மொழி-கடிதங்கள்

அன்புள்ள ஜெ!

அருள் என்ற அன்பர் எழுதிய கடிதம்,முதலில் மொழிப்பற்றுள்ள மனிதன் எழுதும் கடிதம் போன்று இருந்தது. ஆனால் அவர் எழுப்புகின்ற கேள்வி,

“மொழிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது சரியா? ஒரு மொழியை வளர்ப்பதன் மூலம் நாளடைவில் பகைதானே வளரும்? என்ன லாபம் கிடைக்கும்? அதாவது ஒவ்வொருவரும் தன் மொழியை வளர்ப்பதன் மூலம் பகை வளர வாய்பிருக்கிறது. ஒருவன் தனிப்பட்ட ஒரு மொழியை வளர்ப்பது சமுதாயத்தைப் பிரிப்பது போன்று தானே அர்த்தம்?”

அவரே விடையை வைத்துக்கொண்டு கேள்வி கேட்டிருக்கின்றார். அதை மற்றவர்களின் தலையில் போடுவது வெளிப்படையாகத்  தெரிந்தது.

பிள்ளைகள்  தங்கள் தாய் மொழியில் பேசுவதையே இங்கு ஊக்குவிக்கின்றார்கள். 31 ஆண்டு காலமாக வெளிநாடுகளில் வாழ்கின்றேன்.  அனேகமாக வெளிநாடுகளில் தமிழ் கற்றுக் கொடுக்கின்றார்கள்.
கனடாவில் சுமார் 5000 மாணவர்கள் தமிழ் கற்கின்றார்கள். ஜெர்மனியில் 150 தமிழாலயங்கள் உண்டு.
பெற்றோருக்கு இருக்கும் அறியாமையில் குழந்தைகளின் பிறப்புரிமை நிராகரிக்கப்படுகின்றது.

சரவணன்

அன்புள்ள சரவணன்

உண்மைதான். நம்மில் பெரும்பாலானவர்களுக்குப் பண்பாட்டுக்கு ஒரு தேவை உண்டு என்பதே தெரியவில்லை. உயிர்வாழ என்ன தேவை என்ற அடிப்படையிலேயே சிந்திக்கிறர்கள்

ஜெ

ஜெ, குழந்தைகளுக்கு ஏன் தாய்மொழியை அறிமுகப் படுத்துவது மிக அவசியம் என்பதற்கான உங்கள் வாதங்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன்.

குழாய் பழுதுபார்ப்பதிலோ அல்லது கணிப்பொறித்துறையிலோ அல்லது ஏவுகணை விடுவதிலோ உள்ளீடற்ற தொழில்நுட்ப வேலைகளைச் செய்து ஓய்ந்தவேளைகளில் குடித்து

இந்த வரிகளுடன் உடன்படவில்லை. தொழில்நுட்ப வேலைகள் என்றாலே அவை உள்ளீடற்றதாகத் தான் செய்யப் பட வேண்டும் என்று அர்த்தமில்லை.

”The Buddha, the Godhead, resides quite as comfortably in the circuits of a digital computer or the gears of a cycle transmission as he does at the top of the mountain, or in the petals of a flower.”

– From ‘Zen and the Art of Motorcycle Maintenance”, N by Robert Pirsig

மேலும் வேலையில் சலித்தவர்கள் மட்டுமே தான் கலை, இலக்கியங்கள் பக்கம் திரும்புவார்கள் என்றும் நியதி ஒன்றும் இல்லை என்றும் நினைக்கிறேன். உங்கள் வாசகர்களிலேயே கூடத் தங்கள் பணியில் மிகுந்த ஈடுபாடும், உள்ளார்ந்த அன்பும் கொண்டவர்கள் பலர் இருக்கக் கூடும்.

