ஜெ,
நமது கட்டிடங்கள் கட்டுரை படிக்கும் பொழுது, எல்லாத் துறைகளிலும் நாம் நமது பாரம்பரியம்,பண்பாட்டை மிகவும் இழந்து விட்டோம் என்று தோன்றுகிறது. எல்லாக் காலகட்டத்திலும் மக்கள் இதுபோலவே புலம்பினாலும் இப்போது இழக்கும் வேகம் மிகவும் அதிகம். நமது கலைகளை வளர்த்தெடுத்துச் செல்ல அடுத்த தலைமுறைகளை நாம் தயார்ப்படுத்தவில்லை. இது 2,3 தலைமுறைகளாகத் தொடர்கிறது.
So called குலக்கல்வித் திட்டம் வந்திருந்தால் நமது கலைகள் அழியாமல் அடுத்த தலைமுறைக்கு ஓரளவாவது கடத்தப்பட்டிருக்கும். விவசாய முறைகள், கட்டிடக்கலை, மருத்துவம் போன்ற முக்கியமான துறைகளில் நமது முன்னோர்களுக்கு இருந்த ஈராயிரம் வருடங்களுக்கு மேலான knowledge இழக்கப்பட்டிருக்கிறது.
எந்தத் துறையில் இருப்பவரும் தனது மகன்களுக்கு மட்டுமே தமக்கு மட்டுமே தெரிந்த முக்கியமான தொழில்நுட்ப அறிவைக் கற்றுத் தருவர். இது மனித இயல்பு. அது போன்ற தொடர்ச்சி அறுபட்டுவிட்டது. 20 வயதே ஆன BSC Agri படித்த மகன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஊறிய தந்தையை விட அதிகம் சம்பாதிக்கும் போது அவனுக்குத் தந்தையிடம் இருந்து கற்க எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.
யார் பையன் படத்தில் NSK ஜெமினியிடம் சொல்வார் ‘தம்பி!!! நீ படிச்சவன். நான் பார்த்தவன்’. 12 ஆண்டுகள் பள்ளியில் படித்ததை ஒப்புவித்து எழுதி அதிக மதிப்பெண்கள் வாங்கி B.E, B Arch படித்து விட்டு வந்த பிறகு அவர்களுக்குப் புதிதாகத் தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. தானாக விரும்பித் தன் தொழிலில் ஆர்வத்தோடு பணிபுரிபவர்கள் மிகக் குறைவு. அதிலும் அரசாங்க என்ஜினியர் ஆகிவிட்டால் just paper pushing தான். ஒரு வேளை குலக்கல்வித் திட்டம் இதற்கு ஓரளவாவது தீர்வாக இருந்திருக்கும்.
ராஜேஷ் கோவிந்தராஜன்
அன்புள்ள ராஜேஷ்
நீங்கள் சொல்லும் குலக்கல்வித்திட்டம் எது என்று புரியவில்லை. ராஜாஜி கொண்டுவந்த புதிய கல்வித்திட்டத்தைச் சொல்கிறீர்கள் என்றால் அதைப்பற்றி நான் முன்னர் எழுதிய பதிவுகளைப் பார்க்கலாம். அது ஒரு ஷிப்ட் முறை மட்டுமே. பள்ளிகள் போதாமையினால் உருவாக்கப்பட்ட திட்டம். ஏற்கனவே குமாரசாமிராஜா போன்றவர்களால் சென்னைக்குள் அமலாக்கம் செய்யப்பட்ட ஒன்று. அதில் ஆசிரியர்களுக்கு வேலைப்பளு அதிகம். அவர்களின் எதிர்ப்பைத் திரட்டி ஆதரவாக ஆக்கிக்கொள்ளுவதற்காக திராவிட இயக்கம் அதை குலக்கல்வி என்று சொல்லி ஒரு மோசடிப் பிரச்சாரத்தைச் செய்து அதை வரலாற்றிலும் ஏற்றிவிட்டது. அதை நீங்களும் நம்புகிறீர்கள்.
