திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,
தங்களுடைய “நமது கட்டிடங்கள் ” எனும் தலைப்பில் வந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.மிக நேர்த்தியாக இருந்தது என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட அதில் நீங்கள் பயன்படுத்திய “கட்டிடங்கள் ” எனும் சொல்லாடல் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது . அது”கட்டடம் ” என்பதின் எழுத்துப்பிழையாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
http://www.jeyamohan.in/?p=15390
கோபாலன் செங்கோட்டையன்
அன்புள்ள கோபாலன்
கட்டிடம் [கட்டு+இடம்] என்பதே சரியான சொல்லாக இருக்கும் என்றும் கட்டடம் என்பது அதன் மரூஉ என்றும் நான் நினைக்கிறேன். நீங்கள் விக்கி அகராதியில் இதைச்சரிபார்க்கலாம் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பேரகராதியில் கட்டிடம் என்ற சொல் வீட்டைக் குறிக்கும்சொல்லாக உள்ளது. கட்டடம் என்ற சொல்லானது எல்லாவகையான கட்டமைப்புக்கும் பொருந்தும் சொல்லாகக் குறிக்கப்படுகிறது. குறிப்பாகப் புத்தகங்களின் தையல் மற்றும் அட்டையைக் குறிக்கவே கட்டடம் என்ற சொல் அதிகமும் கையாளப்பட்டிருக்கிறது.
ஜெ
அன்பின் ஜெ..
வேளாண்மையில் ஒரு கருத்து உண்டு. மண்ணிற்கேற்ற வேளாண்மை என்று. மண்ணின் தரமே அதை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், நீர் வசதி, பொருளின் சந்தை மதிப்பு முதலியவையே அவற்றைத் தீர்மானிக்கும் நிலை இன்று. கருப்பு மண்ணில், மண்ணின் அடியில் சுண்ணாம்புக் கற்கள் உண்டு. அவை நெல்வயல்களாக மாற்றப் பட்ட போது, கீழிருக்கும் சுண்ணாம்பு, காப்பிலரி ஃபோர்ஸ் (மன்னிக்க, இதற்குத் தமிழ்ச்சொல் தெரியவில்லை) காரணமாக மேலெழுந்து, களர் மண்ணாக மாறிய அவலங்கள் உண்டு.அதே தரவு,நம் கட்டிடக் கலைக்கும் பொருந்துகிறது.
புதிதாய் உருவாக்கப் படும் உலகத் தரம் (!) வாய்ந்த விமான நிலையங்களைப் பாருங்கள். சுற்றிலும் கண்ணாடி – ஐரோப்பாவில், வெயிலே இல்லாத உலகம். அங்கே சூரியனை உள்ளிழுத்து வரக் கண்ணாடி மாளிகைகள் வேண்டும். அவை, விமான நிலையத்தின் உட் தட்ப வெப்ப நிலையை, குறைந்த எரிபொருட்செலவில் மேலாண்மை செய்ய உதவும். இங்கே சூரியன் சுட்டெரிக்கும் பூமி.. கண்ணாடிக் கதவுகள் விமான நிலையக் கட்டிடத்தை மேலும் சூடாக்கி, அதைக் குளிர வைக்க ராட்சதக் குளிர் எந்திரங்களுக்கு எரிபொருளை வீணடிக்கிறோம்.
வாழ்க்கையை மிக எளிதாக வாழ முடியும். அதைச் சிக்கலாக்கி, அதற்கு மேலும் சிக்கலான விடைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். எளிமை, கொஞ்சம் சென்ஸிபிலிட்டி எவ்வளவு கடினமான விஷயமாகி விட்டிருக்கிறது?
அன்புடன்
பாலா
Hi Jeyamohan