நான் சராசரி நிலையில் நிற்கும் ஒருவன் தான். வாசிப்பு என்னவென்றே இப்போதுதான் பழகிக் கொண்டு இருக்கின்றேன். குருவின் வழியாகப் புதிய சிந்தனைகள் கற்றுக் கொண்டு இருக்கின்றேன் .
அன்றாட வாழ்க்கைச் சூழலில் அலை மோதி , ஒய்வுக்காகப் படிக்க ஆரம்பித்து , இப்போது வாசிப்பு உருவாகும் புதிய பரிமாணங்களை ரசிக்கத் தொடங்கும் நிலையில்தான் என் இருப்பு.
என்னைப்போன்று பலர் இங்கு இருக்கக் கூடும். எனக்கு இரு தலைமுறை முன் இருந்தவருக்குக் கம்பனும் தெரியாது, வள்ளுவனும் தெரியாது. விவசாயம் தெரியும் , கள் அருந்தத் தெரியும். அதிக பட்ச கவனம் நோய் இல்லாமல் இருப்பதிலும்,பட்டினி இல்லாமல் இருப்பதிலும்தான் இருந்தது. சுதந்திரம் , போராட்டம் எதுவும் அவரை அதிகம் தொடவில்லை. அதற்கு அடுத்த தலைமுறை, கல்வி கண்டது. செல்வம் சேமிக்கக் கற்றது. அவர்களின் அதிக பட்ச கவனம் எங்களளுக்கு நல்ல கல்வி காட்டுவதில் சென்றது. மொத்த சேமிப்பு இதில் சென்றாலும் அது அவர்களுக்கு நிறைவைத் தந்தது.
எங்கள் தலைமுறையில் உபரி செல்வம் உள்ளது. ஓய்வாக யோசிக்க முடிகிறது. ஓய்வில் வாசிக்க ஆரம்பித்தது, ஒரு நல்ல ஆசானை நோக்கிக் கொண்டு சென்றது. இப்போது வாசிப்பு ஒய்வுக்காக அன்றித் தேடலுக்காக அமைகிறது. தேடலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்ய முடியும் என நம்பிக்கை இருக்கின்றது.
உங்கள் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் திறமை இல்லாத பல கோடி பேரில் நான் ஒருவன் தான். என் பெற்றோர் , ஆசிரியர் எல்லாம் எனக்குக் கிடைத்த வரம். நான் இன்று இங்கு இருக்க அவர்கள் கைப் பிடித்து ஏற்றி விட்டதுதான் காரணம்.
சராசரி தமிழ் மனம் என்ற வார்த்தை ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. சரா சரி வட இந்திய மனம் வேறு வகை செயல் படுமா? சராசரி தெலுகு மனம் வேறு வகை செயல் படுமா? .
சராசரிகளை உப்பரிகையில் இருந்து கை காட்டிச் சிரித்துப் பழிப்பது போல் இருந்தது. மாவோவும் ,லெனினும் சராசரிகள் சிந்திப்பது சரி இல்லை என்று அவர்களுக்காகச் சிந்தித்தார்கள். ராமாயணமா, மகாபாரதமா என நினைவில்லை , சூத்திரன் தபஸ் செய்வது சரியில்லை என ஆன்றோர் வருந்த , மாமன்னர்கள் உதவினர். அங்கும் சராசரிகளின் அறிவுத் தேடல் சரி இல்லை என முடிவு செய்யப்பட்டுச் சிந்திக்க எனத் தனிக் கூட்டம் அமைக்கப்பட்டது. இன்றும சராசரி மன நிலை என உப்பரிகைக் கூட்டம் வருந்துகின்றது . ஆனால் என்ன செய்வது , மக்கள் ஆட்சி,பெரும்பான்மை கையில் வாக்கு கொடுத்ததே. சராசரிகள் தான் பெரும்பான்மை. எங்களைக் குறித்து வர காந்தியும், யேசுவும் உண்டு. அவர்களை முறையாய் அறிமுகம் செய்த ஆசானுக்கும் எங்கள் குறித்து அக்கறை உண்டு. அதுவே ஒரு நிறைவு தருகின்றது..
