ரோஸ் ஆன்றோ இல்லத்திறப்புவிழா, ஓவியர் சந்துரு

29 ஜூன் 2022ல் படிகம் இதழாசிரியர் ரோஸ் ஆன்றோவின் இல்லம் திறப்புவிழா. வில்லுக்குறியில் இருந்து திரும்பிச் செல்லும் பாதையில் மேலும் பிரிந்து குளுமைக்காடு என்னும் ஊர். குளுமையை உருவாக்குபவை மழைக்காடு போல செறிந்த மரங்கள்.

ரோஸ் ஆன்றோ இல்லத்தை நான் திறந்து வைக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். அருண்மொழி, நான், லட்சுமி மணிவண்ணன் மூவரும் கிளம்பி சென்றோம். அங்கே ஏற்கனவே சந்துரு மாஸ்டர் துணைவியுடன் வந்திருந்தார். புகைப்பட நிபுணர் ஜவகர்.ஜி , நட சிவகுமார், முஜிபுர் ரஹ்மான், ஆகாசமுத்து, ஓவியர் நடராஜன் கங்காதரன் என நண்பர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

அழகான வீடு. இப்போதெல்லாம் கன்யாகுமரி மாவட்டத்தில் வீடுகள் பெரும்பாலும் நேர்த்தியானவை. இந்த ஊர் கொத்தனார்களுக்கு சமானமான கைத்திறனை இந்தியாவிலெங்கும் பார்க்கமுடியாது. அகன்ற கூடம். மாடியில் ஒரு குட்டி நீச்சல்குளம். அங்கே தண்ணீருக்காக கட்டிய தொட்டியில் தன் சொந்தக்கார பையன்கள் குளிப்பதை கண்டு அதையே நீச்சல்குளமாக ஆக்கிவிட்டதாக ஆன்றோ சொன்னார்.

காலை ஒன்பதரை மணிக்கு திருத்தந்தையர் பைபிள் உரையாற்றி புனித நீர் தெளித்து இல்லத்திறப்புவிழாவை தொடங்கினர். நான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தேன். ஆன்றோவின் மனைவி முதல் அடியெடுத்து உள்ளே சென்றார். வழக்கம்போல பால் காய்ச்சும் விழா.

காலையுணவு ஆன்றோ இல்லத்தில். மாடியில் ஓர் இலக்கியநிகழ்வை ஒருங்கமைத்திருந்தார். ஓவியர் சந்துரு எழுதிய ’திருத்தப்பட்ட பதிப்பு ‘என்னும் நூல். அவருடைய ஓவியங்களைப் பற்றிய உதிரிக் கருத்துக்களும் ஓவியத்துக்கான முன்குறிப்புகளும் கொண்டது.

நூலை நான் வெளியிட லக்ஷ்மி மணிவண்ணன் பெற்றுக்கொண்டார். ஜவகர் ஆகியோர் பேசினர். நான் ஒரு சிற்றுரை ஆற்றினேன்

ஒருமுறை ஓவியர் எம்.வி.தேவனை பார்க்கச் சென்றிருந்தேன். வீட்டுக்கு வெளியே காத்திருக்கையில்  உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டிருந்தது மெல்லிய சொற்களான இசை. நான் அது என்ன பாட்டு என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று முயன்றேன். அது இசையாகவும் இல்லை, இசைத் தன்மையும் இருந்தது.

பின்னர் அறைக்குள் சென்றபோது ஓவியர் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த ஓவியத்தின் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருந்தது அந்த இசை. அந்த இசையை அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. பாறையின் இடைவெளியை நீர் நிரப்புவதுபோல ஓவியத்தை அந்த இசை நிரப்பியது.

இந்நூல் சந்துருவின் ஓவியங்களின் இடைவெளியை நிரப்புவது. அவருடைய ஓவியங்களை புரிந்துகொள்வதற்கான ஒரு மேலதிக துணை. அந்நூலில் அவர் போகிற போக்கில் பல குறிப்புகளை எழுதிச் செல்கிறார்.எல்லாமே கிறுக்கல்கள். ஓவியக் கிறுக்கல்கள். மொழிக் கிறுக்கல்கள்.அவருடைய உள்ளம் செயல்படுவதை காட்டுவது இந்நூல். அவருடைய ஆழுளம் பதிவானது.

இந்த நூலுக்கு இணையான நூல்களை டாவின்சி போன்றவர்கள் வரைந்துள்ளனர். அதில் ஏராளமான ஓவியக்கிறுக்கல்கள் உள்ளன. அவர் எண்ணிய ஓவியங்கள், பின்னர் வரைந்த ஓவியங்கள்,அவருடைய கனவுகள். குழந்தைத்தனமாக வெளிப்படும் அவருடைய ஆழ்மனத்தின்  சிதைவும் சிதறலும். ஓவியம் வரைந்த பின் ஓவியர் தூங்கும்போது உளறுவதுபோன்ற நூல். அதைப்போன்ற ஒன்று சந்துருவின் நூல்.

நான் முன்பு ஒரு முறை ஓவியர் சந்துருவுடன் சென்னை மியூசியம் இசை அரங்கில் பேசிக்கொண்டிருந்தேன் .அது கௌதம் சன்னாவின் குறத்தியாறு என்னும் நூல் வெளியீட்டு விழா .அப்போது என்னிடம் அவர் கரியுரித்த பெருமான் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஹொய்ச்சாள கரியுரித்த பெருமான் முதல் சோழர், நாயக்கர் காலம் வரை அவர் கொண்ட உருமாற்றங்கள் பற்றி.

