திரு ஜெயமோகன்
உங்கள் மார்க்சீயம் பற்றிய கட்டுரைகள் மூன்றையும் படித்தேன். கூடவே ‘மார்க்சீயம் தேவையா ?‘ முதலிலேயே படித்தது. இணைய தளத்தில் தமிழில் இந்தத் தலைப்பில் மிக விஸ்தாரமான , ஆழமான எழுத்துக்கள் இவையே.
எனக்கு இது குறித்த புரிதல் குறைவு. இருந்தாலும் மார்க்சீயம், நடைமுறைக்கு ஒவ்வாது என்ற உள்ளுணர்வு மட்டும் இருந்தது. நான மூலதனமோ மற்றைய அடிப்படை நூல்களோ படித்ததில்லை. ஒரு சித்தாந்தம் எவ்வாறு செய்முறைப் படுத்தப் படுகிறதோ, அவ்வளவே அதன் சிறப்பு என்பதில் எனக்குத் தெளிவான உடன்பாடு உண்டு. சந்தோஷ் அவர்கள் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு அதே நியாயத்துடன் பதில் சொல்லியுள்ளீர்கள்.
நீங்கள் சொல்லாமல் விட்டவை என்று எனக்குப் படுகின்ற சிலவற்றை இங்கே கூறுகிறேன். கம்யூனிசம் இயற்கை சித்தாந்தம் அல்ல. அது ஒரு எதிரிய விளைவு (reactionary movement) இயக்கம். அது முளைக்க வேண்டுமானால் அப்படிப்பட்ட நிலம் வேண்டும். ஒரு பாரம்பரிய இந்திய விவசாயியிடம் போய்க் கம்யூனிசத்தைப் பற்றியும் முதலாளித்துவ ஆதிக்கத்தையும் பேசினால் அது அவனிடம் எந்தவித சலனத்தையும் உண்டுபண்ணாது. ஆனால் அதே விவசாயி,தன் தொழிலைக் கைவிட்டு , ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகட்டும், அடுத்த கணமே மார்க்சீயம் அவனுக்கு நியாயமானதாகப் பட்டுவிடும். இது,வேதம் ஓதும் ஒரு பாரம்பரிய பிராம்மணன், ஒரு நாவிதன், வண்ணான், கொல்லன், நெசவாளி, எல்லாருக்கும் பொருந்தும்.
கொல்லன், பிராம்மணன் முதலானோர்,தன் தொழிலைத் தன் தந்தையிடம் இருந்து பெற்றவர்கள் . அங்கே ஏது முதலாளியும் சுரண்டலும் ? அங்கே மார்க்சியம் செல்லாது. அவர்கள் முதலாளித்துவ அமைப்பில் ஏதாவதொரு துருவத்தில் அமரும் போது மார்க்சீயத்துக்கு சாதகமாகவோ பாதகமாகவோ நிலைப்பாடுகளை எடுப்பார்கள். நீங்களே அரசுப் பணியில் அமர்ந்தவுடன் தொழிற்சங்கம் உங்களைக் கவர்ந்து விட்டது. அதிலும் மார்க்சிய சங்கமே உங்கள் இதயத்தில் இடம் பிடித்தது. என் சகோதரர் முறை உள்ள ஒருவர்,அரசு வங்கியில் சேர்ந்து நீங்கள் கூறும் மார்க்சிய யூனியனில்தான் சேர்ந்தார்.ஒரே வித்தியாசம் உங்கள் பக்குவம் அவருக்கு இல்லை.
ஆக,மார்க்சீயம் வளர ஐரோப்பிய மாதிரியான நிலவுடைமை அமைப்பு தேவை. ஆங்கிலேயர் வரும் வரை இங்கே அந்த அமைப்பு இல்லை. நிலம் ஒரு செலாவணியாகக் கூடிய பொருள் இல்லை (saleable commodity). எல்லாம் மானிய நிலங்கள். ஒருவன் ஊரை விட்டால் நிலமும் போய் விடும். வெள்ளையர் தான் இந்தப் பட்டா முறையைக் கொண்டு வந்தனர். அங்கிருந்து தான் நிவந்தம் , மானியம் எல்லாம் போய்ப் பிரபு முறை உருவாகி விட்டது. ரியல் எஸ்டேட் என்ற துறை உருவாயிற்று.