கல்வியும் கலையும் மன்னராலும் , நில உடமைக்காரர்களாலும் வளர்க்கப்பட்டது. சராசரிகள் வேறு உலகத்தில் விஷ்ணுபுர மதில் சுவருக்கு வெளியில் இருந்தோம். இப்போதுதான் சில தலை முறைகளாக வேர் ஊன்ற ஆரம்பித்து உள்ளோம். எங்கள் அதிக பட்சத் தேவைகள் இன்னமும் பொருள் வடிவில்தான் உள்ளது.அக வழித்தேவைகள் இன்னமும் அதிகம் தேட ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஆங்காங்கே விதை விழுந்திருக்கிறது. இது முளைத்து வரும்.
ஒரு கோர்வையாய் எழுத வரவில்லை. சிதறலாய் மட்டுமே எழுத வருகின்றது. இது பற்றி இனி சொல்ல ஒன்றும இல்லை.
என்.கெ
[இணையக்குழுமத்தில் ஒரு விவாதத்தில்]
அன்புள்ள என்கெ,
சராசரி என்பதை ஒரு குறிப்பிட்ட மனநிலை என்று மட்டுமே இங்கே கையாள்கிறார்கள். அதை ஒரு குறிப்பிட்டவகையான மக்களை, சாதிகளை, இனங்களை குறிக்கப் பயன்படுத்தவில்லை.
எப்போதுமே பேச்சில் இந்த குழப்பம் உருவாகிறது, நான்கூட இதை ஒவ்வொரு விவாதத்திலும் தெளிவுபடுத்திக்கொண்டு மேலே செல்லவேண்டியிருக்கிறது.
உங்களுக்கு எழுந்த ஐயமும் மனச்சோர்வும் இயல்பானதே. ஆனால் இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு சொல்லை நாம் சாதாரணமாகப் பொதுவாகப் பயன்படுத்தும் முறையிலேயே புரிந்துகொள்கிறோம். ஆனால் ஒரு கருத்துச்சூழலில் அச்சொல் எப்படிக் கையாளப்படுகிறது என்பதை அறிந்துகொண்டபின்னரே அந்தச் சூழலின் விவாதங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
சராசரி என்ற சொல்,சாதாரணமாக சாமானிய, எளிய, பொதுவான என்ற அர்த்தத்தில் கையாளப்படுகிறது. ஆனால் இலக்கியம், கருத்தியல் தளத்தில் நம் சூழலில் உள்ள பொதுப்போக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஒரு ‘மாதிரி’ [சாம்பிள்] என்ற பொருளிலேயே முன்வைக்கப்படுகிறது.
ஒரு சமூகம் அதன் பொதுவான நம்பிக்கைகளால், வழக்கங்களால், கருத்தியலால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சராசரி என்பவன் அதன் பிரதிநிதி.
சராசரித்தமிழ் மனம் என்று சொல்லும்போது தமிழ்ச்சமூகத்தின் பழக்கவழக்கங்களின் நம்பிக்கைகளின் மனநிலைகளின் சரியான பிரதிநிதி என்றுதான் அர்த்தம். ஆம் , கண்டிப்பாக அப்படி ஒரு சராசரியை உருவகம் செய்ய முடியும். அப்படிச் செய்தபின்னரே நாம் நம் சூழலை நோக்கிப்பேசமுடியும்.
எந்த ஒரு சிந்தனையும், கலையும் அந்தச்சமூகத்தை மேலே கொண்டுசெல்லவே முயலும். ஆகவே அது அந்த சராசரிக்கு எதிரான ஒரு செயல்பாடாகவே இருக்கும். சராசரி ரசனைக்கு எதிராகவே கலை செயல்பட முடியும். சராசரி சிந்தனைக்கு எதிராகவே புதிய சிந்தனை செயல்படமுடியும்.