பேசப்பேச அவரால் சொல்லமுடியாதவற்றை தன் நோட்டுப் புத்தகத்தில் வரைந்து கொண்டிருந்தார். பேசிமுடித்தபோது தரையெங்கும் தாள்களில் ஏராளமான கரியுரித்த பெருமான்கள். அங்கே பேச்சை ஓவியம் நிரப்பியதுபோல இங்கே ஓவியத்தை பேச்சு நிரப்புகிறது.

இந்நூலில் சோழர்கால பட்டிகை ஒன்றில் இருந்த ஓரு சிற்பத்தை கோட்டோவியமாக ஆக்கியிருக்கிறார் சந்துரு. ராமனிடம் கணையாழி கொண்டு வந்து கொடுக்கும் அனுமன். ராமன் முன் பணிந்து வாய்பொத்தி நிற்கிறது அனுமக்குரங்கு. அதற்கருகே இன்னொரு வடிவை வரைந்திருக்கிறார். ராமனின் பின்பக்கம் நிஜக்குரங்கு மிக அலட்சியமாக, மிகமிகக் குரங்குத்தன்மையுடன் நின்றுகொண்டிருக்கிறது. குரங்கு நாம் அதை பிடிப்போம் என அஞ்சுவதில்லை. பிடித்துத்தான் பாரேன் என்னும் உடல்மொழி கொண்டிருக்கும். அப்படி நிற்கிறது அந்தக் குரங்கு.

ஒரு காட்சியில் அதை வரைந்தவனும் ககல்லும்போதே அது ஓவியம். அந்தக்காட்சியில் அக்குரங்கில் இருக்கிறார் சந்துரு. நாமெல்லாம் அறிந்த அந்த சின்னக்குரங்கு. அடங்காதது. மையப்பாதைகளில் செல்லாமல் கிளைதாவிச் செல்வது.

இன்னொரு ஓவியம். அதில் மேயும் மாட்டின் முழு எலும்புக்கூடும் தெரிகிறது. அந்த ஓவியம் எது? அதை நான் பிம்பேத்கா குகை ஓவியங்களில் கண்டிருக்கிறேன். குகை ஓவியர்கள் விலங்குகளுக்கு எலும்புகளை வரைந்துவிடுவார்கள். முழு எலும்புக்கூட்டையும் உயிருள்ள விலங்குக்குள் வரைவார்கள். ஏனென்றால் அவர்கள் மாட்டை உரித்து அறிந்த உடற்கூறு அது. அந்த விலங்கு அவர்களின் கனவில் வருவது. அவர்கள் வரைந்தது தங்கள் கனவுகளைத்தான்.

முப்பதாயிரமாண்டுகள் கடந்து வந்து இன்றுள்ள கலைஞனில் அந்த கனவு வெளிப்படுகிறது. அதை ஏந்திக்கொள்ளும் கிறுக்குத்தனங்களுடன் சுட்டித்தனங்களுடன் அவன் திகழ்கிறான். அவருக்கு என் வணக்கம்.

பேசி முடித்ததுமே நான் திரும்பவேண்டியிருந்தது. மதியம் கடந்து ஒருவரைச் சந்திக்கவேண்டும். அதற்கு முன் தக்கலைக்குச் சென்று சிவசங்கரை பார்க்கவேண்டும். அவர் நோயுற்றபின் சென்று பார்க்கவில்லை. தள்ளித்தள்ளிச் சென்றுகொண்டிருந்தது. ஆகவே உடனே கிளம்பினேன். ரோஸ் ஆன்றோ தந்த ஒரு கோப்பை அடைப்பிரதமனை மட்டும் குடித்தேன். அற்புதமான பிரதமன்.

தக்கலைக்குச் சென்று சிவசங்கரை பார்த்தேன். கொஞ்சம் தளர்ந்திருக்கிறார். அது இதயநோய்க்கான மருந்துகள் அளிக்கும் களைப்பு. ஆனால் தொடர்ந்து பணியாற்றுகிறார். அம்பேத்கர் பற்றிய ஒரு நூலை மொழியாக்கம் செய்கிறார். ஒரு நாட்டாரியல் தொகுப்பு உருவாக்குகிறார். இந்த உடல்நிலையில் வேலைசெய்வது கடினம். ஆனால் வேலை செய்தாகவேண்டும். இல்லையேல் எழுத்தாளனின் அகம் சோர்ந்துவிடும். நான் விடாமல் வேலைசெய்யவே சொன்னேன். அரைமணி நேர அலகுகளாக நடுவே ஓய்வெடுத்தபடி வேலைசெய்வதே நல்லது.

பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். மழை ஒன்று நடுவே வந்து சென்றது. ஒளிகொண்ட மலைகளைப் பார்த்தபடி பார்வதிபுரம்.

புகைப்படங்கள் ஜவகர் ஜி

முந்தைய கட்டுரைமைத்ரி துளியின் பூரணம் – கிஷோர் குமார்
அடுத்த கட்டுரைஅரசியல் கவிதை பற்றி கடைசியாக- கடலூர் சீனு