சொல்மயங்கும் வெளி

(கௌதம சித்தார்த்தன் எழுதிய ‘இப்போது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?’ அறிவியல்புனைவின் முன்னுரை)

அறிவியல் புனைகதைகளின் முக்கியமான சவால்களில் ஒன்று அன்றாட யதார்த்தத்தை அறிவியலுடன் இணைப்பது. அறிவியல் நம்முடைய அன்றாட யதார்த்தத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. நம்முடைய ஒவ்வொரு நாளையும் தீர்மானிக்கிறது. ஆனால் நம் அகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதில்லை. அது வேறு ஒரு உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நம்முடன் தொடர்புகொண்டிருப்பது அறிவியலின் விளைகனியாகிய தொழில்நுட்பம் மட்டுமே.

எண்ணிப்பாருங்கள், நாம் அறிவியலுக்குள் பேசப்படும் எதைப்பற்றியும் நம் அன்றாடவாழ்வில் கவலை கொள்வதில்லை. எந்த ஒரு அறிவியல்  செய்தியோ நிகழ்வோ  நம்மை உலுக்கி எடுத்து இரவு தூங்காமல் ஆக்குவதில்லை. அறிவியல் நமக்கொரு வியப்பை மட்டுமே அளிக்கிறது. அவ்வியப்பு அது நாம் அறியாத வேறொரு தளத்தில் அது நிகழ்கிறது என்பதனால் எழுவது. குளோனிங் பற்றி, கடவுள் துகள் பற்றி ஒரு செய்தியை வாசிக்கும்போது நாம் பரபரப்பும் உற்சாகமும் அடைகிறோம். நாச்சுழற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். கவலையை நடிக்கிறோம். ஆனால் உத்வேகம் கொண்டிருக்கிறோம்.

ஏனெனில் அது செயல்படும் தளம் நம்முடையதல்ல. நாம் அங்கு வேடிக்கை பார்க்கவே செல்கிறோம்.  இந்த  மனநிலையால் அறிவியல் சார்ந்த எதையுமே ஒரு வேடிக்கை அம்சம், ஒரு வியப்புக்கூறு இல்லாமல் பார்க்க முடியாதவர்களாகவும் ஆகிவிட்டிருக்கிறோம்.

எளிய அறிவியல்  புனைகதைகளின் இயல்பென்பதே இந்த வேடிக்கை பார்க்கும் அம்சத்தையும் , வியப்பு அம்சத்தையும் மட்டுமே புனைகதைகளில் முதன்மைப் படுத்துவது. இப்போது நீங்கள் அறிவியல் புனைகதைகளின் தலைசிறந்த படைப்பு என்று நினைத்துப்பார்க்கக்கூடிய எதுவும் அடிப்படையில் திகைப்பு வியப்பு ஆகிய உணர்வுகளை மட்டுமே அளிப்பவை என்பதைக்காணலாம்.

நெடுங்காலத்திற்கு முன் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் கேட்டார். அறிவியல் சார்ந்த புனைகதைகள் மனிதர்கள் எழுத தொடங்கும்போதே அந்த வடிவம் ஏன் சாகசம், மர்மம், திகில் சார்ந்ததாக மாறியது? ஏன் தீவிர இலக்கியத்துக்குள் இயல்பாக முதலடி எடுத்து வைக்கவில்லை? பொது வாசிப்புக்குரிய பரபரப்பு எழுத்தாக அது நிலைபெற்றுவிட்ட பிறகு, அதில் மேதைகள் தோன்றி அதைத் திரும்ப இலக்கியத்தின் பக்கம் கொண்டுவரவேண்டியிருந்தது என்றார் நண்பர்.

