தமிழ் விக்கி தூரன் விருது
கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு
தமிழ்விக்கி தூரன் விருது பெறவிருக்கும் மானுடவியல் – நாட்டாரியல் ஆய்வறிஞர் ‘கரசூர் பத்மபாரதி’ அவர்களுக்கு வாழ்த்துகள்.
நரிக்குறவர் இனவரையியல் என்ற நூலின் வழியாக அவர் செய்த பதிவு காலத்தால் முக்கியத்துவம் வாய்ந்தது. எழுபது வகையான குறவரின மக்கள் தமிழ் நிலத்தில் வாழ்கிறார்கள் என்ற தகவலுடன், அதில் ஓர் தனிப்பட்ட அலைகுடி ம்ற்றும் வேட்டைப் பண்பாடு கொண்ட நரிக்குறவர் பழங்குடியின் வாழ்க்கை, பண்புநலன்களை மிக நெருக்கமாகப் பதிவுசெய்த நூல் கரசூர் பத்மபாரதி அவர்களுடையது (தமிழினி வெளியீடு).
இத்தோடு இணைந்து இன்னொரு செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் உள்ள தேவராயநேரி என்ற கிராமத்திலுள்ள நரிக்குறவர் காலனியில் இருந்து பள்ளிகல்வி முடித்து, எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் பட்டம்பெற்று, கேம்பஸ் இண்டெர்வ்யூவில் தேர்வாகி, சண்டிகரில் பணி ஆணை வந்தபிறகும், தனது தந்தையின் கனவைப் பொறுப்பேற்று, அதே இனக்குழுவைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்காக பள்ளிக்கூடம் நடத்திவரும் தங்கை ஒருத்தரை எனக்குத் தெரியும். அவர் பெயர் ஸ்வேதா மகேந்திரன். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரி.
கார்த்திக் புகழேந்தி
கார்த்திக் புகழேந்தி – தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
நான் ஒரு பொறியியல் முனைவர் பட்ட ஆய்வாளன். கரசூர் பத்மபாரதி பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அவருடைய திருநங்கையர் நூல் கிடைத்தது. ஒரே நாளில் அதை வாசித்து முடித்தேன். அபாரமான ஓர் ஆய்வுநூல். திருநங்கையர் தங்களை ஒரு முழுமையான தனிச்சமூகமாக ஒருங்கிணைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். அப்படி ஒரு சமூகமாக ஆவது அவர்களுக்கு தேவைப்படுகிறது. அவர்களுக்கு சுற்றம் தேவைப்படுகிறது. சமூகமாக கூட்டு அதிகாரமும் தேவையாகிறது.
இரண்டு கேள்விகள். திருநங்கையர் ஏன் ஒரு சமாந்தர அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதில் கேள்விக்கப்பாற்பட்ட அதிகாரம் கொண்ட அரசி ஏன் உருவாகிறாள்? ஏன் சடங்குகளும் சாமிகளும் தேவையாகின்றன? ஆராயவேண்டிய உளவியல் அது. அவர்கள் வெளிச்சமூகத்தை நகல் எடுக்கிறார்களா அல்லது அடிப்படையிலேயே அந்த தேவை மனிதனுக்குள் உள்ளதா?
இணையம் முழுக்க இந்நூலைப் பற்றி வாசகர்கள், எழுத்தாளர்கள் என்னசொல்லியிருக்கிறார்கள் என்று தேடினேன். ஒரு கருத்துகூட சிக்கவில்லை. இது ஆய்வாளனாக பெரும் மனச்சோர்வை அளிப்பது. இங்குள்ளவர்கள் மேலைநாட்டு இதழ்களில் வரும் கட்டுரைகளை வைத்தே கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.ஆய்வுகள் மேல் ஆர்வமே இல்லை என நினைக்கிறேன்
எம். ஜெயக்குமார்