அமெரிக்கா, கடிதங்கள்-2

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது குழந்தைகளின் முன்…

அன்புள்ள ஜெ

சாமானியனின் உளவியல் என ஒன்று உண்டு. அவன் எதுவுமே சரியில்லை என்னும் நிரந்தரமான பதற்றத்தில் இருக்கிறான். எதுவோ போதவில்லை. ஏதோ தப்பாக ஆகப்போகிறது. இதுதான் அவனுடைய நிரந்தர மனநிலை. ஆகவே அவன் அவனிடம் எவர் பேசினாலும் ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ ’எல்லாமே சரியாக முடியும்’ என்று அவர்களிடம் சொல்பவர்களையே விரும்புவார்கள். ஆன்மிகவாதிகள், மதச்சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள், பட்டிமன்றவாதிகள் அனைவரும் அதையே சொல்வார்கள்.

நேர் மாறாக நீங்கள் அவர்களிடம் உண்மை சொல்கிறீர்கள். அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் சிலவற்றை உடைக்கிறீர்கள். பல நம்பிக்கைகளை இல்லாமலாக்குகிறீர்கள். அவர்கள் பலர் ஒரு சமாளிப்பாகவே தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புகிறார்கள். ‘நாங்க தமிழ் சொல்லிக்குடுக்க நினைச்சோம். தமிழ்ப்பள்ளிக்கெல்லாம் அனுப்பினோம். அவன்தான் தமிழை மறந்துட்டான்’ இது எல்லா பெற்றோரும் சொல்வது. நீங்கள் அந்தச் சின்ன ஆறுதலை பிடுங்கிவிடுகிறீர்கள்.

பெரும்பாலான தமிழ்ப்பெற்றோர் ‘என் பையன் தமிழ்ப்பொண்ணுதான் வேணும்னு சொல்றான்’ ‘நம்ம சாப்பாட்ட விரும்பி சாப்பிடுவான்’ ’முருகன் கோயிலுக்கெல்லாம் வருவான்’ – இந்த மூன்றையும்தான் தங்கள் பிள்ளைகள் அப்படியெல்லாம் தமிழ்ப்பண்பாட்டிலிருந்து விலகிச்செல்லவில்லை என்பதற்குச் சான்றாக சொல்வார்கள். முதல் காரணம், நம்மவர்களுக்கு தோல்நிறம் ஒரு சிக்கல். வெள்ளையர்களின் நிலையில்லாத குடும்ப வாழ்க்கைமேல் ஒரு சந்தேகம். இரண்டாவது மூன்றாவது காரணங்கள், அவை பழகிவிட்டன என்பதுதான்.

அத்தனை சால்ஜாப்புகளையும் பிடுங்கிவிட்டு அவர்களிடம் நீங்கள் அவர்கள் மெய்யாகவே செய்யவேண்டியதென்ன என்று சொல்கிறீர்கள். தமிழ்ப்பண்பாட்டின் உண்மையான வெற்றியும் பெறுமதியும் என்ன என்கிறீர்கள். அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள். ஆனால் அதெல்லாமே ‘நீங்கள் வாழுங்கள். நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செயலாற்றுங்கள்’ என்றுதான் இருக்கிறது. அது ஒரு பெரிய சவால். அதைச்செய்வதுதான் கடினம்.

ஆனால் அதை இத்தனை கூர்மையாகச் சொல்ல ஓர் எழுத்தாளனின் குரல் தேவையாகிறது. பசப்புகள் இல்லாமல் நேருக்குநேராகச் சொல்லவேண்டியிருக்கிறது. அதை ஓர் ஆயிரம்பேர் கவனித்திருக்க வாய்ப்புண்டு. அவர்களில் கொஞ்சபேர் சிந்திக்கலாம்.

ஆனந்த்ராஜ்

வணக்கம் திரு. ஜெயமோகன்,

தங்கள் “அமெரிக்க தமிழ் குழந்தைகள்” மூன்று கட்டுரைகளிலும் உள்ள கருத்துக்கள் 99% உண்மை. நீங்கள் சொல்வதுபோல் அமெரிக்காவுக்கு வர சொல்லி யாரும் எங்களை வலியுறுத்தவில்லை. நாங்களாக வேண்டி, விரும்பி வாழ்நாள் கனவாக தான் இங்கே வந்து சேர்ந்தோம்.

