நம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது
உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு தலைமுறைக்குள் அமைப்பில் மாற்றம் வராமலும் இருக்காது. கட்டிடம் பண்பாட்டுச்சின்னமாக இருப்பதனால் ஒரு நாட்டில் நுழையும் எல்லாப் பண்பாடுகளும் கட்டிட அமைப்பைப் பாதிக்கின்றன. நடைமுறைத் தேவைகள் கட்டிட அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆகவேதான் உலகக் கட்டிடக்கலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
நம்முடைய கோயில்கள்கூட நம்முடைய சொந்தக் கட்டிடக்கலையைக் காட்டுவன. ஆனால் அவையும் நம்மிடம் இருந்து மட்டும் சுயம்புவாக உருவானவை அல்ல. அவற்றில் புராதன பௌத்த விகாரங்களின் கட்டிடக்கலையின் செல்வாக்கு மிக அதிகம். நம் கட்டிடக்கலை உருவாவதை ஒரு நடைமுறை விளக்கம் போலவே அஜந்தா-எல்லோராவில் காணலாம். ஆரம்பகால குகைகள் சாலமோன் குகைகள் போல எளியவை. மெல்லமெல்லத் தூண்களும் சிற்பங்களும் உருவாகிவந்தன. கடைசியில் எல்லோராவில் நம் கோயில் வடிவமே உருவாகி வந்துள்ளது. அந்த வளர்ச்சிப்போக்கில் காந்தார-எகிப்திய குடைவரைக்கோயில்களின் பாதிப்பு வெளிப்படையாகவே தெரிகிறது. சுவரோடு ஒட்டிய பெரிய தூண்கள், புடைப்புச்சிற்பங்கள் உதாரணம்.
ஆனால் எந்த அன்னிய கலைப்பாணியும் ‘அப்படியே’ இங்கே கொண்டு வரப்படவில்லை. இங்குள்ள மரபும், வரும் மரபும் படைப்பூக்கத்துடனும் நடைமுறைஞானத்துடனும் கலக்கப்பட்டுத்தான் புதிய கலைவடிவம் உருவாக்கப்படுகிறது. நம் கோயில்களில் மத்திய ஆசிய குகைக்கட்டிட அமைப்புகளில் இருந்து உருவாகி வந்த பௌத்தக் கல்கட்டிடங்களின் அழகியல் எந்த அளவுக்கு உள்ளதோ அதை விடப் பலமடங்கு அதிகமாக இங்கே ஏற்கனவே இருந்த மரக்கட்டிடங்களின் அழகியல் உள்ளது. மரக்கட்டிடங்கள் கல்கட்டிடங்களாக ஆனபோது கல்லின் அழகையும் சாத்தியங்களையும் காட்டும் புதிய வழிகளைக் கலந்துகொண்டார்கள் அவ்வளவுதான். அவ்வாறுதான் நாம் நம்முடையதெனக் கொண்டாடும் தென்னகக் கோயில் கட்டிடக்கலை உருவாகியது.
கோயில்களைச் சென்று பார்த்தாலே இது தெரியும். கல்லில் மரத்தைக் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள். சீரான உத்தர நுனிகள், கூரை விளிம்புகள், பட்டைத்தூண்கள் எனத் தமிழகக் கற்கோயில்களின் அழகியல்,அவற்றின் மரத்தாலான முன்னோடிகளில் இருந்து உருவாகி வந்தது – அந்த மரக்கட்டிடங்கள் ஏதும் இப்போது இல்லை, அவ்ற்றின் அழகு மட்டும் கல்லில் படிந்து இன்று கிடைக்கிறது.
பின்னர் முகலாயக் கட்டிடக்கலை வந்தது. அது செங்கல்லின் கலை. வளைவுகளை அதிகம் நம்பியது. திருவாரூர் போன்ற கோயில்களில் நாம் முகலாயக் கட்டிடக்கலையின் பாதிப்பைக் காணலாம். முகலாயர்களின் வளைவு அழகியலை இக்கோயில்கள் தாமரை வடிவங்களாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன. இங்குள்ள அழகியலொருமைக்குள் அந்தப் புதிய கூறு திறம்படக் கலக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் வந்தது,பிரிட்டிஷ் கட்டிட அமைப்பின் செல்வாக்கு. செங்கல்லையும் சுதையையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உருண்ட பெரிய தூண்கள், உயர்ந்த சாளரங்கள் போன்றவை அதன் முக அடையாளம். ஆனால் அவையும் பெரும்பாலும் இங்கே இருந்த பழைய மரக்கட்டிடங்களின் அழகியலை உள்வாங்கித்தான் அமைக்கப்பட்டன.அவை அன்றாடப்புழக்கத்துக்கான இடங்களாதலால் கோயில்களின் அழகியலை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நம் பாரம்பரிய வீடுகளின் பல அம்சங்கள் அவற்றில் உண்டு. பெரிய சுற்று வராண்டாக்கள். வாசல்- சன்னல்களுக்கு மேலே அழகிய வளைவுகள். அங்கணங்கள். அவற்றை பிரிட்டிஷ் கட்டிடக்கலை என்று சொல்வதில்லை. இந்தோ-பிரிட்டிஷ் கட்டிடக்கலை என்றுதான் சொல்கிறார்கள்.
