரிதழ்களுக்குள்ளும் நெருப்பு வாழ்கிறது. தொட்டால் குளிரும் நெருப்பு அது.

மீண்டுமொரு சீனக்கதை.  சீனச்சக்கரவர்த்தி ஒருவர்,ஒரு சிம்மாசனம் செய்ய விரும்பினார். தீயில் எரியாத, கடும் வெம்மையில் உருகாத, அமிலத்தால் அரிக்கப்படாத உடைக்கவும் அழிக்கவும் முடியாத ஒரு பொருளால் அது அமையவேண்டும் என்று அவர் ஆணையிட்டார். இருபது வருடங்கள் மாபெரும்வேதியல் அறிஞர்களும் இயற்கை நிபுணர்களும் ஞானியரும் கூடி ஆலோசித்து தேடி ஒரு மரத்தைக் கண்டுகொண்டனர். அந்த மரத்தால் அமைந்தது அவரது சிம்மாசனம்.

அந்தசிம்மாசனம் நெருப்பில் எரியவில்லை. கடும் வெம்மையில் கருகவில்லை. அமிலத்தில் அரிக்கப்படவில்லை. எந்த எடையும் எந்த விசையும் அதை எரிக்கவும் உடைக்கவும் முடியவில்லை. அந்த மன்னரின் இருபது வாரிசுவரிசைகள் அந்தச்சிம்மாசனத்தில் அமர்ந்து நாடாண்டனர்.

பின்னர் அவர்கள் அகங்காரம் கொண்டனர். அழியாத சிம்மாசனத்திற்கு உரியவர்கள் என எண்ணி அறம் மறந்தனர். அநீதிகளுக்குத் தங்கள் நாட்டையும் மக்களையும் விட்டுக்கொடுத்தார்கள்.தீமையில் திளைத்தனர்.

அப்போது ஒருநாள் ஓர் எளிய இடையன் அரச சபைக்கு வந்தான். அந்த சிம்மாசனத்தை அவனால் எரித்துவிட முடியும் என்றான். அரசன் ஆச்சரியத்துடன் ‘சரி, செய் பார்க்கலாம். ஆனால் எரியாவிட்டால் உன்னைக் கழுவேற்றுவேன்’ என்றான். அந்த எளிய இடையன் செக்கச்சிவந்த காட்டு மலர் ஒன்றை அந்தச் சிம்மாசனம் மீது வைத்தான். அந்த இதழ்கள் நெருப்பாக மலர்ந்தன. அந்த மலர் சிம்மாசனத்தை எரித்தது.

சிம்மாசனங்களை எரிக்கும் சின்னமலர் என்று நான் கவிதையைச் சொல்வேன். நெருப்பை உள்ளூரக்கொண்ட மலர். அதனால்தான் உலகமெங்கும் சர்வாதிகாரிகள் கவிதையை அஞ்சினார்கள். விடுதலைப்போர்களில் கவிஞர்கள் முதலில் தூக்கிலேறினார்கள்.

ஏனென்றால் தன் அழகால், தன் எளிமையால் கவிதை தன்னை ஓர் அடையாளமாக ஆக்கிக்கொள்கிறது. மானுடத்தின் மாறாத சில மதிப்பீடுகளின் அடையாளம். மனிதகுலத்தை இந்தக் கணம் வரை கொண்டுவந்து சேர்த்த சிலவற்றின் அடையாளம். ஆகவே அது தன்னளவிலேயே ஓர் எதிர்ப்புக்குரலாக,ஓர் ஆயுதமாக இருக்கிறது. எரிக்கவேண்டியதை அது எரிக்கும். குளிரவேண்டிய இடத்தில் அது குளிரும்

 

 

தேவதேவனின் கவிதைகளில் நேரடியாக அரசியல் இல்லையே என்ற குரல் அடிக்கடி எழுவதுண்டு. அதற்கு அவரே விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். ’கவிதை உலகியலை மதிப்பிடுகிறதே என்று உலகியல் கவிதையை மதிப்பிட்டுவிடக்கூடாது’ என்றார் அவர்.

