சீரோ பாயிண்டின் பனிவெளியில் ஒவ்வொரு கணமும் நுரையீரலைச் சுமந்தபடி நடக்கும்போது நாம் சுமந்துவந்த அனைத்தையும் விட்டுவிட்ட நிம்மதியும் ஏற்படுகிறது. என்றுமுள்ள மலைகளின் மடியில் மனிதப்பிறவிதான் எத்தனை சாதாரணமானதாக ஆகிவிடுகிறது!
பனியுருகிச்செல்லும் காட்டாறுக்கு ஒரு தனித்தன்மை உள்ளது. அது ஆழமில்லை. அதற்கு வேகமும் இல்லை. ஆனால் கடுங்குளிரின் ஆழம். கடுங்குளிரின் வேகம். ஒரு ரகசியமான எண்ணம் போல சக்திமிக்கது அது. ரகசியத்தையே சக்தியாகக் கொண்டது
பனிமுடிகளின் அழகு அவை வெண்மேகத்துடன் முயங்கும்போதுதான் உருவாகிறது. நீரின் இரு தோற்றங்கள். பனியும் மேகமும். மேகம் அமர்ந்திருக்கும் வானம். மலைகளை வைத்திருக்கும் பூமி. அவையும் ஏதோ ஒன்றின் இரு தோற்றங்கள் மட்டும்தானா?
பனி, அதைப்போல ஒளியை உள்வாங்கக்கூடிய இன்னொரு பொருள் உண்டா என்ன? நீர் கூட ஒளியைத் தடுத்து நீலமாகிவிடுகிறது. பனி மண்ணில் விரிந்த வானம். வானை உண்ணக்காத்திருக்கும் மண். ‘உருக வை ’ என வானைநோக்கிய பெரும் பிரார்த்தனை
பனிமீது நிகழும் பாதச்சுவடுகள் உடனே உருகி உருகி நீர் நிறைகின்றன. மனம் கசியும் கண்கள் போல. மிதிப்பதன் மூலம் அதன் வெண் தூய்மையை அழிக்கிறோமோ என்னவோ
ஒரு கணம் கூட பனியைப் பனியாக இருக்கவிடுவதில்லை மனம். அதைச் சொற்களாக ஆக்க ஓயாது முயல்கிறது. சொற்களையும் உறையவைக்கும் ஒரு பனி பெய்ய வேண்டும் வானிலிருந்து.
மனம் அறிந்த அனைத்துக்கும் அப்பால் அர்த்தமற்ற வெறும் குவையாக இறைவனை உருவகித்தவன், முதன் முதலில் சிவலிங்கத்தைச் செய்தவன் அதற்குப்பின் ஒன்றையும் அறிந்திருக்கவேண்டியதில்லைபோலும்