ஏன் நுண்ணுணர்வுள்ள ஒருவர் சராசரிக்கு எதிராகவே தன் அன்றாட வாழ்க்கையில் செயல்படமுடியும். இதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள். ஒரு கல்யாணத்தில் ஒரு குடும்ப சந்திப்பில் உங்கள் வாசிப்பு காரணமாக, உங்கள் கலைரசனை காரணமாக நீங்கள் விலகி நிற்பதை உணர்ந்ததில்லையா என்ன?
உலகம் முழுக்க எல்லாச் சிந்தனையாளர்களும் தாங்கள் வாழும் சூழலுக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறார்கள். ஆகவே அதன் பிரதிநிதியாகிய சராசரியை அவர்கள் நிராகரித்துப்பேசியிருப்பார்கள்
அதற்கு ஒரு விதிவிலக்குகூடக் கிடையாது.எந்த சாதியிலும் எந்த சமூகக்குழுவிலும் சராசரிக்ளே பெரும்பாலானவர்கள். இதில் மேல்சாதி கீழ் சாதி என்று ஏதும் இல்லை. சமூகக்குழு சார்ந்து அதை அடையாளப்படுத்திக்கொள்வது பிழையானது மட்டுமல்ல; உண்மையான பல சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ள மிகவும் தடையாக அமைவதுமாகும்.
பலநூற்றாண்டுகளாகச் சமூகத்தின் உயர்நிலைகளில் வாழ்பவர்களில் கணிசமானவர்கள் வெறும் சராசரி ரசனையும் சிந்தனையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியும். பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களில் எத்தனைபேர் சராசரிக்கும் மேலான ரசனையும் சிந்தனையும் கொண்டு மேலே செல்ல முயல்கிறார்களோ அதே விகிதாச்சாரமே உயர்நிலையில் இருக்கும் சமூகக்க்குழுக்களிலும் இருக்கும்.
சொல்லப்போனால் வென்று மேலே செல்லவேண்டும் என்ற வெறி குறைவாக இருப்பதனால் சிந்திப்பவர்களின் விகிதாச்சாரம் உயர்மட்டத்தில் சற்றுக் குறைவாகவே உள்ளது. இந்திய சிந்தனை மரபை மட்டுமல்ல உலகசிந்தனை மரபையே எடுத்துக்கொண்டால்கூட சராசரிக்கு மேலே எழுபவர்கள் அடித்தளத்திலேயே அதிகம்.
இந்தியாவில் உயர்குடிகள் மிகச்சராசரியாகவே இருக்கிறார்கள். சராசரியாக ஆகவே அனைவரும் முயல்கிறார்கள். உயர்குடிச் சராசரி என ஒன்று உருவாக்கப்பட்டு அதை நோக்கி செல்லவே அனைவரும் முயல்கிறார்கள். அதை எந்த ஒரு நட்சத்திர ஓட்டலிலும் நாம் காணலாம். ஆனால் ஒரு படைப்பாளி, சிந்தனையாளன் அந்தச் சராசரியில் இருந்து விலகிநிற்பதையும் காணலாம்.
***
இன்னுமொன்று, பொதுவாக நம் சூழலில் பரப்பப்பட்டுள்ள ஒரு நம்பிக்கை சார்ந்தது. நீங்கள் சொல்வதுபோல இந்தியச் சமூகத்தில் ‘சிந்திப்பதற்காக’ எந்த ஒரு சாதியும் பணிக்கப்படவில்லை. அப்படி சிந்தனை என்பது எந்தச் சாதிக்கும் தனிச்சொத்தாக இருந்ததும் இல்லை.
தயவுசெய்து உங்கள் தாழ்வுணர்ச்சியாலும் அறியாமையாலும் பல்லாயிரம் நூல்களும், பலநூறு சிந்தனைவழிகளும், மாபெரும் ஞானக்கொந்தளிப்புகளும் கொண்ட ஒரு மாபெரும் மரபை ‘சிலருடைய’ குடும்பச் சொத்தாக நீங்களே கொண்டுசென்று கையளித்துவிட வேண்டாம். அது இந்தியாவின் ஒட்டுமொத்தச் சமூகமும் சேர்ந்து உருவாக்கிய மரபுச்செல்வம்.
