போகன் கவிதைகள்-தேவி

அன்புள்ள ஆசிரியர்க்கு

சென்ற வருட விஷ்ணு புரம் விருது கவிஞர். விக்ரமாதித்யனுக்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து துவங்கியது கவிதைகளுடான பயணம். சில காலம் கவிஞர். இசையின் கவிதைகளிலேயே இரவும் பகலும் கழிந்தது இனிமையான நாட்கள். குமரகுருபரன் விருது விழா கவிதைக்கான ஒரு முழுநாள் கொண்டாட்டமாக அமைந்தது.

இப்போது திரு. போகன் சங்கர் அவர்களின் கவிதைகளை அவருடைய முகநூல் பக்கத்தில் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். எல்லோருக்குமே இனிமையான கசப்பான துயர்மிக்க வெறுமை கொண்ட நாட்கள் வரும் ஆனால் என்ன செய்வது என்றே தெரியாத நாட்கள் மிகச் சுமையானது காலையில் விழித்து எழும்போது புத்தம் புதிதாக அன்றைய நாள் என் முன் நிற்கும் அழகிய சின்னஞ்சிறு மலரை சமயங்களில் கைகளால் ஏந்த முடியாமல் போகும் அல்லவா அதுபோல தாங்கமுடியாதாக அன்றைய நாள் இருக்கும். போ..போ..என்று விரட்டினாலும் எவ்வளவு செலவளித்தாலும் தீராமல் நின்று கொண்டு இருக்கும் கவிஞர்க்கும் அப்படியான ஒருநாள் வாய்த்து விடுகிறது ஆனால் அவர் கவிஞர் இல்லையா எப்படி சமாளிக்கிறார் தெரியுமா? அதன் கையில் ஒரு சாட்டையை கொடுத்து தெருவுக்கு விரட்டி விடுகிறார் அது தன்னை தானே அடித்துக்கொண்டு குருதிச் சொட்ட பதினேழு ரூபாயும் சம்பாதித்து விடுகிறது திரும்பி வர விரும்பும் அதை தடுத்து அங்கேயே அலைய விடுகிறார்..

இந்த நாளை எப்படியோ
உபயோகமுள்ளதாய்
மாற்றிக்கொண்டுவிட்டேன்.
காலையிலேயே எழுப்பி
அதன் கையில்
ஒரு சாட்டையைக் கொடுத்து
தெருவுக்குள் துரத்திவிட்டேன்.
சற்றுமுன்பு கிடைத்த
குறுஞ்செய்தியின் மூலமாக
அது இதுவரை
பதினேழு ரூபாய்
ரத்தம் சிந்திச் சம்பாதித்திருக்கிறது.
போதும் போ
என்று காவலர்கள்
விரட்டுகிறார்களாம்.
நான் கண்டிப்பாக சொன்னேன்.
நீ மயங்கி விழும்வரை
நிச்சயமாக
நீ திரும்பி வரக்கூடாது.

இதை வாசித்து முடிக்கும் போது ஒரு குரூர திருப்தி வந்து போனது. நன்றாக வேண்டும் உனக்கு என்று எண்ணிக்கொண்டேன்.

உடைப்பட்ட ஒரு உறவில் மீண்டும் இணைந்து இருக்கிறேன் மிக அதிகமாக கவனத்துடன் இருக்கிறேன் முன்பு பிளவை ஏற்படுத்திய இடத்தை அசட்டையாக கவனிப்பது போல் மிக சிரத்தையாக உற்றுநோக்குகிறேன் உறவு என்பதே பிரிவையும் உள்ளடக்கியது தான் போல. எதைக் கொண்டு பூசினாலும் விரிசல் விட்ட இடத்திலேயே பிளவு ஏற்படுகிறதே எப்படி? ஆழ்மனம் எதிர்பார்ப்பதினாலா..தெரியவில்லை.  சில நாட்களுக்கு முன் வாசித்த இக்கவிதை பொருத்தமான ஒன்று..

கொஞ்ச காலம்
உடைந்து போய்விட்டுத்
திரும்ப ஒட்டிக்கொள்ளலாம்
என்று தோன்றுகிறது.
திரும்ப ஒட்டிக்கொள்ள முடியாமல் போய்விட்டாலோ?
என்றாள் அவள்.
ஒட்டிக்கொண்டாலும்
உடைந்ததில் எப்போதும்
உடைந்ததின் கோடுகள் இருக்கும்.
அதே கோடுகளில் உடையத் துடிக்கும்
என்றாள்.”

