அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.நலமாக இருக்கிறீர்களா?நீங்கள் என்னை மறந்திருக்கக்கூடும்.தங்களுடன் பேசமுடியாதபடி சூழ்நிலை,மனநிலை.நான் ‘காடு’ படித்துமுடித்து வெகுகாலம் ஆகிவிட்டது.ஆனால் இப்போதும் காடு பற்றிய எண்ணங்கள்,கேள்விகள்,வியப்புகள்.மனமெங்கும் சொற்கள்,சொற்கள்,சொற்கள்.உங்களுடன் பேசினால் தான் அந்த சொற் கலவரத்தை அடக்கமுடியும் .
வாசிப்பை ஒரு பொழுது போக்காகக் கொண்டிருந்த எனக்கு அவற்றை என் எண்ணங்களோடு சுமந்து கொண்டு அலைவது ஒரு புதிய அனுபவம்.காடு சிந்தனை முழுவதும் நிறைத்துக்கொண்டு விரிகிறது.
மனிதர்கள் எத்தனை வகை!நல்லவர்கள் ,கெட்டவர்கள்.
பாதி நல்லவன் ,பாதி கெட்டவன் என்று உண்டா!?குட்டப்பன் எந்தவகை.சினேகம்மையுடனான அவன் உறவு அவனைக் கெட்டவன் என்றே காட்டியது.ஆனால் அவன் உதவும் குணம் உள்ளவன்,உழைப்பாளி,ரெசாலத்தின் மன உணர்வுகளை உணர்ந்தவன்,அந்த இரட்டையர்களின் காதலை இழிவு படுத்தாமல் இயல்பாய் ஏற்றுக்கொள்பவன்.அவன் நல்லவன்.அவன் பற்றிய கண்ணோட்டத்தை வெகு லாவகமாகத் தடம் மாற்றிவிடுகிறீர்கள்.
நுட்பமான பாத்திரப்படைப்பு.
நீங்கள் காமத்தைக் கையாண்ட விதம் மீண்டும் ஆண் எழுத்தாளரின் சுதந்திரம் அங்கே தெரிந்தது.இங்கு காமம் என்றால் அசிங்கம்.அது அரை இருட்டு சங்கதி.வெளிச்சத்தில் வேண்டாத ஒன்று.எப்படி..நைட் பிடிச்சிருந்துதா ?என்று கணவன் கேட்டால் மனைவி வெட்கப்பட்டுத்தான் ஓடவேண்டும்.அவள் அங்கே விரிவாய்ப் பதில் கொடுத்தால் அவள் கற்புக்குச் சற்று மாற்றுக் குறைவே.காட்டில் காமத்தை அவர்கள் just like that கடக்கும் விதம் எனக்கு வியப்பையும் சற்று அசௌகரிய உணர்வையும் தந்தது.
நீலி பற்றிய சித்தரிப்பு அவளை ஒரு கற்சிலை போலக் காட்டியது.அவள் என்ன வன நீலியா?அதனால் தான் கிரிதரனால் அந்தக் காட்டின் மேல் காதல் கொண்டு அதை ரசித்துக் கிடந்ததைப் போல்,நீலி மேல் மோகம் கொண்டு நெருங்கியும் அவனால் ரசிக்கத்தான் முடிந்தது.அவளை அடைய முடியாமலேயே போனதோ?தனிமை எப்போதும் அவனை சுய இன்பத்திற்கே இட்டுச்செல்கிறது.ஆனால் நீலியுடனான தனிமையில் அவன் மனம் மட்டுமே துள்ளிக்கிடக்கிறது.
அவன் காமம் காணாமல் போவது பெரும் விந்தை.அவளை ஒரு வன தேவதையாக மனதில் வரித்துக் கொண்டதால் பறிக்கப்படாத மலராகவே அவள் உதிர வேண்டும் என்று எண்ணினீர்களா? ஆனாலும் ஒரு சாதாரணப் பெண்ணாக அவளுக்காக மனம் வேதனை கொள்கிறது.
நாவலின் கடைசி ஐந்து பக்கங்களில் நான் அடைந்த தவிப்பு நான் நீலியாகவே மாறித் துடித்தேன்.எத்தனை சுலபமாக முடிந்து போனது.இதற்குத்தானா இத்தனை தவிப்பு,தேடல்,கற்பனை,காதல்.
வேட்டையாடப்பட்ட மிளாவைப்போல் கிரிதரன் அங்கே பரிதாபமாய்த் தெரிந்தான்.விருப்பத்திற்கு நேர் எதிர் திசையில் பயணிக்கவேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் பொதுவான ஒன்றோ?
ஆழமாக யோசித்தால் நம் வாழ்க்கையைப் பிறர் தான் வாழ்கிறார்களோ என்ற சந்தேகம் எழும் அபாயம் உள்ளது.பிடித்ததைச் செய்யவும் ,நினைத்ததைச் சொல்லவும் முடியும் என்றால் அது தான் வரமா?