மிக ஆழமான கேள்வி அது. வரலாறு சார்ந்து நவீன புனைகதைகளில்  எழுதப்பட்ட முதல் படைப்பே தீவிர இலக்கியப்படைப்பாகத்தான் இருக்கிறது. வெவ்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிர இலக்கியப்படைப்புகள் தான் முதலில் வெளிவந்திருக்கின்றன. அல்லது தீவிர இலக்கியப்படைப்பும் பொது வாசிப்பு படைப்பும் ஒரே சமயம் வந்திருக்கிறது. அறிவியல்புனைவுக்கு அப்படி நிகழவில்லை. மேரி ஷெல்லி, ஜூல்ஸ்வெர்ன் காலம் முதல் ஏறத்தாழ இரண்டு தலைமுறைக்காலம் அறிவியல் புனைகதை என்பது பரபரப்புக் கதையாகவே கருதப்பட்டது. நெடுங்காலம் இலக்கியவிமர்சகர்கள் அதை கவனித்ததே இல்லை.

ஏனெனில் நான் மேலே சொன்னதுதான். சாமானியனுக்கு அறிவியல் என்பது அவனுடைய ஆழம் சார்ந்ததல்ல. அவன் அகம் புழங்கும் களம் அல்ல. அது அவனுக்கு அன்னியமான வேறொரு களம். தீவீரமான அறிவுச் செயல்பாடு நிகழக்கூடிய, ஆனால் மிக அகன்று வேறொன்றாக இருக்கக்கூடிய ஒரு களம் அது. ஒரு சர்க்கஸ் பார்ப்பதைப் போலத்தான் சாமானியன் அறிவியலைப் பார்க்கிறான். அங்கே ஈட்டி முனையில் ஒற்றைக் காலூன்றி நிற்கிறார் ஒருவர். ஒருவர் மேல் ஒருவர் என ஏறி பன்னிரண்டு பேர் நிற்கிறார்கள். உறைவாளை விழுங்குகிறார் இன்னொருவர். வாழ்நாளெல்லாம் அதி உக்கிரமான பயிற்சி மூலம் அடைந்த நம்ப முடியாத திறமைகள் வெளிப்படுகின்றன. அவற்றைப்பார்த்து வியப்பது மட்டுமே அவன் செய்யக்கூடியதாக இருக்கிறது.

அறிவியல் புனைகதைகள் பொதுவாசிப்புக் களத்தில் இருந்து நகர்ந்து இலக்கியமாக ஆகும்போது அவை இந்த வியப்பு, திகைப்பென இரு அம்சத்தையும் வெளியே தள்ள முயல்கின்றன. அவ்வாறு வெளியே தள்ளும்போது புனைவுக்குரிய கூறு என எது எஞ்சியிருக்கிறது என்பது அடுத்த கேள்வி. வரலாறு, சமூகவியல் ஆகியவற்றில் எல்லாம் வியப்பையும் திகைப்பையும் அகற்றிவிட்டாலும் கூட அன்றாடம் சார்ந்த வாழ்க்கைப் பிரச்னை என்று ஒன்று எஞ்சியிருக்கிறது. அதிலிருந்து உச்சகட்ட தத்துவப்பிரச்சினை வரை வாசகனை கொண்டுசெல்லமுடியும்.

வரலாறு, சமூகவியல்களங்கள் இயல்பாகவே இலக்கியமாகின்றன. இவ்வண்ணம் நாம் வாழ்ந்தோம், இவ்வாறு வாழ்ந்தோம் என்பதே தீவிர இலக்கியத்துக்குப் போதுமானதாக இருக்கிறது. மேலதிகமான வினாக்களை அவற்றிலிருந்து எழுப்பிக்கொள்ள முடியும். அறிவியலில் அவ்வாறு எது எஞ்சுகிறது என்று நான் சென்ற இருபதாண்டுகளாக ஒவ்வொரு முறை அறிவியல் புனைகதைகளைப் படிக்கும்போதும் உசாவுவதுண்டு.

