நயாகரா

நேற்று காலை இங்குள்ள நீல்கிரீஸ் ஓட்டலில் காலைச் சிற்றுண்டிக்காக அ.முத்துலிங்கம் தம்பதிகள் அழைத்திருந்தார்கள். தமிழ் நாட்டு உணவகம். நான் அங்கே பெப்பர் இட்லி என்ற புதிய உணவை சாப்பிட்டேன். பொரித்த இட்லி. நன்றாகவே இருந்தது.

அ.முத்துலிங்கம் அவர்களுடன் அவரது வீட்டுக்குச் சென்றோம். தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் தனியாளுமைக்கும், எழுத்தில் உள்ள ஆளுமைக்கும் தொடர்பிருப்பதில்லை. சிறந்த உதாரணம் அசோகமித்திரன். அவருடைய பேச்சில் நகைச்சுவையே இருக்காது. ஆனால் எழுத்தில் தெரியும் ஆளுமையே தனியாளுமையாகவும் இருப்பவர்களில் ஒருவர் அ. முத்துலிங்கம். மெல்லிய நகைச்சுவையும், மொழி விளையாட்டுக்களும், புதிய தகவல்களும் கொண்டது அவருடனான உரையாடல்.

மதியம் திருமதி அ.முத்துலிங்கம் அவர்கள் சமைத்த சுவையான, விரிவான ஈழநாட்டுச் சமையலை உண்டோம். முத்துலிங்கத்தின் வீடு முழுக்க அவர் வாழ்ந்த, சென்ற ஊர்களின் கலைப்பொருட்கள் நிறைந்து அழகாக இருக்கும்

சானல் நான்கு வெளியிட்ட ஈழப் படுகொலைகள் பற்றிய ஆவணப் படத்தை முத்துலிங்கம் வீட்டில்  பார்த்தேன். சில துணுக்குகள் ஏற்கனவே பார்த்தவை என்றாலும் ஒட்டு மொத்தமாக பெரிய மனக் கொந்தளிப்பை அவை அளித்தன. சாதாரண மக்கள், குறிப்பாக குழந்தைகளின் நெஞ்சு உடையும் ஓலங்கள் தான் எப்போதும் ஒலித்தன. இந்தக் குழந்தைகள் மானுடத்தை எப்படி நம்பும்? எதன் மேல் ஊன்றி எதிர்காலத்தில் வாழும்?

இலங்கை அரசு அந்த எளிய மக்களை கொன்று குவிக்கிறது. திட்டமிட்ட கொலைகள் என்பதை ஆவணமாகச் சொன்ன சானல் நான்கு அம்மக்களை புலிகள் கேடயமாக பயன்படுத்தினர், சில இடங்களில் கொலையும் செய்தனர் என்றும் சொல்லியது.

எந்த வன்முறைப் போராட்டமும் எந்த அதிகார ஆட்டமும் கட்டக் கடைசியில் சோற்றுக்குச் செத்த சாதாரண மக்களைத்தான் கொசு, ஈக்களைப் போல கொன்று குவிக்கிறது.  எப்போதோ அசோகமித்திரன் எழுத்துக்கள் வழியாக உருவாகி காந்திய தரிசனங்கள் வழியாக நிலைபெற்ற அந்த எண்ணம் மேலும் மேலும் உறுதிப்பட்டது.

அரசும் ராணுவமும் செய்யும் வன்முறை. எந்த அரசாவது அதையெல்லாம் செய்யாமலிருந்திருக்கிறதா? இந்திய அரசும் இதைவிடப் பெரிய மானுட படுகொலைகளைச் செய்துள்ளது. சீருடை அணிந்த ராணுவங்களின் வெறிக்கு அளவே இல்லை. ஆகவே எந்த அரசும் , அரசியல்வாதியும் இதைப் பார்த்து அதிர்ச்சியோ வருத்தமோ கொள்ளப் போவதில்லை.

மேலும் இதைச் சார்ந்து இதுவரை தமிழில் எழுந்த எல்லா மிகையுணர்ர்ச்சிக் கூச்சல்களும் மிக தந்திரமான அரசியல் நோக்கம் கொண்டவை என்பதே என்னுடைய புரிதலாக உள்ளது.  எத்தனையோ உள் விளையாட்டுக்களை பின்னர் அறிந்து கொண்டேன்

இன்று தமிழகம் என்ன செய்ய முடியும்? இலங்கை அரசுக்கு உச்ச கட்ட நெருக்கடி கொடுத்தால் தமிழ் மக்களுக்கான மறு நிவாரணங்களை அவர்கள் ஒழுங்காகச் செய்ய கட்டாயப் படுத்த முடியும்.

ஆனால் அதைவிட இத்தகைய படுகொலைகள் கடுமையாக கண்டிக்கப் பட்டன என்பதே ஒருவகையான பாதுகாப்பு.  இப்போதைக்கு என்னதான் சொன்னாலும் ஜெயலலிதாவின் குரலே ஒரே குரலாக ஒலிக்கிறது. அதை ஒட்டி தமிழர்களின் குரல்கள் திரண்டாலே போதும்.

மதியம் தாண்டி செல்வம் வந்தார். உஷா மதிவாணனை கூட்டிக் கொண்டோம்.  ’வானத்தைப்பிளந்த கதை’ என்ற தன் வரலாற்று நுலை எழுதிய செழியனும், முருகதாஸ் அவர்களும் ஏறிக்கொண்டார்கள். நயாகராவை பார்க்கச் சென்றோம்

அருண்மொழிக்கு நயாகரா பேரனுபவமாக இருந்தது . விழி விரிய பார்த்துக் கொண்டே இருந்தாள். நயாகரா அருவிக்கு நானும் அ.முத்துலிங்கமும், மகாலிங்கமும் [சிதைவுகள் மொழிபெயர்ப்பாளர்] செல்வமும் 2001 ல் வந்தோம். அப்போது நான் மீண்டும் அதை பார்க்கக் கூடும் என்ற நம்பிக்கையே எனக்கிருக்கவில்லை. ஆகவே ஒவ்வொரு கணமும் கண்ணாலும், மனத்தாலும்  பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மீண்டும் மூன்றாம் முறையாக பார்க்கிறேன். இம்முறை உள்ளூர ஒரு சோர்வும், கனமும் இருந்து கொண்டே இருந்தது. வேடிக்கைப் பேச்சுக்கள் அதை நீர்க்க வைக்க முடியவில்லை.

நயாகரா மீது வண்ண விளக்கு ஒளி. விதவிதமான நிறங்களில் எழும் நீர்ப்புகை ஓவியங்கள். நீரும் நெருப்பும் ஒன்றாகும் நிலை. எத்தனை முறை நோக்கினாலும் நயாகரா பேரழகான ஒரு புறக் கனவுதான்

நள்ளிரவு ஒன்றரை மணிக்கு திரும்பி வந்தோம்.

முந்தைய கட்டுரைஒண்டேரியோ அருங்காட்சியகம்
அடுத்த கட்டுரைகடிதம்