ராஜாஜியின் திட்டத்தில் அப்பாவின் தொழிலை மகன் செய்வது பற்றி ஏதும் இல்லை. மத்தியானம் வரை பள்ளி என்றால் பள்ளி முடிந்து பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்று ராஜாஜியிடம் கேட்கப்பட்டது. அவர்கள் பெற்றோருக்கு உதவுவார்கள் என்றார் அவர். தமிழ்நாட்டில் இன்றும் அதுதான் நடக்கிறது. அந்த ஒருவரியை திராவிட இயக்கம் குலக்கல்வி என்று திரித்துக்கொண்டது.
ராஜாஜியின் கல்வித்திட்டம் காந்திய முன்மாதிரி கொண்டது. மாணவர்கள் இளமையிலேயே ஏதேனும் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டாகவெண்டும் என்று காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். தன் மகன் ராமதாசுக்கு எழுதிய கடிதத்தில் அவர் செருப்புத் தைக்கக் கற்றுக்கொள்வது நல்லது என்று சொல்கிறார் காந்தி. ராஜாஜி திருச்செங்கோட்டில் நடத்திய ஆசிரமப் பள்ளியில் நெசவு முதலியவை கற்பிக்கப்பட்டன.
ஆகவே பள்ளியில் ஏதேனும் கைத்தொழில் கற்பிக்கப்படவேண்டும் என்று ராஜாஜியின் கல்விக்கொள்கை கூறியது. அதைப் பிள்ளைகளின் பெற்றோர் தீர்மானிக்கலாம். அப்படிக் கைத்தொழில் கற்பிப்பது ஏற்கனவே சென்னைப் பள்ளிகளில் வழக்கத்தில் இருந்தது. காங்கிரஸ் நடத்திய சுதேசிப்பள்ளிகளின் ஒரு அம்சமாகவும் இருந்தது. ஏன் பாரதியே அவரது சுதேசிக்கல்வி என்ற கட்டுரையில் அதைச் சுட்டிக்காட்டுகிறார். குலக்கல்வி என்ற வாதத்துக்குச் சாதகமாகப் பள்ளிகளில் நெசவு முதலியவை கற்பிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினர் திராவிட இயக்கத்தவர்
அப்பன் தொழிலைப் பிள்ளை செய்தாகவேண்டும் என ராஜாஜி கருதினால் ஏன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லவேண்டும்? குலக்கல்விதான் ஏற்கனவே நடைமுறையில் குடும்ப அளவில் இருந்ததே. விரும்பினால் குலத்தொழிலைச் செய்துகொள்ளுங்கள் ஆனால் தயவுசெய்து பள்ளிக்கும் வாருங்கள் என்ற கோரிக்கைதான் அவரது கல்விமுறை. அது திரிக்கப்பட்டு இன்றும் அவர்மேல் அவதூறு செலுத்தப்படுகிறது.
நீங்கள் சொல்வது பாரம்பரியத் தொழில்திறன் என்றால், அந்த மரபு பெரிய இழப்பேதும் இல்லாமல் இன்றும் நீடிக்கிறது. தஞ்சைப் பெரிய கோயிலையும் எல்லா சுதை, வெண்கல, கற்சிற்பங்களையும் இன்றும் செய்யமுடியும். சிற்பிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே இருக்கிறார்கள். குடும்பமுறையாக அதைக் கற்கிறார்கள். கட்டும் மனநிலையும் ரசனையும் இல்லை அவ்வளவுதான்.ஆசாரிகளில் தொண்ணூறு சதவீதம் பேரும் மரபாகக் கற்றவர்களே. பொற்கொல்லர்களும்தான்.
முஸ்லீம்கள் செய்துவந்த சரிகை வேலைகள், பாவட்டா வேலைகள் போன்றவை குலமுறைப்படி கற்கப்பட்டன. அவை இப்போது இன்றைய வகாபிய தீவிரவாதத்தால் தடுக்கப்பட்டுவிட்டன – அவை கோயில்சார்ந்த கலைகள் என்பதனால்.அங்கே இழப்பு உள்ளது
ஜெ