இன்று எனக்குத் தோன்றுவது, அறிவியல் எஞ்சியிருக்கும் வாழ்க்கைக்கூறென்பது தலைகீழாக்கம்தான். அறிவியல் நாம் வாழும் அன்றாட வாழ்க்கையை தலைகீழாக்குகிறது. அதன் அடிப்படைகளை குலைத்து ஆட்டத்தை புதுவிதமாக ஆரம்பிக்க சொல்கிறது. நாம் நாகர்கோவிலிலிருந்து ரயில் பிடித்து சென்னைக்கு செல்வதற்கு பன்னிரண்டு மணி நேரம் ஆகிறது. ஒரு அதிநவீன போக்குவரத்துத் தொழில்நுட்பம் வந்து பத்து நிமிடத்தில்  அங்கு செல்ல முடிந்தால் நமது வாழ்க்கையின் அடித்தளங்கள் அனைத்தும் மாறிவிடுகின்றன. நம் கண்ணெதிரே இணையம் நம் சிந்தனையையே தலைகீழாக்கியது. இன்று அமெரிக்காவில் இருக்கும் ஒரு நபருடன் நான் தொலைபேசி வழியாக பேசமுடியும். இணையத்தில் உரையாடமுடியும். ஆனால் என்னுடைய மெய்யுருத் தோற்றம் அவர்களுடைய இல்லத்தில்  சோபாவில் அமர்ந்து  அவர்களுடன் பேச முடியும், தொட முடியும், அதை நான் இங்கிருந்தே உணரவும் முடியும் என்றால் நான் வாழும் எதார்த்தம் சிதைந்துவிடுகிறது.

இவ்வாறு இன்றிருக்கக்கூடிய வாழ்க்கையின் யதார்த்த அடிப்படைகள் அனைத்தையுமே அறிவியலால் சிதைக்க முடியும். அவ்வாறு சிதைத்தால் எது எஞ்சியிருக்குமோ  அதுவே மானுட சாரமாக இருக்க முடியும். சிதல் புற்றை நீர்விட்டு கரைத்தால் மூன்றாம் நாள் அதே சிதல் புற்று அங்கிருக்கிறது. நூறு முறை கரைத்தாலும் அந்த சிதல்புற்று அங்கிருக்கிறது. அப்போது தெரிகிறது, சிதல் புற்றின் அந்த வடிவம், அந்த கட்டமைப்பு, அதுதான் சிதலின் சாராம்சம். அது அச்சிதலுக்குள் இருக்கிறது. ஒவ்வொரு சிதலுக்குள்ளும் இருக்கிறது. மண்ணைக்கொண்டு அது புற்று கட்டும். மூட்டையில் இருந்த பிளாஸ்டர் ஆஃப் பாரீஸைக்கொண்டும் அதைக் கட்டியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பொருள் முக்கியமல்ல, பொருளில் நிகழ்வது அந்த சிற்றுயிரின் சாராம்சம்தான்.

மானுட வாழ்க்கையின்மேல் நீரூற்றி அழித்து, அதன் கட்டுமானங்களை தொடர்ந்து கலைத்து பிறிதென்ன என்று பார்ப்பதைத்தான் அறிவியல் புனைகதைகள் செய்து வருகின்றன. இப்போது என் உள்ளத்தில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியவை என நான் எண்ணிப் பார்க்கும் அனைத்து முதன்மையான அறிவியல் புனைகதைகளும் நான்வாழும் வாழ்க்கையின் யதார்த்தத்தின் எல்லா நெறிகளையும் ரத்து செய்து காட்டியவைதான். எளிய வாசகர்கள், அவர்களில் மிகப்பெரிய விமர்சகர்கள் கூட உண்டு, வியப்பையும் திகைப்பையும் அளிப்பதனாலேயே   பல கதைகளைக் கொண்டாடுவதுண்டு. ஆனால் நான் ஓர் அறிவியல் புனைகதை என் உலகத்தை கலைத்து அடுக்காவிட்டால் அதை நீண்டகாலம் நினைவு கூர்வதில்லை.

