தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
அமெரிக்காவில் வாழும் தமிழ்க் குழந்தைகள் பற்றிய உங்களின் கட்டுரைகளைப் படித்தேன்.
அக்குழந்தைகளின் அடையாளச் சிக்கலையும் அவற்றிற்கான தீர்வுகளையும் நீங்கள் முன்வைத்தீர்கள். அந்த அடையாளச் சிக்கல்கள் அமெரிக்கா வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வாழும் குழந்தைகளுக்கும் உண்டு என்றே நான் உணர்கிறேன்.
ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஆங்கிலம் உலக மொழி என்ற எண்ணம் வந்து விடுகிறது. எனவே அதற்கு முதலிடம். அடுத்ததாக அவர்கள் இந்தி மொழியைத் தேசிய மொழி என்று நம்புகிறார்கள். இந்தி என்பது இந்திய அரசின் இரு அலுவல் மொழிகளில் ஒன்று என்பதைத் தாண்டி அது தேசிய மொழி மற்றும் இந்தியா முழுவதும் தெரிந்த மொழி என்றும் அதற்கு இரண்டாம் இடம் கொடுக்கிறார்கள்.
நம்முடைய மாநில அளவில் (தோராயமாக ஒரு 700 கிலோமீட்டர் அளவில்) மட்டுமே உள்ள மொழி என்பதால் தமிழ் மூன்றாமிடத்திற்கு தள்ளப்படுகிறது. நாம் பிறப்பிலேயே தமிழை அறிந்து கொள்வதால் நமக்கு பேச்சுத்தமிழ் பிரச்சினையில்லை; அதுவே போதும் என நம் குழந்தைகள் நினைக்கிறார்கள். அதைத் தாண்டித் தமிழை நன்கு கற்க வேண்டும் என்ற எண்ணம் நம் குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது.
தமிழால் நம் பிழைப்புக்கு ஒன்றும் ஆகப் போவது இல்லை என்றபின் தமிழ் நமக்கெதற்கு என்ற எண்ணம் தழைத்தோங்குகிறது. இவற்றைப் போக்க நீங்கள் சொன்ன தீர்வுகளின் எனக்கு உடன்பாடே. தமிழ் பற்றிய வீண் பெருமைகளை விடுத்துத் தமிழின் உண்மையான சிறப்புகளைத் தமிழ்க் குழந்தைகள் அறிந்து கொள்வதே தமிழ் வளர வழிவகுக்கும்.
தமிழின் சிறப்புகளை எடுத்துக் கூறும் ஒரு சிறிய நூலை நீங்கள் அல்லது உங்களின் சீடர் யாராவது எழுத வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
அந்த நூல் 100 பக்க அளவிலானதாக இருக்கலாம்; எளிய மொழி நடையில் இருக்கலாம்; பெரிய எழுத்துருவும் நிறைய படங்களும் கொண்டு இருக்கலாம்; தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கலாம் என்பது என் அவா.
இந்திய அளவிலும் உலக அளவிலும் ஒரு தமிழன் தடுமாறும் போது அவனைத் தாங்கிப் பிடிக்க அந்த நூல் ஒரு கைத்தடியாக அமையும் என நான் உணர்கிறேன்.நான் அதிக இலக்கிய அறிமுகம் இல்லாதவன். என்னால் அத்தகைய நூலை எழுதிவிட முடியாது. தங்களைப் போன்ற இன்றைய தமிழ் முன்னோடிகள் மனது வைத்தால், தொன்மை அல்ல தொடர்ச்சி என்பதே தமிழின் சிறப்பு என்பதைத் தமிழ்ச் சமூகத்தின் அடுத்த கண்ணிக்கு எடுத்துச் செல்ல முடியும்.
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே
என்ற நான் எட்டாம் வகுப்பில் படித்த வரிகளின் வழி வாழ்பவர் நீங்கள்! எட்டுத் திக்கும் தமிழர்கள் செல்கிறார்கள்!
தமிழும் செல்ல மனது வையுங்கள்!
தங்கள் உண்மையுள்ள,
வ.முனீஸ்வரன்
ஆசிரியர்
இனிது இணைய இதழ்
***
அன்புள்ள முனீஸ்வரன்,
நீங்கள் எண்ணுவதுபோல அத்தனை எளிய ஒரு செயல் அல்ல இது. கருத்துகள் எளிமையான பிரச்சாரம் வழியாக சென்றடைவதில்லை. கருத்துக்களம் என்பது நேர்நிலையாகவும் எதிர்நிலையாகவும் முன்வைக்கப்படும் கருத்துக்களால் ஆன ஒரு பெரிய விவாதப்பரப்பு. அதில் பலவகையான கருத்துநிலைபாடுகள் உண்டு. என்னென்ன தரப்புகள் இப்போது காணக்கிடைக்கின்றன என்று சொல்கிறேன்.
இந்த கருத்துக்களத்தில் தமிழே உலகின் தலைமொழி, தமிழர்களே உலகில் உயர்ந்த மக்கள், தமிழ்ப்பண்பாடே தொன்மையானது என்னும் நிலைபாடு கொண்டவர்கள் உள்ளனர். தமிழுக்கு எந்த தனித்தன்மையும் இல்லை, இந்திய பொதுப்பண்பாடே உள்ளது என வாதிடும் தரப்பினர் உள்ளனர். தமிழ்பற்றியும் இந்தியா பற்றியும் மேம்போக்காகத் தெரிந்துகொண்டு வரலாற்றை எழுதும் வெண்டி டேனிகர் போன்ற உள்நோக்கம் கொண்ட, முதிரா வரலாற்றாசிரியர்கள் உள்ளனர்.
இந்தக் களத்தில் ஓங்கி நிற்கும் ஒரு தரப்பாக தமிழ்ப்பண்பாட்டின் வெற்றியைச் சொல்லும் குரல் ஒலிக்கவேண்டும் எனில் எல்லா தரப்புக்கும் ஆதாரபூர்வமாக பதில்சொல்லும் ஏராளமான நூல்கள் தேவை. ஓர் அறிவியக்கமாகவே அது நிகழவேண்டும்.
அதற்குத் தடையாக உள்ளது என்ன? பாருங்கள், குடவாயில் பாலசுப்ரமணியம் போன்ற ஒரு பேரறிஞர் இங்குள்ளார். அவரை செவிகொள்ள ஆளில்லை. ஆனால் யூடியூபில் உளறுபவர்களுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள். வெண்டி டேனிகர் பெறும் இடம் குடவாயில் பாலசுப்ரமணியத்துக்கு ஏன் இல்லை? ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் பெறும் இடம் அ.கா.பெருமாளுக்கு ஏன் இல்லை?
அங்குதான் நம் அறிவுவறுமை உள்ளது. அதைச்சுட்டிக்காட்டவே நான் எழுதுகிறேன். அப்படி ஓர் அறிவு வறுமை நமக்குள்ளது என நாம் உணர்ந்த பின்னரே நம் கல்வி ஆரம்பிக்கமுடியும்.
நீங்கள் சொல்லும்படி எழுதலாம்தான்.
ஜெ
***