நான் ஓரு பல்கலைக் கழக உரையில் கி.வா.ஜகந்நாதன் தமிழக நாட்டாரியல் முன்னோடிகளில் ஒருவர் என்று சொன்னேன். அரங்கில் திகைப்பு. நாட்டாரியலில் ஆய்வு செய்யும் ஒருவர் என் ’அறியாமையை’ பெருந்தன்மையுடன், மென்மையாக மறுத்தார். நான் கி.வா.ஜ செய்த ஆய்வுகள், தொகைநூல்களை அங்கே குறிப்பிட்டேன். அவர்கள் அந்த மாபெரும் பங்களிப்பு பற்றி கேள்விப்பட்டிருக்கவே இல்லை.
இதைப்போல பலவகையான தொன்மங்கள் அறிவுத்துறை சார்ந்தே கட்டமைக்கப்படுகின்றன. அவை தற்செயலாக உருவாகின்றவை அல்ல. தமிழக நாட்டாரியலை மட்டுமல்ல அதன் வரலாற்றையே புனைவாக உருவாக்கும் ஒரு போக்கும் இங்குள்ளது. எந்த கட்டுரையிலும் கி.வா.ஜகந்நாதனோ மு. அருணாசலம் அவர்களோ குறிப்பிடப்பட்டிருக்க மாட்டார்கள்.
நான் அவர்கள் பெயரைச் சொன்னதுமே ‘அவர்கள் அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிடவில்லை’ என்பார்கள் சிலர்.
‘சரி, பெரிதாகச் செய்தவர் எவர்?’ என்பேன்
யோசித்து குழம்பி சில பெயர்களைச் சொல்வார்கள். பெரும்பாலும் ஏதாவது வெளிநாட்டுக் கட்டுரைகளை குளறுபடியாக தமிழாக்கம் செய்தவர்களின் பெயர்களாக இருக்கும் அவை.
கி.வா.ஜகந்நாதன் போன்றவர்கள் செய்த அரும்பணியின் இடம் அது அல்ல. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் அச்சு ஊடகமும் நவீனக்கல்வியும் பரவத்தொடங்கி, வாய்மொழி மரபு வேகமாக அழிந்துகொண்டிருந்தது. செவிச்செல்வமாக கேட்டு அறிந்து நினைவிலிருந்து சொல்பவர்கள் மறைந்துகொண்டிருந்தனர். அந்த காலச்சந்தியை உணர்ந்து வாய்மொழியில் இருந்து நாட்டார்பாடல்கள், பழமொழிகள், கதைகளை அலைந்து சேகரித்து பதிவுசெய்து தொகுத்த அவருடைய பணி என்பது பலவகையிலும் உ.வே.சாமிநாதையரின் பணிக்கு நிகரானது. அவரே இருபதாண்டுகள் பிந்தி தொடங்கியிருந்தால் பாதிப்பங்கு அழிந்திருக்கும்.
அவரை எளிமையாக சாதிச்சிமிழுக்குள் அடக்குவார்கள். அவர் செவ்வியல் அறிஞர் என்பதனாலேயே நாட்டாரியலுக்கு எதிரானவராகவே இருப்பார் என இவர்களே கற்பனை செய்துகொள்வார்கள். திட்டமிட்டே வேறு வரலாறுகளை எழுதிக்கொள்வார்கள். ஆனால் வெறுந்தகவல்களாலேயே ஒரு கலைக்களஞ்சியம் உண்மைவரலாறாக, மறுக்கமுடியாத ஒரு கட்டுமானமாக நிலைகொள்ளக்கூடும்.
கி. வா. ஜகந்நாதன்