அன்புடன்,

ஜடாயு

நான் சொல்வது கேளிக்கைகளை. கலைவேறு ,கேளிக்கை வேறு. கலையில் மெய்மைக்கான தேடல் உண்டு. கேளிக்கை என்பது ஒரு சுயம் கரைக்கும் முயற்சி மட்டுமே

ஜெ

பிரியமுள்ள ஜெமோ,
ரொம்ப நாளாகவே உங்களை ஒன்று கேட்க வேண்டும்…
மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புதினங்கள் எந்த அளவிற்கு மற்ற மொழி வாசகர்களை அடைய
முடியும்? அல்லது எந்தளவிற்கு மற்ற மொழி வாசகர்கள் அவைகளை அடைய முடியும்?
உதாரணத்திற்கு எனது பள்ளி/கல்லுரி நாட்களில் (80’ களில்), சோவியத் மொழிபெயர்ப்பு
புதினங்கள் (New Century Book House) எளிதாகக் கிடைத்தவை (மீ.ப.சோம சுந்தரம்?).
சற்றுக் கடினமாக இருந்தாலும் (சேலம்,/தாராபுரம்/திண்டுக்கல்) கொளுத்தும் வெயிலில்
இருந்து கொண்டு தைகாக் வெண்பனிக்காடுகளையும் ’ஆர்ப்பரித்து வரும் செஞ்சேனை’களையும் என்னால் உருவகப்படுத்தி, மனம் ஒன்ற முடிந்தது, ஓரளவிற்கு.
(இன்று வரை என்னுடைய favourite list-ல் ‘அதிகாலையின் அமைதியில்’ இருக்கிறது).
ஆனால் எனது பிற சக ‘படிக்கும்’ நண்பர்களுக்கு அது முடியவில்லை, மனம் ஒன்ற
முடியவில்லை (எனக்குப் பரிசாய் அளித்துத் திருப்தியாய் விடுகிறார்கள்!).
அதே சமயம், எண்டமூரி, இன்னும் சில, நமது நாட்டு வேறு மொழி(பெயர்ப்பு) நாவல்களைப்
படிக்க முயற்சித்திருக்கிறேன், ஆனால், ஒன்ற முடியவில்லை, விட்டு விட்டேன்…மேலும்
முயற்சித்திருக்கவேண்டுமோ, என்னவோ (அல்லது wrong choice of writer/books..?)

இன்று தமிழில் பல எழுத்தாளர்களும் பல மொழிப் புத்தகங்களைப் படிக்க, refer
செய்கிறீர்கள். எப்படி, இந்தத் தாய் மொழியற்ற புத்தகங்களிடம் உங்களால் ஒன்ற
முடிகிறது, reach ஆக முடிகிறது?

உங்களைப்பாதித்து, favourite listல் எப்படி இந்த புத்தகங்கள் சேர்ந்து கொள்ள
முடிகிறது?

Possibilities:
அந்தப் புத்தகங்களின் தாய் மொழிபெயர்ப்பு அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு (assuming
அவர்களின் (உங்களின்) தேவையான ஆங்கில அறிவு)

அல்லது
உங்களின் அந்தந்த மொழி செறிந்த அறிவு (Russian, French) which I doubt…apologise
if I am wrong)

ஒரு மொழியில் ஒரு முக்கிய வாக்கியம்(or கவிதை) எந்த அளவிற்குப் பிற மொழி வாசகனை அடைய
முடியும்.

உதாரணத்திற்குப் பிரமிளின் ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ இதைத்தமிழில் படிக்கும்போது எழும் எண்ணங்களை, ருஷ்ய அல்லது ஃப்ரெஞ்ச் மொழி பெயர்ப்பில் எந்த அளவிற்குக்
கொண்டு வர முடியும்?

அதற்கு எந்த அளவிற்கு இரு மொழி அறிவு தேவைப்படும்?

உங்களின் ஒரு விமர்சனம் சுஜாதா அவர்களின் திருக்குறள் உரையைப்பற்றி…
குறளின் ஒவ்வொரு வரியும், நமது மனதில் உருவாக்கும் எண்ண விரிவாக்கங்களை அவர்
சுலபமாகத் தாண்டிச் சென்றதை விமர்சித்திருந்தீர்கள்…
இது அனைத்து மொழி நூல்களுக்கும் பொருந்தும் தானே?

