பாபா ராம்தேவ்-கடிதம்

அன்புள்ள ஜே,

காழ்ப்புணர்ச்சி கொண்ட, பண்படாத, தமிழர்களைப் புரிந்துகொள்ளத் தவறிய, இலக்கிய நீட்சி இல்லாத என் மனது,  நீங்கள் கொடுத்த பதிலும்,  திராவிட சார்புடைய முத்துக்குமார் கேட்ட கேள்வியும் மதத்துக்கான வரையைறையை உருவாக்குவதாகவும், பிறகு உங்களின் சுய சௌகர்யத்துக்கு வளைப்பதாகவும் இருப்பதாக உணர்கிறது.

கேபரேவும் கேவலங்களும் ஜெயலலிதா உருவாக்குவார் என்ற ஞானம் முத்துக்குமாருக்கு இருந்திருந்தது,ஜென் புத்தத் துறவிகள் கதையையே நினைவுபடுத்துகிறது. திராவிடம் என்பது பெண்களைக் காம வக்கிரத்துடன் நோக்கிக்கொண்டே, கற்புக்கரசி கதைகளைச் சின்னவீட்டில் இருந்து கொண்டு  எழுதுவதும், தன் ஜாதி, தன் மக்கள்  மட்டுமே முன்னேற வேண்டும்,  எல்லா ஜாதி தமிழர்களையும் ஆளவேண்டும் என்ற வெறியோடு சமூக நீதியும் சாதி ஒழிப்பும் பேசுவதுதானே.  போகட்டும், அவர் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தீர்களா?

பாபாராம்தேவ் சாய்பாபா மறைந்த பின்தான், வலதுசாரிகளால் மாற்று ஏற்பாடாக உருவானாரா?  யோகாசனம் ஹிந்துமதத்துக்கு மட்டுமே சொந்தம் என்னும் கோட்பாட்டை வைத்துக்கொண்டு பாபாராம்தேவ் ஒரு ஹிந்து மதப்பிரசாரகர் என்கிறீர்களா? ராம்தேவ் இதுவரை சமூக சேவை செய்யவில்லை ; ஆனால் இப்போது திடீரென்று குதிக்கிறார் என்று எழுதியிருக்கிறீர்களே, சேவை நிறையவே செய்த சாய்பாபா ஒருவேளை செய்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பீர்களா? யோகா ஆசிரியர், மதப் பிரசாரகர் பாபாராம்தேவ் என்ன மணியாட்டிப் பூஜை மட்டும்தான் செய்ய வேண்டுமா? நாட்டு நன்மைக்காகப் போராடக் கூடாதா? வெள்ளையரை எதிர்த்த  பாரதி வித்யாதீர்த்த சுவாமிகள், அவர்களின் வழிவந்தவர்களை எதிர்த்த சுவாமி லக்ஷ்மனானந்தர், ஏன்,  நான் கடவுளில் “சுவாமி கால பைரவ்” இவர்களெல்லாம் வெறுமனே மணியாட்டினார்களா?

இவ்வளவு ஏன்,  லாபத்துக்காகச் செய்யும் தொழில் அதிபர் ராம்தேவ் அதைச் செய்தால் மட்டும் என்ன தவறு?

பணிவற்ற, அளவற்ற அன்புடன்,

கார்கில் ஜெய் .

பாபா ராம்தேவ்

முந்தைய கட்டுரைபாபா ராம்தேவ்
அடுத்த கட்டுரைமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்