பயணச்சிக்கல்கள்

நேற்று மதியம் வரை வீட்டில் இருந்தோம். என் பயணச்சீட்டில் ஒரு சிக்கல். நான் கனடா வருவதை உறுதிப்படுத்தியதும் அப்படியே ஐரோப்பாவுக்கும் செல்லலாமே என்ற எண்ணம் எழுந்தது. பயணச்சீட்டில் அதிக வேறுபாடு இல்லை என்பதே இப்படி பயணத்தை நீட்டிக்கக் காரணம். அதைப் பயணமுகவரிடம் சொன்னேன்.

என் பயண முகவர் சென்னையைச்சேர்ந்த BTGT SERVICES என்ற நிறுவனம். தியாகராஜன் என்பவர் நடத்துகிறார். அடையாறு இந்திரா நகரில் இருக்கிறது. அவர்கள் மிகுந்த நம்பிக்கையூட்டி எல்லாப்  பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்கள். கனடா விசா கிடைத்ததும் ஐரோப்பிய விசாவுக்கு பிரான்ஸ் வழியாக ஏற்பாடு செய்யலாம் என்றும் ஒருவாரத்தில் கிடைத்துவிடும் என்றும் திரும்பத்திரும்பச் சொன்னார்கள். ஆகவே ஒருமாதம் அவகாசம் இருந்தும் நிதானமாகவே இருந்தேன்.

மூன்றுவராம் முன்னதாகத் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ’விசா கிடைக்க ஒருமாதம் ஆகும் என்கிறார்கள். அதற்குள் நீங்கள் கனடா செல்லும் தேதி வந்துவிடும்’ என்றார்கள். ’முன்னர் அப்படி சொன்னீர்களே’ என்று கேட்டபோது ‘அப்போது எங்களுக்கு தெரியாது. இப்போதுதான் தெரியும்’ என்று பதில் சொன்னார்கள். பின்னர் விசாரித்துவிட்டு ஜெர்மனி வழியாக விசா வாங்கலாமென்று அவர்களே சொன்னார்கள்

ஜெர்மனி வழியாக எட்டுநாள் ஐரோப்பா விசா வாங்க அவர்கள் சொன்ன ஆவணங்களில் அங்கே மூன்றுநாட்கள் ஓட்டல் அறைப்பதிவு முக்கியமானது. இணையம் வழியாக பிராங்க்பர்ட்டில் அறைப்பதிவுசெய்தோம். ஜெர்மனிய கான்சுலேட்டில் நேர்காணலுக்கு சென்றோம். அவர்கள் அங்கே 3 நாட்கள்தானே செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். இல்லை அங்கிருந்து பாரிஸ் செல்வோம் என்றேன். சரி பாரீசில் தங்குமிடம் பற்றிய தகவல்கள் எங்கே என்றார்கள். அதைப்  பயணமுகவர் சொல்லவில்லையே என்றேன். அந்த ஜெர்மனிய கான்சுலேட்டில் இருந்த தமிழ்ப்பெண் மிக முரட்டுத்தனமாகவும் மரியாதையே இல்லாமலும் பேசினாள். என் ஆவணங்களை என் முன் தூக்கி வீசினாள். மேலே ஒன்றும் சொல்லாமல் பேட்டியை முடித்தார்கள்

இதன் நடுவே பயணமுகவர்கள் என்னைக் கூப்பிட்டு உடனடியாகப்  பயணச்சீட்டுப் போடவேண்டும் என வற்புறுத்தி நான் பிராங்க்பர்ட்டில் ஜூன் 20 ஆம் தேதி இறங்கி 28 ஆம் தேதி சென்னைக்குத் திரும்ப விமானம் ஏறும்படியாக பயணச்சீட்டு போட்டார்கள். பூட்டானில் பயணம் செய்து கொண்டிருந்த என்னிடம் தொலைபேசியில் பேசி அவசரப்படுத்திப் பணம் பெற்றுக்கொண்டார்கள். அது ரத்துசெய்ய , தேதி மாற்ற முடியாத பயணச்சீட்டு. விசா கிடைப்பது உறுதியாவதற்கு முன்னர் இப்படி ஒரு பயணச்சீட்டை எடுத்தது அப்பட்டமான மோசடி மட்டுமே.

எனக்கு ஐரோப்பிய விசா வந்தது – ஜூன் 19 முதல் 23 வரை. நான் விண்ணப்பித்தது, விடுதி பதிவுசெய்திருந்தது எல்லாமே 20 முதல். ஆக எனக்கிருந்தது வெறும் 3 நாட்கள். இதற்கு ஆன செலவு 20000 ரூபாய். திரும்பிவரும் தேதியை மாற்ற வேண்டும். உண்மையில் அதை மாற்றமுடியாது, காரணம் தள்ளுபடி விலையில் வாங்கப்பட்ட பயணச்சீட்டு அது. ஒரு சீட்டுக்கு 24000 ரூபாய் என்னிடம் அதிகம் பெற்றிருக்கிறார்கள் பயணச்சீட்டு முகவர்கள். தேதி மாற்றம் பற்றிக் கேட்டபோது தியாகராஜன் சென்னையில் மாற்ற முடியாது, கனடா சென்று கேட்டால் உடனே மாற்றிக்கொடுப்பார்கள், 200 டாலர் அதிகமாக ஆகும் என்றார். வேறு வழியே இல்லாமல் இங்கே வந்தேன்

இங்கே வந்து பயணச்சீட்டை மாற்ற லுஃப்தான்சா நிறுவனத்திடம் கேட்டால் அவர்கள் 1200 டாலர்- கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாய்- கூடுதலாகக் கேட்டார்கள். அதுவும் பிராங்க்பர்ட் செல்லமுடியாது. ஐரோப்பியப்பயணத்தை ரத்து செய்துவிட்டு நேராக இந்தியா திரும்புவதற்கான உபரிச் செலவு இது. கிட்டத்தட்டப் புதிய டிக்கெட்டின் விலை. ஆக ஒட்டுமொத்த நஷ்டம் ஏறத்தாழ ஒரு லட்சம். ஒரே சொல்லில் சொன்னால் அந்தப் பயணமுகவர்கள் செய்த வழிப்பறி என்றே இதைச்சொல்லவேண்டும். அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் லாபத்துக்காக என்னை லட்சரூபாய் நஷ்டம் அடையச்செய்துவிட்டார்கள்.

இங்கிருந்து கூப்பிட்டால் எல்லாத் தவறும் உங்களிடம், நீங்கள் பேசாமல் ஜெர்மனி சென்று இறங்கிவிட்டு என்னிடம் டிக்கெட் இல்லை என்று கைதூக்கிச் சொல்லுங்கள், அவர்களே எப்படியாவது அனுப்பி வைப்பார்கள் என்று ஆலோசனை சொன்னார் தியாகராஜன். தமிழகத்தின் சேவைமனநிலைக்கும் பொறுப்புக்கும் சிறந்த உதாரணம். எப்படியோ இந்த வகையான மனிதர்களை நம்பி நாம் வாழநேர்கிறது.

இன்னமும் என் பயணச்சீட்டு கைக்கு வரவில்லை. இப்போதைக்கு இந்த அறுபதாயிரம் ரூபாயை என்னுடைய விசா கார்டு மூலம் எடுத்துக்கொடுத்தாகவேண்டியதுதான் ஒரே வழி. அந்த விவாதங்கள் தொலைபேசி அழைப்புகள் பேச்சுகள்தான் நேற்று மதியம் வரை. ஒரு கட்டத்தில் சரி ஒரு லட்ச ரூபாய் என்னிடமிருந்து போவது தான் ஆகக்கடைசி இழப்பு, போகட்டும் என முடிவுசெய்து நிம்மதி அடைந்தேன்.

மாலை இங்கே உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திற்குச் சென்றேன். விண்வெளி அறிவியல் பற்றிய நல்ல காட்சிகள். கோளரங்கத்தின் சிறப்புக்காட்சி நன்றாக இருந்தது. செயற்கையானதாக இருந்தாலும் வானம் வானம்தானே?

இங்கே என்னை மிகக்கவர்ந்தது மானுடஇனங்களின் சமத்துவத்தை அறிவியல்பூர்வமாக நிறுவக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த பயிற்சிகளும் காட்சிகளும். கனடாவின் பல்லினத் தன்மைக்கு இது தேவையானதென நினைக்கிறார்கள். முன்முடிவுகளை இல்லாமலாக்க அவை உதவும் என்று திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள்.

இரவு இங்கே டாக்டர் ரகுராம் அவர்களின் வீட்டிற்குச் சென்றோம். இங்கே வந்து இந்தியத்தமிழ் சமூகத்தைச் சந்திப்பது இதுவே முதல்முறை. அவர்களுக்கு இலக்கியம் மேல் மதிப்பு ஆர்வம் ஏதும் இல்லை. நான் உட்பட எவரும் அறிமுகமும் இல்லை. விருந்தினர் என்ற வகையில் அன்பாக மரியாதையாக உபசரித்தார்கள். சுந்தர ராமசாமிகூட வந்திருக்கிறர் என்றார் ஒருவர், இல்லை அவர் இலந்தை ராமசாமி என்று இன்னொருவர் திருத்த ஓகோ அப்படி இன்னொருவர் இருக்கிறாரா என்றார் இவர்.

அங்கே என் நெடுநாள் நண்பரும் தமிழின் சிறந்த அறிவியல் கட்டுரைகளை எழுதியவருமான வெங்கடரமணனைப் பார்த்தேன். லேசர் அறிவியல் நிபுணர். ஆனால் பழந்தமிழ் இலக்கியத்தில் பயிற்சி கொண்டவர். அவரது கட்டுரைகள் தமிழ்நடைக்காகவும் முக்கியமானவை. அவரது முதல்நூல் தமிழினி வெளியீடாக வர நான் உதவியிருக்கிறேன். ஆனால் பணிச்சுமைகள் காரணமாக இப்போது எழுதுவதில்லை என்று சொன்னார்.

நள்ளிரவில் திரும்பிவந்தேன். தூங்கும்போது பயணச்சீட்டு எடுக்கவில்லையே என்ற எண்ணம். உடனே லோகி சம்பந்தப்பட்ட ஒரு நினைவு. லோகியும் நானும் எங்கோ சென்றுவிட்டுத் திரும்பும்போது நள்ளிரவில் ஆளே இல்லாத தென்னந்தோப்புக்குள் வழி தவறிவிட்டது. ஓட்டுநர் சுற்றிச்சுற்றி வந்தார். வழி கேட்க ஆளில்லை. ஓட்டுநரின் பதற்றத்தைக் கண்டு அரைப்போதையில் லோகி சொன்னார் ‘பதற்றப்படாதே சுதாகரா நாம் எப்படியானாலும் வீட்டுக்கு போகத்தான் போகிறோம்’

அதேதான். எப்படியானாலும் நாகர்கோயில் போகத்தான் போகிறேன், கனடாவிலேயே இருந்துவிடப்போவதில்லை. ஆகா, என்ன ஒரு ஆறுதல்.

முந்தைய கட்டுரைமுகிலன் மண்டபம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்