புதிய ஆலயங்கள்

மாயாபூர்

அன்புள்ள ஜெ

சமீபகாலமாக பல இடங்களில் அமைந்துள்ள Iskon கோவில்கள் செல்லும்போது கவனிக்கின்றேன். வருங்காலங்களில், இக்கோவில்கள் உலகளவில் இந்து கலாச்சாரத்தின் பிடிமானமாகவும், இந்து வழிபாட்டின் நவீன மையங்களாக அமையும் என்று தோன்றுகிறது.

அங்கு நான் முக்கியமாக கவனித்தது, இக்கோவில்கள் அமைந்திருக்கும் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறைகள், ஒற்றை வரியில் எளிமையான ‘ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’ மந்திர வழிபாடு, கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு ஜாதி வித்தியாசமில்லாமல், பக்தி உள்ள எவரும் அவ்வியக்கத்துடன் இணைந்து சேவை செய்ய அனுமதி.

பிர்லா மந்திர் கல்கத்தா

முக்கியமாக நாம் எவற்றையெல்லாம் நம் புராதனக் கோவில்களில் அரசு மற்றும் மக்களின் அக்கறையின்மையினால் இனி கடைபிடிக்கவே முடியாதோ என்று நினைப்பவையான, கோவிலின் வளாகத்தை துப்புரவாக வைத்திருத்தல், அர்ச்சனை, சிறப்பு தரிசனம் என்ற வகையில் பக்தியை வியாபாரப்படுத்தாமல் இருப்பது, கோவிலின் வாசலிலே பல கடைகளை வைத்து, வரும் பக்தர்களை அந்தக்கடைகளில் வாங்க கட்டாயப்படுத்துதல் போன்ற பல தொல்லைகள் iskon கோவில்களில் இல்லை.

அவர்களின் சிறு கடைகள் உள்ளே இருந்தாலும் அங்கு வாங்குவதற்காக எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை.

அவர்களின் பெரும்பாலான கோவில்களில் அமைந்துள்ள திருமண மண்டபங்கள் பக்தியுடன் கலாச்சாரங்களையும் வரும் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை வருகிறது.

சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்

சிலரிடம் இவற்றை நான் பகிர்ந்து கொண்ட போது, பலநாடுகளில் இக்கோவில்கள் மதமாற்றம் செய்கின்றனர் எனக்கூறினர்.

அதுவும் எனக்கு இவர்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாக தோன்றவில்லை. பல நாட்டவர்கள் விருப்பப்பட்டு தாமாக முன் வருவதாகவே தோன்றுகிறது.

இக்கோவில் மற்றும் இயக்கத்திற்கு பின் பக்தியைத்தான்டி எந்த வித எதிர்மறையான நோக்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இது பற்றிய உங்களின் கருத்து அறியவே இக்கடிதம்.

நன்றி!

இந்துமதி

புனே.

அக்‌ஷர்தாம், டெல்லி

அன்புள்ள இந்து,

நம்முடைய வழிபாட்டிடங்களையும் தொன்மையான ஆலயங்களையும் இரண்டாகப் பிரிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை தொடர்ந்து நான் எழுதி வருகிறேன். நம்முடைய வழிபாட்டிடங்கள் பலவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அன்றிருந்த போக்குவரத்து சூழல், ஆலயங்களுக்குள் எவர் நுழையலாம் எவர் நுழையக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் ஆகியவற்றை வைத்துப்பார்த்தால் மிகக்குறைவானவர்களே ஆலயங்களுக்குள் நுழைந்து வழிபடும்படி இருந்திருக்கிறது.

சென்ற ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவில் பரம்பனான் ஆலயத்துக்கு சென்றேன். உலகின் இரண்டாவது பெரிய விஷ்ணு ஆலயம் என்று சொல்லப்படும் பரம்பனான் ஆலயத்தொகையில எந்த ஆலயத்திலும் ஒரே சமயம் பத்து பேருக்கு மேல் நின்று வழிபட முடியாதபடித்தான் அதனுடைய அமைப்பு இருந்தது. ஆலயங்களின் கருவறை முகப்பு பகுதியைப் பார்த்தால் அது தெரியும். மிகுதியான நபர்கள் நின்று வழிபடும்படி அவை வடிவமைக்கப்படவில்லை. மிகுதியான பேர்கள் மூலவிக்கிரகத்தை ஒரே சமயம் பார்க்கும்படி அமைந்த ஆலயங்கள் இந்தியாவிலும் அனேகமாக எவையும் இல்லை. 