புனைவு அளிக்கும் திகைப்பு என்பது எனக்கு மூன்று சீட்டு விளையாடுபவன் காட்டும் கைத்திறமை போலத்தான். முதலில் வியப்பு. அவ்வியப்பு ஏன் உருவாகிறது என்று பார்த்தபின் ஆர்வமின்மை. நான் விரும்பும் கதைகள் என்னுள் நானே எதையாவது கண்டடையச் செய்பவை. இன்று ஐசக் அசிமோவின் மிகச்சில கதைகளே என்னைக் கவர்கின்றன. ஆனால் ஜான் பார்த் இன்றும் என்னில் சிந்தையழியக்கூடிய எழுத்தொன்றை எழுதியவராகவே நீடிக்கிறார். நான் அவரை இன்னும் கடந்துசெல்லவில்லை. காரணம் என் அறிவியலறிவின் போதாமையும்தான்.

தமிழில் அறிவியல் புனைகதை சுஜாதாவிலிருந்து தொடங்குகிறது. அண்மையில் இலக்கிய விமர்சகரான நரேன் இந்திய அளவிலேயே சுஜாதாவைத்தான் சொல்ல முடியும் என்கிறார். சுஜாதாவுடைய எழுத்து முழுக்க முழுக்க பொதுவாசகர்களுக்குரிய வியப்பு, திகைப்பு ஆகியவற்றை முன்னிறுத்தக்கூடியது. சுஜாதாவின் கதைகளை அறிவியல்கதைகள் எனலாம், அறிவியல் இலக்கியப் புனைவென்று சொல்ல முடியாது. அவ்வாறொன்றை தமிழில் அறிமுகம் செய்ய வேண்டுமென்ற கனவு எனக்கு இருந்தது. ‘விசும்பு’ தொகுதியில் பல கதைகள் அந்த வகையைச் சார்ந்தவை.

ஆனால்  அந்தத் தலைமுறையில் நான் எண்ணியதுபோல அதற்கு உடனடியான எதிர்வினைகளும் தொடர்ச்சிகளும் உருவாகி வரவில்லை. ஆனால் அதற்கு அடுத்த தலைமுறையில் அக்கதைகளை கடந்து செல்லும் படைப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. அரூ இதழில் ரா.கிரிதரன்,  சுசித்ரா, நம்பி நாராயணன் போன்றோர் எழுதிய கதைகளை மிகச்சிறந்த அறிவியல் புனைகதைகள் என்று கூறுவேன். அவை வியப்போ திகைப்போ அளிப்பவை அல்ல. நான் ஏற்கனவே கூறியது போல நாம் வாழும் உலகத்தை, அவற்றின் அடிப்படைகளை,சிதைத்து கலைத்து போடுபவை அவை. மீண்டும் அவற்றை எதைக்கொண்டு கட்டுவோம் என்ற திகைப்பை அளிப்பவை. மீண்டும் கட்டுகையில் நமது சாராம்சம் என்ன என்று நாம் கண்டறிய உதவுபவை.

நான் அறிவியல் புனைகதைகளை இருபதாண்டுகளுக்கு முன் எழுதியபோது அன்றிருந்த எனது சக எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு  அவை இலக்கியம் அல்ல என்ற எண்ணமோ, அல்லது இலக்கியம்தானா என்ற ஐயமோ இருந்தது. அவர்கள் உறுதியான யதார்த்தச் சித்தரிப்புகளையே இலக்கியமாக கருதிக்கொண்டிருந்த காலம் அது. இன்னும் அவர்களில் பெரும்பாலானோர்கள் அதே மனநிலையில் தான் அப்படியே நீடிக்கிறார்கள். அதாவது இலக்கியம் என்றால் எடுத்துக்கொண்டு வெளியே சென்றாலும் சுத்தியல் போல, கத்திபோல பயன்படவேண்டும்.

