நேற்று டொரொண்டோ நகரில் ஸ்கார்பரோ பகுதியில் சர்வதேச குறும்பட விழா. காலையிலேயே கிளம்பிக் குளித்து உடைமாற்றி மனைவி சகிதம் கிளம்பிச்சென்றேன். காலம் செல்வம் நடத்திய வாழும்தமிழ் நூல்விற்பனை அரங்கும் அருகே இருந்தது. பல நண்பர்களை அங்கே சந்தித்தேன். அவர்களில் பலர்,என்னுடைய நூல்களை விரிவாக வாசித்தவர்களாக இருந்தார்கள். ஒட்டுமொத்தமாகப் ’பின் தொடரும் நிழ’லின் குரல்தான் அவர்களிடம் அதிக தாக்கம் ஏற்படுத்தியதாக இருந்தது என்று தோன்றியது. நூல்கள் நடுவே அமர்ந்து இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டோம். நூல்களில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன்.
நல்ல வாசகர்கள் பொதுவாக ‘ஏன் இப்படி எழுதினீர்கள்?’ ‘இது உண்மையிலேயே நடந்ததா’ என்ற இரு கேள்விகளைக் கேட்க மாட்டார்கள். இலக்கியம் என்பது ஒரு தனிஉண்மையின் தளம், ஒரு மெய்நிகர் உலகம் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். அங்கே சந்தித்த வாசகர்களில் எவராவது அதைக் கேட்பார்களா என்று கவனித்துக்கொண்டே இருதேன். இல்லை. பெரும்பாலும் நூல்களை முன்வைத்து அறச்சங்கடங்களைப் பற்றிய ஆழமான வினாக்களே இருந்தன. என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் சிலரைச் சந்திக்க நேர்ந்தது உவகை அளித்தது
புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் முன்பு இருந்தவரும் வசந்தகுமாரின் பழைய நண்பருமான முரளியைச் சந்தித்தேன். பெரும்பாலும் கூடவே இருந்தார். டேனியல் ஜீவா, ஸ்ரீரஞ்சினி, ரவிச்சந்திரிகா, சுரேஷ் என பல நண்பர்களைச் சந்தித்தேன். ஆனால் எவரிடமும் அதிகம் பேசமுடியவில்லை. குறும்பட விழா.
இடைவேளைக்குப்பின் சுமதி ரூபன் [கறுப்பி] யைச் சந்தித்தேன். புஷ்பராசன் [கவிஞர்] தேவகாந்தன்[கனவுச்சிறை நாவல்] எனப் பல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது.
குறும்படங்கள்,பெரும்பாலானவை தமிழ். ஒரே ஒரு ஜெர்மானியப் படமான பெர்லின் சுவர் சிறப்பாக இருந்தது. மற்ற படங்களை முயற்சிகள் என்றே சொல்லவேண்டும். மாலைவரை குறும்படங்கள்.
மாலை நான் உரையாற்றினேன். உரையில் சொன்ன நான்கு மையக்கருத்துக்கள்.
1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.
2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.
3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வருவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.
4 ஆனால் தமிழ் வணிகசினிமாவுக்குள் சிறப்பான சில முயற்சிகள், சராசரியை மீறி எழும் எத்தனங்கள் நிகழ்கின்றன. அவை முக்கியமானவை.
என்னுடைய உரைக்குப்பின் கேள்விநேரம். கேள்விகள் பொதுவாக மிகமிக ஏமாற்றமானவை. பலர் முன்னரே உருவாக்கிக்கொண்டு வந்த கேள்விகளைக் கேட்டார்கள். ‘நீங்கள் தமிழ் சினிமா குப்பை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் அதில் பணியாற்றுகிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி. அருண்மொழி வர்மன் என்பவர் கேட்டது. ‘அய்யா நான் சொன்னது நேர் மாறு’ என்று சொன்னவற்றை அப்படியே திருப்பிச் சொன்னேன். உடனே அடுத்த கேள்வி ‘சரி, ஆனால் தமிழ் சினிமாவில் தரம் இல்லை என்று சொல்கிறீர்களே ஏன்?’ கன்யாகுமரி மொழியில் மனசுக்குள் ‘வெளங்கிரும்’ என்று சொல்லிக்கொண்டேன்.
சற்றும் அசராமல் ஒருவர் கேட்டார். ‘நல்ல கதை என்பது குமுதத்தால் வெளியிடப்படவேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்?’ நான் ‘டேய் கைப்பிள்ளை அடக்க்கிக்கோடா’ என்று சொல்லிக்கொண்டு ‘அய்யா நான் குமுதம்கூட என்றுதான் சொன்னேன்’ என்றேன். ’இரண்டும் ஒன்றுதான்’ என்று அவர் எனக்கு விரிவாக விளக்கினார்.
கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுமே அப்படித்தான் இருந்தன. நான் பேசியவற்றுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமே இல்லை. ‘ நான் அப்டிச் சொல்லல்லீங்க’ என்பதே என் பொதுவான பதில்.அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஏற்கனவே சந்தித்த தரமான வாசகர்கள் எவரும் வாயே திறக்கவில்லை.
வெளியே வந்தபோது பலரும் கேள்விநேரத்தில் இப்படி நிகழ்ந்தது பற்றி வருத்தம் தெரிவித்தார்கள். கேள்வி கேட்ட பெரும்பாலானவர்கள்,நான் எழுதுவது எதையும் வாசிக்காதவர்கள். நான் இன்னவகைக் கருத்துக்கள் கொண்டவன் என்று ’யாரோ’ சொன்னதை நம்பி அதை ஒட்டி நான் சொல்வது இதுவாகவே இருக்கும் என ஊகித்துக்கொண்டு கேள்வி கேட்டார்கள் என்றார்கள். அப்படி ஒரு குழுவாக அவர்கள் கேட்கும்போது பிறர் அமைதியாகிவிடுகிறார்கள்.
நான் ஒரு வேடிக்கையாகவே அதை எடுத்துக்கொண்டேன் என்று சொன்னேன். நான் அதிகம் சந்திப்பவர்கள் அதைப்போன்றவர்களே. ‘சார் இந்தியாவில் உயர்சாதிகள் மட்டும்தான் வாழவேண்டும் என்று சொல்கிறீர்களே ஏன் சார்?’ என்றெல்லாம் கன்ணீருடன் என்னிடம் கேள்விகேட்பவர்கள் உண்டு. என்ன செய்ய? இயற்கையில் எல்லாவகையான மனிதர்களும் தேவையாக இருக்கிறார்கள். சுற்றுச்சூழல் சமநிலை பேணப்படவேண்டுமே.
டி.செ தமிழனை சந்தித்தேன். உற்சாகமான இளைஞராக இருந்தார். அவரிடம் பேசமுடிந்தது, எனக்கு மிக மனநிறைவை அளித்தது. என்னிடம் கடுமையான மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தார். அப்படி அவர் என்னைப் பற்றிக் கொண்டிருக்கும் பல கருத்துக்கள் அவரது மனப்பிரமைகள் என்பதே என் எண்ணம். நான் அப்படி எதைப் பற்றியும் மிக உறுதியான கருத்துக் கொண்டவன் அல்ல. பல கோணங்களில் யோசித்துப் பார்ப்பவன். அது யதார்த்தமாகவும், வழக்கமான வரிகளை மீறிச் செல்வதாகவும் இருக்கவேண்டும் என விரும்புபவன் அவ்வளவுதான்
ஆனால் நம் தலைமுறையில் அதிகம் வாசிக்கக் கூடிய ஒருவராக இருக்கிறார். இலக்கியத்தை தீவிரமான அர்ப்பணிப்புடன் அணுகுகிறார் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருந்தது. எந்த மாற்றுக்கருத்தையும் தனிப்பட்ட ஐயங்கள் இல்லாமல் விவாதிக்கலாமென்றும், அதிலும் அவருக்கும் எனக்குமான கருத்து வேறுபாடுகள் தமிழில் முக்கால் நூற்றாண்டு பழக்கமுள்ளவை, நானும் அவரும் மட்டும் பேசித் தீர்த்துவிட முடியாதவை என்றும் சொன்னேன். இதில் எந்தத் தரப்பும் சரியாக இருக்கலாம். எதை எழுதிக் காட்டுகிறோம் என்பதே கடைசியில் முக்கியம். அவரது இளமையின் வேகம் எனக்குப் பிடித்திருந்தது. அது இருபது வருடம் முன்புள்ள நான். ஆகவே என்னைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான சந்திப்புதான்.
மாலையில் நண்பர்களுடன் டாம் சிவதாசனின் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு. நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். அரசியல் சினிமா இலக்கியம். இரவு பன்னிரண்டு மணிக்கு செல்வம் என்னைக் காரில் கொண்டு வந்து விட வந்தார். வரும் வழியில் போலீஸ் போதையுடன் கார் ஓட்டுபவர்களைப் பிடிக்க விளக்குடன் நின்றிருந்தது. ஆகவே அப்படியே தேர்ந்த போராளிக்குரிய லாவகத்துடன் பம்மிப் பின்னால் வந்து சுற்றிச் சுழன்று ஒருமணிக்குத் திரும்பிவந்து சேர்ந்தோம். பாவம் செல்வம், கஷ்டப்பட்டுக் குடித்த உயர்தர மதுவின் போதையெல்லாம் அந்தப் பதற்றத்தில் அநியாயமாக இறங்கி வீணாகிப் போயிற்று
இன்று மாலை மீண்டும் நண்பர்களுடன் சந்திப்பு. இம்முறை இலக்கியம் பற்றி மட்டுமே பேசலாமென செல்வம் [“[email protected]“] அன்புடன் ஆணையிட்டார்.