இன்று போக்குவரத்து பெருகிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக அண்மைக்காலத்தில் நடுத்தர வர்க்கம் கார்களை வாங்கத்தொடங்கிய பின்னர் ஆலயங்களில் கூட்டம் பலமடங்கு பெருகிவிட்டது. பொருளாதார வளர்ச்சி உருவாகும் தோறும் ஆலயங்களுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை மேலும் பெருகும் .ஆலயங்களின் கூட்டம் வருங்காலத்தில் இன்னும் சில மடங்காகும். இந்தியாவின் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டால் இது தொன்மையான ஆலயங்களின் அழிவுக்கே வழி வகுக்கும். 

இவ்வளவு திரளை எதிர்கொள்ளும் வசதிகள்  நமது ஆலயங்களில் இல்லை. இவ்வளவு பேர் உள்ளே இருந்தால் ஆலயத்தின் வெப்பநிலை மிகப்பெருகிவிடுகிறது. விளக்குகள் போன்றவற்றால் அந்த எண்ணிக்கை மேலும் பெருகுகிறது. அந்நிலையில் வெளியிலிருந்து காற்று உள்ளே வரும் பாதைகளை அமைக்க வேண்டியிருக்கிறது. அண்மைக்காலத்தில் நமது ஆலயங்களில் தீப்பாதுகாப்பு இருக்கிறதா என்ற ஆய்வுக்குப் பிறகு, பெரும்பாலான ஆலயங்கள் சிறப்பு நாட்களில் எந்த விபத்தையும் எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்ற முடிவுக்கு நிபுணர்கள்  வந்திருக்கிறார்கள்.மிகச்சிறு பகுதிக்குள் பலநூறு நெரித்து அடித்து நின்றிருக்கிறார்கள்.ஆலயக் கருவறைப்பகுதிக்குள் உள்ளே செல்லும் வழியும் வெளியே செல்லும் வழியும் குறுகியவை. அவற்றின் வழியாக ஒரே சமயம் இரண்டு பேருக்கு மேல் உள்ளே வரவோ வெளியே செல்லவோ இயலாது. 

இத்தனை பெருந்திரள் ஆலயங்களுக்குள் வரும்போது ஆலயம் அழியத்தொடங்குகிறது. சிற்பங்கள் சீரழிகின்றன. ஆலய வளாகங்களுக்குள் கழிப்பறைகள் கட்ட வேண்டியிருக்கிறது. வருங்காலத்தில் மேலும் மேலும் வசதிகள் தேவைப்படும். இப்போதே ஆலயங்களுக்குள் சக்கர நாற்காலிகளுக்கான வழி தனியாக அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. இத்தனை பேரை அனுமதிப்பதாக இருந்தால் அந்த வசதிகள்  கண்டிப்பாக தேவை என்று தான் நான் நினைப்பேன்.

ரணக்பூர், சமணக்கோயில்

ஆலயங்களுக்குள்ளே சிற்ப நெறிகள் ஆகம நெறிகள் அனைத்தையும் பறக்கவிட்டு குளிர்விப்பான்கள் அமைக்கப்படுகின்றன. ஒலிபெருக்கிகள் அமைக்கப்படுகின்றன. பெரும்பாலான இந்து ஆலயங்களில் இரும்புக்கம்பிகளால் பலவகையிலும் வளைக்கப்பட்டு துண்டாடப்பட்டு சிறைக்கொட்டடிகள் போலத் தோற்றமளிக்கின்றன. ஒரு ஆலயத்திற்கு இருக்கவேண்டிய அழகு ,அமைதி, சிற்ப ஒருமை எவையுமே இங்கு இந்தியாவில் மாபெரும் ஆலயங்கள் எதிலுமே இல்லை. 

உடுப்பி போன்ற ஆலயங்களைப்பார்த்தால் ஒரே சமயம் பத்து பேருக்கு மேல் வழிபடும்படி அவற்றின் கருவறை அமைப்பு இல்லை என்பதைப் பார்க்கலாம். சில ஆலயங்களில் தெய்வத்தை சில குறிப்பிட்ட கோணங்களில் பார்க்கும்படி மட்டுமே கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய சிற்பக் காரணங்கள், ஆகமக் காரணங்கள் உள்ளன.இன்றைய சூழல் அனைத்தையுமே இல்லாமல் ஆக்குகிறது. 

