இரண்டாவது சூரிய உதயம்.
நமது அரசியல் கவிதைகள் – கடலூர் சீனு
அன்றைக்குக் காற்றே இல்லை.
அலைகளும் எழாது செத்துப்போயிற்று
கடல்.
மணலில் கால் புதைத்தல் என
நடந்து வருகையில்,
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.
இம்முறை தெற்கிலே.
என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது.
எனது மக்கள் முகங்களை இழந்தனர்.
எனது நிலம் எனது காற்று
எல்லாவற்றிலும்
அன்னியப் பதிவு.
கைகளை பின்புறம் இறுக்கிக்கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது நெருப்பு
தன் சேதியை எழுதியாயிற்று
இனியும் யார் காத்துள்ளனர்?
சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து
எழுந்து வருக.
சேரன்
இனிய ஜெயம்,
நமது அரசியல் கவிதைகள் பதிவு குறித்து, மனுஷ்ய புத்திரன் அவரது சக சல்லிகள், இன்குலாபிய தோழர்கள் அனைவரது வசைகளும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கப்பெற்றேன். நன்றி :) இந்த சில்லறைக் கூச்சல்களுக்கு வெளியே இந்த சூழல் வழியே உள்ளே வந்து, அரசியல் கவிதைகள் மற்றும் அவை குறித்து மேலதிகமாக வாசிக்க ஈடுபாடு கொண்ட ஒன்றிரண்டு புதிய வாசகர்களுக்கு அந்த பதிவின் சில விஷயங்களை சற்றே விரித்து விளக்கிவிட்டு, இத்துடன் இதை இங்கே நிறுத்திக்கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி பாரதி எழுதிய அரசியல் கவிதைகளில் முக்கியமானது பாஞ்சாலி சபதம். அவரது தேர்வு மிக முக்கியமானது. திரௌபதி வஸ்திராபரணம் பெரும்பாலும் வட இந்திய மகாபாரதத்தின் மூலத்தில் இல்லாத தமிழ்நாட்டுக்கு சொந்தமானதொரு வழக்கு.
பல்லவர் காலத்தில் பொது மனதில், வரும் எதிரி நாட்டுடன் போர் நிகழ்த்த வீரம் சார்ந்த மன நிலையை அவ்வாறே பேண, இங்கிருக்கும் கூத்து பிரதிகளை இடம் மாற்றி முன்பே இங்கு பரவலாக நாட்டார் வழக்கிலிருந்த திரௌபதி துகிலுரிப்பு அங்கே நிகழ்ந்தது.
பாரதியும் முந்தைய மரபில் இருந்து இதையே எடுத்துக்கொண்டு, செவ்வியல் பாரத பிரதியில் உள்ள உணர்வுகள் சமன் கொண்ட கலை அமைதி நிலையை உதறி, நாட்டுப்புற வடிவில் இசையில் உள்ள, உணர்ச்சிகளை உச்சம் வரை கொண்டு சென்று அதை திரள் மீது ஏவும் வகையை தேர்ந்து கொள்கிறார்.
இன்று பாரதி பாஞ்சாலி சபதம் எழுத நேர்ந்த பின்னணி காலாவதி ஆன பின்னும், அந்தப் புனைவு செவ்வியல் மரபிலும் நாட்டார் மரபிலும் சமமாக இழை கொண்டு பின்னி விரிந்த வகைமை கொண்டு, அந்த தனித்துவம் வழியே இன்றும் அது முக்கிய இலக்கியப் புனைவாக நிலை கொள்கிறது.
பாரதிக்குப் பிறகு எழும் நவீனத்துவ அலை காலத்தில் மார்க்சியம் உள்ளிட்ட நவீன கோட்பாடுகள் உள்ளே வருகிறது. தீவிர இலக்கியம் முன்வைத்த கலைக் கூறுகள், இடதுசாரி முன்வைத்த அழகியல் இரண்டையுமே சம காலத்தில் மிகுந்த அளவில் பாதிப்பை செலுத்தியவர் பாப்லோ நெருடா.
அதன் வழியே நவீனத்துவ அழகியல் ஓடை கண்ட முக்கிய ஆளுமை சுகுமாரன். இப்படி இன்னும் சிலர் உண்டு. நேரெதிராக வானம்பாடி இயக்கம், இடதுசாரி அழகியல் இரண்டிலுமே பொய்யான மனநிலையோடு நெருடாவை போலி செய்து நிறைத்த கவிதைக் குப்பை மலை, தனக்கு கீழே தமிழில் அரசியல் கவிதைகள் எனும் வகை மாதிரியையே போட்டு புதைத்தது.
