அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
கோவிட் தொற்று காலத்தில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறவில்லை. ஆன்லைன் என்பதை அப்போதுதான் அறியத் துவங்கி இருந்த மாணவர்கள் தட்டுத்தடுமாறி கல்லூரியில் சேர முயன்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்லூரிக்கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி கிடைத்த படிப்பில் சேர்ந்தார்கள்
கடந்த இருவருடங்ளுமே மிக குறைந்த அளவில்தான் தாவரவியல் துறைக்கும் பிற அடிப்படை அறிவியல் துறைகளான இயற்பியல் வேதியியல் ஆகியவற்றிற்கும். மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள்.
பள்ளி இறுதியிலும் நேரடி வகுப்புகள் நடந்திராதலால் இங்கு வந்து சேர்ந்த மாணவர்களுக்கு எந்த அடிப்படை கல்வியறிவும் ஒழுக்கம் குறித்த உணர்வும் இல்லையென்பது வருந்தத்தக்க விஷயம் என்றால் அதை காட்டிலும் அதிர்ச்சியளித்தது ஆன்லைன் தேர்வுகளில் காப்பி அடித்து பழக்கம் ஆகிவிட்டிருக்கும் அவர்களுக்கு முறையான தேர்வெழுதும் பயிற்சிகளை அளிப்பதில் இருந்த சிக்கல்கள் தான். பெற்றோர்களுக்கும் அப்படி அவரவர் குழந்தைகள் காப்பியடித்து தேர்வெழுதியது பெரும்பாலும் தெரிந்திருந்தும் எவரும் கண்டித்திருக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் அவர்களை திருத்தி சரியான வழிக்கு கொண்டு வர திணறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த வருட மாணவர் சேர்க்கை வழக்கம் போல நேரடியாக கடந்த ஒருவாரமாக நடந்தது. கோவிட் காலத்துக்கு பிறகு பட்டிதொட்டிகளிலெல்லாம் கம்ப்யூட்டர் என்னும் சொல் புழங்கி அனைவருக்கும் பரிச்சயமாகி விட்டிருக்கிறது மேலும் கணிப்பொறித் துறையில் எப்படியும் அறுபதாயிரத்துக்கு குறையாமல் சம்பளம் வரும் என்பதும் மட்டும் தெரிந்திருக்கிறது
எனவே அடிப்படை அறிவியல் துறைகளில் சேர்ந்து பயில மாணவர்கள் தயாராகவே இல்லை பெற்றோர்களுக்கும் அப்படியான துறைகள் இருப்பதும் அவற்றின் முக்கியத்துவமும் தெரியவில்லை. 90 சதவீதம் கணினி அறிவியல் படிப்பைத்தான் நாடுகிறார்கள் அவர்களின் குழந்தைகள் பள்ளி இறுதியில் கணினி அறிவியல் படித்திருக்கவில்லையெனினும் எப்படியும் அந்த படிப்பில் கல்லூரியில் சேர முயற்சிக்கிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்த நான் ஒரு மாணவனின் தந்தையிடம் அவர் மகன் பள்ளிப்படிப்பில் கணினி அறிவியல் படித்திருக்காததால் இப்போது அதில் கல்லூரி படிப்பை தொடர முடியாது என்று அரை மணி நேரம் செலவழித்து விளக்கினேன். அவர் பதிலுக்கு ‘’பணம் எத்தனை செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் கம்ப்யூட்டர் சயின்ஸில் ஒரு சீட் வேணுங்க’’ என்றார்.
தாவரவியல் படிப்பின் முக்கியத்துவத்தை கடந்த வாரத்தில் பலநூறு பெருக்கு நெஞ்சடைக்க, தொண்ட வரள விளக்கினேன் ஆனால் யாருக்கும் புரியவில்லை வேண்டா வெறுப்பாகவும், மிககுறைந்த மதிப்பெண் பெற்று வேறெங்கும் இடம் கிடைக்காதவர்களுமாக வெகு சிலரே இத்துறையில் சேர்ந்திருக்கிறார்கள். இதில்தான் சேர்ந்து படிக்க வேண்டும் என்று இரண்டே இரண்டு மாணவிகள் மட்டும்தான் வந்தார்கள்.