ஆலயங்கள் வெறும் கட்டிடங்கள் அல்ல. ஆலயங்கள் தங்கள் அளவிலேயே ஒருவகைச் சிற்ப அமைப்புகள். அந்தச் சிற்ப அமைப்புதான் அவற்றை ஆலயங்கள் ஆக்குகிறது. அது அழிந்தால் அவை வெறும் கட்டிடங்களே. ஆகம முறைப்படியான பூஜையும், சிற்ப சாஸ்திரப்படியான கட்டுமானமும் அமையாத ஆலயம் அந்த ஊருக்கே பழிசேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது

தமிழர்கள் விசித்திரமானவர்கள். நானறிந்தவரை தனிநபர் இல்லங்களுக்கு வாஸ்து இலக்கணமோ, வாஸ்து விதிகளோ இல்லை. வாஸ்து என்பது ஊர்களுக்கே உள்ளது. இல்லங்கள் அதன் பகுதிகள். ஆகவே பழைய ஊர்களில் இல்லங்கள் ஊரின் ஒட்டு மொத்த அமைப்புக்கு உகந்த முறையில் அமைந்திருக்குமே ஒழிய தனி இல்லமாக எந்த வாஸ்து இலக்கணப்படியும் அமைந்திருக்காது. கோட்டைக்கு வாஸ்து சாஸ்திரம் உண்டு, அரண்மனைக்கு உண்டு. ஆனால் நம்மவர் வீட்டுக்கு வாஸ்து பார்ப்பார்கள். வாஸ்து இருந்தே ஆகவேண்டிய ஆலயங்களில் வாஸ்துவை தூக்கி வீசுவார்கள். 

தமிழ்நாட்டில் இன்று தனிநபர் இல்லங்களுக்கு மாய்ந்து மாய்ந்து வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார்கள். அதைச் சொல்ல பல்லாயிரம் போலிகள் கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் வாஸ்து ஒரு அணு மாறினாலும் பிழை என்று சொல்லத்தக்க ஆலயங்களில் வாஸ்து எல்லா நெறிகளும் மீறப்படுகின்றன. ஆலயங்களுக்குள் தாறுமாறாக கான்கிரீட் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. வாஸ்துவின்படி கோபுர முகப்புதான் ஆலயத்தின் முகம். அதிலுள்ள சிற்பங்கள் எல்லாமே அந்த அடிப்படையில்தான் அமைந்துள்ளன. இன்று கோபுரமுகப்புக்கு வெளியே மழையில் கார் வந்து நிற்பதற்காக கான்க்ரீட் போர்டிகோக்கள் கட்டப்படுகின்றன. எவருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை. 

எனில் இத்தனை பேர் வழிபட வேண்டாமா என்ற கேள்வி இருக்கிறது. அவ்வாறு வழிபடுவதற்கு பிர்லா மந்திர் போல மிக வசதியான, சிற்ப அழகுமிக்க, நவீனக் கோவில்களை உருவாக்கலாம். அவற்றை கான்க்ரீட்டில் உருவாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆலயங்களை இடித்து இடித்து கட்டிக்கொண்டிருக்க முடியாது. ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை கான்க்ரீட் கட்டிடங்களை இடித்தாகவேண்டும். சலவைக்கல்லில், கருங்கல்லில் கட்டலாம். இன்றைய தொழில்நுட்பத்தில் மிகச் செலவு குறைவாகவே அவற்றை செய்யமுடியும். சிற்ப வேலையையே அழகுறச்செய்ய முடியும். 

மறுபக்கம், தொன்மையான ஆலயங்களில் அவற்றின் வருகையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு உரிய வழிகளை முன்னரே ஒருமுறை எழுதியிருந்தேன். (அன்று அதற்கு எதிர்வினை ஆற்றியவர்களில் நாத்திகர்களுக்கு ஆலயம் தேவையில்லை என எண்ணம். ஆத்திகர்கள் பலருக்கு ஆலய வழிபாடு, நெறிகள் பற்றி ஒன்றுமே தெரியாது. கருத்து சொல்ல ஒன்றுமே தெரிந்திருக்கவேண்டியதில்லை என்பது நவீன இணைய ஊடக வழக்கம்) 

ஆலயங்களில் நாம் கட்டற்ற திரளை இனிமேலும் அனுமதிக்க முடியாது. முதலில் இத்தகைய எண்ணங்களைக்கேட்கும்போது எல்லாமே ஒவ்வாமை அளிக்கின்றன ஆனால் வேறுவழியில்லை என்பதைக்கொஞ்சம் யோசித்தால் புரிந்துகொள்ள முடியும். (முன்னரே சொல்வதை அலட்சியம் செய்தால் பெரிய விபத்துக்கள் நிகழ்ந்து, அவற்றில் இருந்து கற்றுக்கொண்டு வேறு வழியே இல்லாமல் அந்த முடிவுகளுக்கே வந்து சேரவேண்டியிருக்கும்.)