வந்த இடத்தில் “பிள்ளைகள் தமிழராக வாழவேண்டும்” என்பதில் ஹிப்பாக்ரஸி எதுவும் இல்லை. அதுதான் உங்கள் கட்டுரையில் தவறவிட்ட அந்த 1% விசயம். “என் பிள்ளை தமிழனாக/ தமிழச்சியாக வளரவேண்டும்” என்பது வெறும் மொழி, இலக்கியம், மண்ணுடனான கலாசார தொடர்பு மட்டும் அல்ல. ஒவ்வொரு கலாசாரமும் மதிப்பீடுகள் (values) சார்ந்து அமைந்தவை. சீன கலாசாரம் கன்பூசியஸ் மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு அமைந்தது. அமெரிக்க கலாசார மதிப்பீடு என்பது தனி மனித சுதந்திரம், துப்பாக்கி, ஜனநாயகம், பெடெரல் அரசின் மேலான அவநம்பிக்கை (மாநில உரிமை) இவற்றின் அடிப்படையில் அமைந்தது.

தமிழ் கலாசரத்தின் மதிப்பீடுகள் என பட்டியல் போட்டால் நம் அறநூல்களில் இருந்து எடுக்கலாம். குறிப்பாக குறளில் உள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைதுணைநலம், மக்கட்பேறு, பிறனில் விழையாமை…இவற்றில் உள்ளதுபோல் தான் பெரும்பான்மை தமிழ்குடும்பங்கள் (தமிழகம் உள்பட) வாழ்வதாக அல்லது இவற்றை மதிப்பீடாக கொண்டுள்ளதாக கருதுகிறேன். பிள்ளையை ஹார்வர்ட் அனுப்பும் நோக்கமும் “சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” எனும் தமிழ் மரபின் வழி வந்ததே.

அமெரிக்கர்களை மாதிரி இங்குள்ள பிள்ளைகள் மொழியளவில், யூத் ஸ்டைலை பின்பற்றினாலும் அமெரிக்கர்கள் மாதிரி ஹூக்கப் கலாசாரம், லிவ் இன் கலாசாரம் பரவவில்லை. அமெரிக்க தமிழ் குழந்தைகளில் டீனேஜ் தாய்மார்கள் இல்லை. தம் பெற்றோர் மாதிரி கல்யானம் செய்துகொன்டு நல்ல குடும்ப வாழ்க்கை அமையவேண்டும் எனதான் இங்குள்ள பிள்ளைகளும் விரும்புகிறார்கள்.

“என் பிள்ளை தமிழனாக வாழவேண்டும்” என சொல்பவர்கள் இப்படிப்பட்ட மதிப்பீடுகளின் அளவில் சொல்வதாக தான் கருதுகிறேன். இந்த மதிப்பீடுகள் தமிழருக்கு மட்டும் பொதுவானதல்ல என்பதும் உண்மை. இவற்றில் பல இந்திய கலாசாரங்கள் பலவற்றுக்கும் பொதுவானவை. இந்தியாவும், தமிழும் இவ்விதத்தில் வேறுபட்டவை என நான் கருதவில்லை.

தமிழன் என்பதை கலாசார மதிப்பீடுகளின் அடிப்படையில் அளவிட்டால் இங்குள்ள தமிழ்குழந்தைகள் 100% தமிழர்தான். மூன்றாம் தலைமுறை அப்படி இருக்குமா என சொல்லமுடியாது. ஏனெனில் கலப்பு மணம் காரணமாக அப்போது இனம் மாறிவிடலாம். ஆனால் அப்போது மொழி/கலாசார இழப்பு இருக்குமே ஒழிய மதிப்பீடுகளை தம் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொண்டால், அவற்றின் பலன் தலைமுறை தாண்டி தொடரும் என கருதுகிறேன்

நன்றி

அன்புடன்
நியாண்டர் செல்வன்

முந்தைய கட்டுரைமதுரையில் ஓர் இலக்கிய மையம்
அடுத்த கட்டுரைமைத்ரி துளியின் பூரணம் – கிஷோர் குமார்