நீங்கள் ஓரினச்சேர்க்கை ஆதரவாளரா?அந்த இரட்டையர்களின் காதல் வெகு சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பே நீங்கள் இதைப்பற்றிச் சொல்லி இருப்பது உங்கள் மேல் மதிப்பைக் கூட்டுகிறது.compromise செய்து கொள்ளாத தங்களின் எழுத்துக்களை நான் விரும்புகிறேன்.உங்களை எப்படியாவது பார்த்துப் பேசவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் போல இந்தநாவலை முடிக்கும் போதும் பெரும் ஆவலாய் முட்டிமோதுகிறது.
ரெசாலதிர்க்கும்,தேவாங்கிர்க்கும் இடையேயான பிணைப்பும் கூட சுலபமாய்க் கடக்கமுடியாமல் மனதை அழுத்தித் தடம் செய்தே செல்கிறது. ஆனால் தேவாங்கை அவன் இழப்பான் என்று உள் மனம் சொல்லியபடியே இருந்தது.மிகுந்த விருப்பம் கொண்டவை எப்போதும் தட்டிப்பறிக்கப்படும் என்பது உலக நியதி தானே?
கர்நாடகாவின் கபினி ஆற்றை ஒட்டியுள்ள நாகர்ஹோலே காடு நான் வெகுவாக ரசித்த ஒன்று.அந்த அனுபவங்களை மீண்டும் ஒருமுறை புரட்டிக்காட்டியது தங்களின் ‘காடு’.’காட்டில் உள்ளது எல்லாம் நமக்கே சொந்தம் என்றென்னும் நகர புத்தி’ என்று நாவலின் ஒரு வரி எத்தனை வீரியமானது!!நாம் அப்படித்தானே எண்ணுகிறோம்.அத்தனை உரிமை எடுத்துக்கொள்ளும் நாம்,நீர் தேடி மிருகங்கள் ஊருக்குள் வந்தால் ‘யானைகள் அட்டகாசம்’என்று அறிவித்து அலறுகிறோம்.காட்டிற்குள் சுற்றுலா என்ற பெயரில் காமிராவும் கையுமாகக் கொத்துக்கொத்தாக வாகனங்களில் அலையும் நாம் செய்வது அட்டகாசம் இல்லையா?வனங்களை இழந்துவிட்டு வாழப் பழகிவிட்ட நாம் கொடிய மிருகங்கள் ஆனால் துரதிஷ்டசாலிகள்.
நான் ஒரு தேர்ந்த வாசகி இல்லை.சங்க இலக்கியம் பற்றியோ,குறிஞ்சி,பாலைத் திணைகளோடு பொருத்திக்கொண்டோ நான் இந்த நாவலை அணுகவில்லை.பெரும் பசி கொண்டவனுக்குக் கிடைக்கும் உணவு வயிறு நிறையும். சந்தோசமும்,சுவையும்,பரிமாறப்பட்ட சுமுகமான சூழலும் தான் மனதில் நிறையும்.உணவின் ஆதி அந்தங்களை அங்கே அவன் அறிந்திருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.எல்லோரும் அணுகும் வண்ணம் உங்கள் எழுத்துக்கள் எளிமையாய் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.உங்கள் எழுத்துக்களை எனக்கு அறிமுகம் செய்த நண்பர், மற்ற எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் உங்களின் எழுத்துக்கள் சற்று அணுகக் கடினமாக இருக்கும் என்று சொன்னார்.ஆனால் எனக்குப் பிரச்சனையாக இல்லை.வளர்ந்தவர்களுக்குத்தான் அது பெரும் வனம்.திரும்பும் பாதை பற்றிய அக்கறையும்,விலங்குகள் பற்றிய அச்சமும். குழந்தைக்கு அது அழகிய வனம்.அவ்வளவே.ரசித்து மகிழவேண்டும்,நீள அகலங்களை ஆராய்ந்து கொண்டிருக்கத் தேவை இல்லை.உங்கள் எழுத்துக்களை நான் அப்படித்தான் அணுகுகிறேன்.
‘காடு’ பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம்.உங்கள் நேரம் மதிப்பு மிக்கது.ஆகவே இத்துடன் முடிக்கிறேன்.விரிவான எதிர் வினைகளுக்கு உங்களுக்கு நேரம் இருப்பதில்லை,ஆனாலும் சில வரிகளேனும் பதிலாக எதிர் பார்க்கிறேன்.உடல்,மன நலனைப் பேணவும்.நன்றி.
என்றும் அன்புடன்,
சுஜாதா செல்வராஜ்,
பெங்களூர்.
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய வாழ்விலே ஒருமுறை மீண்டும் படித்தேன். களம் ஒரு சிறுகதை போலுள்ளது. உங்களுடைய தற்காப்பு முயற்சிகள் கண்முன் காட்சியாகிச் சிரிப்பை வரவழைத்தது. ஏனோ அசோகமித்திரனின் புலிக் கலைஞனும், புதுமைப்பித்தனின் காஞ்சனையும் ஒருங்கே நினைவில் வந்தன. காரணம் புரியவில்லை
—
ரவிகுமார்
கிருஷ்ணகிரி
ஜெயமோகனின் காடு:கரு. ஆறுமுகத்தமிழன்
காடு,வாசிப்பு – கடிதங்கள்