நம் ஆலயங்களில் ஒரு நாளைக்கு இவ்வளவு பேருக்குமேல் நுழையக்கூடாதென்று நெறி அமைக்கவேண்டும். இப்போதே இந்தியாவின் முதன்மையான காட்டு பகுதிகளுக்குள், சூழியல் பகுதிகளுக்குள் ஒருநாளைக்கு எத்தனை பேர் நுழையலாம் என்பது அறுதியாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஓர் ஆலயத்தில் ஒரு நாள் காலை மாலை என இரு பொழுதிலாக அதிகபட்சம் ஐந்நூறு பேர் அனுமதிக்கப்படலாம். அவர்களுக்கு உயர்ந்த கட்டணம் வசூலிக்கப்படலாம். கட்டணம் அளிக்கும் வசதி இல்லாதவர்களுக்கு அவற்றில் சலுகை அளிக்கலாம். அவ்வாறு அறநிலையத்துறையின் கீழிருக்கும் அனைத்து கோயில்களுக்கும் முன்பதிவு திட்டம் வருமெனில் ஒரு கோயிலில் பெரும்கூட்டம் முண்டியடிக்க மிக அருகிலேயே இன்னொரு ஆலயம் ஓய்ந்துகிடப்பது நிகழாது. எல்லா ஆலயங்களிலும் சீராக மக்கள் செல்வார்கள் என்றால் இன்றிருக்கும் நெரிசலில் பெரும்பகுதி இல்லாமல் ஆகிவிடும். புதிய ஆலயங்களை அமைப்போமெனில் வழிபாடு இன்னும் வசதியானதாக நவீனமானதாக ஆகிவிடும். 

இஸ்கான், பெங்களூர்

பலருக்கு இன்னும் கூட உண்மை நிலவரம் புரியவில்லை. ஆலயங்களுக்கு இன்று சென்று கொண்டிருப்பவர்கள் நடுத்தர வயது தாண்டியவர்கள். பல்வேறு வகையான குழந்தைப்பருவ நினைவுகளும் அதற்குரிய உளநிலைகளும் கொண்டவர்கள். இளைய தலைமுறையினர் ஆலயங்களுக்குச் செல்வது மிகக்குறைந்து வருகிறது .ஏனெனில் ஆலய வழிபாடென்பது பெரும் துன்பம் தருவதாக மாறியிருக்கிறது. ஆறு ஏழு மணி நேரம்  நீண்ட வரிசைகளில் காத்து நின்றிருக்கவேண்டியிருக்கிறது. சிறுநீர் கழிக்க முடியாது .வியர்வை வழிந்து கொட்டும் .அதன் நடுவே பெரிய மனிதர்கள் தனி வழியே சென்று கொண்டும் வந்துகொண்டும் இருப்பதை பார்க்க நேரிடும். வழிபடுமிடத்தில் அரைக்கணம் நிற்க முடியாது செல்க செல்க என்று உந்துதல், வசைகள். பல ஆலயங்களில்  போலீஸ்காரர்கள் தடியாலடிக்கிறார்கள். கையால் பிடித்து உந்திவிடுகிறார்கள். ஓர் ஆலயத்தை உளநிறைவுடன் சென்று வணங்கி வழிபட்டு மீள்வதென்பது முதன்மையான ஆலயங்களில் பெரும்பாலும் எங்குமே இயல்வதாக இல்லை 

அத்துடன் நம் ஆலயங்களில் இன்று எந்த நெறிகளும் பேணப்படுவதில்ல்லை. பிரசாதம் வாங்கிய பிறகு தொன்னைகளை அங்கேயே வீசிச் செல்கிறார்கள். சந்தனத்தையும் குங்குமத்தையும் தூண்களில் தேய்க்கிறார்கள். எண்ணெயைக்கண்ட இடத்தில் வீசுகிறார்கள். இருண்ட அழுக்கான இடங்களாக நமது ஆலயங்கள் மாறிவிட்டிருக்கின்றன. அவற்றை சிறப்புற நம்மால் பேணமுடியவில்லை. நவீன ஆலயங்களை திட்டமிட்டு வடிவமைக்கலாம். அங்கே நெறிகளை உருவாக்கி கறாராகப் பேணலாம். பிர்லா ஆலயங்கள், இஸ்கான் ஆலயங்கள் மிக நேர்த்தியானவை. மிகச்சுத்தமானவை.