இந்திய வரலாற்றில் எளிய அறிமுகமிருந்தாலே ஒன்றைப் புரிந்துகொள்ளமுடியும். இந்தியாவில் சத்ரியர் என்று ஒரு சாதியே கிடையாது. எந்தச் சாதி ஆயுதபலத்தால் ஓர் ஆட்சியை நிறுவுகிறதோ அதுதான் சத்ரிய அடையாளத்தைக் கொள்கிறது. மாடுமேய்த்த மௌரியர்கள், மலைக்குடிகளான மராட்டியர் முதல் பாலைநில மேய்ப்பர்களான நாயக்கர்கள் வரை இங்கே பேரரசுகளை உருவாக்கிய எல்லாருமே ‘சூத்திர’ சாதியினரே.
சூத்திரர் நிலைக்கும் கீழே உள்ள சாதியினர்கூட இங்கே அரசுகளை உருவாக்கி ஆண்டதுண்டு. பண்பாடுகளை உருவாக்கியதுண்டு. சந்தால்பேரரசு முதல் உதாரணங்கள் பற்பல.
அதேதான் சிந்தனையிலும். உபநிடதகாலம் முதல் வைணவத்தின் உச்சகட்ட காலம் வரை இந்திய ஞானமரபுக்குப் பங்களிப்பாற்றியவர்களில் எல்லா வகுப்பினரும் உண்டு. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் உட்பட எல்லா இனக்குழுக்களும் உண்டு. மேற்கே காந்தாரம் முதல் கிழக்கே காமரூபம் வரை அவர்களின் வாழ்க்கை பரவிக்கிடந்தது. இந்திய சிந்தனையின் இந்தியாவின் அனைத்து மக்களாலும் உருவாக்கப்பட்டது. இங்குள்ள ஞானநூல்களையும் ஆசிரியர்களையும் சாதாரணமாக ஒரு பெயர்ப்பட்டியல் போட்டாலே தெரியும்.மேலோட்டமாக மகாபாரதத்தை வாசித்தாலே தெரியும்.
ஆகவே கீழ்ச்சாதியினராக உள்ள மக்களெல்லாம் சிந்தனைக்கும் பண்பாட்டுக்கும் ஒன்றும் பங்களிப்பாற்றாமல் வயிற்றுப்பாட்டுக்காக மட்டுமே இதுவரை வாழ்ந்தார்கள் என்பதும், ஏதோ இப்போதுதான் கொஞ்சம் சோறும் கல்வியும் கிடைத்து, சிந்திக்கவும் கலையை ரசிக்கவும் கற்கிறார்கள் என்பதும், மேலே உள்ளவர்கள்தான் கலைகளையும் சிந்தனையையும் உருவாக்கினார்கள் என்பதும் அறியாமையால் உருவாகும் தாழ்வுணர்ச்சி மட்டுமே.
[சொல்லப்போனால் இன்று திருப்பித்திருப்பி அப்படிச் சொல்பவர்கள் உயர்சாதியினர் மட்டுமே.அனுதாபத்துடனும் மனிதாபிமானத்துடனும் புரட்சிகரத்துடனும் தலித்துக்களைப்பற்றி பேசுவதாக பாவனை செய்தபடி தலித்துக்களுக்கு ஆயிரமாண்டுக்காலமாக வரலாறோ அறிவோ பண்பாடோ கிடையாது என நைச்சியமாக நிறுவப்பார்க்கிறார்கள். தன்னம்பிக்கையோ வரலாற்றுணர்வோ கொண்ட தலித் இந்தச் சாதிவெறியர்களைத்தான் முதலில் அடையாளம் காண்பான்]
இந்திய வரலாற்றில் சாதிகளும் இனக்குழுக்களும் சட்டென்று பொங்கிப் பேரரசுகளை உருவாக்குவதைக் காணலாம். அவை படிநிலைகளில் மேலே செல்கின்றன. அதேபோல வலிமை குன்றி நிலமிழந்து கீழே சென்று சாதிப்படிநிலைகளில் கீழிறங்குகின்றன. ஒவ்வொன்றும் அவற்றின் உச்சநிலைகளில் பண்பாட்டுக்கும் சிந்தனைக்கும் பங்களிப்பை ஆற்றியுள்ளன.
இன்று, கீழே உள்ளவையாகக் கருதப்படும் சாதிகள்,நேற்று நம் பண்பாட்டின் அடிப்படைகளையே உருவாக்கியவையாக இருந்தன. நம் பண்பாட்டின் சாரமாகக் கருதப்படும் திருக்குறள்,பறையர்களின் சொத்தாக, அவர்களின் நூலாக நமக்குக் கிடைத்தது என்பதை மறக்கவேண்டாம்.அவர்கள் கள்ளையும் சோறையும் அன்றி ஒன்றும்தெரியாதவர்களாக இருக்கவில்லை. நீண்ட வரலாறும் கல்வியும் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.
ஒவ்வொரு சாதிக்கும் அவர்களுக்குரிய வரலாறும் பண்பாடும் கல்வி மரபும் இருக்கத்தான் செய்தன. இல்லாதவையும் கண்டிப்பாக உண்டு. ஆனால் ஏதோ சிலர் எப்போதும் மேலே இருந்துகொண்டு சிந்தனையையும் கலைகளையும் தீர்மானித்தார்கள் என்ற அந்த நம்பிக்கையைக் கைவிடுங்கள். அது ஒரு அன்னியப் பிரச்சாரப்பொய் மட்டுமே. இன்று எந்த சம்பந்தமும் இல்லாமல் அப்படிச் சொல்லப்படுபவர்களே ஆனந்தமாக ‘ஆமா நாங்கதான் எல்லாத்தையும் செஞ்சோம்’ என்று சொல்லி பூரித்துப்போகிறார்கள். அதையே கவலையை கலந்து சொல்லி புரட்சியாகவும் முன்வைக்கிறார்கள்.
இந்திய சமூகச்சூழல் நீங்கள் நம்பும் எளிமையான முறையில் இயங்குவதல்ல. பல்லாயிரம் வருடங்களாகப் பல ஆயிரம் இனக்குழுக்கள் தங்கள் வாழ்க்கைக்காக மேற்கொண்ட தொடர் போராட்டம் மூலம் உருவான எழுச்சிகளாலும் வீழ்ச்சிகளாலும் உருவானது இது.
இந்தப் பண்பாடும் சிந்தனையும் எல்லாம் அந்த வரலாற்றின் விளைபொருட்களாக உருவானவை. அவ்வரலாற்றுப்புலத்தில் வைத்தே நாம் அவற்றை அணுகவேண்டும். மதப்பரப்புநர்களால் உருவாக்கப்பட்டு அரசியல்வாதிகளால் பரப்பபடும் எளிய வாய்ப்பாடுகளைக்கொண்டு அல்ல.
*
எப்போதெல்லாம் தமிழ்ச்சூழலில் உயர்ரசனை,உயர்சிந்தனை என்று பேசப்படுகிறதோ அப்பொதெல்லாம் அதை மக்கள் ரசனை,மக்கள் சிந்தனை என்று சொல்லி மட்டம்தட்டி வந்தனர் மார்க்ஸியர். அவர்கள்தான் சராசரி என்பது பெரும்பான்மையினர் என்றும், அவர்களின் ரசனையும் சிந்தனையுமே மேலானது என்றும், அதற்கு எதிரான கூற்றுக்கள் எல்லாமே மேட்டிமைவாதம் என்றும், சொல்லிச்சொல்லி இங்கே நிலைநாட்டினர். ஆரம்பத்தில் கேட்க நன்றாக இருக்கும். ஆனால் வளர்ச்சி என்ற சவாலையே இல்லாமலாக்கி உறையச்செய்யும் ஒரு மௌடீகச் சிந்தனை இது.