அந்த நிராகரிப்பு இயல்பானது. அவர்கள் இன்று உருவாகி வந்திருக்கும் புதிய அறிவியல் புனைகதைகளின் உலகை மேலும் திகைப்புடன் பார்க்கிறார்கள். இவை அவர்களுக்கு சிக்கலான மொழிநடை,சிக்கலான கதை அமைப்பு கொண்ட ஒருவகை இலக்கியச் சோதனை முயற்சிகளாகவே  தெரிகிறது அந்த சோதனைக்கான தேவை என்ன என்று அவர்களுக்குப் புரியவில்லை. இத்தகைய கதைகளை எளிமையான அன்றாட யதார்த்தத்தை சொல்லும் மொழிநடையில் எழுதப்பட முடியாது.  செறிவான தத்துவார்த்த மொழி அல்லது உருவக மொழியிலேயே எழுதப்பட முடியும் என்பது அவர்களுக்குப் பிடிகிடைக்கவில்லை. அதுவும் இயல்பானதே. ஒரு சூழல் அப்படியெல்லாம் புதியதை ஏற்றுக்கொள்ளாது.

இயல்பல்லாத ஒன்று, எனது தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் நீண்ட இடைவெளிக்குப்பின் அத்தகைய அறிவியல் புனைகதை ஒன்றுடன் தமிழுக்கு முன் வந்து நிற்பது. கௌதம சித்தார்த்தன் தமிழில் நான் எழுத வருவதற்கு முன்னரே ஓர் எழுத்தாளராக அறியப்பட்டவர். 1984-ல் நான் இலக்கியம் படிக்கத் தொடங்கும்போதே க.நா.சுவின் பட்டியலில் இறுதியாக கௌதம சித்தார்த்தனின் பெயர் இருந்தது.

கௌதம சித்தார்த்தனின் இலக்கிய வாழ்க்கை என்பது அவ்வப்போது நிகழும் நீண்ட இடைவெளிகளால் ஆனது. யதார்த்தமான கதைகள் வழியாக அறிமுகமானவர் திரைப்பட ஆர்வம் காரணமாக சற்று விலகிச் சென்றார். அதன்பின் அங்கிருந்து மீண்டும் இலக்கியத்துக்கு வந்து அன்றிருந்த மாய யதார்த்தம், மிகைபுனைவு பாணியிலான கதைகளை எழுதினார். நாட்டாரியல் தொன்மங்களையும் மிகைபுனைவு மற்றும் மாய எதார்த்த உத்திகளையும் கலந்து அவர் எழுதிய கதைகள் சில கவனிக்கப்பட்டன. அவற்றில் காடையூர் வெள்ளையம்மாள் பற்றிய கதையான மண் மிகவும் குறிப்பிடத்தகுந்தது.

மீண்டும் ஒரு இடைவேளைக்குப்பிறகு அவருடைய இந்த அறிவியல் புனைகதை  எழுதப்பட்டிருக்கிறது. இதை எனக்கு அவர் அனுப்பியபோது அறிவியல் புனைகதையா என்ற திகைப்பு எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் கௌதம சித்தார்த்தன் முறையாக அறிவியல் பயின்றவரல்ல என்று எனக்குத்தெரியும். ஆனால் இந்த இடைப்பட்ட காலங்களில் அவர் கணிப்பொறி மென்பொருள்களில் ஆர்வம் கொண்டவராகவும், அது சார்ந்த நூல்களைப் பயில்பவராகவும் ஆகியிருக்கிறார். இந்த இடைவெளியினூடாக அவர் பரிணாமம் அடைந்து வந்த இடத்தில் இந்த நாவல் இருக்கிறது.

ஒரு முன்னுரையில் நாவலின் உள்ளடக்கம் பற்றி விரிவாக பேசமுடியாது. வாசகர்களுக்கு ஆணையிடுவதாக அது தோன்றலாம். ஆனால் இந்த நாவல் எங்கு நிற்கிறது வாசகர்களுக்கு முன்னரே சொல்லப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. இதன் முதல் சில பக்கங்கள் எனக்கு திகைப்பையும் குழப்பத்தையும் அளித்தன. மெல்ல மெல்ல நான் எந்த இடத்திலிருந்து வாசிக்கிறேனோ அந்த இடத்தின் அடித்தளங்களை உறுதியாக சீராக நொறுக்கி என்னை ஒரு திசைமயக்க நிலையில் கொண்டு சென்றுவிடுவதை அறிந்தேன். அறிவியல் புனைகதைகளில் நான் எதிர்பார்ப்பது அதுதான்.

