இணைய இதழ்கள், இனியான அறிவுச்சூழல்

பா.ராகவன் (மெட்ராஸ் பேப்பர்)

அன்புள்ள ஜெ

மெட்ராஸ் பேப்பர் , கிழக்கு டுடே பத்திரிகைகள் பற்றி எழுதியிருந்தீர்கள். இன்று ஏராளமான இணைய இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றில் ஏராளமான கட்டுரைகள் கதைகள் வெளியாகின்றன. முன்பு அச்சுப்பத்திரிகை என்றால் ஒரு பக்க எல்லை வரையறை இருந்தது. ஆகவே இஷ்டத்துக்கு விஷயங்கள் கிடையாது. எல்லாவற்றையும் படித்தாலும் ஞாபகம் நின்றது. இன்றைக்கு இணையம் என்பதனால் பக்க அளவே இல்லை. இவ்வளவு படிக்கவேண்டிய விஷயங்கள் வந்துகொட்டினால் எதை படிப்பது? வல்லினம், அருஞ்சொல், அகழ், மயிர், தமிழினி, கனலி, ஓலைச்சுவடி என்று பல இணைய இதழ்கள். நான் வாசிப்பவை மறந்துவிடுகின்றன. ஆகவே இதைக் கேட்கிறேன். இந்த இதழ்களில் எதிர்வினைகளை போடுவதில்லை. மட்டுறுத்தப்பட்ட எதிர்வினைகளை போடுகிறார்கள். இந்த சூழல் சரியா என்று தெரியவில்லை.

சபரிகிருஷ்ணா

சமஸ், அருஞ்சொல்

அன்புள்ள சபரி கிருஷ்ணா,

இதையே ஒரு பைசா செலவில்லாமல் இவ்வளவு படிக்கக் கிடைக்கிறது, ஒரு கைபேசியில் எங்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று யோசித்தால் எவ்வளவு பெரிய கொடை இது என்று நினைக்கத் தோன்றும். உலக அறிவு நம் கைக்கு வருகிறது. அதற்கு நாம் எல்லை வகுக்கவேண்டுமா? இன்றைய உலகம் அறிவுக்கொந்தளிப்பு கொண்டது. நாம் மிகமிகப் பின்தங்கியிருக்கிறோம். நமக்கு இன்னும் இன்னும் இதழ்கள் தேவை. சொல்லப்போனால் இவ்விதழ்களை கல்லூரிகளில் என்று மாணவர்கள் படிக்கிறார்களோ அன்றுதான் நாம் உண்மையான அறிவியக்கம் நோக்கிச் செல்கிறோம்

நீங்கள் என்னைவிட ஒன்றும் ’பிசியானவர்’ அல்ல என நினைக்கிறேன். தமிழிலேயே அதிகமான சினிமாக்களுக்கு ஒரே சமயம் பணியாற்றுபவன் நான். ஒரு கலைக்களஞ்சியத்தையே தயாரிக்கிறேன். ஒவ்வொரு நாளும் இணையத்தில் எழுதுகிறேன், வாரம் இரண்டு நூல்களாவது படிக்கிறேன், கேரள வரலாறு சார்ந்த ஆய்வுக்குழுக்களில் விவாதிக்கிறேன்…. இதைத்தவிர பயணங்கள்,சொற்பொழிவுகள்…. ஆனால் நான் பெரும்பாலும் எல்லா இணையதளங்களையும் படிக்கிறேன். எனக்கு நேரமிருக்கிறது.

கோகுல் பிரசாத், தமிழ்னி

எப்படி? சில நெறிகளை கவனியுங்கள். அது முக்கியம். எந்த இதழிலும் எல்லா பக்கங்களும் நமக்குரியவை அல்ல. இது ஒரு சூப்பர் மார்க்கெட். நமக்கு தேவையானவற்றை மட்டும் படிக்கலாம். எந்த கட்டுரையையும் அது எதைப்பற்றியது என்று ஓரிரு பத்தி படித்து பார்த்துவிட்டு மேலே படிக்கவோ படிக்காமலிருக்கவோ செய்யலாம். நான் பொதுவாக நீண்ட அரசியல் அலசல்கள், பொருளியல் அலசல்கள், அரசியல்வாதிகளின் பேட்டிகளை கவனிப்பதில்லை. சினிமா விமர்சனங்களை ஒரு வரிகூட படிக்க மாட்டேன். சூப்பர் மார்க்கெட்டில் விதவிதமான ஆயத்த உணவுகள் குவிந்துகிடக்கும். இன்றுவரை எதையும் வாங்கியதே இல்லை.

எனக்குரியவை இலக்கியம், தத்துவம், வரலாறு போன்றவை. அவற்றை படிப்பேன். இன்றைய அறிவுச்சூழலில் ஒருவர் தன் களம் என்ன என்பதை முடிவுசெய்தாகவேண்டும். உலகிலுள்ள எல்லாவற்றிலும் ஈடுபடுவேன் என்பது எதையும் செய்யாமல் இருப்பதற்குச் சமம். எங்களூரில் ‘நாய் சந்தைக்கு போனதுபோல’ என்பார்கள். எல்லாவற்றையும் மோந்துபாத்து ஆங்காங்கே இரண்டு துளி சொட்டி கமெண்ட் போட்டு திரும்புதல்.