இப்படிச்சொல்லும் மார்க்ஸியர்கள்,ஒரு மார்க்ஸியசிந்தனையாளன் சராசரியா என்று கேட்டால் அதெப்படி, அவன் ஒருசில படிகள் மேல் என்றே சொல்வார்கள். கருத்தியல்படிப்பும் கோட்பாட்டுத்தெளிவும் உடைய ‘தோழர்’ சாமானியர் அல்ல. அவர் மக்களை ‘வழிநடத்த’க்கூடிய தகுதி கொண்டவர். ஆட்சி கிடைத்தால் மக்களுக்காக அவரே ஆளவும் செய்வார்
அதாவது கலைஞனும் சிந்தனையானும்தான் சாமானியர்கள், அரசியல்வாதி மேலானவன்- இதுவே இவர்களின் கருத்து.
ஒரு சமூகப்புலத்தில் இருந்து மேலே எழுந்து செல்லத் துடிக்கும் ஒரு சிறு துடிப்பேனும் உள்ள ஒருவர், அதற்காக ஒரு சிறு சிறகடிப்பையேனும் கொள்ளக்கூடிய ஒருவர் ஒரு படி மேலானவரே. அவர் சராசரி அல்ல. வாழ்நாள் முழுக்க அவர் சராசரிகளுடன் மோதிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். அது அவருக்கு இயற்கை அளித்துள்ள கடமை.
நான் சாமானியன், நான் சராசரி என்ற உணர்வை ஒருபோதும் ஒரு கலைஞன், ஒரு சிந்தனையாளன், ஒரு நல்ல வாசகன் உருவாக்கிக்கொள்ளக்கூடாது. அது ஒரு போலி பாவனை. அது உண்மை அல்ல என்று அவனுக்கே உள்ளுக்குள் தெரியும்.
நான் கலைஞன், நான் சிந்தனையாளன், நான் வாசகன் -ஆகவே நான் சராசரிக்கும் மேலானவன் என்று அவன் நினைத்தாக வேண்டும். அப்படித்தான் அவன் உண்மையில் அந்தரங்கமாக நினைப்பான், அந்த நினைப்பை அவன் எந்தவிதமான மனத்தடையும் இல்லாமல் அங்கீகரித்துக்கொண்டாலே போதும்.
அந்த நினைப்பே அவனுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கும். தன்னுடைய சூழலில் இருந்து தன் சிந்தனையாலும் ரசனையாலும் அன்னியப்படுவதை எதிர்கொள்ளும் வலிமையை அளிக்கும். அந்த அன்னியப்படல் இயல்பானதே என்று புரிந்துகொள்ளச்செய்யும்.
ஆனால் அந்தத் தன்னுணர்வால் அவன் அதிகாரத்தை நோக்கிச் செல்வானென்றால் அது அழிவை உருவாக்கும். ஒரு சமூகத்தின் அதிகாரம் அந்த சமூகத்தின் சராசரிக்குடிமகனின் கையிலேயே இருக்கவேண்டும். அந்தச்சராசரியை விட மேலானவர்களின் கையில் அல்ல.
அதேசமயம் அறிவியக்கம்,சராசரிகளிடம் இருக்கக்கூடாது. அது ஆகச்சிறந்தவர்களின் கையில்தான் இருந்தாகவேண்டும். அவர்களே அதை முன்னெடுத்தாகவேண்டும். அப்போதுதான் அது வளர்ச்சியாக அமையும்.
அந்த சிறந்தவர்கள் என்பவர்கள்,எந்தச் சமூகத்தையும் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. இந்தியாவில் எப்போதும் அப்படி ஒரு நிலை இருந்ததில்லை. அவர்கள் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களில் இருந்தும் தங்கள் தனித்திறனால் மேலெழுந்து வந்தவர்களாகவே இருப்பார்கள்.