வாழ்க்கை சில கோமாளி தருணங்களை உருவாக்கும் எதிரியின் முன் வீழ்த்தப்பட்டவனாக நிற்பதில் கூட இழிவில்லை பேரன்பின் பெருநம்பிக்கையின் முன் கோமாளியாக தொப்பி..தொப்பி..என்று நிற்க வாய்த்தவர்கள் துரதிருஷ்டசாலிகள். சதுரங்க ஆட்டத்தில் ஆடும் இருவரை தவிர மூன்றாவதாக ஒரு கை உண்டு என்று வெண்முரசில் வரும். ஒரு அரங்கினுள் மிடுக்காக கதாநாயகன் போல் நுழையும் ஒருவர் எங்கோ ஒரு கணத்தில் தன்னை கோமாளியாக உணரும் நேரம் துயர்மிக்கது எந்த கரம் அவரை கோமாளி ஆக்கியது? அந்த மாயக்கரம் யாருடையது? எங்கிருந்து எழுகிறது?

நான் மதிப்புடன்
வாழ விரும்பிய இடத்தில் எல்லாம்
எனக்கு ஒரு சிகப்பு மூக்கும்
கூம்புத் தொப்பியும்
பொருத்தமில்லாத காற்சட்டைகளும்
கொடுத்துக் கொடுத்து
ஒரு நகைப்புப் பொருளாய்
நிற்க வைக்கும்
மாயக் கை எது?”

நான் கவிதைகளை என் சொந்த அனுபவங்கள் கொண்டே புரிந்துக் கொள்கிறேன் மேலும் அவ்வனுபங்களை கவிதைகளைக் கொண்டு அறிதல்களாக மாற்றிக் கொள்ள முயல்கிறேன். கடுமையான அக நெருக்கடியில் இருந்த காலத்தில் தூக்கமின்மை பெரிய வதையாக இருந்தது பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசமில்லை பிறகு எவ்வற்றுக்குமே ஒத்திசைவு இல்லாமல் போயிற்று. தூக்கமின்மைக்கு ஆலோசனையும் மருந்துகளும் வழங்கபட்டது. மாத்திரைகள் ஒரு தற்காலிக தீர்வு தான் ஆரம்பத்தில் நமக்கு சேவகனாக இருக்கும் பின்னாட்களில் உரிமையாளராக உருமாறி விடும் சில உறவுகளை போல. அவற்றின் தாக்கம் நாமறியாதது.

தூக்க மாத்திரைகளின்
நேர்மையும்
காலத் தேய்மானத்துக்குட்பட்டதே
என்றாள் அவள்.
ஐந்து மில்லிகிராம்
கொஞ்ச காலத்துக்குப் பிறகு
பத்து மில்லிகிராமாகச்
சம்பளத்தை உயர்த்திக் கேட்கும்.
பிறகு இருபதாக.
The law of diminishing returns
எல்லா விஷயத்துக்கும்
பொருந்தக் கூடியதேஎன்றாள்.
ஒரு எளிய அன்பைப் பெற
சிறிய புன்னகையைப் பெற
நீ செய்ய வேண்டிய காரியங்கள்
புரியவேண்டிய தியாகங்களின்
எண்ணிக்கை
கூடிக்கொண்டே  போகும்.
ஒரு நாள்
அவற்றின் சுமை தாங்காது
உன் அச்சு முறிந்து
நீ உடைந்து போவாய்

உண்மையில் கவிஞன் என்பவன் யார்? கவிதைக்காரனை எங்கு வைப்பது? தன் யோகத்தின் மூலம் கிடைக்கப் பெற்றதை மனங்கனிந்து அனைவருக்குமாக அளிப்பவன். வாழ்வின் மிக சாதாரண கணங்கள் மீது பொன்னொளி பாய்ச்சுபவன். அக இருளில் இருந்து அந்த குகையில் இருந்து ஒளி பாய்ந்தோடும் உலகிற்கு நம்மை வீசி செல்பவன் அதற்காகவே பாழ் இருளில் அவனுடைய கால்களை புதைத்து வைத்து இருப்பவன். அவன் கவிதைகளின் முன் பாய்ந்து ஓடும் ஒளி அவனையும் காத்து அருளட்டும். அந்த ஒளி அவர்களை பரிதவிக்கவிடாததாக.

கண்ணுக்குத் தெரியாத
ஒரு உருவம்
உன் முன்
ஒளியை வீசிச் செல்வதை
உனது ஒவ்வொரு
நல்ல கவிதையிலும்
நான் உணர்கிறேன்.
நீ உணரவில்லையா?”
என்று அவள் கேட்டாள்.
நான் பரிதவித்துப் போனேன்.
என் வழியே
புலரும் ஒளி
என்னை ஏன்
வெளிச்சமாக்குவதில்லை?

போகன் சங்கர் அவர்களுக்கு என் வணக்கங்கள்.

மிக்க அன்புடன்

தேவி.  க

ஆவடி

முந்தைய கட்டுரைவெண்முரசு வாசிப்பு
அடுத்த கட்டுரைசுவாமி ராமதாசர் -அறியப்படாத பெருவாழ்க்கை