அடுத்து கிளம்பி வந்தது, அதுவரையிலான காலத்தை வடிவமைத்த தத்துவவாதிகளை திண்ணையை காலி செய்ய வைத்து, கோட்பாட்டு புற வாசல் வழியே உள்ளே வந்து அந்த திண்ணையை ஆக்கிரமித்துக் கொண்ட அக்காடமிக் கோஷ்டி, சும்மாத்தானே இருக்கோம் கொஞ்சம் கோட்பாட்டை சொல்லி வைப்போமே என்று திருவுளம் கொண்டு அவர்கள் சொல்லிவைத்த கோட்பாடுகளை, தமக்கு புரிந்த வரையில் உருப்போட்டு, ’ஸோக்கா ஸொன்னாம்பாரு ஃபூக்கோ, அட்சாம்பாரு ஆல்துசாரு, கவுதுத்னாம்ப்பாரு தெரிதா, படுக்க போட்டாம் பாரு பார்த்து’ என்றபடி ஒரு பின்நவீன கோஷ்டி.
பிறப்பெடுத்த காரணம் சாக்கடையில் பீ வார மட்டுமே என்று ஒரு வாழ்வு. இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்த வாழ்வில் இருந்து ஒருவன் வெளியேற அவனுக்கு உள்ள முதல் பாதை. அவனது சுயம். அவனது சுயத்தில் சூடு விழும் போதுதான் இது அவமானம் என்பதை அவன் முதன் முதலாக உணர்கிறான். அதுவே அவனை கொதித்தெழச் செய்கிறது. புற வயமான பிற அனைத்து மாற்றங்களும் இந்த முதல் அக மாற்றத்தில் இருந்தே துவங்குகின்றன. அதைச்சொல்வதே மெய்யான அரசியல் கவிதை. அதை அகவயக்கவிதை என்று முத்திரைகுத்தி, கட்சிக்கோஷங்களை மடக்கி எழுதிவைத்தால் அது அரசியல் கவிதை ஆகாது.
தமிழ் நிலத்தில் கலை இலக்கியம் முதல் சமூக அறிவியல் அரசியல் வரை இந்த வாழ்வினது விடுதலைக்காக ரூம் போட்டு சிந்தித்து கொண்டு வந்த சர்வரோக நிவாரணியான வெளிநாட்டு பின்நவீன கோபாட்டு முதலில் சொல்வதே சாரம் என்ற ஒன்று இல்லை இருப்பதெல்லாம் சாரமின்மைதான் , சுயம் என்ற ஒன்று இல்லை அது ஒரு சமூக உற்பத்தி, அதிகாரம் என்று ஒன்றில்லை இருப்பதெல்லாம் நுண்ணதிகாரம் மட்டுமே, அறம் என்பது ஆதிக்க வர்க்க பெருங்கதையாடல், யதார்த்தம் என்ற ஒன்று ‘உண்மையில்’ இல்லை … இன்னும் இன்னும் என எத்தனை உண்மைகள் . அந்த தோட்டி வாழ்வின் சாக்கடை அளவு கூட அந்த தோட்டியுடன் சம்பந்தம் இல்லாத உண்மைகள்.
ராஜன் குறை என்ற சமூக சீர்திருத்த செம்மல் தலித்துகள் நடத்தை குறித்து நிகழ்த்தி சமர்ப்பித்த ஆய்வு மீது அதன் அறமின்மை குறித்து வினா எழுகையில் அவர் அளித்த பதில் வரலாற்று சிறப்பு மிக்கது.
” சமூக அறிவியல் ஆய்வு மீதான கோட்பாட்டுப் புரிதல் உள்ளவர்களுக்கு மட்டுமே அது விளங்கும்” இதுதான் பதில்.
இப்படி இதே போல கோட்பாடுகளால் அறமும் சுயமும் காயடிக்கப்பட்ட கவிஞர்களே இன்று தமிழ் நிலத்தில் அரசியல் கவிதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பலர். உதாரணத்துக்கு மட்டுமே இன்குலாப் மனுஷ்யபுத்திரன் கவிதைகளை சுட்டினேன்.