இந்தப் பிரபு முறைதான் நீங்கள் சொன்ன மாநிலங்களில் மார்க்சியத்தை உருவாக்கியது. சொல்லப் போனால் இவை இரண்டும் complimentary. ஒன்றை ஒன்று சார்ந்தவை .முதலில் கம்யூனிச சித்தாந்தம்,மேல்தட்டு அறிவுஜீவிகளின் தேநீர் விவாதத்துக்கு மட்டுமே பயன் பட்டது. பிற்பாடு கூலித் தொழிலாளர்களால் தான் பாமரப் படுத்தப் பட்டது. அதுவும் குறிப்பாக வெள்ளாளர்களால். அவர்கள் நுழைந்ததும் தான் கம்யூனிசம் பரவலாகியது. வரவேற்பும் பெற்றது. வெள்ளாளர்களுக்கு சமூக ரீதியில் பிராம்மணர்களும் , உத்தியோக ரீதியில் முதலாளிகளும் எதிரிகளானார்கள். இது பிரபு முறை வந்த பின் (1802 க்கு மேல் ) நடந்தது. அதற்கு முன் ஒரு கிராம ரீதியில் யாரும் யாருக்கும் எதிரி இல்லை.
இதன் இன்னொரு விளைவு,தலித்துகள் தனிமைப்படுத்தப்பட்டது. நடுத்தட்டான வெள்ளாளர்,அரசியலை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தனர். அதுவும் 90 களில் இது முறைப் படுத்தப் பட்டது வி பி சிங் காலத்தில். வெள்ளாளர் தங்கள் கிராம மனப் பாங்கை விடாதவர்கள். தலித்துகளை ‘எப்போதும்’ போல் நடத்தினர். இந்த நேரத்தில் கம்யூனிசம்,தன் தலித்துகளைத் தக்க வைத்துக் கொள்ளப் பாடுபட்டது. இந்த நேரத்தில் வெள்ளாளர் கட்சிகள் வரிசையாக முளைத்து விட, கம்யூனிசத்தின் பார்வை தலித்துகளை நோக்கித் திரும்பியது. இருந்தும் தங்கள் வெள்ளாள ஆதரிப்பைக் காட்ட அவ்வப்போது முயன்றே வந்தது. 2007 களில் ஐ ஐ டி 27 சதவீத இட ஒதுக்கீடு ஒரு உதாரணம். சீதாராம் எச்சூரி இந்த விஷயத்தில் பிடிவாதமாக நின்றது குறிப்பிடத்தக்கது. கடைசியில் காரத்தும் இதற்குப் பணிந்தார்.
நான்,அறிவிக்கப்பட்ட இந்துத்துவ வாதியல்ல என்றாலும் அதன் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டவன். இந்துத்துவமும் ஒரு எதிரிய விளைவே. நம் தேசியப் பண்பாடுகளை, அதன் ஆணிவேர்களைக் குறி வைத்துத் தாக்கும் நிலை வந்த போது பிறந்தது தான் அது . அதன் குறிக்கோள்கள் நிறைவேறிய பிறகு அதன் தேவை இருக்காது. (it is time bound) இதன் நோக்கமே பழையதை, சிறந்ததை நிலை நிறுத்தல்.இதற்கு ஒன்றும் பெரிய படிப்பறிவோ , அலசும் சக்தியோ தேவையில்லை. இதன் காரணம்தானோ என்னவோ, இந்துத்துவ களத்தில் மார்சியவாதிகள் போல் படைப்பாளிகளும் , பேச்சாளர்களும் உருவாகவில்லை. ஆனால் அங்கும் சிலர் உள்ளனர். ஆனால் கம்யூனிசமோ இத்தகைய அறிவுஜீவித் தனத்தை ஏவி இதற்குப் பிறகு என்றென்றும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் அமைப்பை உருவாக்க முனைகிறது. (it is not time bound) . இது தான் அதன் அபாயம்.
நகர்ப்புற சேரிகளில் மார்க்சிய இயக்கத்துக்கு இருக்கும் வரவேற்பு கிராமங்களில் இருக்கவே இருக்காது. நகரத் தொழிலாளி அதிக கூலி வாங்கினாலும் இதே நிலை. காரணம் வருணப் பாகுபாடு ஸ்திரமாக உள்ள இடங்களில் மார்க்சியம் செல்லாது.
மார்க்சியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் உள்ள இன்னொரு அடிப்படை வேறுபாடு ,கருத்து சுதந்திரம்,மற்றும் கருத்து வேறுபாட்டை அங்கீகரிப்பது. எண்பதுகளில் நான கல்லூரியில் படிக்கையில் திரு கோவிந்தாச்சாரி அடிக்கடி என்னைக் கோவையில் சந்திப்பார். ஒரு நாள் அவரிடம் விவேகானந்தர் மற்றும் சங்கரர் தான் நமக்கு வழிகாட்டிகள் என்று சற்று முதிர்ச்சி அற்ற பாணியில் கூறினேன். அவரோ உடனே சங்கரரைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒரே போடாகப் போட்டார். பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு வைணவர் என்று. இருந்தாலும் அங்கே செயல் முறையில் எந்த விரிசலும் இல்லை. இந்த மாதிரி விஷயங்கள் கம்யூனிசத்தில் சாத்தியமே இல்லை.