Essex சிவா

அன்புள்ள சிவா

நாம் வாசிக்கும் இலக்கியங்களில் பெரும்பகுதி மொழியாக்கம்தானே? நாமே அதை உணர்வதில்லை. மகாபாரதம் ராமாயணம் கீதை பைபிள் எல்லாமே மொழியாக்கங்கள் அல்லவா?

இரண்டு அடிப்படை விஷயங்கள் மானுட குலத்துக்குப்  பொதுவானவை. அவை மனித மூளை சார்ந்தவை. ஒன்று மனித மொழியின் அடிப்படை அமைப்பு. அது சொற்களை இணைத்துப் பொருளை உருவாக்கும் விதம்.மூளை சார்ந்தது என்பது நவீன மொழியியலின் ஒரு வலுவான தரப்பு [நாம் சாம்ஸ்கி] . அதேபோல மனிதர்கள் வாழ்க்கையைக் கற்பனைசெய்து கொள்ளமுடியும். அறிந்தவற்றில் இருந்து அறியாதவற்றுக்கு.

இவ்விரு அடிப்படைகள்தான் இலக்கியத்துக்கே ஆதாரமானவை. நான் எழுதி உங்களுக்கு அளிப்பவை சில ஆயிரம் சொற்கள். நீங்கள் அதனூடாக என்னுடைய வாழ்க்கைநோக்கை, உணர்ச்சிகளைப் பெற்றுக்கொள்கிறீர்கள் இல்லையா?

அந்த இரு அம்சங்களால்தான் மொழியாக்கமும் சாத்தியமாகிறது. எந்த வாழ்க்கையையும் நாமறிந்த சொற்கள் வழியாக நம்மால் கற்பனைசெய்ய முடியும். மோசமான மொழியாக்கத்தில்கூட

கவிதையைப் பொறுத்தவரை அதன் நுட்பமான சில கூறுகள் மொழியாக்கங்களில் இல்லாமலாகும். ஒன்றும் செய்யமுடியாது. காரணம் கவிதை,மொழியின் சாத்தியங்கள் வழியாகவே இயங்கியாகவேண்டிய தளம். ஆனால் நல்ல கவிதை, மொழியாக்கத்தில் கூடப் பெரும்பகுதி சென்று சேர்ந்துவிடும்.

‘முற்றிலும் மொழியாக்கம்செய்யக்கூடியதும் சரி, முழுக்கமுழுக்க மொழியாக்கம் செய்யமுடியாததும் சரி நல்ல கவிதைகள் அல்ல’

ஜெ

அன்பின் ஜெமோ,

உடன் பதிலுக்கு மிக நன்றி.நான் பல நாட்களாக எழுதினேன்.நீங்கள் நிமிடத்தில் வேறு கோணத்தில் என் கண்களைத் திறந்தீர்கள்.எனக்கு இப்போது சங்கடமாக இருக்கிறது.எழுதுவது ஜெமோ என்று அரைவேக்காட்டுதனமாக யோசித்தேனே தவிர மரத்தில் மறைந்தது மாமதயானை எனக்காண மறந்தேன்.நூறு நாற்காலிகள் வாசிக்கையில் முழுதாக உள்வாங்கிய உணர்வு.அதுவும் என்னளவில்தான்.ஊரில் சொல்வார்கள் நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணி என.உங்கள் கதைகள் கடலாயினும் என் தாகம் தீர சிறு துளி போதுமே.நூறு நாற்காலிகள் நாயகனின் நினைவெல்லாம் அவனது அம்மா.அவளே அவனது சோகமும் களைந்து ஏறிய விரும்பும் சாதிய விகுதியும் போல.அவளது மரணம் தனக்கொரு விடுதலை என எண்ணி மாய்பவன் அவளது மரணத்தின் பின்னும் அடைபடுவது இன்னுமொரு கூண்டில்தான்.

எனது பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்கையில் என்னுடன் தமிழில்தான் கதைப்பார்கள்.வெள்ளைப் பிள்ளைகளைக் கண்டவுடன் மொழி மாறிவிடும்.என் பிள்ளைகளுக்கு நானளித்த கூண்டு.கூண்டு எங்கிருந்தாலும்கூண்டுதான்.முன்னர் சில வருடம் நான் ஜெர்மனியில் ஒரு தொழிற்சாலையில் வேலபார்த்தேன்.சாதாரண எடுபிடியாகத்தான்.நாட்போக்கில் ஒரு மெசின் இயக்குனராக வந்தேன்.

