எஸ்.ராமகிருஷ்ணன்,நூறு கதைகள்-கடிதம்

எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்)

மதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழ் விக்கி தளத்தின் பல பக்கங்களை அவ்வப்போது வாசித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவை எண்ணிலடங்கா முறை பயன்படுத்தியிருக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா வாசிக்க நேரவில்லை. இப்போது தமிழ் விக்கி பக்கங்கள் வாசிக்க நேர்ந்திருக்கிறது.     பொதுநலத்தின் பொருட்டான இத்தகைய பெருமுயற்சிகளுக்கு, தங்களுக்கும் விக்கி குழுவினருக்கும் நன்றியும் வணக்கங்களும். ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்.

பேரறிவாளன் திரு. எஸ்.ரா அவர்கள் பற்றிய தமிழ் விக்கி பக்கம் வாசித்தேன்.  ஒரு தகவல் சேர்க்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று நினைத்தேன்.   அதாவது எஸ் ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த 100 சிறுகதைகள் என்ற தொகுப்புப் பற்றி. கிட்டத்தட்ட முப்பது வயது வரை, வாரப் பத்திரிகைகளில் வரும் சிறுகதைகள் மட்டுமே வாசித்திருக்கிறேன்.  வீட்டில்  பெரியவர்கள் கல்கி, சாண்டில்யன் போன்றோரின் தொடர்கதைகளைக் கிழித்து பைண்டிங் செய்து பழுப்படைந்த புத்தகங்கள் நிறைய இருந்தாலும்,   சிலவற்றை வாசிக்க எடுத்து, ஆர்வமில்லாமல் விட்டுவிட்டேன்.

அதுவரை வாசித்திருந்த சிறந்த சிறுகதைகள் தினமணிக்கதிரில் வந்தவையே.   அது தவிர உயர் இலக்கியம் என்றால் என்னவென்று ருசித்ததில்லை. அந்த நிலையில் நிசப்தம் வா.மணிகண்டன் அவர்களின் தளம் வழியாக எஸ் ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த 100 சிறுகதைகள் தொகுப்பு கிடைக்கப் பெற்றது.  அது ஒரு புதிய திறப்பைக் கொடுத்தது.  புதுமைப்பித்தன் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும், அவரது கதையெதுவும் வாசித்த நினைவில்லை.   ஆனால் அந்தத் தொகுப்பில்  முதலில் வாசித்த கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்  கதையும்,   பிற கதைகளும்,   ஆதுவரை உணர்ந்தறியாத வாசிப்பனுபவத்தைக் கொடுத்தன.   சிறுகதை என்பது இருபது பக்கங்கள் கூட இருக்கலாம் என்பது தெரியவந்தது.   கிளாசிக் கதைகள் என்ற வகைப்பாடு தெரியவந்தது.  நமது நுண்ணுணர்வுகளுடன், ஆழ்மனத்துடன் கைகோர்த்து உரையாடும் அந்தக் கதைகள்,    கிளாசிக் எழுத்தாளர்கள் மேல் மிகப்பெரிய மரியாதையை மனதில் ஏற்படுத்தின.

இன்றுவரை எனக்குப் பிடித்த சிறுகதை செல்லம்மாள் அதில் வாசித்ததுதான்.  ஜெயகாந்தனை முதலில் வாசித்தது அதில்தான். எவ்வளவோ பேருக்கு இந்தத் தொகுப்பு, கிளாசிக் இலக்கிய வாசிப்பின் திறவுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன்.  இவற்றைத் தொகுத்து வாசகனுக்கு அளித்த எஸ்.ரா. அவர்களின் அக்கறையும் முயற்சியும் வணங்கத்தக்கது. இந்தத் தொகுப்பைப் பற்றியும் தமிழ் விக்கியில் குறிப்பிடப்பட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

வி. நாராயணசாமி

அன்புள்ள நாராயணசாமி

அந்நூல் பற்றி சிறுகதைகள் பகுதியில் இல்லை. தொகைநூல் பகுதியில் உள்ளது

ஜெ

எஸ். ராமகிருஷ்ணன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமதுரையில் ஓர் இலக்கிய மையம்
அடுத்த கட்டுரைமைத்ரி துளியின் பூரணம் – கிஷோர் குமார்