கடிதங்கள்

ஆசிரியருக்கு, 

சிக்கிம், பூடான் என 10  நாட்கள் ஒரு முக்கிய இலக்கிய நட்சத்திரத்துடன் பயணத்தில் இருந்ததால், வலையைத் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. பழைய கட்டுரைகளில் இருந்து தற்போதுதான் புதிய கட்டுரைகளுக்கு வந்து சேர்ந்தேன்.

1 .  “நமது கட்டிடங்கள்”–  கட்டிடத்தையும் பாரம்பரியத்தையும் சொல்லப் போனாலும் , இதன் மூலம் விளங்குவது நமது சொந்த ஞானமும் , வந்த ஞானமும்,  கலவையும் , விகிதமும். மேற்கைப் போற்றி,நமதைத் தாழ்த்தி எல்லாவற்றையும் நகலெடுத்து , நமது சமூகமே ஒரு பிரம்மாண்டமான Xerox எந்திரமாகவே உருவாகிவிட்டது. உணவு,உடை,இருப்பிடம்,கல்வி,அரசு என எல்லாமே மேற்கத்திய மற்றும் சினிமா நகல்கள். நமக்கு நமது கலைகள் மீதும், வாசிப்புக் குறைவாலும், இடது சாரி திராவிட ஆதிக்கத்தாலும்  நாம் சேர்த்த அறிவுக் களம் மீதும் நமக்கே  மரியாதை இல்லை, நம்பிக்கை இல்லை. நகல் இயந்திரத்திடம் ஒரு அசலை எப்படி எதிர்பார்ப்பது :
(அதற்கு ஆழமான படைப்புத்திறன் தேவை. புதிய அழகியலின் சாரத்தை உணர்ந்து தேவையை மட்டும் எடுத்துக்கொள்ள, பழைய அழகியலில் இருந்து ஆதாரமான விஷயங்களைத் தக்கவைத்துக்கொள்ள, அவற்றின் கலவையாக முற்றிலும் புதிய ஒன்றை உருவாக்க விரிவான ஞானமும் துடிப்பான கற்பனையும் தேவை.)

2. அடுத்து “சராசரி” –
எந்தத் தெளிவான வரலாற்று அறிவுமே இல்லாமல் , மேம்போக்கான கற்பிதங்கள் எப்படி இவ்வளவு வலுவாக நம் மனதில் ஊன்றி உள்ளன என்பதற்கு இக் கட்டுரைகளில் வரும் வரிகள் அதிர்ச்சி அளிக்கும்படி இருப்பதே சான்று.
(கீழ்ச்சாதியினராக உள்ள மக்களெல்லாம் சிந்தனைக்கும்  பண்பாட்டுக்கும் ஒன்றும் பங்களிப்பாற்றாமல் வயிற்றுப்பாட்டுக்காக மட்டுமே இதுவரை வாழ்ந்தார்கள் என்பதும், ஏதோ இப்போதுதான் கொஞ்சம் சோறும் கல்வியும் கிடைத்துச் சிந்திக்கவும் கலையை ரசிக்கவும் கற்கிறார்கள் என்பதும் அறியாமையால் உருவாகும் ஒரு தாழ்வுணர்ச்சி மட்டுமே.) எனக்கும் இக்கற்பிதம் உண்டு , இவ்வரிகள் அதிர்ச்சியளித்தது.

இன்று கல்வியுடனும் மூளையுடனும் இருப்பவர்களாகக் கருதப்படும் (அவர்களாலும்,பிறராலும்) பிராமணர்களின் உண்மை நிலவரம் என்ன? , முன்பு இவர்களின் இடம் என்ன ? இதே போல உலக அரங்கில் கருதப்படும் யூதர்களின் அசல் இடம் என்ன ? விளக்க வேண்டுகிறேன் .
ஆம் , கீழே கண்ட வரிகள் மிகப் பொருத்தமானவை, வாசகனை மிதக்கச் செய்பவை  :
(எந்த ஒரு சமூகமும் இன்னும் இன்னும் நுட்பத்தை, கூர்மையை, சிறப்பை நோக்கிச் செல்லவேண்டும். அது இயற்கையின் விதி. ஒரு போதும் சராசரிகளால் அதைச் செய்யமுடியாது.)

வேர் நுனிவரை அழைத்துச் சென்ற இரு கட்டுரைகளுக்கும் நன்றி.

கிருஷ்ணன்

அன்புள்ள சார்,

எனது புளியமரம் பிளாக்கில் நமது சிக்கிம், பூட்டான் பயணம் குறித்து எழுத ஆரம்பித்துள்ளேன். பார்க்க- http://puliamaram.blogspot.com/2011/05/blog-post.html

அன்புடன்
தங்கவேல்

முந்தைய கட்டுரைதிருப்பரப்பு
அடுத்த கட்டுரைபருந்து