இன்று செய்தித் தொடர்பு உலகம் ஒவ்வொருவருக்கும் தங்கள் மாய உருவங்களை உருவாக்கி நடமாடவிடுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. தங்கள் விருப்ப வடிவங்களை முழுமையாகப் புனைந்து அவற்றையே தாங்களென உலவ விட முடியும். அவற்றுக்குப்பின்னால் ஒளிந்துகொள்ள முடியும். இப்போதே சமூக வலைத்தளங்களில்  நேரடியாகவே அது உள்ளது. இந்நாவல் அதனுடைய உச்சகட்டத்தை கற்பனை செய்கிறது. அவ்வாறு மாயங்களை உருவாக்கியபின் ஒருவன் தன்னுடைய அடையாளத்தை தானே அழித்துக்கொள்ள முடியும் என்றால் அவனில் எஞ்சுவது எது என்று ஒரு எண்ணத்தை இந்நாவல் உருவாக்குகிறது.

அடுக்கடுக்காக வெவ்வேறு களங்களில் இந்த அவதார தோற்றங்கள் வழியாக மனிதர்கள் உருவாக்கிக்கொண்டே செல்லும் நிகர் கலாச்சாரங்களை அறிமுகம் செய்கிறது. இந்நாவல் உருவாக்கும் உருவெளி மயக்கங்களை தொட்டுக்காட்ட விரும்புகிறேன். ஒன்று உலகம் என்று நாம் சொல்லும் நிலங்களும் நாடுகளும் கலந்த வெளி மறைந்து வேறொரு ‘சைபர் வெளி’ உருவாகிறது. ஆனால் அங்கும் தேச, இட அடையாளங்களைச் சொல்கிறார்கள். ஆனால் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை.

இன்னொன்று கிரிப்டோ கரன்ஸி போன்ற சிலவற்றை அங்கே உருவாக்குகிறார்கள். அந்த மாய உலகின் நாணயத்துக்கு இங்கே யதார்த்தத்தில் ஒரு மதிப்பு ஏற்படுவதற்காக அதை தங்கள் உடலிலேயே பச்சையாக குத்திக்கொள்கிறார்கள். இவ்வுலகில் அதை ஒரு குறியீடாகவோ ஆபரணமாகவோ ஆக்கிக்கொள்கிறார்கள். அங்கு வேறொன்றாக இருப்பதை இங்கே செல்லுபடியாகும் இன்னொன்றாக ஆக்கிக்கொள்கிறார்கள். அபத்தம் வழியாக மேலும் அபத்தம். இப்படி ஒவ்வொன்றும் மயங்கிக்கொண்டே இருப்பதை சொல்லிச் சொல்லி சிந்தனையை உறையவைக்கும் அளவுக்கு ஒரு பெரும் வெளிமயக்கத்தை உருவாக்குவதனாலெயே இந்நாவல் முக்கியமானது என நினைக்கிறேன்.

இந்நாவலின் வெளி உருவாக்கும் சாத்தியங்களை எண்ணிப்பார்க்கிறேன். ‘இந்தோனேசியாவில் இருக்கும் என் பெண்தோழி’ என ஒரு வரி. உடனே இலக்கணப்படி தோழி போதுமே, அதென்ன பெண் தோழி என்று கேட்கலாம். ஆனால் அவள் அறுவைசிகிழ்ச்சை செய்துகொண்ட ஆணாக, திருநங்கையாக இருக்கலாம். குறுகிய காலம் பெண்ணாக இருந்து திரும்ப ஆணாக ஆகிறவளாக இருக்கலாம். ஆணின் பெண் அவதாரங்கள் நடுவே அவள் பெண்ணின் பெண் தோற்றமாக இருக்கலாம். எல்லா சொற்களும், இலக்கணங்களும் வேறுவடிவம் கொள்கின்றன அங்கே.

