வணக்கம் ஜெ
கடந்த ஒரு மாதமாக எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் ‘மெட்ராஸ் பேப்பர்’ இணைய இதழும், சமீபத்தில் கிழக்கு பதிப்பகத்தின் ‘கிழக்கு டுடே’ இதழும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. கவனித்து வருகிறீர்களா ?
விவேக் ராஜ்
https://www.youtube.com/channel/UCUa6gmXOzNEefCGnNvU0klA
அன்புள்ள விவேக்ராஜ்
பார்த்தேன் இரண்டுமே மிகச்சிறப்பான வடிவமைப்புடன் வெளிவருகின்றன. தி ஹிந்து போன்ற ஒரு மரபார்ந்த ஆங்கில இதழின் தோற்றம் மெட்ராஸ் பேப்பருக்கு உள்ளது. ஓர் வலைத்தளம் மட்டுமாக இல்லாமல் இதழாகவே தயாரிக்கப்படுவது தெரிகிறது.இரண்டு இதழ்களுமே இலக்கியம், அரசியல், தொழில்நுட்பம் என மூன்று களங்களிலும் நேர்த்தியான செயல்பாடு கொண்டுள்ளன.
ஆசிரியர் என நமக்கு ஆசிரியர் என ஒருவர் பின்னால் இருந்து செயல்படும் இணைய இதழ்களை நோக்கி வாசிப்பை குவிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. முகநூல் போன்றவற்றின் கட்டற்ற பிரசுரவெளியில் எதை கவனிப்பதென்றே தெரியாத நிலை உள்ளது. வெறும் வம்பர்களையே ஒருவர் நாள் முழுக்க கவனிப்பாரென்றால் அவர் தன் வாழ்க்கையை இருட்டாக்கிக் கொள்கிறார்
பொதுவாக இன்று நம்மில் பலர் முகநூல் வாசிப்பில் மிகுதியான நேரத்தைச் செலவிடுகிறார்கள். நம்மைப்போன்றே ஒருவர் எழுதுகிறார், நாம் அவருக்கு பதில் எழுதலாம் என்பதனால் நமக்கு ஓர் ஆர்வம் உருவாகிறது. ஆனால் இணைய அரட்டை என்பது இந்தக் காலத்தில் பாலுறவுப்படம், ரம்மி ஆட்டம் போல இணையம் வழியாக நம்மை ஆட்கொள்ளும் ஒரு போதை. நாம் அதற்குள் சென்று செலவழிக்கும் பொழுது மட்டும் வீணாவதில்லை. எதையாவது தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் மூடுகின்றன.அது சாதாரண இழப்பு அல்ல
ஒருவர் விட்ட மூச்சை இன்னொருவர் இழுக்கும் சமூக வலைத்தளச் சூழலில் மிக விரைவில் நம் உள்ளம், சிந்தனை, மொழி எல்லாமே குறுகிவிடுகிறது. சற்று விலகி நின்று நாம் சென்ற ஓராண்டில் எதைப்பற்றி பேசியிருக்கிறோம். எதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறோம் என்று பார்த்தாலே தெரியும். முகநூலில் மூன்றுநாட்களுக்கு ஒருமுறை உருவாகும் வம்புகளிலேயே உழன்றிருப்பதை காண்போம்.
இணைய இதழ்கள் நமக்கு வாசிப்பின் பழைய பொற்காலத்தை அனேகமாக இலவசமாக அளிக்கின்றன. இவை மிகப்பெரிய வாய்ப்புகள்.
ஜெ