சம்ஸ்கிருதம் குறைவான மலையாளம்

அன்புள்ள ஜெ

நாமக்கல் கட்டண உரை பற்றிய அறிவிப்பை கண்டேன். வாழ்த்துக்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆன அரங்கின் தேவை பற்றி நீங்கள் எண்ணுவது புரிகிறது.

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வணக்கங்கள்…

என் பெயர் சரண்யா. தஞ்சையில் இருந்து எழுதுகிறேன்.. அண்மைக் காலங்களில் தமிழல்லாத பிற திராவிட மொழிகள் கற்கலாம் (இலக்கியச் சுவை அறிய வேண்டி) என ஆவல் வந்ததின் விளைவாக மலையாள மொழி கற்கத் தொடங்கினேன். தற்போது ஒரு 70% மலையாளம் பேசவும் அதன் லிபி படிக்கவும் தெரியும்.

பழமையான இலக்கியங்கள் வாசிக்கலாம் என ‘ராமசரிதம்’ தொடங்கினேன். அது ஏறக்குறைய தமிழ் போலவே இருக்கிறது. சமகால இலக்கியம் வாசிக்கலாம் என சிறந்த எழுத்தாளர்களை இணையத்தில் தேடி தக்கழி சிவசங்கரன் பிள்ளை மற்றும்

வாசுதேவன் நாயர் ஆகியோரின் நூல்களை மின்னூலாக வாங்கி முதலில் தகழியாரின் ‘கயறு’ (കയർ) தொடங்கினேன். உட்பொருள் கனமாக இருந்தாலும் பெருமளவு சமஸ்கிருதச் சொற்கள் இருப்பதால் வாசிப்பதில் பல நேரம் தடுமாறுகிறேன். திராவிட இயல்புடைய சொற்களும் சமஸ்கிருதமும் ஒரே படைப்பில் வாசிக்க எனக்கு கடினமாக இருப்பதாக உணர்கிறேன்.

பெரும்பாலான வெகுஜன நாவல்களைக் (Prathilipi app) கூட அதே Style பயன்படுத்தி எழுதுகிறார்கள் என நினைக்கிறேன்.

எனக்கு தயை கூர்ந்து திராவிட மொழியாள்கை அதிகமும் சமஸ்க்ருத வாக்குகள் குறைவாகவும் இருக்கும் மலையாள படைப்புகள் மற்றும் எழுத்தாளர்களின் பெயர்களை வாசிப்பதற்கு பரிந்துரைக்க வேண்டுகிறேன். புதினம், கவிதை, சிறுகதை என எதுவாயினும் சரி.

நன்றிகளுடன்

சரண்யா சச்சிதானந்தம்.

தஞ்சை.

***

அன்புள்ள சரண்யா

மலையாளமே தொல்தமிழும் சம்ஸ்கிருதமும் இணையாகக் கலந்ததுதான். ஆகவே சம்ஸ்கிருதம் கலவாத மலையாளம் என்பது மிக அரிதானது.

அதிலும் மலையாள அறிவியக்கம் என்பது பெரும்பாலும் சம்ஸ்கிருதச் சாய்வு கொண்டது. ஆகவே ஒரு நூல் நவீனமாக ஆகுந்தோறும், அறிவாந்தது ஆகுந்தோறும் சம்ஸ்கிருதம் கூடிவரும்.

பச்சமலயாள இயக்கம் என ஓர் இயக்கம் தொடங்கியது. அதன் முன்னோடிகளில் ஒருவர் எம்.கோவிந்தன். சம்ஸ்கிருதச் சொல்லாட்சிகளைக் குறைப்பது அவ்வியக்கத்தின் நோக்கம். நான் அவ்வியக்கத்தைச் சேர்ந்தவன். என் ஆசிரியர் ஆற்றூர் ரவிவர்மா எம்.கோவிந்தனின் மாணவர். ஆனால் அவ்வியக்கம் வெற்றிபெறவில்லை. மலையாளத்தில் நான் சம்ஸ்கிருதம் குறைவாக எழுதுபவன்.

மலையாள எழுத்துக்களில் குறைவான சம்ஸ்கிருதம் கொண்ட எழுத்து வைக்கம் முகம்மது பஷீர் எழுதியது (ஆனால் வேடிக்கையாக சம்ஸ்கிருதச் சொல்லாட்சிகளை பயன்படுத்தியிருப்பார்)

கல்பற்றா நாராயணன், டி.பி.ராஜீவன் போன்றவர்களின் நூல்களிலும் ஒப்புநோக்க சம்ஸ்கிருதம் குறைவு

ஜெ

முந்தைய கட்டுரைஜூலை 13-குரு பூர்ணிமை,வெண்முரசு நாள்
அடுத்த கட்டுரைகபிலன், முதல்கவிஞன்