அந்த அறிவியக்கத்தின் ஒரு துளியாகத் தன்னை உணரும் ஒருவன் தன்னை சராசரிக்கு மேல் என்றே எண்ணுவான்.அந்தத் தன்னுணர்வு இருந்தால்தான் ஒருவன் தன் சமூகத்திற்குப் பங்களிப்பாற்ற முடியும். இதில் பாவனைகளுக்கே இடமில்லை. நீங்கள் சராசரி ரசனையில் இருந்தும் சிந்தனையில் இருந்தும் ஒரு படி மேலேறினால் கண்டிப்பாகத் திரும்பி சராசரியினரை நோக்கி விமர்சனத்தின் மொழியில் பேசத்தான் செய்வீர்கள்
சர்வசாதாரணமான விஷயம். டப்பாங்குத்துப் படம் பார்க்கும் நண்பனிடம் சொல்லமாட்டீர்களா என்ன, நல்ல படம் என்றால் என்ன என்று? நல்ல படங்களை அறிமுகம் செய்யமாட்டீர்களா என்ன? உங்கள் ரசனை வேறு என்று தெரிவிக்கமாட்டீர்களா?
ஒவ்வொரு இடத்திலும் இது நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது. விஜய் படம் பார்க்கிறவனிடம் விக்ரம் படம் பார்ப்பவன் அடுத்தகட்ட ரசனை பற்றி பேசுகிறான் . அவனிடம் உலகசினிமா பார்ப்பவன் பேசுகிறான். அவனிடம் கலைப்படம் பார்ப்பவன் பேசுகிறான். அது ஒரு பெரிய அறிவுச்செயல்பாடு. அச்செயல்பாடு வழியாகவே சமூக ரசனையும் சிந்தனையும் வளர்கின்றன
இல்லை சராசரி ரசனையே மக்கள் ரசனை என்று விஜய் படத்துக்கு எதிராகப் பேசுபவனை மேட்டிமையாளன் என்று சொல்லவேண்டுமா என்ன? சொன்னால் ரசனை விஜய் படத்தின் தளத்தைவிட்டு எப்படி மேலே செல்லும்?
இது எல்லாத் தளத்திற்கும் பொருந்தும். இசைக்கு, இலக்கியத்துக்கு, தத்துவத்துக்கு, அரசியலுக்கு,கட்டிடக்கலைக்கு… அதுதான் இங்கே பேசப்படுகிறது. சராசரி ரசனையை விட்டு மேலே செல்வது எப்படி என்று.
ஆனால் ஒன்றுண்டு. சராசரி ரசனையைத் தாக்கி, அதை மீறிச்செல்ல விழையும் இந்த முயற்சிகள் எல்லாமே அந்தச் சராசரிகள் மேலே உள்ள அக்கறையினால்தான் செய்யப்படுகின்றன. அச்சராசரிகளை மேலே கொண்டுசெல்பவை இந்த முயற்சிகளே. இந்த முயற்சிகளின் பயன்களை அனுபவிப்பவர்கள் அவர்களே.
எந்த சமூக சீர்திருத்தவாதியும் சமூகத்தை விமர்சிக்கவே செய்வான். அவன் மேட்டிமைவாதி என்பதனால் அல்ல. அவன் சமூகத்தை இன்னும் அடுத்த படிக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறான் என்பதனால்தான். அந்த முயற்சியின் பலனை அடையப்போவது அச்சமூகம்தான்.
சமகால சராசரி ரசனையை விமர்சிக்கும் கலைஞனும்,சராசரி சிந்தனையை விமர்சிக்கும் அறிவுஜீவியும் செய்வது அதையே.
மாறாகச் சமூகத்தை விமர்சிக்காமல் அதை அப்படியே போற்றுபவர்கள் யார்? அச்சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று அதிகாரத்தை அடைய முயலும் அரசியல்வாதிகள். அச்சமூகத்திடம் தங்கள் சரக்கை விற்று சுயலாபம் பெற முயலும் வணிகர்கள்.
சுந்தர ராமசாமி,தமிழ் ரசனையை கடுமையாக விமர்சித்தார். ராஜேஷ்குமார்,தமிழ் ரசனையைக் குறை சொல்லக்கூடாது. அது மக்கள் ரசனை என்றார். சுந்தர ராமசாமி மேட்டிமைவாதி, ராஜேஷ்குமார் மக்கள் எழுத்தாளர் என்று சொல்லமுடியுமா என்ன?