இரண்டாவதாக இவர்கள் அரசியல் கவிதையில் போடும் போலிக் கூச்சல்களுக்கும் இவர்கள் ஆதரிக்கும் அரசியலின் கள யதார்த்துக்கும் உள்ள தூரம். இன்குலாப் இந்து மதத்தை மட்டும் சாடு சாடு என்று சாடி தனது அரசியலில் ஃபார்ம் ஆனவர். பிற மதங்களையும் சாடி இருந்தால் அதுதானே புரட்சி. கவிஞர் என்று ஃபார்ம் ஆக சிச்சுவேஷனுக்கு இன்குலாப் எழுதிய பாடல்தான் புரட்சியை வெடிக்க வைக்க வந்த புரட்சி கீதம் என்றால், தமிழ் சினிமாவில் சிச்சுவேஷனுக்கு எழுதிய “மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்” பாடலும் புரட்சி கீதம்தான். (உண்மையில் நாங்க மனுஷங்கடா பாடலை விடவுமே இது நல்ல பாடல்.)
இது போக இவர்கள் பேசும் அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்து கொள்வோம். இந்த 60 வருட வரலாற்றில் மொத்த இடத்துசாரிகளும் அதிகாரமற்ற அரசியல் அனாதை என்றான பிறகு இன்றுதான் (ராம் சந்திர தோம்) ஒரே ஒரு பட்டியல் பிரிவை சேர்ந்தவர் அதன் போலீட் பிரோ வில் அருள் கூர்ந்து சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறார். பிரகாஷ் காரத் அளவு கட்சிக்குள் எந்த தலித்தும் உளைக்க வில்லை போலும். இதுதான். புரட்சிக்கும் இன்குலாபுக்கும் உள்ள தூரம்தான் அவர்களின் கவிதையில் உள்ள கலை அழகியலுக்கும், அரசியல் கூச்சலுக்கும் உள்ள தூரம்.
மனுஷ்ய புத்திரன் அவர்களை எடுத்துக்கொண்டால் அவரால் எதிர் கட்சியில் இருக்கும் டான்சி அரசி குறித்து மட்டுமே அரசியல் கவிதை எழுதி சாமியாட முடியும். டான்சி நில முறைகேடு என்ன முறையில் எவ்விதம் நிகழ்ந்து என்ன தீர்ப்பு வந்ததோ, அதே முறையில் நிகழ்ந்து முடிந்து போனதே 2 g அலைக்கற்றை முறைகேடு. இந்த 2g அரசி கவிஞர் முன்னால் வந்தால் சாமி மலையேறி விடும். அதனால்தான் அவரது அரசியல் கவிதைள் நீதி உணர்வை இழந்து தி மு க வுக்கு ஒட்டு போடுங்க கவிதை என்றாகி விடுகிறது.
இத்தகு கவிதைகள் முக நூல் சராசரி கும்பல் மத்தியில் புழங்கிக்கொண்டு இருக்கும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை. இன்று உடு கண்ணி வைரல், நேற்று வடிவேலு கொண்டை வைரல், அதற்கு முன் அரசி கவிதை. ஆனால் அதை நவீன தமிழ் இலக்கியத்தின் தீவிர தளத்தில் கொண்டு வைத்து அதற்கு உரிமை கோரினால் கூரிய உணர்வு கொண்ட வாசகன் அவற்றைக் கொண்டு போய் வெளியே மக்கும் குப்பை டப்பாவில்தான் போடுவான்.
இறுதியாக எனக்குப் பிடித்த சேரனின் கவிதையோடு எது அரசியல் கவிதை எனும் மதிப்பீட்டை மீண்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட கவிதை 1980 வாக்கில் ஈழப் போர் சூழலில் சேரன் அவர்களால் எழுதப்பட்டு இன்றும் ஒளி குன்றாது திகழ்வது. இந்த கவிதையிலிருந்து ஒரு வாசகனால் போர்ச்சுக்கீஸ் படையெடுப்பால் எரிந்த கோவா துவங்கி, பிரிவினை காலம், இந்திரா பலிக்கு பிறகான சீக்கியர்கள் படுகொலை, குஜராத் கலவரம், மும்பை அட்டாக், இப்படி தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு வரை இந்திய வரலாறு நெடுக மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு சமூக வெளித் துயரை சென்றடைந்து விட முடியும்.
இந்த பின்புலம் ஏதும் இல்லாவிட்டாலும் இக்கவிதை தன்னவில் கொண்டிருக்கும் அழிவின் தனித்துவமான சித்தரிப்பு. அதன் வழியே அது தீண்டும் மானுடத் துயர் இதை காலம் கடக்கும் என்றும் ஒளி குன்றாத கவிதை என்று உயர்த்துகிறது. அதன் வழியே தமிழில் நிகழ்ந்த தனித்துவமிக்க அரசியல் கவிதைகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட கவிதை. நிற்க. நான் சொல்ல வேண்டியவை அனைத்தும் முடிந்ததால் இங்கே இதை நிறைவு செய்கிறேன்.