அன்புள்ள ஜெ,
வணக்கம். சியமந்தகம் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை வாசித்து வருகிறேன். உங்கள் ஆளுமை, படைப்பு, அனுபவம் என நீளும் வகைமையில் ஒவ்வொன்றும் சிறப்பாக வந்திருக்கின்றன; குறிப்பாக கவிஞர்களின் பார்வை.
கர்நாடக பள்ளிப் பாடத்திட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்த செய்திகளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அது குறித்த எதிர்ப்புகள், ஒரு எழுத்தாளர் இத்தகைய பாடத்திட்டத்தில் தன்னுடைய படைப்புகள் இடம்பெற விருப்பமில்லை என அறிவித்தமை, இக்கடிதம் எழுதப்படும் நாளின் செய்தியாகிய ஒக்கலிக சமூகத்தின் எதிர்ப்பும், அதை சரி செய்ய அச்சமூகத்தை சேர்ந்த அமைச்சரை வைத்து விளக்கம் கொடுக்கும் முடிவும் என.
கர்நாடக பாடத்திட்ட மாறுதல். இந்த செய்தி என்னென்ன பாடங்களெல்லாம் நீக்கப்பட்டிருக்கின்றன என்பதை தொகுத்திருக்கிறது. காந்தி, அம்பேத்கர், சாவித்திரி பாய் பூலே, நாராயண குரு உள்ளிட்ட அரசியல்/சமூக பங்களிப்பாளர்கள், கோவில் நுழைவுப் போராட்டம், மகர்/சம்பாரண் சத்தியாகிரகம் உள்ளிட்ட நிகழ்வுகள், லங்கேஷ், ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் உள்ளிட்டோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன.
இத்தகைய மாற்றங்களை ஆசிரியர்கள் தரப்பிலிருந்தோ, ஒரு இயக்கமாகவோ அல்லது நீதிமன்றம் வழியோ எதிர்க்கவியலா நிலையை அடைத்திருக்கிறோமா? அப்படி கேள்வி கேட்பதற்கான பயம் இங்கு மெல்லமெல்ல உருவாக்கி வருகிறதா? இல்லை இவை எல்லாம் என் அரசியல் நிலைப்பாட்டின் குறுகிய பார்வையா? இதை எழுதும் நாளின் இன்னொரு செய்தி: உபி அரசு வீடுகளை இடித்தமை சட்டத்திற்கு உட்பட்டதே என உயர்நிதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
விஜயகுமார்.
***
அன்புள்ள விஜயகுமார்,
மார்க்ஸியச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக வெளிப்படையாகவே ஜோஷி – பி.டி.ரணதிவே அறிவித்தது கல்விமுறையைக் கைப்பற்றுதல். அதை அவர்கள் இருபத்தைந்தாண்டுகளில் செய்தனர். எவர் நம் பாடத்திட்டத்தில் இருந்து நம் தத்துவமரபுகள் அனைத்தையுமே ஒட்டுமொத்தமாக வெளியே தள்ளினார்கள்? நம் கலைக்கோயில்கள் பற்றிய எச்செய்தியும் இல்லாமல் பாடத்திட்டங்களை வடிவமைத்தது யார்?
அது ஓர் எல்லை. அதற்கு எதிர்வினையாக இந்த எல்லை. இவர்கள் மிக எளிய அன்றாட மதவழிபாட்டை அன்றி எதையும் அறியாதவர்கள். மத அடையாளங்களே மதம் என நினைப்பவர்கள். அவர்களின் அரசியலுக்குகந்தவையே ஆன்மிகம் என நம்புபவர்கள். அவர்கள் அதை திணிக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் இன்று வென்றிருக்கிறார்கள்.
நம் கல்வியமைப்புகள் முழுமையாகவே அரசின் கட்டுப்பாட்டில் இன்று உள்ளன. கல்வித்துறைக்குள் அரசியலை நுழைப்பதை நாம் இந்திய சுதந்திரம் கிடைத்து, முதல் பாடத்திட்ட வடிவமைப்பின்போதே தொடங்கிவிட்டோம். அவரவர் அரசியலை நுழைத்துக்கொண்டே இருக்கிறோம். எந்த நிரூபணமும் இல்லாத ஆரிய திராவிட் கோடபாடு பாடமாக ஆனபோதே இது தொடங்கிவிட்டது. தமிழ்ப்பாடநூல்களில் இல்லாத அரசியல் திணிப்பும் அழிப்புமா?
இதில் எவருக்கும் எவரையும் குறைசொல்ல உரிமை இல்லை. முன்பிருந்தோர் எட்டடி பதினாறடி என பாய்ந்தனர், இப்போது வருவோர் நூற்றெட்டடி பாய்கிறார்கள். உங்கள் அரசியல் இடம்பெறலாம் என்றால் எங்கள் அரசியல் ஏன் இடம்பெறக்கூடாது என்று கேட்பார்கள் அல்லவா? எங்களுக்குத்தான் மக்கள் ஓட்டுபோட்டார்கள் என்று சொல்வார்கள் அல்லவா?
ஒன்றே செய்யக்கூடுவது, கல்வியில் எந்த அரசியலும் இடம்பெறக்கூடாது என்னும் ஒரு பொதுப்புரிதல் நாடளாவ உருவாக வேண்டும். அதன்பொருட்டு கல்வியாளர்கள் முன்னெழவேண்டும். அரசியலை, அதை உணரும் வயது வந்தபின் மாணவர்கள் அரசியல்பாடமாக பயிலட்டும். அங்கே எதை மறைத்தாலும் சென்று சேர்ந்துவிடும். அதை மக்களிடையே கொண்டுசென்றால் ஏற்கபப்டும்
மாறாக, எங்கள் அரசியல் நல்லது, அதை திணிப்போம், உங்கள் அரசியல் கெட்டது, அதை எதிர்ப்போம் என்பவர்களின் கூச்சல்களால் கல்விமுறை இன்னும் கீழேதான் செல்லும்.ஆனால் அதைத்தான் செய்வார்கள், அவ்வளவுதான் இவர்களின் முதிர்ச்சி. அந்த எல்லையைச் சுட்டிக்காட்டுபவர்களை முழுக்க முத்திரை குத்தி மறுபக்கம் தள்ளுவார்கள். தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொண்டே இருக்கிறது இந்திய முற்போக்கு – லிபரல் தரப்பு.
ஜெ