இரண்டு பாம்புகள்

போகனின் ஓர் அழகிய கவிதை. தியானத்தில் ஒளிரும் ஒரு கவலையை நாகம் இறக்கி வைத்த மணி என்று சொல்லும் உச்சத்தில் இருந்தே எழுந்து மேலே செல்லும் அரிய படைப்பு

தியானத்தில்
ஒரு கவலை மட்டும்
பிரகாசமாக ஒளிர்ந்தது.
நாகம்
இறுக்கி வைத்த
விஷக்கல்.

நான்
என் தியானத்தால்
அதை
உண்டு உண்டு
செரிக்க முயன்றேன்.
அது இன்னும் கடினமாகி
கடினமாகி
நெற்றி நடுவில்
நீலமாய்ப் பூரித்தது.
நான்
என் சிறிய கவலைகள் எல்லாம்
தாய்ப் பாம்பை நோக்கிச் செல்லும்
பாம்புக்குட்டிகள் போல்
அதை நோக்கி நெளிந்து செல்வதைப்
பார்த்தேன்.
அம்மா
நான் என்ன செய்வேன்.
புவிமேல்
நானொரு மாபெரும்
கவலைத் துளி.

ஆனால் இக்கவிதையை வாசித்தபோது முன்பு வாசித்த ஓர் ஆப்ரிக்கக் கவிதை நினைவுக்கு வந்தது. மூலத்துக்காக பழைய புத்தகங்களை தேடியபின் நினைவில் இருந்து எழுதுகிறேன்.

முட்டையிட்டதுமே கைவிட்டுவிட்டு
அக்கணமே மறந்துவிடும்
ஓர் அன்னையைப் பெற
என்ன பிழை செய்தன
இத்தனை பாம்புக்குஞ்சுகள்?
அதே நெளிவு
அதே பயச்சுருளல்
அதே சீற்றப்படம்
ஆனால்
அன்னை அறிவதில்லை.
அருகணைய முடிவதில்லை
நெருங்கினால்
அன்னைக்கு
இன்னொரு பாம்பு
கவ்வமுடிந்தால் இரை
விழுங்கப்பட்ட குஞ்சு
அன்னையை அடைகிறதா என்ன?

பெரும்பாலான தவழும் உயிர்களுக்கு அன்னை என்பதே இல்லை. அவை பேணப்படுவதில்லை. எண்ணிக்கையின் பெருக்கத்தால் அவற்றின் மரபு நீடிக்கிறது. ஆயிரம் முட்டைகள் விரிந்து வெளிவரும் ஆமைகளில், தவளைகளில், பாம்புகளில் ஒன்றே உயிர்வாழமுடிகிறது. ஈன்று சாவுக்கு விட்டுக்கொடுத்து சென்றுவிடுகின்றன அன்னைகள். பிறந்த கணம் முதல் சாவுடன் போராடி வென்று நின்றிருப்பது இதோ என் மொட்டைமாடியின் ஈரத்தரையில் தாவிக்குதித்து நின்று கண்விழித்து என்னைப் பார்க்கும் தனித்தவளை. விதியை வென்றவன்!

முந்தைய கட்டுரைலோலோ
அடுத்த கட்டுரைகட்டண உரை, கடிதங்கள்