மேலும் அவை ஆதிக்கத்தால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் அன்னிய அம்சம் மேலோங்கி இருப்பதும் இயல்பே. தங்கள் தனியடையாளத்தை இந்தியாமேல் நிறுத்த வேண்டும் என்ற நோக்குடன் அமைக்கப்பட்டவை. அவை நம் வரலாறு. ஆகவே அவை நம் பண்பாட்டின் அம்சங்களே. நாம் அவற்றை நிராகரிக்கமுடியாது.
அதேபோலக்கேரளக்கட்டிடக்கலை.நெடுங்காலமாகவே கேரளத்திற்கும் சீனாவுக்கும் தொடர்புண்டு. சீன மரக்கலை கேரளத்தில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. இன்றும் அகலமான உளிக்குச் சீன உளி என்று சொல்கிறார்கள். சீனாவின் கூரை அமைப்பு, கேரளத்தைப் பாதித்தது. அத்துடன் அது கேரள மழைச்சூழலுக்கு உதவியாகவும் இருந்தது.
கேரளத்தில் ஏற்கனவே தென்னை ஓலைக்கூரை இருந்தது. அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சரிவு வேண்டும். ஆகவே பெரிய வீடுகள் பல அடுக்குகளாகக் கூரைகளை அமைத்திருந்தன. அந்த அழகியலைச் சீனபாணி கூரைக்குக் கொண்டு வந்து அடுக்கடுக்கான கூரைகளையே கோபுரங்களாக ஆக்கும் முறை உருவானது. ஓலைக்கூரைகள் கூம்புக்கோபுர வடிவில் இருந்தன. கூம்பும் சீனபாணி விளிம்பும் கலந்து மெல்ல கேரளத்திற்கே உரிய தனித்துவமான கட்டிடக்கலை உருவாகி வந்தது.
பழைய கோயில்களில் ஒரே ஒரு சிகரத்தால் ஆன கோபுரம் இருந்திருக்கிறது. பின்பு அது பல சிறிய சிறிய சிகரங்களின் தொகுப்பாக ஒரு பெரிய சிகரத்தை அமைக்கும் முறையாக வளர்ந்தது. ஹம்பியில் ஒரே இடத்தில் எல்லா வகை கோபுரங்களையும் காணலாம். அதேபோல கஜூராகோவில் கோபுரவடிவங்கள் படிப்படியாகப் பரிணாமம் பெறுவதைக் காணலாம்.
இந்தியக் கட்டிடக்கலை என்பதே கொண்டும் கொடுத்தும் வளர்ந்தது. எல்லாப் பாணிகளும் எல்லா இடங்களுக்கும் சென்றன. ஆனால் செல்லும் இடத்தில் ஏற்கனவே இருந்த அழகியலை ஏற்றுப் புதிய வடிவங்களை உருவாக்கிக்கொண்டன. கஜூராகோ கோயிலின் வடிவம்தான் தஞ்சைப் பெரிய கோயிலில் தெரிகிறது. ஆனால் இங்கே வரும்போது ஏற்கனவே இங்கே இருந்த கோபுரங்களின் அழகியலை உள்வாங்கி அது புதிய ஒன்றாக ஆகியது.
இதையே நாம் எதிர்பார்க்கிறோம். புதுமை வரக்கூடாதென்றல்ல. வரும் புதுமை இங்கே இருக்கும் பழமையின் சிறந்த அழகியல் அம்சங்களை, நடைமுறை வசதிகளை உள்வாங்கிக்கொண்டு நம்முடைய சொந்த கட்டிடக்கலை ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று. அதன் மூலமே நம் அழகியல்வளர்கிறது.
அதற்கு ஆழமான படைப்புத்திறன் தேவை. புதிய அழகியலின் சாரத்தை உணர்ந்து தேவையை மட்டும் எடுத்துக்கொள்ள, பழைய அழகியலில் இருந்து ஆதாரமான விஷயங்களைத் தக்கவைத்துக்கொள்ள, அவற்றின் கலவையாக முற்றிலும் புதிய ஒன்றை உருவாக்க விரிவான ஞானமும் துடிப்பான கற்பனையும் தேவை.
