தமிழ் விக்கி
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை…
அன்புள்ள ஜெ
வெளிப்படையாக ஒரு கேள்வி. உங்கள் மகனோ மகளோ அமெரிக்காவில் குடியேறி, உங்கள் பேரப்பிள்ளைகள் தமிழே தெரியாமல் அங்கே வாழ்வதை நீங்கள் விரும்புவீர்களா? அவர்களுக்கு உங்கள் பெயரைக்கூட வாசிக்கமுடியாதென்றால் அதனால் வருந்த மாட்டீர்களா?
பெயர் வேண்டாம்
***
அன்புள்ள நண்பருக்கு,
என்னை உங்களுக்கு பெரிதாகத் தெரியாது என நினைக்கிறேன்.
என் மகள் அமெரிக்காவில் குடியேறுவதை வரவேற்பேன். இந்தியாவில் அவளுக்கு இருக்கும் பல கட்டுப்பாடுகள் அங்கே இருக்காது. அங்கே சுதந்திரமாக வாழவும், விரும்புவதைக் கற்கவும், மேலான ஒரு வாழ்க்கையை அமைக்கவும், மேலான ஓர் ஆளுமையாக அமையவும் அவளுக்கு வாய்ப்புகள் உண்டு. இந்தியாவில் அவள் நிழலுடன் போராடி நீண்ட காலத்தை வீணாக்க நேரலாம்.
ஆனால் மகன் அமெரிக்காவில் குடியேறுவதை விரும்பவில்லை. அவனுக்கு இனி அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழ்ந்து அடைய ஏதுமில்லை. அவன் பயணம் செய்யலாம், கீழைநாடுகளிலேயே அவன் பயணம் செய்யவேண்டும். இந்த ஜூலை இறுதியில் ஓர் ஐரோப்பியப் பயணம் திட்டமிடுகிறான். அந்த பயணத்திலேயே அவன் அதை கண்டடைவான்.
அவனுக்கு வசதியும் மகிழ்ச்சியும்கூட அமெரிக்காவில் கிடைக்கலாம். ஆனால் அவன் இங்கே ஆற்றவேண்டிய பணிகள் மிகுதி என நான் நினைக்கிறேன். அவன் வாழும் பல்லாயிரவரில் ஒருவன் அல்ல. இங்கே பங்களித்துச் செல்லும் மிகச்சிலரில் ஒருவன்.
பேரக் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் வாழ்க்கைச்சூழலை நான் இப்போது கற்பனைகூட செய்யமுடியாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழட்டும். நான் என் எழுத்துக்கள் காலத்தை வெல்லும் என நம்புபவன்
ஜெ
*
அன்புள்ள ஜெமோ
அமெரிக்கக் குழந்தைகள் சார்பாக கடுமையான ஏளனம், வசைகளை நண்பர் குழுக்களில் காணமுடிகிறது. வாட்ஸப் குழுமங்களில்தான். ஒரு நையாண்டி நோட்டோடு உங்கள் கட்டுரையின் சில பகுதிகள் சுற்றிவருகின்றன. இந்த எதிர்வினையை எதிர்பார்த்தீர்களா? சிலர் கடும் மறுப்பை தெரிவித்தனர்.
ராம்குமார் அர்விந்த்
அன்புள்ள ராம்,
அது ஓர் எழுத்தாளனின் குரல். அந்த எழுத்தாளன் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அவன் சொல்வது உங்கள் அனுபவத்துடன் ஒத்துப்போனால் அதைப்பற்றி யோசிக்கலாம். அவன் எவரென்றே தெரியாது, அவன் கருத்துக்களில் மதிப்பில்லை என்றால் அப்படியே கடந்துபோகலாம். அவ்வளவுதான்.
ஜெ