மேலான கலையின் பொருட்டுத் தன் சமூகத்தின் சராசரி ரசனையை விமர்சித்துப்பேசும் கலைஞனையும் நுட்பமான சிந்தனையின் பொருட்டுத் தன் சமூகத்தின் சராசரி சிந்தனையை விமர்சிக்கும் சிந்தனையாளனையும் மேட்டிமையாளர்கள் என்றும் சாதியைச் சொல்லியும் மட்டம்தட்டும்போது நாம் வளர்ச்சிக்கான எல்லா வாசல்களையும் மூடிவிடுகிறோம்.
உலகக் கலைஞர்களில், சிந்தனையாளர்களில் ஒருவரைக்கூட அப்படித் தன் சூழலின் சராசரித்தனத்தை விமரிசிக்காதவர் என நாம் சுட்டிக்காட்டமுடியாது. கார்ல் மார்க்ஸையோ அம்பேத்காரையோகூட! அவர்களையும் மேட்டிமைவாதிகள் என்று சொல்லவேண்டியதுதானா?
மேலும் இதன் வழியாக உண்மையான மேட்டிமைவாதத்தை [எலீட்டிசம்] அடையாளம் காணும் திறனையும் நாம் இழந்துவிடுகிறோம். மேட்டிமைவாதம் என்பது பிறப்பாலும், செல்வத்தாலும்,சமூகத்தின் உயர்தட்டில் உள்ள மக்களின் கலைகளையும் சிந்தனைகளையும் மட்டும் உயர்வானவை என நினைப்பது. அவற்றை மாறாமல் அப்படியே பேண நினைப்பது.
நம் சூழலின் சராசரித்தனத்தை விமர்சிக்கும் ஒரே காரணத்தாலேயே மேட்டிமைவாதிகள் என்று முத்திரைகுத்தப்படுபவர்களே இங்கே எளிய மக்களைப்பற்றி அதிகம் எழுதி பேசி வந்திருக்கிறார்கள். அவர்களின் கலைகளை ஆழக்கற்று, அவர்களின் சிந்தனைகளைப் புரிந்துகொண்டு மேலெடுக்க முயன்றிருக்கிறார்கள்.
மிகச்சிறந்த உதாரணம் வெங்கட் சாமிநாதன். நம் நாட்டார் கலைகளின் முக்கியத்துவம் பற்றி ஓயாது பேசி முன்னிறுத்திய முன்னோடி அவர். அவரே அதிகமாக மேட்டிமைவாதி என வசைபாடப்பட்டார். அவர் கலைநுட்பம் பற்றிப் பேசினார் என்பதற்காக. அந்தக் கலைநுட்பத்தையேகூடத் தெருக்கூத்தை உதாரணமாகச் சுட்டிக்காட்டித்தான் அவர் பேசினார் என்பதைப் பொருட்படுத்தவில்லை அவர்கள்.
எந்த ஒரு சமூகமும் இன்னும் இன்னும் நுட்பத்தை, கூர்மையை, சிறப்பை நோக்கிச் செல்லவேண்டும். அது இயற்கையின் விதி. ஒரு போதும் சராசரிகளால் அதைச் செய்யமுடியாது. திறன் கொண்டு மேலெழும் சிலராலேயே செய்யமுடியும்.
அந்த சிலர்,தாங்கள் சராசரிக்கு மேலானவர்கள் என உணர்ந்தாகவேண்டும். அப்படி இருப்பதன் மூலம் சராசரிகளிடமிருந்து கிடைக்கும் புறக்கணிப்பையும் அவமதிப்பையும் சந்தித்து அச்சராசரிகளை மேலே கொண்டுசெல்ல முயன்றாகவேண்டும்
வேறு வழி இல்லை
ஜெ
[2011ல் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகளும் விவாதங்களும் கயல்கவின் வெளியீடான விதிசமைப்பவர்கள் என்னும் நூல்வடிவில் உள்ளன. புதியவாசகர்களுக்காக மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன]