அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
‘தன்னறம்’ எனும் சொல் உங்கள் வழியாகத்தான் எங்களுக்கு அறிமுகமானது. ‘தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம்’ எனும் வரையறையின் அடியொற்றியே இதுவரையில் எங்கள் எல்லா செயல்களும் பிறப்படைகின்றன. நம் உள்ளாற்றல் எச்செயலில் தன்னை முழுதுற வெளிப்படுத்துகிறதோ அதுவே நமக்கான தன்னறம் என்ற தெளிவை சமகாலத்து இளையோர்களுக்கு உணர்த்தியதில் உங்கள் சொற்களுக்குப் பெரும்பங்குண்டு.
தமிழ் பதிப்பகச்சூழலில் தானும் ஒரு பதிப்பகமாகத் ‘தன்னறம்’ இணைந்து புத்தகங்கள் உருவாக்கத் துவங்கி ஐந்தாண்டுகள் ஆகிறது. இப்பயணம் இன்னமும் அதே அகத்தீவிரத்துடனும் செயல்விசையுடனும் நீடிக்கிறது. வாசிப்புத் தோழமைகளின் அகமார்ந்த துணைநிற்றலால் பதிப்புவெளியில் தன்னறத்திற்கும் நல்லதொரு நிலை வாய்த்திருக்கிறது. நேர்த்திக்கும் தரத்திற்கும் காலங்கொடுத்து வடிவமைக்கும் ஒவ்வொரு நூலும் சமகாலத்தில் தன்னறத்திற்கு நன்மதிப்பை ஈட்டித்தந்திருக்கிறது.
காலக்கனிவின் நல்விளைவாக ‘தன்னறம் நூல்வெளி’ மற்றும் தும்பி சிறார் இதழுக்கான புத்தக நிலையத்தை மதுரையில் துவங்குகிறோம். நண்பர்களைச் சந்திக்கும் நல்லிடமாகவும், நூல்களைப் பெறும் புத்தக நிலையமாகவும், சிறுசிறு நிகழ்வுகளுக்கான கூடுகையிடமாகவும் இப்புதிய அலுவலகம் அமையவுள்ளது. தும்பி இதழ் மற்றும் தன்னறம் நூல்வெளியின் எல்லா நூல்களும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும்.
இந்தப் புத்தக நிலையத்தை கவிஞர் தேவதேவன் அவர்கள் தன்னுடைய நற்கரங்களால் திறந்திவைக்கிறார். மேலும், தேவதேவனின் வருகையை நினைவுள் எஞ்சும் நாளாக ஏந்திக்கொள்ளும் பொருட்டு, சனிக்கிழமை அன்று மதுரை கீழக்குயில்குடி சமணர்மலையில் அவருடன் படைப்பனுபவ உரையாடல் கூடுகையும் நிகழவுள்ளது. எளியதொரு நற்சந்திப்பாக, படைப்புமனம் கொண்ட இருபது இளையவர்கள் பங்குகொள்ளும் இலக்கியச் சந்திப்பாக அதை அமைத்துக்கொள்ள விரும்புகிறோம்.
தன்னறம் நூல்வெளி வாயிலாக அண்மையில் வெளியாகிய ‘தேவதேவன் கவிதைகள்’ பெருந்தொகுப்புக்கான முதல் அறிமுகமாகவும் இக்கூடுகை தன்மைகொள்ளும். நீங்களும் விஷ்ணுபுரம் நண்பர்களும் எல்லாநிலையிலும் எங்களுக்கு வழிகாட்டித் துணையிருக்கிறீர்கள். ஆகவே, இந்த நற்துவக்கத்தை உங்களிடம் சொல்லித் துவங்குவதில் நாங்கள் நிறைவுகொள்கிறோம்.
உங்கள் சொற்கள் வழியாக எங்களுக்குள் துலங்கித்திகழும் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியை இக்கணம் அகத்திலேந்துகிறோம். அனைத்துக்கும் அருளளிக்கும் பேரியற்கையை வணங்கி இந்நற்துவக்கத்தில் செயலாற்றுகிறோம்.
அன்பின் நன்றிகளுடன்,
தன்னறம் – தும்பி
குக்கூ காட்டுப்பள்ளி
www.thannaram.in