படிப்பவை மறந்துவிடும் என்பது ஒரு சிக்கல்தான். ஆனால் ஒரு வலைப்பூ தொடங்குங்கள். படித்து உள்வாங்கிய எதைப்பற்றியும் ஒரு பத்தியாவது எழுதி வையுங்கள். நான் என் கணிப்பொறி கோப்பில் வைத்திருப்பேன். பின்னர் தேவைப்படும். அல்லது சொல்லி பதிவுசெய்து எங்காவது சேமியுங்கள். இப்போதெல்லாம் நடை செல்லும்போது படித்தவற்றை நான் பேசிப் பதிவுசெய்கிறேன். எதைப்பற்றியானாலும் நீங்களே சொந்தமாக எதையாவது எழுதவோ, சொல்லவோ செய்துவிட்டால் அது உங்களுடைய சிந்தனை. அது மறக்காது.

விக்னேஷ்வரன் கனலி

சிந்தனை என்பது நினைவுகளின்மேல் கட்டப்படுவது. தரவுகள், கருத்துக்கள் நினைவில் இருந்தால்தான் அவற்றைக்கொண்டு மேலே சிந்திக்கமுடியும். ஆகவே நினைவு மிக முக்கியமானது. அதற்கு அவற்றை நம்முள் நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு மிகச்சிறந்த வழி இதுவே.

ஒரு முக்கியமான விஷயம். ஒரு கட்டுரை படிக்கிறீர்கள். அக்கட்டுரை பற்றி அந்த இதழின் ஆசிரியரால் அளிக்கப்படாத எந்த எதிர்வினையையும் படிக்காதீர்கள். நம் வம்புமனம் அந்த கட்டுரைமேல் செய்யப்படும் விவாதங்கள், கருத்துரைகளை நோக்கி நம்மை இழுக்கும். ஆனால் அவை அக்கட்டுரையை நாம் புரிந்துகொண்டிருக்கும் விதத்தை சிதறடித்துவிடும். ஏனென்றால் இங்கே நிகழும் விவாதங்களில் பெரும்பாலானவை குதர்க்கங்கள், திரிப்புகள், உள்நோக்கம் கொண்ட திசைதிருப்பல்கள் மற்றும் வசைகள்.

சரி, எதிர்வினைகள் மட்டுறுத்தப்பட்டால் எப்படி கருத்து சொல்வது? அந்த இதழின் தரத்துக்கு ஏற்ப நீங்கள் ஏன் எதிர்வினை ஆற்றக்கூடாது? எல்லா இடத்திலும் நம்முடைய இரண்டு சொட்டு உதிர்ந்தாகவேண்டுமா என்ன? எதிர்வினைகளை குறைந்தபட்சம் ஓர் ஆசிரியருக்கு  மதிப்பு தோன்றும்படி நம்மால் எழுத முடியவில்லை என்றால் நாம் எவரை பாதிக்கப்போகிறோம்? சுவாரசியமாக, செய்திகளுடன், சமநிலையுடன் எதிர்வினை ஆற்றிப் பழகலாமே. அது நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்வதல்லவா? அப்படி ஓர் இதழ் எதிர்வினைகளை நிராகரிக்குமென்றால் அதுவே நமக்கு ஒரு சவாலாக ஏன் ஆகக்கூடாது?

அனோஜன், அகழ்

நீங்கள் ஒவ்வொரு நாளும் பத்து கட்டுரை படிக்கிறீர்கள். அவற்றுக்குமேல் நிகழும் விவாதங்களையும் கவனிக்கிறீர்கள். இப்படியே ஓராண்டில் முந்நூறு கட்டுரைகளை வெவ்வேறு களங்களில் படித்துவிட்டீர்கள். என்ன மிஞ்சும்? நான் சொல்கிறேன், ஒன்றுமே மிஞ்சாது. ஏன்? கட்டுரை ஒரு கோலம். அதற்கொரு கட்டமைப்பு உள்ளது. அதன்மீதான தாறுமாறான விவாதம் கோலத்தை காலால் அழித்துவிடுவதுபோல. அதன்மேல் அடுத்த கோலம். முந்நூறாவது கோலமும் அழிந்து வெறும் கோலப்பொடி கலங்களே உங்களுக்குள் எஞ்சும்.

எல்லாரும் எங்கும் எதையும் பேசுவதை ‘ஜனநாயகம்’ என அபத்தமாகச் சிலர் புரிந்து வைத்திருப்பதுண்டு. ஒன்றை பற்றி படித்தவன் அதைப்பற்றி படிக்காதவனிடம் விவாதிப்பதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல, அது கோமாளித்தனம். நான் ஒருவரிடம் எதையாவது விவாதிப்பேன் என்றால் அவர் எனக்கு எதையாவது புதிதாகக் கற்பிக்கவேண்டும். இல்லை என்றால் அவர் என் உலகிலேயே இல்லை.

