அமெரிக்கா, அறம் -கடிதங்கள்

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது குழந்தைகளின் முன்…

அன்புள்ள ஜெ

அமெரிக்கா பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யலாமென்று நினைத்தேன். ஆனால் என் ஆங்கிலம் எவ்வளவு குறைவானது என்று ஒரு பத்திக்குமேல் காட்டிவிட்டது. புழக்க ஆங்கிலமும் தொழில் ஆங்கிலமும் அதற்கு போதாது.

அமெரிக்கக் கட்டுரைகள் மிகக்கூர்மையானவை. ஆணியடிப்பவை. ஆனால் வழக்கம்போல ‘அதிலே ஒரு நுட்பமான அரசியல் இருக்கு…’ என்ற பேச்சுக்கள் ஆங்காங்கே நடக்கின்றன மற்றபடி அமைதிதான். ஏனென்றால் அக்கட்டுரை நேரடியாகவே பெற்றோரை தகுதிப்படுத்திக்கொள்ளச் சொல்கிறது. இங்கே பெற்றோர் ஏற்கனவே வாழ்க்கையில் வெற்றிபெற்று அமெரிக்கா வந்துவிட்டவர்கள் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ’ஆட்டம் பாட்டமெல்லாம் தமிழ் கலாச்சாரம் கெடையாது. கொஞ்சம் படிச்சுப்பாருங்க’ என்கிறீர்கள்.

நான் சொல்வதும் நீங்கள் சொல்வதுதான். நான் என் நண்பர்களிடம் சொல்வேன். நம் இல்லங்களில் தமிழ்நாடு பற்றிய ஆங்கிலப்புத்தகங்களின் ஒரு நூலகம் இருக்கவேண்டும். நம் பிள்ளைகள் படிக்கிறார்களா என்பது அவர்களின் தேர்வு. நாம் அளிக்கவேண்டும். அவர்களின் பள்ளிகளில் எதையாவது எழுதிக்கொண்டுவரச்சொன்னால் தமிழ்நாடு பற்றி எழுதச் சொல்லவேண்டும்.

தாமஸ் புய்க்ஸ்மா மொழியாக்கம் செய்த திருக்குறள் பற்றி ஒரு எட்டாம் கிளாஸ் பெண் ஒரு கட்டுரை எழுதி வகுப்புக்கு கொண்டுசென்றால் கெத்துதானே?

ஆனந்த் சேஷாத்ரி

Aram

அறம்

அன்புள்ள ஜெ,

நானும் என் இரண்டு மகன்களும் தமிழ் விக்கியில் அறம் பற்றிய கட்டுரையின் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்தோம். ரெண்டுபேருக்கும் சரியாகத் தமிழ் தெரியாது. ஆங்கிலமும் பேச்சுமொழியாக இந்தியும்தான் தெரியும். அவர்களுக்கு அந்தக் கட்டுரை spellbinding அனுபவமாக இருந்தது. மொத்த தமிழ்ப்பண்பாட்டையும் குறுக்காக வகுத்துவரும் ஒரு சொல் அது. அற்புதமாக மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. தமிழ் விக்கி ஏன் தேவை என்று புரிந்தது. நம் அடுத்த தலைமுறைக்கு தமிழ்ப்பண்பாடு இப்படித்தான் சென்று சேரமுடியும்.

கல்யாணி மாதவ்

முந்தைய கட்டுரைஅவதூதர், கடிதம்
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன், கடிதங்கள்