ஒரு மேஜை. அதன் மேல் உணவுப்பொருட்கள் இருக்கின்றன. ஆடைகள் இருக்கின்றன. வண்ணப்பாத்திரங்களும் மின்னணுச்சாதனங்களும் இருக்கின்றன. இன்னும் நாம் அன்றாட வாழ்க்கையில் புழங்கும் ஏதேதோ பொருட்கள் இருக்கின்றன. அந்த மேஜையில் ஒரு வைரம் கொண்டு வந்து வைக்கப்பட்டால் என்ன நிகழும்? அந்த அத்தனை பொருட்களும் வைரத்தாலேயே மதிப்பிடப்படும். ஒரு வைரத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் அந்தப்பொருட்கள் பெறும் என்பதே நம் எண்ணமாக இருக்கும்.

வைரம் எந்தப் பயன்மதிப்பும் அற்றது. வெறும் ஒரு கல். ஆனால் அத்தனை பயன்பொருட்களையும் மதிப்பிடும் ஒன்றாக அது தன் அழகால் தன்னை ஆக்கிக்கொண்டிருக்கிறது. அதுவே கவிதை. உலகியலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட அழகு அது. நம் உலகியலின் மதிப்பு என்ன என்று நமக்குக் காட்டித்தருவது என்பதே அதன் ஒரே உலகியல் மதிப்பு.

ஆகவேதான் எங்கோ தூத்துக்குடி மூலையில் இருந்து கொண்டு தன் முற்றத்துக்கு வரும் பறவைகளைப்பற்றி எழுதிக்கொண்டு தனித்திருக்கும் ஒரு மனிதரின் எளிமையான வரிகள் நம் காலகட்டத்தின் அறமும் அழகும் ஆக மாறுகின்றன. நம் காலகட்டத்தின் அரசியலையும் ஆன்மீகத்தையும் அவை காட்டுகின்றன.

அவை வைரங்கள். வைரம் எத்தனை விந்தையான பொருள் இல்லையா? இம்மண்ணில் உள்ள எந்த உயிர்ப்பொருளும் சாராம்சத்தில் கரிதான். அவற்றின் நீரையும் உப்பையும் இழந்தால் எஞ்சுவது கரிதான். தனக்குள் இருட்டை நிறைத்துக்கொண்டது கரி. ஆனால் அது மண்ணுக்குள் ஆழத்திற்குச் சென்று,இப்பூமியின் எடையை முழுக்கப் பெற்றுக்கொண்டு,இந்த பூமியின் ஆழத்து வெப்பத்தை முழுக்க வாங்கிக்கொண்டு பல்லாயிரம் காலம் தவமிருந்தால் அதன் இருளுக்குள் ஒளி குடியேறுகிறது.

ஒளியை உள்ளே வைத்திருக்கும் கரிதான் வைரம். வைரத்தின் மதிப்பென்பது என்ன? தனக்குள் அது தேக்கி வைத்திருக்கும் ஒளியின் மதிப்புதான் இல்லையா? பல்லாயிரம் பட்டைகள் வழியாக அது வெளிச்சிதறும் அந்த ஒளியால்தான் அது விலைமதிப்பற்றதாகிறது. வைரமென்பது வைரத்தின் தவம் மட்டுமே.

தேவதேவனின் இக்கவிதைகளினூடாகச் செல்லும்போது அந்தத் தவத்தை நாம் காண்கிறோம். இந்த ஒவ்வொரு கவிதையிலும் நம் காலகட்டத்தின் மகத்தான மனம் ஒன்று,தன்னை அனைத்து உலகியலீர்ப்புகளில் இருந்தும் விலக்கிக்கொண்டு தன்னைத்தான் நோக்கி அமர்ந்து ஆற்றிய நெடுந்தவம் மிளிர்கிறது. நவீனத்தமிழிலக்கியத்தில் இதற்கிணையான இன்னொரு அர்ப்பணிப்பு நிகழ்ந்ததில்லை என்றே சொல்வேன்.

அது,சொல்லை மட்டுமே பற்றிக்கொண்டு கடலினும் பெரிதான அந்தக் கங்குல் வெள்ளத்தை நீந்திக்கடக்கும் ஒரு பெரு முயற்சி. மணலிலும் பாறையிலும் மேகப்படலத்திலும் கூடச் சொல்லை நட்டுச் சொல்லை அறுவடைசெய்யும் சொல்லேர் உழவு.

அந்த தவத்தின் ஒளிபொருந்தியவை என்பதனாலேயே இக்கவிதைகள் எல்லையற்ற மதிப்புள்ள வைரங்களாகின்றன.

நிறத்தில் தன் மாமிசத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டி
தவம் மேற் கொண்ட நோக்கமென்ன ? என்றால்
தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்.

இன்று உனக்கு உண்ணக்கிடைத்த பப்பாளிப்பழமே அன்றைய சூரியன் என்கிறார் தேவதேவன் ஒரு கவிதையில். தன் அனைத்து மகத்துவங்களுடனும் கவிதை இந்த மண்ணில்தான் வேர்பரப்பி எழுந்தாகவேண்டும். முளைத்து மேலெழுந்தாகவேண்டும். அழகு ஒருபோதும் தனித்து நிற்பதில்லை. அது அழகென்பதனாலேயே அது உண்மையும் கூட. அது அழகென்பதனாலேயே அது கனிவும்கூட. சத்யம் – சிவம்- சுந்தரம். மூன்றும் ஒரு தெய்வத்தின் மூன்று முகங்கள் மட்டுமே.

தன் பாட்டுத்திறத்தால் இந்த வையத்தைப் பரிபாலிக்கவேண்டும் என்று கனவுகாணாத கவிஞன் யார்? தன் சிறுமாணவர்களுடன் சேர்ந்து கூட்டிப்பெருக்கும்போது தேவதேவன் சொல்கிறார், நாம் என்ன செய்கிறோம்? நாம் இந்த உலகை சரிசெய்கிறோம் என. இந்த உலகை செப்பனிடுகிறோம் என. ஆனால் அது வன்முறையால் அல்ல. கனிவால். ’நானே நீ’ என்ற கனிவு அது. ‘நாமே இதெல்லாம்’ என்ற விரிவு அது.

தேவதேவனின் கவிதைகளில் ஓடும் ஆழ்ந்த கனிவை உணர்ந்துகொள்ளும்போதுதான் நாம் அச்சொற்களின் பேரழகை உண்மையில் அறிகிறோம். ‘யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்?’ என்று வினவுகிறது அவரது கவிதை.

குப்பைத்தொட்டியோரம்
குடித்துவிட்டு விழுந்துகிடப்போனை

வீடற்று நாடற்று
வேறெந்தப் பாதுகாப்புமற்று
புழுதி படிந்த நடைபாதையில்
பூட்டு தொங்கும் கடை ஒட்டிப்
படுத்துத் துயில்வோனை

நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கிக்
கைக்குழந்தை குலுங்க அழுதுகொண்டு ஓடும் பெண்ணை

நடைபாதைப் புழுதியில் அம்மணமாய்
கைத்தலையணையும் அட்டணக்காலுமாய்
வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை

எதனையும் கவனிக்க முடியாத வேகத்தில்
வாகனாதிகளில் விரைவோனை

காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கைவிலங்குடன்
அழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை

ஆம், கடைசியாக மீண்டும் ஒரு சீனக்கதை. சீனப்பெருவீரர் ஒருவர் தன் வாளை சாத்தியமான எல்லை வரை கூர்மைப்ப்படுத்த விரும்பினார். அந்தக் கூர்மைக்கு முன்னால் உலகின் எந்தச்சக்தியும் எதிர்த்து நிற்கக்கூடாதென எதிர்பார்த்தார். தன் உடலையும் மனதையும் கையையும் கூர்மைப்படுத்திக்கொண்டார். கடைசியில் அம்மூன்றும் அவரது வாளில் வந்து அமைந்தன. ஆகவே வாளைத் தீட்ட ஆரம்பித்தார்

தீட்டும்தோறும் வாள் தேய்ந்ததே அல்லாமல் உச்சகட்ட கூர்மை நோக்கிச் செல்லவில்லை. ஒவ்வொரு முறை கூரிய நுனியில் விரலால் வருடும்போதும் அவருக்குள் ஒரு குரல் சொன்னது. இந்தக்கூர்மை போதாது என. ஆகவே அவர் மலையுச்சி நோக்கிச் சென்றார். அங்கே தனிமையில் வாழ்ந்த பெருங்கவிஞர் துஃபு வைக் கண்டு கேட்டார். இந்த வாளை இன்னமும் கூர்மையாக்க நான் என்ன செய்யவேண்டும்.

’அந்த நுனிக்கு உன் சொந்தக்குருதியில் ஒரு துளியை உண்ணக்கொடு’ என்றார் துஃபு. ஆகவே அவர் கீழிறங்கிவந்து தன் சொந்த ரத்தத்தை ஒருதுளி சேர்த்துத் தீட்ட ஆரம்பித்தார். வாள் தட்டாரப்பூச்சியின் சிறகு போலவும் தெறிக்கும் நீர்த்துளி போலவும் கூர்மை கொண்டது.

தேவதேவனின் இக்கவிதைகள் இதயத்தின் குருதி சேர்த்துத் தீட்டப்பட்டவை. ஆகவே நம் காலகட்டத்தின் வேறெந்தச் சொற்களையும் விடக்கூர்மையானவை.

ஒரு சாதாரண வாசகனாக அல்ல, தமிழின் இந்தக்காலகட்டத்தின் முதன்மையான எழுத்தாளனாக , இந்தக்காலகட்டத்தின் இலக்கியமதிப்பீடுகளைத் தீர்மானிப்பவர்களில் ஒருவனாக  நின்று ஒன்று சொல்கிறேன். இந்த அவையில் அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் இறந்து மறக்கப்படுவீர்கள். உங்கள் குழந்தைகள் மறக்கப்படும். இந்நகரின் ஒவ்வொரு கட்டிடமும் ஒரு கல் இன்னொரு கல் மீது அமராதபடிக்கு இல்லாமலாகும். அதன்பின்னரும் தேவதேவனின் கவிதைகள் வாழும்

ஆதிச்ச நல்லூர் இங்கே அருகேதான். அங்கே முதுமக்கள் தாழிகளில் நமக்குக் கிடைக்கும் ஒரு பண்பாடு உள்ளது. அது எவரது பண்பாடு, எவரது வாழ்க்கை என நமக்குத்தெரியாது. நாமறிந்த எல்லா வரலாற்றுக்கும் தொல்பழங்காலம் அது. அதன் பானை எழுத்துக்களில் சில வரிகள் கீறப்பட்டுள்ளன. அந்த ஒட்டுமொத்தப் பண்பாடு.எதிர்காலத்துக்காக விட்டுச்சென்றது அந்த வரி மட்டுமே. ஒருவேளை நாம் வாழும் தமிழகத்தின் இந்தக் காலகட்டம் முடிவற்ற எதிர்காலத்துக்காக விட்டுச்செல்லும் சிலவரிகள் தேவதேவனுடையதாக இருக்கலாம்

என் அளவுகோலில் பாரதிக்குப்பின் கவிதை எழுதியவர்களில் பிரமிள் முக்கியமானவர். அதன்பின் தேவதேவன். பிரமிள் தன் மனக்குறைபாடுகளால் தேங்கி நின்றுவிட்டவர். தன் கவித்துவத்தை முழுமையாக வெளிப்படுத்தும் தவத்தைச் செய்தவர் தேவதேவன். ஆம், பாரதிக்குப்பின் அவர் ஒருவரையே ‘மாகவிஞன்’ என நான் சொல்வேன்.

நம் முன் எளிய மனிதராக – சிலசமயம் பேதை மனிதராக அமர்ந்திருக்கும் இந்த உள்ளத்தின் கனிந்த ஞானமும் குழந்தைத்தனமான அழகியலும் இக்கவிதைகள் வழியாக வெளிப்படுகின்றன. என் வரையில் அதன் வழியாகவே தமிழுக்கு இன்னும் இன்னும் எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதைக் காண்கிறேன்

இந்த அவையில் என் ஞானகுருவாக, என் ஆன்மாவின் விளையாட்டுத்தோழராக அமர்ந்திருக்கும் இந்த மனிதரைப் பரிபூரணமாக வணங்கி விடைபெறுகிறேன்.

[29-05-2011 அன்று தூத்துக்குடி பியர்ல் ஃபவுண்டேஷன் வழங்கும் ‘சாராள் -ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது’  தேவதேவனுக்கு  அளிக்கப்பட்டபோது ஆற்றிய உரை]

 

முதற்பிரசுரம் Jun 30, 2011 @ 0:00 /மறுபிரசுரம்

தேவதேவனின் கவிதையுலகம்


தேவதேவனுக்கு ஓர் இணையதளம்


தேவதேவன் கடிதம்


மார்கழியில் தேவதேவன்


கவிதையின் அரசியல் தேவதேவன்


தேவதேவனின் கவிதையுலகம்


தேவதேவனின் வீடு ஒரு குறிப்பு

முந்தைய கட்டுரைவனக்காட்சி – சுபஸ்ரீ
அடுத்த கட்டுரைபேச்சும் பிரார்த்தனையும்- கடிதங்கள்