இன்று மாலை ஐந்தரை மணிக்கு நேராக இந்தியா திரும்புகிறேன்.. ஒருவழியாக போராடி, அபராதம் செலுத்தி, நேராக இந்தியா செல்லும் பயணச்சீட்டு எடுத்தேன். ஐரோப்பா பயணம் ரத்து செய்யப்பட்டது. 20 அன்று இரவு 12 மணிக்கு சென்னையில் இருப்பேன். ஐரோப்பாவில் வரவேற்கவிருந்த நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தேன். இன்னொரு முறை ஐரோப்பா செல்லலாமென திட்டம்.இருநாட்களில் இந்த சிக்கல்களினூடாக பயணமும் செய்துகொண்டிருந்தேன்.. அருண்மொழி ஐமாக்ஸ் அரங்கை பார்த்ததில்லை. அருகே உள்ள ஐமாக்ஸ் திரையரங்கில் முப்பரிமாண படமாக ‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் ‘ படத்தின் நான்காம் பாகத்தை பார்த்தோம். குழந்தைகளுக்கான சினிமா. அந்த மாபெரும் கப்பல் நம் அருகே, நாம் தொட்டுவிடும் தூரத்தில், சிறகடித்தெழுவது ஒரு நல்ல அனுபவம்.
அருகே உள்ள நவீனக்கலை காட்சியகத்திற்குச் சென்றேன். கனடாவின் புகழ்பெற்ற எழுவர்குழுவைச் சேர்ந்த ஓவியர்களான ஏ.ஒய்.ஜாக்சன், டாம் தாம்சன் ஆகியோரின் ஓவியங்களின் அசல்களை பார்த்தது கனடாவை கனவில் பார்த்த அனுபவத்தை அளித்தது. கனடாவின் தனித்தன்மையை உருவாக்கிய ஓவியரான எமிலி காரின் இருண்ட துயரம் மிக்க நிலக்காட்சிகள் கனடாவை மிக ஆழத்திற்குச் சென்று பார்த்ததுபோல் உணரச்செய்தது
18 அன்று மாலை இயல் விருது வழங்கும் விழா. கனடா ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஒரு கௌரவம் மிக்க விழாவாக இது அமைந்திருப்பதும், இளம்தலைமுறையினர் அதில் கலந்துகொள்வதும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அ.முத்துலிங்கம் எழுத்தின் வழியாக புகழ் பெற்ற அவரது பேத்தி அப்சராவை சந்தித்தேன். சிறுமியர்களின் கண்களுக்கே உரிய பிரமிப்பு கலந்த அவதானிப்புடன் அவளை பார்க்க உற்சாகமாக இருந்தது. அ.முத்துலிங்கம் பேசுவார் என எதிர்பார்த்தேன். பேசவில்லை.
இவ்வருடத்தைய இயல் விருது ஈழ எழுத்தின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.பொன்னுத்துரைக்கு வழங்கப்பட்டது. புனைகதைப்பிரிவில் பொ.கருணாகரமூர்த்தி [பதுங்கு குழி, சிறுகதை] சு.வெங்கடேசன் [ காவல்கோட்டம், நாவல்] ஆகியோருக்கு இலக்கியத்தோட்டம் விருதுகள் அளிக்கப்பட்டன. அபுனைவு எழுத்தில் சச்சிதானந்தம் சுகிர்தராஜா [பண்பாட்டுபொற்கனிகள்] சு.தியடோர் பாச்கரன் [இன்னும் பிறக்காத தலைமுறைக்காக] ஆகியோருக்கு. கவிதைக்காக மனுஷ்யபுத்திரன் [அதீதத்தின் ருசி] திருமாவலவன் [இருள்யாழி] ஆகியோருக்கு. கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது முத்து நெடுமாறன். கனடாவில் தமிழியல் ஆய்வு செய்தமைக்காக சேரதி ராமச்சந்திரன்.
விருது பெற்றவர்களை நான் பாராட்டி 15 நிமிடம் பேசினேன். சுமாராகத்தான் பேசினேன் என்று சொல்லவேண்டும். உரையில் இலக்கியத்தோட்டம் விருது பெற்றவர்களை பாராட்ட கடைசியாக முடிவெடுத்தேன். ஆகவே எஸ்.பொ பற்றி உருவாக்கியிருந்த உரையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கமுடியுமா என்ற எண்ணம் வந்து சில பகுதிகளை விழுங்க நேர்ந்தது. அப்படி உரைக்கு வெளியே எண்ணம் கலைந்தாலே என் உரை கொஞ்சம் உத்வேகமிழக்கும்.
இரவு என்.கெ.மகாலிங்கம் [சிதைவுகள்] புஷ்பராஜன் [கவிஞர்] சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆகியோருடன் என் கெ மகாலிங்கம் வீடு சென்று கொஞ்சம் பேசிக்கொண்டிருந்துவிட்டு உடனே திரும்பினேன். இன்று பின்மாலை கிளம்புகிறேன்.
இந்த கனடா பயணத்தின் சிறப்பே அருண்மொழிக்கு கனடாவை காட்டியதுதான். நயகாரா அவளுக்கு பேரனுபவமாக இருந்தது. ஆயிரம் தீவுகளை பார்த்ததையும் ஒரு வாழ்நாள் அனுபவமாகச் சொன்னாள். எனக்கும் மிகுந்த மனநிறைவூட்டும் அனுபவம். அதைவிட பத்துவருட இடைவெளிக்குப்பின் நண்பர்களைச் சந்திப்பது இன்னும் நிறைவூட்டும் அனுபவமாக இருந்தது
அ.முத்துலிங்கம் அவர்களை ஒருமுறை இந்தியா வரும்படி அழைத்தேன். இங்கே அவருக்கு கடந்த சில ஆண்டுகளில் உருவாகியிருக்கும் விரிவான வாசகர்குழாம் பற்றி அவருக்கு தெரியாது. அவரது வருகையை ஒரு விழாவாக எண்ணும் நண்பர்கள் இருப்பதை அவரிடம் சொன்னேன்.