கடலின் எடை- கடலூர் சீனு
இனிய ஜெயம்,
நண்பர் அழைத்திருந்தார். இரண்டு வினாக்களுடன். முதல் வினா தமிழில் ‘அரசியல்’ கவிதை என்று எழுதப்படுபவை எல்லாம் ஒரே போலவே இருக்கிறதே அது ஏன்? இரண்டாவது வினா பிற அரசியல் கவிதைகளை மறுத்தாலும் இளங்கோ கிருஷ்ணனின் தூத்துக்குடி கவிதைகளை மட்டும் நான் ஏன் ஏற்றுக்கொள்கிறேன்?
நண்பர் போலவே, சமூக அரசியல் கலை கோட்பாட்டு போதம் கொண்ட சிலரும் அக் கவிதைகளை ஏற்கவில்லை என்பதை பின்னர் வாசித்து அறிந்தேன். நண்பருக்கு பதில் அளிக்கையில் திமுக வுக்கு ஓட்டு போட சொல்லும் மனுஷ்ய புத்திரன் கவிதைகளும், நாங்க மனுஷங்கடா என மாரடித்து ஒப்பாரி வைத்து கம்யூனிஸ்ட் கு ஓட்டு போட சொல்லும் இன்குலாப் கவிதைகளும், போஸ்ட் அப்போகலிப், போஸ்ட் மாடனிஸ்ட், போஸ்ட் லிங்விஸ்டிக், போஸ்ட் சைன்ஸ் ஃபிக்ஷனிக் (போஸ்ட் பொயட்ரி) யவனிகா ஸ்ரீராம் கவிதைகளும், இப்படி எல்லாமே அரசியல் கவிதைகள்தான். இந்த வரிசையில் இருந்து தூத்துக்குடி கவிதைகள் எங்கே வேறுபடுகிறது?
அரசியல் கவிதைகளுடன் தவிற்க இயலாமல் உடன் இணைந்து நிற்கும் பலவீனங்கள் இரண்டு. ஒன்று அதன் கச்சா படைப்பாளியின் ஆழுள்ளதுடன் பிணைந்த, அவனது ஆழுள்ளத்தை சமைத்த காரணிகளில் ஒன்றல்ல. மனுஷ்ய புத்திரன் கவிதைகளில் அம்மா இல்லாத முதல் ரம்சான் கவிதையில் வரும் அம்மாவும், அனிதாவை எரித்த நெருப்பு கவிதையில் வரும் அனிதாவும் படைப்பாளியின் அதே அக ஆழத்தை சேர்ந்தவர்கள் அல்ல.
இரண்டு. அதன் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் அரசியல் நிலையின் ஒற்றைப்படை தன்மை. கவிதைக் கலையின் அடிப்படைகளில் அது அளிக்கும் அர்த்த, கற்பனை சாத்தியங்கள், அது தீண்டும் காலாதீத கூறு இவை முதன்மையானவை. அரசியல் கவிதைகள் அது எதை சொல்கிறதோ அதை மட்டுமே சொல்லும். அதன் காலம், (முக நூலில் வார வாரம் பேசி மறக்கப்படும் புதிய புதிய அரசியல் நகர்வு உரையாடல் போல) மிக மிக குறுகியது. ஆகவே எல்லா அரசியல் கவிதையும் ஒரே போலத்தான் இருக்கும்.
இந்த எல்லைகளுக்கு உட்பட்ட அரசியல் கவிதைகளில், இந்த தூத்துக்குடி கவிதைகளை எடுத்து கொண்டால் முதல் கவிதைகளில் சுடப்படும் போராளிகள் எதனால் சுடப்படுகிறார்கள் என்றொரு பட்டியல் வருகிறது
பட்டியலில் முதல் இடத்தில் I P L. அடுத்து சினிமா, டாஸ்மாக்,பேஸ்புக், பீச், பார்க் கோயில் என்று நீளும் இவ்வரிசையில் மற்றவை தரும் அனுபவத்துக்கும் போராட்ட அனுபவத்துக்கும், அதற்கு பொது மக்கள் ஆதரவுக்கும் உள்ள இடைவெளி பார தூரமானது.
முன்னர் கிரிக்கெட்டில் டோனி தலைமையில் இந்தியா உலக கோப்பை வென்ற ஆண்டுக்கு முன்பான இந்திய அரசியல் சூழலை சற்றே திரும்பி பார்த்தால், ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளானோம், மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வழியே தாக்கப்பட்டோம், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் உயிர்பலிகளை கண்டோம். ( அன்றும் தமிழ் நிலம் கிரிக்கெட்டில் லயித்து கிடந்தது). இந்த அத்தனைக்கும் இந்திய அரசின் பதில். மௌனம். விடுவோமா நாம். உலக கோப்பை கிரிக்கெட்டில் வரிசையாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இரண்டையும் மண்ணை கெளவ வைத்து, இலங்கையை புரட்டி எடுத்து உலக கோப்பையை வென்று, நடந்தவை அனைத்தையும் மறந்து, நாம் யார் என்று நமக்கும் உலகுக்கும் பறை சாற்றினோம்.