அது ஒரு புதிய ஆஸ்திரிய மாடல்.எனக்கு முன்பாக இயக்குனராக இருந்தவர் அதை முழுதுமாக நிராகரித்து வேண்டாவெறுப்பாக இயக்குவர்.கொஞ்சம் கணினியும் அதன் இயக்கத்தில் தேவைப்பட்டதால் அவர் வெறுத்தாரோ என எண்ணுவேன்.விடயம் அது சம்பந்தப்பட்டதல்ல.ஒரு தடவை மெசின் பழுதாகிவிட சீர்படுத்த ஆஸ்திரியாவில் இருந்து இதற்கென ஒருவர் வரவேண்டிப்போனது.அது பத்து மீட்டர் நீளமுள்ள இருபதுக்கும் மேற்பட்ட மோட்டார்இயங்கும் மெசின்.முன்னும் பின்னும் இருவர் இருவராக நான் இடையில் ஓடி ஓடிப் பார்க்க வேண்டியிருக்கும்.அங்கு வேலை செய்பவர்களில் நான் ஒருவனே கறுப்பு.மெசின் பழுதாகியதால் இரைச்சல் இல்லை.தூரத்தில் கம்பெனி நிர்வாகி புதிய ஒருவருடன் வருவது தெரிந்தது.அவர்தான் நிபுணர் போல எனப் பார்த்தவுடன் தெரிய,மெசினின் பெயரிலேயே உடுப்பு.சிரித்துக்கதைத்து வந்துகொண்டிருக்கையில் யார் மெசினை இயக்குவது எனக் கேட்டிருப்பார் போல.நிர்வாகி என்னைக் கை காட்டுவது தெரிந்தது.நிபுணர் சடக்கென நின்றார்.பின் வந்தவழியே சென்றுவிட்டார்.பின் வேறு வழியின்றித் திரும்ப வந்ததும் என்னுடன் வேலை செய்ததையும் விடுவோம்.ஆனால் அந்த பொதுப் புத்தி.எம்மூரில் ஏதோ ஒரு சாதிக்குரியவர்கள் நடமாடும் போது காய்ந்த பனை ஓலையைத் தம் பின்னால் இழுத்துக்கொண்டு போகவேண்டுமாம் பழைய நாட்களில்.ஓலை ஒலி கேட்டால்குறித்த சாதியாள் வருவது தெரியும் என்பதற்காக.ஒரே நிறம் ஒரே இரத்தம் ஆனாலும் எத்தனை பிரிவு.நான் நிறம்
வேறு என்பதால் ஏற்றுக் கொள்ள மறுப்பதைத் தவறென்று சொல்ல எனக்கு தார்மீகம் உள்ளதா? எனக்கு,நிறம் கழட்டமுடியாத கூண்டுதான்.அல்லது கூண்டுதான் நானே.காப்பன் தர்மபாலனாக ஆனாலும் தொடர்வது சாதி.என்ன செய்ய.

மேலும்,நான் மகள்களுடனும் மனைவியுடனும் பன்மையில் தான் பேசுவேன்.யாரையும் ஒருமையில் விளிப்பதுவும்  இல்லை.தமிழ்நாட்டில் எனக்கு அது பல புருவ உயர்த்தல்களைத் தந்தது.

நன்றி ஜெமோ இது எழுதுவதற்கே எனக்கு மூச்சு வாங்குகிறது.அதுவும் ஒரு வாரமாக எழுதுகின்றேன்.உடன் பதில் நீங்கள் போட்டதால் வந்த குற்ற உணர்வு இன்னும் மாறவில்லை.மீண்டும் நன்றி.

அன்புடன்
வே.பாலா

முந்தைய கட்டுரைபிரபஞ்சம்,மகாபாரதம்,பார்ப்பனமதம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை