ஆரோக்கிய நிகேதனம், வாசிப்பு

ஆரோக்கிய நிகேதனம் விக்கி

உலகம் பிறந்ததிலிருந்து பிறப்பு இறப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இறப்பு என்பது நிகழ்ந்தே தீரும். ஆனாலும் மனிதன் மரணத்தை வெல்ல வேண்டும் , தனக்கு மரணம் நிகழக்கூடாது என்று எத்தனிக்கிறான். மதியின் தாய் போல. அனைத்தையும் விட்டுவிட்டு , நிரந்தர உறக்கத்திற்கு செல்ல வேண்டுமே என்று மார்பில் அறைந்து கொண்டு அழுகிறான். வநுவிஹாரியினை போல. கொரோனா காலத்தில் நவீன மருத்துவத்திற்கும் , மரபுசார் மருத்துவத்திற்கும் கடும் விவாதம் நிகழ்ந்தது. எனது நவீன மனத்தினால் , மரபுசார் மருத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் மரபுசார் மருத்துவத்தை இடது கையினால் தள்ளி ஒதிக்கி வைப்பது எந்த வகையில் அறிவியல் என்று சொல்ல முடியும்.

மரபுசார் மருத்துவம் மரணத்தை அணுகும் விதம் வேறு விதமானது. அகால மரணத்தை போன்ற துன்பம் வேறில்லை. ஆனால் , ஒரு கட்டத்திற்கு மேல் , முதிர்ந்து , கனிந்து , உதிர வேண்டும். புதியன முளைக்க வேண்டும். ஆனால் நவீன மருத்துவம் , மரணத்துடன் இறுதி வரை போர் புரிவது. ஒரு நாள் , மனிதனால் மரணத்தை வெல்ல முடியுமோ என்னமோ. ரங்கலால் டாக்டர் சொல்வது போல , மருத்துவர்களுக்கான தேவை இராது போகலாம். மனிதனை நிரந்திர உறக்கத்திற்கு செலுத்த மட்டும், தேவை இருக்கலாம்.

நவீன யுகம் பிறக்கும் காலத்தில் , நவக்கிராம் என்ற வங்காள கிராமத்தில்  நடக்கிறது கதை. ஜீவன் மஷாய் , மரபுசார் மருத்துவர்களின் பரம்பரையில் வந்தவர். ஆனால் நவீன மருத்துவம் கற்க விழைகிறார். பச்சிலை கசக்கி கொடுப்பது அவருக்கு அவமானமாக இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் , தந்தையிடம் ஆயுர்வேதம் கற்கிறார். இது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஹார்மனி என்ற ஒரு டாக்குமெண்ட்ரியில் , ருத்ர வீணை கலைஞரின் மகன், நவீன இசை நோக்கி செல்கிறான். நடு வயது வந்தவுடன் , தந்தையிடம் ருத்ர வீணை கற்கிறான். ஒரு ராகத்தை மட்டும் சில வருடங்கள் பயில்கிறான்; தபஸ்வியை போல.

ஜீவன் மஷாய் , ஆயுர்வேதம் கற்ற பிறகு , ரங்கலால் டாக்டரிடம் நவீன மருத்துவம் பயில்கிறார். அவருடைய அகங்காரத்தை நிரப்ப. முற்றாக கற்க முடியவில்லை.  ஆனால் அவருடையது அறிவியல் மனம். ஆரம்பத்தில் , அவருடயை அகங்காரம் சீண்டப்பட்டாலும் , நவீன மருத்துவத்தின் பாய்ச்சலை கண்டு வியக்கிறார். இன்னொரு புரம் பிரத்யோத் டாக்டர். கர்ம யோகி. ஜீவன் மஷாயை அறவே வெறுப்பவர். நவீன யுகத்தின் பிரதிநிதி. ஒரு சந்தர்ப்பத்தில், இருவருக்கும் இடையே ஒரு உரையாடல் நடக்கிறது. பரஸ்பர புரிதல் ஏற்படுகிறது. ரங்கலால் டாக்டருக்கு , ஆயுர்வேதத்தின் நோக்கினை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.

நோய் என்பது ஏதோ ஒரு நாள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவது இல்லை. ஒவ்வொருவரின் கூறுகளுக்கு ஏற்ப கூடவே சஞ்சரிப்பது. தாந்துவிற்கு அது உணவின் மோகம். விபினிற்கு புகழின் மயக்கம். வநுவிற்கு மது, மாது. ஜீவன் மஷாயிற்கு , மஞ்சரியின் மேல் இருந்த வெறி . ஆத்தர் பெளவிற்கு , அவளுக்கு கிட்டாத அன்பு.

தத்தாபிரசாத்

ஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’

ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்

முந்தைய கட்டுரைபுயலிலே ஒரு தோணி, சினிமாவாக?
அடுத்த கட்டுரைசங்கொலி – ஒரு கடிதம்