நவீன், வல்லினம்

உதாரணமாக, மெட்ராஸ் பேப்பர் இதழில் அதன் ஆசிரியர் பா.ராகவன் பரிந்துரை செய்யாத எதையும் படிக்கவேண்டாம். வெளியாகும் எல்லா படைப்பும் அவர் பிரசுரத்திற்கு உகந்தவை என பரிந்துரை செய்பவையே.  அவ்வாறு ஆசிரியரால் அளிக்கப்படாத தன்னிச்சையான சர்ச்சைகளைக் கவனிப்பதைப்போல அறிவுநேர விரயம் வேறில்லை. மெட்ராஸ் பேப்பர் பா.ராகவன் வழியாக நிகழும் உரையாடல். அது சரியாக இல்லை என்றால் அவரிடம் கேளுங்கள். அவர் தொடர்ந்து சரியாகச் செயல்படவில்லை என்று தோன்றினால் விலகிச் செல்லலாம்.

அப்படி ஓர் ஆசிரியர் ஓர் இதழுக்குத் தேவை. அவர் வழியாக நடக்கவில்லை என்றால் அது அறிவுச்செயல்பாடு அல்ல. தமிழின் இன்றைய முக்கியமான இணைய இதழ்களின் தனித்தன்மை என்பது அவற்றுக்குப் பின்னாலிருக்கும் ஆசிரியரின் பிரக்ஞைதான். தமிழினி (கோகுல் பிரசாத்) அகழ் (அனோஜன் பாலகிருஷ்ணன், சயந்தன், சுரேஷ்பிரதீப்) கனலி (க.விக்னேஷ்வரன்) மயிர் (ராயகிரி சங்கர்) ஓலைச்சுவடி (கி.ச.திலீபன்) வல்லினம் (ம.நவீன்) ஆகிய இதழ்களின் தகுதி அந்த ஆசிரியரைச் சார்ந்ததே.

கி.ச.திலீபன், ஓலைச்சுவடி

மெட்ராஸ் பேப்பர், அருஞ்சொல் போன்றவை பல்சுவை இதழ்கள். ஆகவே இன்னும் விரிவான ஆசிரிய இருப்பு தேவை. அதில் அரசியல், பொருளியல் என பலவகையான கட்டுரைகள் வருகின்றன. அனைத்தின் மீதும் ஆசிரியரின் கட்டுப்பாடு தேவை. பா.ராகவன், சமஸ் இருவருமே இதழியலில் நீண்ட அனுபவம் உடையவர்கள். அவர்களின் அனுபவம் சமநிலையாகவும். தொகுப்புப் பிரக்ஞையாகவும் அதில் செயல்படவேண்டும்,

அந்த ஆசிரியருக்கு ஆசிரியர்கொள்கை இருக்கவேண்டும்.  அவர் ஏன் ஒன்றை பிரசுரித்தார் என அவர் சொல்ல முடியவேண்டும். அவர் ஓர் அறிவு வட்டத்தை உருவாக்கவேண்டும். அதுதான் ஓர் இதழ்.சுருங்கச் சொன்னால் அதில் ஒரு கட்டுரை வெளிவருவது ‘தன்னிச்சையாக’ இருக்கக்கூடாது. அதில் ஒரு ‘நிராகரிப்புக் கொள்கை’ இருந்தாகவேண்டும்

ராயகிரி சங்கர், மயிர்

அவ்வாறன்றி உலகிலுள்ள எல்லாரும் வரலாம், என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம், எங்குவேண்டுமென்றாலும் கொண்டுசெல்லலாம் என்றால் அதன்பெயர்தான் ‘அரங்கின்றி வட்டாடல்’ நான் ஒருபோதும் ஆசிரியர் இல்லா அறிவுக்களத்தில் பதினைந்து நிமிடம்கூட செலவிட மாட்டேன். அந்த தன்னொழுக்கத்தால்தான் இத்தனை பணியாற்ற முடிகிறது.

சமூகவலைத்தளத்தின் கட்டின்மை பிரம்மாண்டமான வீணடிப்பாகவே எஞ்சும் என்பதை கண்டுவிட்டோம். இனி இந்த ஆசிரிய ஆளுமைகளை நம்பி. அவர்கள் உருவாக்கும் அறிவு வட்டத்திற்குள் செயல்பட முடிவுசெய்வோம். அதுவே பயனுள்ளது.

ஜெ

மெட்ராஸ் பேப்பர்

கிழக்கு டுடே

வல்லினம்

தமிழினி

அருஞ்சொல்

கனலி

அகழ்

ஓலைச்சுவடி

மயிர்

முந்தைய கட்டுரைஎம்.எஸ்.கமலா, மறதி எனும் அரசியல்
அடுத்த கட்டுரைகளிற்றியானை நிரை – செம்பதிப்பு – முன்பதிவு