இந்தப்பயணத்தில் பலவிஷயங்களை அவசரமாகத் திட்டமிட்டுவிட்டோம் என்று மீண்டும் மீண்டும் நினைக்கவேண்டியிருக்கிறது. பூட்டானுக்காக நாங்கள் ஒதுக்கியிருந்த நாட்கள் இரண்டுதான் என்று நினைக்கக் கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. திம்புவில் ஒருநாள் பரோவில் ஒருநாள். ஆனால் பூட்டானுக்குள் குறைந்தது ஒருவாரம் செலவழிக்காமல் இதைப் பார்த்தேன் என்று சொல்லமுடியாது. இந்தவருடமே மீண்டும் இங்கே வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன். நண்பர்களுடன் செல்வதில் உள்ள சிக்கல்,அவர்களுக்கு அதிக நாட்கள் செலவிடமுடியாதென்பதே. பத்து நாட்களே அவர்களுக்கு அதிகம். இங்கே வந்துசேரவே மூன்றுநாட்கள் ஆகிவிட்டன. சிக்கிம்,பூட்டான் என இணைத்துக்கொண்டது பெரும் தவறு. அங்கும் இங்குமாகப் பயணம்செய்தே நான்கு நாட்கள் சென்றன. ஆனால் பயணமும் ஓர் அனுபவமே. இந்த இடங்கள் அறிமுகமாகியுள்ளன என்று கொண்டால் அதுவும் லாபமே.
திம்புவில் நாங்கள் அதிக இடங்களைப் பார்க்கவில்லை என்று இணையத்தைத் துழாவியபோது தெரிந்துகொண்டேன். மொத்தத் திட்டத்தையும் நண்பர்களிடமே விட்டுவிட்டேன்.அவர்கள் பயண ஏற்பாட்டாளார்களை நம்பினர். அவர்களுக்கு நாங்கள் தேடும் பாரம்பரிய அம்சங்கள் கண்களில் படவில்லை. அவர்கள் வகுத்த திட்டத்தில் அதிகமும் திம்புவில் உள்ள கடைகள், சந்தை போன்ற இடங்களே இருந்தன. மற்ற இடங்கள் அவர்களுக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை. திம்புவில் நாலைந்து முக்கியமான மடாலயங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க முடியவில்லை. மறுமுறை வரும்போது அவற்றுக்குள் செல்ல சிறப்பு அனுமதியும் பெற்று வரவேண்டும்
பூட்டானில், சென்ற காலத்தைய வாழ்க்கையைக் காட்டும் ஒரு அருங்காட்சியகம் அது. ஒரு மரபான பூட்டானிய வீடு கட்டப்பட்டிருந்தது. பத்மநாபபுரம் அரண்மனை சட்டென்று நினைவுக்கு வந்தது .உயரமான மண்சுவர்கள் மேல் மரத்தாலான கட்டுமானம். மண்சுவர்கள் பூட்டானில் கிடைக்கும் சேறும் கூழாங்கற்களும் கலந்து கனமாகக்கட்டப்பட்டவை. சாணிகலந்து பூசப்பட்டவை. ஆரம்ப காலத்தில் மண்சுவர்கள் செங்கற்களால் கட்டப்படவில்லை. வெறுமே மண்ணைக்குழைத்து வைத்துக் கட்டுவார்கள். நானே கட்டியிருக்கிறேன். இரண்டடி உயரத்துக்குக் கட்டி அது உலர்ந்ததும் மேலே கட்டவேண்டும். இங்கும் அதே பாணிதான்
பூட்டானில் மக்களும் மாடுகளும் சேர்ந்தே வாழ்கிறார்கள் என்றாள் வழிகாட்டியாக வந்த பேமா. அது எங்களூரிலும் வழக்கம்தான் என்றோம். ஆம், இங்கே வந்த பலர் இந்தியாவும் இதேபோன்று இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றாள் சிரித்தபடி. வீட்டுமுகப்பிலேயே தொழுவம். மாடுகள் உருவாக்கும் வெப்பம் வீட்டுக்கு நல்லது என்ற எண்ணம் பூட்டானில் உண்டு என்றாள். வீட்டுக்குக் கீழ்நிலை என்பது , குளிர்காலத்தில் மாடுகளைக் கட்டுவதற்காக.