விளையாட்டு என்பதே மானுட இனம் உருவாக்கிக் கொண்ட ஒரு மெய்நிகர் உலகம்தான். வேட்டையும் போருமே விளையாட்டுக்கள் ஆயின. நெறிகளுக்கு உட்பட்ட வேட்டை, அழிவில்லாத போர். ஆனால் உணர்வுகள் மெய்யானவை. இந்நாவலில் விளையாட்டுக்களை உருவாக்கி அவற்றை மெய்நிகர் உலகின் உச்சகட்ட வெறிகளுக்கு களமாக்குகிறார்கள். மெல்லமெல்ல அவற்றைக்கொண்டு மெய்வாழ்க்கையை (அப்படி ஒன்று இருந்தால்) ஆட்சிசெய்ய முயல்கிறார்கள்.

எண்ணிப்பார்த்தால் உருவக அடிப்படையில் இந்த நாவலை வரலாற்றுக்கும் பொருத்திப்பார்க்க  முடியும் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் அவர் காலத்து சிற்றரசர்களும் வாழ்ந்த யதார்த்தம் ஒன்று. மெய்கீர்த்திகள், கல்வெட்டுகள் வழியாக அவர்கள் உருவாக்கி நமக்களித்திருக்கக்கூடிய யதார்த்தம் இன்னொன்று. அவற்றில் இருந்து நீலகண்ட சாஸ்திரியும் பண்டாரத்தாரும் உருவாக்கி அளித்த யதார்த்தம் முற்றிலும் வேறொன்று.  இவற்றில் எதில் அவர்கள் வாழ்கிறார்கள்?

உண்மையில் நம் வாழ்க்கையிலேயே நாம் தொடர்ந்து வேறு வேறு உலகங்களைப் புனைந்துகொண்டே இருக்கிறோம். ஒரு வாழ்க்கை பத்து ஆடிகளில் பிரதிபலிக்கிறது எனில் பத்து வாழ்க்கை அங்கு நிகழ்கிறது என்பது தானே பொருள். அதில் மெய்யென்ன, பொய்யென்ன? மெய்யென ஒன்றிருந்தால் அதுவும் இன்னொரு பிரதிபலிப்புதான் என்று ஆனால் எது எஞ்சுகிறது?.

கௌதம சித்தார்த்தனின் இந்த நாவல் நவீன அறிவியல் தொழில்நுட்பம் உருவாக்கும் இந்த கடந்த நிலையை சித்தரிப்பதனால் முக்கியமாகிறது. தெளிவான சீரான சொற்றொடர்களுடன், கால இட வரையறைகளுடன், கதாபாத்திரத் தெளிவுடன் எழுதப்பட்ட நாவல் அல்ல இது. அத்தகைய அனைத்துமே சிதறும் ஒரு உலகை உருவாக்குவது. இது உருவாக்கக் கூடிய மெய்-பொய் உலகில் எது எஞ்சுகிறது எனில் அந்தந்த கணங்களின் மனமயக்கம் மட்டுமே. அவ்வகையில் தமிழில் எழுதப்பட்ட முற்றிலும் புதிய ஓர் அறிவியல் புனைகதை இது. புதிய ஒரு தொடக்கத்தை இது உருவாக்கி வைக்கிறது.

எனது தலைமுறையைச் சார்ந்த ஒருவர், தான் எழுதிய அனைத்தையுமே கழற்றிப்போட்டுவிட்டு இப்படி ஒரு படைப்புடன் வந்து நிற்பதென்பது மகிழ்ச்சியையும் வியப்பையும் உருவாக்குகிறது அவருக்கு எனது வாழ்த்துகள்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஅரவாணிகள்- இரு பதிவுகள்
அடுத்த கட்டுரைநாமக்கல் உரை, கடிதம்