மார்க்சியமும்,முதலாளித்துவமும் அதிகாரத்தை மையத்தை நோக்கித் திருப்புபவை (centralization ). ஆனால் நம் இயல்பான வாழ்க்கை முறையோ பரவலாக்கத்தை (decentralization) அடிப்படை ஆகக் கொண்டது. வெள்ளையன் வருவதற்கு முன்னர் வரை ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாகவே இருந்திருக்கிறது. சாணக்கியரும் கூடப் போரிலும் கிராமத்தைத் தொடக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார். முஸ்லிம் மன்னர்களும் இந்த முறை அவர்களின் வரி வசூலிபபுக்கும் ஆட்சிக்கும் சாதகமானதாக இருந்ததால் அந்தத் தொன்று தொட்ட முறையை ஆதரித்தனர்.
முதலாளித்துவம்,வெள்ளையனின் கண்டுபிடிப்பு. இயல்பும் கூட. கம்யூனிசமும் அப்படியே. நம் நாட்டில் இதில் ஏதாவது ஒன்று இருக்கும் வரை மற்றது இருக்கும்.
வேங்கடசுப்ரமணியன்
நன்றி!
—
Dr. M. Dhandapani,
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் எழுதுகிறீர்கள், ”அப்படி நோக்கினால் புரட்சி என்பது அந்நாவலுக்குத் தேவையே இல்லை. அது அந்நாவலின் புனைவின் பின்னணி மட்டுமே. அந்த வாழ்க்கைநாடகம் நிகழும் அரங்கு மட்டுமே. அந்த படிமங்களை உருவாக்கும் வயல் மட்டுமே. அந்தப் பின்னணியை நாம் எப்படியும் கற்பனை செய்துகொள்ளலாம். இருநூறு முந்நூறு வருடங்கள் கழித்து உலகு தழுவிய ஒரு தொழில்நுட்பச்சிக்கலால் மானுடசமூகம் அதன் அடிப்படைகள் புரட்டப்பட்டு சவால்களைச் சந்திக்கும் என்றால் அந்த சித்திரத்தை நாம் டான் நதி அமைதியாக ஓடுகிறது நாவலில் பொருத்தி வாசிக்கமுடியும்”.
சத்தியமான வார்த்தைகள்.
Manon Lescaut என்னும் ஃபிரெஞ்சு நாவல் Antoine François Prévost என்பவர் எழுதியது. அதன் பின்னணி 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த நிகழ்வுகள். ஆனால் அதே புத்தகம் திரைப்படமாக வந்தபோது அதன் பின்னணியாக 1940-களில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறும் நிகழ்ச்சிகள்தான் வருகின்றன.
ஆக, பின்னணி என்பது தற்செயலாக அமைந்தது என்பதுதான் நிஜம்
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள ஜெமோ,
வணக்கம். தங்கள் பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.
சென்ற டிசம்பரில் கல்கத்தாவில் இருந்தேன். அதுவும் கிருஸ்துமஸ் வேளையில். உண்மையில் கல்கத்தா ஒரு மாறுபாடுகளின் ஒருங்கிணைப்பு. ஒரு புறம் ஹௌரா போன்ற கச்சடா இடங்கள். பார்க் தெரு போன்ற கடைத்தெருக்கள். ராஜர்ஹெட் சால்ட் லேக் போன்ற வடிவமைக்கப்ட்ட குடியிருப்புகள். காளிகாட் போன்ற சக்தி வாய்ந்த ஆனால் காசைப் பிடுங்கும் கோயில்கள். தக்ஷிணேஸ்வரம் போன்ற மனம் அமைதி பெறும் தெய்வ ஸ்தலங்கள். வசதியான குகை ரயில்கள். பழமையான டிராம்கள். சென்னையில் இல்லாத அளவிற்கு theatre நிகழ்வுகள். எப்போதும் இயங்கும் பொருட்காட்சிகள். அப்பப்பா…
நான் நம் இந்தியாவில் பல முக்கிய நகரங்களிலும் பயணித்தாலும் கல்கத்தா ஒரு வினோதமான மனநிலையுடன் இயங்கும் நகரம்தான்.
அன்புடன்,
வே. விஜயகிருஷ்ணன்
பழையவை