முதன்மைக் கேள்வி என்பது இறை சாந்நியத்தியம் பற்றியது. தொன்மையான ஆலயங்களில் அந்த இறைதிகழ்வு இருப்பதனால் அங்கே பெருங்கூட்டம் வருகிறதென்றும், புதிய ஆலயங்களில் அவ்வாறு இறைதிகழ்வ இல்லை என்றும் ஒரு கூற்று உண்டு. ஒன்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.பெரும்பாலும் புகழ்பெற்ற ஆலயங்கள் ஊடகங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக புகழ் பெற்றிருப்பவையே ஒழிய, அவ்வாறு இறைதிகழ்வால் புகழ் பெற்றவை அல்ல. அதேபோன்று எவரும் அறியாது விரிந்து கிடக்கும் ஆலயங்கள் பலவும் இறைதிகழ்வு இல்லாதவையும் அல்ல. 

இதை தனிப்பட்ட முறையில் உறுதியாக என்னால் கூற முடியும்ஓர் உதாரணம் தஞ்சையில் திருவெண்காடு என்னும் ஊரில் உள்ள ஆலயம். அனேகமாக எவரையுமே அங்கு நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் வழிபாட்டு வழக்கம் உள்ளவர், இறையுணர்வு உள்ளவர், அதைக் கடந்த நுண்ணுணர்வு உள்ளவர் அந்த ஆலயம் எத்தனை முதன்மையானது ,எத்தனை இறைதகழ்வுள்ளது என்பதை அங்கு சென்றதுமே உணர முடியும். அவ்வாறு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் கைவிடப்பட்டுக்கிடக்கின்றன. 

ஆலயத்தின் இறைதிகழ்வென்பது அதை நிறுவியபோதே அங்கு  வந்துவிடுவதல்ல. அந்த ஆலயத்தின் ஒட்டுமொத்த சிற்ப அமைப்பு அங்கு இறைதிகழ்வுக்கான முதன்மைக்காரணம். அதற்கப்பால் அது முறையாக இறைநிறுவுதல் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பது .மூன்றாவதாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முறை தவறாது அங்கு இறைவழிபாடு நிகழ்ந்தாகவேண்டும் ,அதற்குரிய அனைத்து சடங்குகளும் முறையாகச் செய்யப்பட்டாக வேண்டும் என்பது. சரியாக இறைச்சடங்கும் மறைச்சடங்கும் செய்யப்படும் ஆலயங்களில் இறைதிகழ்வு கண்டிப்பாக இருக்கும். 

இஸ்கான், அஹமதாபாத்

இன்று ஒழிந்து கிடக்கும் பெரும் ஆலயங்களையும் அவ்வாறு மீண்டும் வலுவாக இறைநிறுவுகை செய்ய முடியும்.புதிய ஆலயங்களில் அவற்றுக்கான சடங்குகளையும் முறைமைகளையும் சரியாக செய்வோமெனில் அவை இறைதிகழ்வுக்குரிய இடங்களே .அத்தகைய எத்தனையோ புதிய ஆலயங்கள் தமிழகத்தில் இன்று உள்ளன. ஆகவே புதிய ஆலயங்களை வெறும் சுற்றுலாத்தளங்களாகப் பார்க்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் அவை இன்று நாம் வணங்கும் பழைய ஆலயங்களைப்போலவே முதன்மை பெறக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

ஆலயங்களில் வழிபட வருபவர்களுக்கு நடத்தை நெறிகள் வகுக்கப்படவேண்டும். தூய்மை நெறிகள் உருவாக்கப்படவேண்டும். முழுமையாகவே ஆலயம் அமைதியும் தூய்மையும் கொண்டதாக இருக்கவேண்டும். அவை இன்றைய பிர்லா மந்திர் போன்ற பேராலயங்களில் காணக்கிடைக்கின்றன. இஸ்கானின் பெரும்பாலான ஆலயங்கள் மிக வலுவான இறைதிகழ்வு கொண்டவை. ஏனெனில் மிகத்தீவிரமான இறைநம்பிக்கை கொண்டவர்களால் அணுவிடை தளராத இறைச்சடங்குகளும் மறைச்சடங்குகளும் செய்யப்படுபவை அவை. 