முக நூல் வந்த பிறகு போராட்ட களம் என்பதன் முகமே மாறி விட்டது. எல்லாமே ஐ சப்போட்டு, டிஸ்லைக்கு இரண்டு எமோஜிக்களில் முடிந்தது. ஒற்றை கருத்தியலின் கீழ் தெருவில் இறங்கி பொது ஜனம் திரண்டு நின்ற காலம் என்ற ஒன்றை முக நூல் வந்து முடித்து வைத்தது. அதன் சாதகம் அறிந்தே ஒவ்வொரு தேசத்திலும் அதன் ஆளும் சக்தி முகநூலில் கோடிகளில் முதலீடு செய்கிறது.
இந்த நிலைகளில் உள்ள முக்கிய அம்சம் கேளிக்கை. சினிமா, கோயில், பேஸ்புக்,டாஸ்மாக் எல்லாமே கேளிக்கை. இந்த அத்தனை கேளிக்கை அனுபவத்துக்கும் நீங்கள்தான் முதலாளி. ஒரு அனுபவம் பிடிக்கா விட்டால் வேறொரு அனுபவத்துக்கு மாறிக் கொள்ள முடியும். உங்கள் தேவைக்கு தக்க கேளிக்கையை கேட்டுப் பெற முடியும். இந்த அடுக்குகள் கொண்டு நமது போதத்தில் இருந்து மறைக்கப்படும், நம் மேல் கவியும் அந்த ‘உண்மையான’ அனுபவம் என்பது நமக்கு பிடித்த கேளிக்கை அல்ல. இந்த அனுபவத்தின் முதலாளி நாமும் அல்ல. நம் மேல் கவியும், நம்மால் மாற்றிக்கொள்ள முடியாத, நமக்கு உகக்காத, நாம் முதலாளி அல்லாத அந்த அந்த அனுபவம், எந்த முதலாளியின் விருப்பத்தின் பொருட்டு நிகழ்கிறதோ, அந்த முதலாளியின் கேளிக்கை சரக்கு மட்டுமே நாம். இங்கே எழும் கேள்விக்கு அதிகாரம் தரும் பதில் எதுவோ அதுவே முதல் கவிதை.
அனுபவம் என்பதற்கும் வாழ்வனுபவம் என்பதற்கும் இடையே மெல்லிய கோடு ஒன்று உண்டு. மேலே சொன்ன வகையில் அனுபவம் என்பதில் தேர்வு சாத்தியம் உண்டு. மாற்றிக் கொள்ள, விட்டு விலக, வாழ்வனுபவத்தில் அப்படி ஒன்று இல்லை. உதாரணத்துக்கு முப்பது வருடம் அறையை விட்டு வரமாட்டேன் என்று சொல்லி அறைக்குள் சென்று அமர்ந்து கொள்வது அதில் கிடைக்கும் அனுபவம், உங்கள் தேர்வு, எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எவரோ உங்களை பிடித்து கொண்டு போய் சிறையில் போட்டு, எப்போது வெளி வருவோம் என்றே தெரியாமல் முப்பது வருடம் உள்ளேயே கிடப்பது என்பதே வாழ்வனுபவம். இதன் நியதிகள் உங்கள் ஆழத்துடன் பிணைந்தவை.
எமது விரையிலிருந்து
பூட்ஸ்களை எடுப்பீராக
எமது குரல்வளையிலிருந்து
கத்தியை அகற்றுவீராக
என்று வளரும் இந்த
நான்காவது கவிதையின் உள்ளடக்கமும் அதன் பின்னணியும் மேற்சொன்ன வாழ்வனுபவம் என்றே வாசகனுக்கு கையளிக்கப்படுகிறது.
இந்த வாழ்வனுப கவிச் சுயத்தின் ஆழத்தில் இருந்து எழுவதே மூன்றாவது கவிதையின் இறுதி வரிகளான
உங்கள் அதிகாரம் பிணமாகும் வரை கேட்போம்
என்ற நீதி உணர்வின் குரல்.
தமிழில் பிற அரசியல் கவிதைகளில், மயிர் பிளக்கும் பின்நவீன அரசியல் கோட்பாட்டு விவாத குப்பைகளால், சுயம் காயடிக்கப்பட்ட காரணத்தால் இல்லாது போன, இளங்கோ கிருஷ்ணனின் தூத்துக்குடி கவிதைகளில் மட்டுமே காண முடிந்த இந்த நீதி உணர்ச்சி அதுவே இக் கவிதைகளை முக்கியத்துவம் கொண்ட கவிதைகள் என்றாக்குகிறது.
மிக நேரடியாக எழுந்து வரும் நீதியின் குரலை செவி மடுக்கஇயலாச் செவிடுகள் என்று அரசியல் கோட்பாட்டு புரிதல் வாதிகளை ஆகிய பெருமை பின்நவீன உரையாடல் சூழல் தமிழுக்கு அளித்த வெகுமதிகளில் ஒன்று. என்னைப் போல கோட்பாடுகளை அறியாத, கலை மட்டுமே அறிந்த அப்பிராணிகள் கண்ணில் மட்டும்தான் நீதி தேவதை தெரிவாள் போல :).
கடலூர் சீனு