கனத்த மரப்படிகள் வழியாக ஏறிச்சென்றால் மேலே முதலில் வருவது சமையலறை. கணப்பு அறையும்கூட. அடுப்பின்மேல் பொருட்களைக் காயவைக்கும் பரண். இரும்பாலான அடுப்புமேல் எப்போதுமே கொதிநீர் இருக்கும் கலம். பெரிய செம்பு, இரும்புப் பாத்திரங்கள். பக்கவாட்டில் உக்கிராண அறை. இன்னொரு அறை முழுக்க சேணங்கள். பல்வேறு வீட்டுப்பொருட்கள். அவற்றில் மனதைக்கவர்ந்தவை நீர் கொண்டுசெல்லும் மூங்கில் குழாய்கள். மது கொண்டுசெல்லும் கொம்புப் பாத்திரங்கள். அத்தனை அகலமான கொம்பு இருக்குமா என்று வசந்தகுமார் ஆச்சரியப்பட்டுக்கொன்டே இருந்தார்.
பெரும்பாலான பூட்டானிய வீடுகளைப் போல இங்கும் பூசையறை இருந்தது. அங்கே டோங்கா எனப்படும் திபெத்திய பாணி வழிபாட்டுக்குரிய திரைச்சீலைகளும் திருச்சிலைகளும் இருந்தன. மூன்று சன்னிதிகளாகவே பெரும்பாலும் பூசையறைகள் இருந்தன. நடுவே புத்தர். இருபக்கமும் அந்த பகுதிக்குண்டான குருநாதர்கள். இங்கெல்லாம் பத்மசம்பவர் என்று பெயர் கொண்ட முதல் ரிம்போச்சே அவரது ஆறு தோற்றங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்திருக்கிறார்
அருங்காட்சியகத்தின் வாசலில் இருந்த பூட்டானியக்குழந்தைகளை வசந்தகுமார் வளைத்து வளைத்துப்புகைப்படம் எடுத்தார். அசப்பில் பார்த்தால் ஒரு பார்பி பொம்மை மாதிரியே இருந்தது. பொதுவாக சீனமுகக் குழந்தைகள் மேல் பெரும் காதலே வந்துவிட்டிருந்தது. காலையில் நினைவகத்தில் பெரும் கூட்டமாக ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் வந்திருந்தன. ஒருகுழந்தையை அணைத்துப் பெயரைக்கேட்டால் பத்துப் பிள்ளைகள் பெயர் சொல்லத்தயாராகப் பின்னால் நின்றன. ஒரே சிரிப்பு கும்மாளம். வெள்ளையக் குழந்தைகளைப்போல அன்னியர் நோக்கிய அச்சம் இக்குழந்தைகளிடம் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. எங்களிடம் கொஞ்சிக்குலாவி விளையாடின.
அருங்காட்சியகம் விட்டு வெளியே வந்ததும் மணி ஐந்தாகி விட்டிருந்தது. உண்மையில் மேலும் இரு மடாலயங்கள் பார்க்க இருந்தன என்று இப்போது தெரிகிறது. ஆனால் இனிமேல் திம்புவில் ஒன்றும் இல்லை,எல்லாவற்றையும் பார்த்துவிட்டீர்கள் என்று அந்த ஓட்டுநர்கள் சொல்லிவிட்டார்கள். தொடர்ச்சியான பயணத்தின் களைப்பும் இருந்தது. ஆகவே அறைக்கே திரும்பிவிட்டோம். மறுநாள் பர்ரோ சென்று இன்னும் மடாலயங்களையும் பாரம்பரியச்சின்னங்களையும் பார்க்கலாம் என்றார்கள் நண்பர்கள்
[மேலும்]
வட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி
வடகிழக்கு நோக்கி 2-நெடும்பயணம்
வடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்