ஆனால் இங்கே நிகழ்வது வெறும் பிரதியெடுப்பு. அதற்குப் படைப்பூக்கமே தேவை இல்லை. கொத்தனாரே போதும். இங்கே கட்டிட வரைபடவியலில் படைப்புத்திறன் கொண்ட எவருமே இல்லை என்றே நினைக்கிறேன். இங்குள்ள எல்லாக் கட்டிடங்களும் வெறும் நகல்கள். சென்னையில் என்னைக் கொஞ்சமேனும் கவர்ந்த புதிய கட்டிடம் ஒன்றுகூட இல்லை.
காரணம் நம் கட்டிட வரைவாளர்களுக்கு மரபு கொஞ்சம்கூடத் தெரியாது. இந்திய மரபையே மதிக்காத உயர்நடுத்தர குடும்பத்தின் பிள்ளைகள் அவர்கள். பெரும்பாலும் பிளஸ்டூவின் மனப்பாட மதிப்பெண் அல்லாமல் எந்தத் தகுதியும் இல்லாதவர்கள். கல்லூரிகளில் அவர்களுக்குச்சொல்லிக்கொடுக்கப்படுவதெல்லாம் மேலைநாட்டுக் கட்டிடக்கலை. ஆகவே புதுமை என்ற பேரில் ஏற்கனவே அவர்கள் கண்ட சில புதிய கட்டிடங்களை இஷ்டத்துக்குக் கலந்து எதையாவது கட்டி வைக்கிறார்கள். கட்டிடங்களை உண்டு கட்டிடக்கலவையாக வாந்தி எடுத்தது போல. சென்னையின் பல நட்சத்திர விடுதிகளை அருவருப்பானவை என்றே சொல்லவேண்டும்.
எவ்வளவோ சொல்லலாம். கான்கிரீட்டில் முடியும் என்பதற்காகவே நீட்டல்களை அமைத்துக் கண்ணில் குத்தும் விதமாக அமைக்கிறார்கள். பின்னணியில் பளீரிடும் வானம் உள்ள ஒரு நாட்டின் கட்டிடங்களுக்கு அவற்றுக்கே உரிய வண்ணமும் வடிவமும் தேவை என்பதையே மறந்துவிடுகிறார்கள். பளீரிடும் நிறங்கள் அபத்தமாக உறுத்துகின்றன.
இங்கே கண்ணாடிகளைப் புறத்தே பயன்படுத்தும் விதம் பற்றி எனக்கு எப்போதுமே மனக்கசப்பு உண்டு. அக்கட்டிடங்களைக் கண்களாலேயே பார்க்கமுடிவதில்லை. கண்ணில் தீயாக அறைகின்றன. கனடாவிலும் அமெரிக்காவிலும் கண்ணாடிக் கட்டிடங்களைப் பார்க்கையில் அப்படித் தோன்றவில்லை. அங்குள்ள மங்கிய வெளிச்சம் கொண்ட சூழலுக்கு, இருண்ட வான் பின்னணிக்கு அவை மிகமிக இதமாக இருந்தன. கண்ணாடிப்பரப்பே அழகிய தடாகநீர்ப்பரப்பு போல் இருந்தது. அவை அந்தச் சூழலுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை. எந்தக் கற்பனையும் இல்லாமல் அவற்றை அப்படியே இங்கே கொண்டுவருகிறார்கள்.
கட்டிடம் என்பது வேடிக்கை பார்ப்பதற்கான அமைப்பு அல்ல. அது ஒரு குறியீடு. அந்தக்குறியீடு எதைச் சொல்கிறதென்பதே முக்கியம். நம் கோயில்களின் குறியீட்டு ஆழம் மிக விரிவானது. ஒட்டுமொத்தமாக அவை பல்வேறு வழிபாட்டுமுறைகளையும் ஞானவழிகளையும் ஒன்றாக இணைக்கும் தொகுப்புத்தன்மையைக் காட்டுகின்றன. பிரிட்டிஷ் கட்டிடங்கள், அவர்களின் கிரேக்க-ரோம பாரம்பரியத்தை வலியுறுத்த விரும்புகின்றன.
நாம் பொதுக்கட்டிடங்களை அமைக்கும்போது நம்முடைய பண்பாட்டு அடையாளமாகவே அவற்றை அமைக்கவேண்டும். அவை என்ன சொல்கின்றன என்பது முக்கியம். நீண்ட பாரம்பரியம் உள்ள நம் நாட்டின் அழகியலுக்கும் நவீனகாலகட்டத்திற்கும் உள்ள ஒரு உரையாடலாக அவை அமைந்திருக்கவேண்டும். எப்படியோ அவை நம்மைச்சுற்றி உள்ள மலைகளுடனும் மரங்களுடனும் பிற தொன்மையான கட்டிடங்களுடனும் ஒரு இயல்பான அழகியல் ஒருமையைக் கொண்டிருக்கவேண்டும்.
அதற்கு முதலில் நாம் யார் என நாம் அறிந்திருக்கவேண்டும்.
ஜெ
மறுபிரசுரம்
முதற்பிரசுரம் \May 30, 2011
சிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்
சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்