முகிலன் மண்டபம்

அன்புள்ள ஜெ

வருத்தமடையச் செய்ததற்கு முதலில் மன்னிக்கவும்.
நேரடியான இடதுசாரிகள் தவிர்த்து, இன்று மார்க்சியம் பற்றியும்,அதன் நேர் மற்றும் எதிர்மறைப் பக்கங்களைப் பற்றியும் தமிழில் ஒரு கருத்துத்தரப்பாக நீங்கள் ஒலிப்பதாலேயே உங்களிடம் எனது தனிப்பட்ட அவதானிப்புகளையும் சந்தேகங்களையும் கேட்டேன். மேலும் வாசிக்கவும், கற்றுக்கொள்ளவுமான உந்துதலை உங்கள் பதில் ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாகக் குமரிமாவட்டத்தில் தான் சுற்றிக் கொண்டிருந்தேன். திருவட்டார் ஆதிகேசவன் கோயிலுக்குச்  சென்றிருந்தேன். அங்கே ஆலயப் புனரமைப்பு வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. புனரமைப்பு வேலைகள் சார்ந்த ஒரு ஃப்ளெக்ஸ் போர்டில் “அல்லா மண்டபம்” என்று ஒரு பெயரைப்பார்த்தேன். பிறகு ஒரு தாத்தாவிடம் அதுபற்றி விசாரித்த போது அவருக்குச் சரியான வரலாறு தெரியவில்லை. ஒரு காலத்தில் முகிலனின் படை ஆதிகேசவன் கோயிலில் கொள்ளையடிக்கவந்தபோது  கேசவபுரத்திற்குப் பக்கத்தில் முகிலன் மரணமடைந்ததாகவும் அந்த ஊருக்கு ”முகிலன்விளை” என்று இப்போது பெயர் என்றும் சொன்னார். முகிலன் ஒரு இஸ்லாம் என்றும் சொன்னார். மொகாலயன் என்பதைத்தான் முகிலன் என்று சொல்லுகிறார்களோ. அதற்கும் இந்த அல்லா மண்டபத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டோ?
அன்புடன்
சந்தோஷ்

http://ensanthosh.wordpress.com/

 

அன்புள்ள சந்தோஷ்

அ.கா.பெருமாள் அவர்களின் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயம் [தமிழினி] என்ற நூல் திருவட்டாறு கோயிலைப்பற்றிய எல்லாத் தகவல்களையும் அளிக்கக்கூடிய ஒரு முக்கியமான ஆராய்ச்சிநூல்.

திருவட்டார் பலமுறை முஸ்லீம்படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. 1310 ல்  மாலிக்காபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து மதுரை டெல்லிசுல்தான்களின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டது.  அவர்களால் தென்னகம் முழுக்கக் கைப்பற்றப்பட்டது. மதுரை சுல்தான்களின் பிரதிநிதி திருவட்டாற்றைப் பிடித்தார்.  கிட்டத்தட்ட எழுபதாண்டுக்காலம் அந்த ஆட்சி நீடித்தது

இக்காலகட்டத்தில் கட்டப்பட்டதே அல்லா மண்டபம்.  சுல்தானிய ஆட்சியாளர்களில் ஒருசாரார், குறிப்பாகப் பெண்கள், இந்து தெய்வங்கள் மேல் பக்தியும் பயமும் கொண்டவர்களாக இருந்தார்கள்.  அவர்களில் ஒருவரால் வேண்டுதலின் பொருட்டுக் கட்டப்பட்டது அல்லா மண்டபம். அவர் அளித்த நகைகளும் ஆதிகேசவர் கோயிலில் இருந்தன.

1738ல் சந்தாசாகிப் குமரிமாவட்டத்தைத் தாக்கினார். சுசீந்திரம் ஆலயத்தைக் கொள்ளையிட்டார்.அவரது பிரதிநிதி ஒருவர்  திருவட்டார் ஆலயத்தைத் தாக்கிக் களஞ்சியத்தைக்  கொள்ளையிட்டார்.  இந்தக் கொள்ளைகளைப்பற்றியும் வாய்மொழிக்  கதைகள் உள்ளன.  அதில் ஒன்றை ரப்பர் நாவலில் காணலாம். முகிலன் படையெடுப்பு என்று சொல்லப்படுவது,சந்தாசாகிப் படையெடுப்பை என்பது பரவலாகச் சொல்லப்படுகி றது. கேசவபுரத்தைத் தாண்டி முஸ்லீம் படைகள் வரும்போது ஒரு தோப்பில் இருந்த காட்டுக்குளவிகளால் கொட்டப்பட்டுப் படைகள் ஓட நேர்ந்தது எனப்படுகிறது. இதை ஆதிகேசவனின் அருளாகச்  சொல்பவர்கள் உண்டு.

சுல்தானிய ஆட்சியையும் சந்தா சாகிப் கொள்ளையையும் முகிலன் படையெடுப்பு என்ற ஒரே சொல்லால் சுட்டிக் கதைகளைக்  குழப்பிக்கொள்வார்கள் ஊர்க்காரர்கள்

 

ஜெ

முந்தைய கட்டுரைஒரு பழைய படம்
அடுத்த கட்டுரைபயணச்சிக்கல்கள்