இஸ்கான் பற்றிய அவதூறுகளில் பெரும்பாலானவை அவர்களிடமிருக்கும் அந்த தீவிரத்தன்மையைக்கண்டு அஞ்சுபவர்களால் உருவாக்கப்படுபவை. அவர்களுடைய தீவிரத்தன்மை பழமைவாதப் பார்வை கொண்டதென்று சிலர் சொல்லலாம் .பக்தியை மட்டுமே முன்னிறுத்துவது என்பதனால் எனக்கு பெரும்பாலும் இஸ்கான ஏற்பு இல்லாததுதான. ஆனால் ஒரு மத மரபெனும் முறையில் அந்த தீவிரமே அவர்களுடைய ஆலயங்களை இறைதிகழ்வு கொண்டதாக ஆக்குகிறது. 

அவர்கள் மதம் மாற்றுகிறார்கள்  என்பதோ, இன்னும் பிறவோ அவதூறுகளைக் கூறுபவர் யார்? எந்த ஆதாரங்களை முன் வைக்கிறார்கள்? அமெரிக்கா போன்று அடிப்படையில் கிறிஸ்தவ மனநிலை கொண்ட தேசங்களில் அவர்கள்  மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து உருவாக்கி, அவர்களின் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைக்க நினைக்கிறார்கள். அது இயல்பானதே. இந்தியாவில் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கு மேலாக அவர்கள் மிகத்தீவிரமாக இயங்கி வருகிறார்கள். அரசியல்வாதிகள் உருவாக்கும் சில வம்புகள் அல்லாமல் அவர்கள் மேல் எந்த குற்றச்சாட்டும் உருவானதில்லை.

மத மாற்றம் என்றால் என்ன? தங்களுடைய தரப்பை முன்வைக்க அதை பிறர் ஏற்கும்படி செய்ய  எந்த மத நம்பிக்கையாளனுக்கும் உரிமை உண்டு. இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அந்த உரிமை உண்டு என்று நான் வலியுறுத்திக் கூறிவருகிறேன். மதமாற்றம் செய்யும்பொருட்டு பொய்ப்பிரச்சாரம் செய்வதோ, கட்டாயப்படுத்துவதோ, ஏமாற்றுவதோ, அரசியலில் ஈடுபடுவதோ பிழை. ஆனால் அப்பிழைக்காகக்கூட மதமாற்ற உரிமை தடுக்கப்படலாகாது. அப்பிழை சுட்டிக்காட்டப்படலாம். அதைச்சொல்லி மதமாற்றத்தை தடைசெய்யலாம் என்றால் மதஉரிமையை அரசின் கையில் அளிப்பதாகவே பொருள்படும். அது தனிமனிதனின் ஆன்மிகச்சுதந்திரம் பறிக்கப்படுவதே. நான் எனக்கு கிறிஸ்தவமோ இஸ்லாமோ மீட்பின் வழி என தெரிந்தால் அரைநால்கூட தயங்கமாட்டேன், மதம் மாறிவிடுவேன். அது என் உரிமை. அதில் அரசோ சமூகமோ தலையிடக்கூடாது.

அந்த உரிமையை இஸ்கான்காரர்களுக்கு மட்டும் மறுப்பதற்கு எவருக்கு அதிகாரம் உள்ளது? மதமாற்றம் இஸ்கான்காரர்கள் செய்தால் மட்டும் அது தீங்காகிறதா என்ன? மதமாற்றத்திற்கு அவர்கள் ஏதேனும் மோசடிகளைச் செய்கிறார்களா? மந்திர தந்திர வித்தைகளை பிரச்சாரம் செய்கிறார்களா? அல்லது பொய்களையோ சூழ்ச்சிகளையோ உருவாக்குகிறார்களா? எவ்வகையிலேனும் எந்த தேசத்திலேனும் அரசியலில் ஈடுபடுகிறார்களா? இல்லாதபோது அந்தக்குற்றச்சாட்டுக்கு என்ன பொருள்? 

நமது எதிர்கால ஆலயங்கள் பிர்லா மந்திர்களைப்போல இஸ்கான் ஆலயங்களைப்போல அமையவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.  அவ்வாறு அமையும் என்று நம்புகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசு விழாவில் நான்…
அடுத்த கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சியில் இன்னும் ஒரு நாள் இருப்பேன்…