என் மாணவிகள் பலர் கோவையை சுற்றி இருக்கும் நகரங்களில் காஃபி வாரியத்திலும், இந்திய தாவரவியல் அளவாய்வு அமைப்பு, வனமரபியல் மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனங்களில் நல்ல வேலைகளிலும், காட்டிலாகா அதிகாரிகளாகவும், நல்ல ஆராய்ச்சியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள். இனி அப்படியான அமைப்புக்களில் எதிர்காலங்களில் பணியாற்ற எத்தனை பேர் தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்,
கல்லூரிகளில் அடிப்படை அறிவியல் துறைகளின் எதிர்காலம் நிச்சயமற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியின் போதே அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு அத்துறைகளின் மேதைகளை பற்றி, முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் கற்றுத்தரவேண்டும். அப்போதுதான் அப்படியான துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். இப்போதைய பெற்றோர்களும் மருத்துவம், பொறியியல் அடுத்தாக கணினி அறிவியல் இவற்றைத் தவிர தங்கள் குழந்தைகளுக்கு வேறெதிலும் எதிர்காலம் இல்லையென்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம் குறித்து கவலைப் பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல.
J S Gamble 1847-1925 ல் உருவாக்கிய flora of madras presidency யின் அனைத்து தொகுப்புகளும் மிக அரிய பொக்கிஷங்கள். கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் நான் அவற்றை பலமுறை உதவிக்கென எடுத்து வாசித்திருக்கிறேன். அவற்றின் உதவிகொண்டு பல நூறு தாவரங்களை அடையாளம் கண்டிருக்கிறேன், அதைப்போலவே 1817-1911 ல் Hooker உருவாக்கிய Flora of British India தொகுப்புக்கள், பிலிப் ஃபைசன் 1915 ல் உருவாக்கிய பழனி கொடைக்கானல் மற்றும் ஊட்டி மலைப்பகுதிகளில் 6,500 அடி க்கு மேலான உயரத்திலிருக்கும் தாவரங்களை குறித்த அரிய நூலாகிய flora of Nilgiri and pulny hill tops, போன்ற நூல்களிலிருந்து பயனடைந்தவர்களே இப்போது இத்துறையில் பணியாற்றும் என்போன்ற ஆயிரக்கணக்கானோர். ஃபைசனின் இந்த நூலத்தொகுப்பு 1975க்குள் 15 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ் விக்கியில் இவர்களை குறித்த பதிவுகள் இருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.ஒரு பதிவை வாசிக்க துவங்கி ஒன்றிலிருந்து அதன் தொடர்புடைய மற்றொன்று என்று தொடர்ந்து வாசிப்பது பழக்கமாகிவிட்டிருக்கிறது அனைத்தும் அரிய பதிவுகள்
இந்திய தாவரவியல் கழக (Indian Botanical Society) அமைப்பை உருவாக்கி, நடத்த உதவி, அந்த அமைப்பு சார்ந்து இந்திய தாவரவியல் இதழ் (Journal of the Indian Botanical Society) வெளியிடுவதிலும் முன்முயற்சி எடுத்த. ஃபைசனின் பல மாணவர்களில் முதன்மையானவர் மா. கிருஷ்ணன். கிருஷ்ணன் தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளுக்கு முன்னோடி. மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானவர். இவர் நீர்வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியை பிலிப் ஃபைசனின் மனைவி டயானா ரூத் ஃபைசனிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார். கொடைக்கானலில் ஃபைசனுடன் ஆய்வுக்குச் செல்கையில் புகழ்பெற்ற உயிரியலாளராரும், இந்திய இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவருமான ஆல்பர்ட் பௌர்ன் மற்றும் அவரது மனைவி எமிலி டிரீ கிளேஷேர் ஆகியோருடனும் அவருக்கு தொடர்பு உருவானது.
பௌர்ன் நீர்வாழ் உயிர்களுக்கும் நீரின் ஆக்ஸிஜன் அளவுக்குமான உறவு பற்றிய முக்கியமான ஆய்வை செய்தவர். ஓவியரான அவர் மனைவி எமிலி இந்தியத் தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.ஃபைசனின் flora of kodaikanal நூலில் எமிலியின் தாவரவியல் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.எந்த வசதியும் இல்லாத அந்தக்காலத்தில் இத்துறையின் மீதான ஈடுபாட்டினாலும் அப்பணிகளின் எதிர்கால முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருந்ததாலும் இவற்றை செய்து முடித்திருக்கிறார்கள் .
நான் இளங்கலை அறிவியல் படித்த அதே துறையில்தான் இப்போது பணிபுரிகிறேன். துறையின் ஆய்வகம் நோய் தொற்றுக் காலத்தில் ஏகத்துக்கும் சேதமடைந்திருந்தது. பல அரிய தாவர சேகரிப்புகள் பூஞ்சைத்தொற்றில் அழிந்திருந்தன. மேலும் உலர் தாவரங்களில் பலவும் பூச்சி அரித்து வீணாகியிருந்தன. எனவே இரண்டு உதவியாளர்களுடன் பலநாட்கள் செலவழித்து ஆய்வகத்தை சமீபத்தில் சுத்தம் செய்தேன் ஆய்வக அலமாரிகளில் ஒன்றில். மறைந்த என் ஆசிரியரும் நன்னீரியலில் (Limnology) மிக முக்கியமான ஆய்வுகள் பலவற்றை செய்து பல புதிய பாசி வகைகளை கண்டறிந்தவரான திரு சங்கரன் 1972ல் இருந்து 1975 வரை தொடர்ச்சியாக திருமூர்த்திமலை, கொடைக்கானல், வால்பாறை அட்டகட்டி என பல மலைப்பிரெதேசங்களுக்கு பயணித்து அப்பகுதியின் தாவரங்களை பட்டியலிட்ட ஒரு சிறிய நோட்டுப் புத்தகம் குப்பையில் கிடந்தது.
தான் பயணித்த இடங்கள், கடல்மட்டத்திலிருந்து அப்பகுதியின் உயரம், நேரம் ஆகியவற்றுடன் 477 தாவரங்களை பட்டியலிட்டு சிலவற்றை கேள்விக்குறியிட்டும் சிலவற்றை அன்றைக்கு மேலதிகம் தேடி வாசிக்க வேண்டும் என்றும் குறிப்பு எழுதி இருக்கிறார், அவர் அந்த முக்கியமான ஆய்வை எந்த காரணத்தினால் முடிக்காமல் விட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த பட்டியல் தகவல்களுடன் மேலும் சில வருட ஆய்வை தொடர்ந்தால் அம்மலைப்பகுதிகளின் flora வை ஃபைசனைப்போல உருவாக்கிவிடலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் தான் இல்லை. பொக்கிஷமாக இதை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்
ஏன் தாவரவியல் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிக முக்கியமான இது போன்ற ஆய்வுகள் செய்த ஃபைசன், எமிலி, மா,கிருஷ்ணன் ஆகியோரின் விக்கி பதிவுகளை வாசித்தால் இத்துறையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். இவர்களை தமிழ் விக்கி ஆவணப்படுத்தியது எத்தனை முக்கியம் என்பதுவும் புரியும்
அன்புடன்
லோகமாதேவி
மா. கிருஷ்ணன்
பிலிப் ஃபைசன்
ஆல்பர்ட் பௌர்ன்
எமிலி ட்ரீ கிளெஷேர்